ஞாயிறு, 20 மார்ச், 2016

பங்குச் சந்தைக்கு தயாரா..??(தொடர்ச்சி)

Image result for பங்கு சந்தை

அன்புடையீருக்கு வணக்கம்,

இந்த வாரம் பங்குச் சந்தையின் வகைகளை பார்க்க உள்ளோம்.அதற்கு முன்னர் கடந்த பதிவுகளை சற்றுத் திருப்பிப் பார்க்க விரும்புவோர் நினைவுக்கு அவற்றின் தலைப்புகளை கீழே பார்க்கலாம்.

1.மூலதனம் என்றால் என்ன..??
2.ஏன் தேவை பங்குச் சந்தையில் முதலீடு..??
3.பங்குச் சந்தை வர்த்தகம்.
4.பங்குச் சந்தை வர்த்தகம்(தொடர்ச்சி)
5.பங்குச் சந்தைக்கு போலாமா(தொடர்ச்சி)

சரி ஒவ்வொரு வாரமும் பங்குச் சந்தை குறித்த விவரங்களை தாங்கள் எளிதில் அறியும் வண்ணம் இங்கு ஓவியம் தீட்டி வருகிறேன்.தொடர்ந்து படித்து தாங்களும்  பங்குச் சந்தையின் பங்குகள் குறித்து தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள் நட்பூக்களே.வாங்க சந்தைக்குள் போகலாம்,


பங்குச் சந்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.அவை,

1.முதன்மைப் பங்குச் சந்தை.
2.இரண்டாம் நிலை பங்குச் சந்தை.


முதன்மைப் பங்குச் சந்தை;

    ஒரு நிறுவனம் நேரடியாகப் பங்குகளை வெளியிடுவதற்கு முதன்மைப் பங்குச் சந்தை என்று பெயர். பொதுப்பங்கு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் முதலியவை, நிதி திரட்டும்பொருட்டு, பங்குகளை வெளியிடுகின்றன. அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரும்புபவர்கள், அதற்கான படிவங்களை நிரப்பி, முதலீடு செய்ய விரும்பும் தொகைக்கான காசோலை  அல்லது வரைவோலையை (Demand Draft) இணைத்து, முகவர்கள் மூலமாக விண்ணப்பிப்பார்கள். அவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு, பங்குகள் ஒதுக்கீடு செய்யப் படலாம் அல்லது விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படலாம். ஒரு நிறுவனம் முதன்முதலில் பங்குகளை விற்பனை செய்வதை 'முதல் பங்கு வெளியீடு' என அழைப்பர். அதற்குப் பின்னர் வெளியிடும் பங்குகளை 'தொடர் பங்கு வெளியீடு'  என்பர்.

பங்குகளின் அடிப்படை விலை 'முக மதிப்பு ' என அழைக்கப்படும். அதாவது, ஒரு பங்கின் விலை ரூபாய் 10 என நிர்ணயிக்கப்பட்டால், அப்பங்கின் முக மதிப்பு ரூ.10.00 ஆகும். மீண்டும் பங்குகளை விற்கும் பொழுது, அப்பங்குகளுக்கான தேவை அல்லது தேவை  (Demand) எவ்வாறு உள்ளதோ அதற்கேற்றவாறு முக மதிப்பைவிட அதிகமாகவோ (Premium),குறைவாகவோ (Discount) அதே அளவிலோ (At Par) நிர்ணயிக்கப் படலாம்.

இரண்டாம் நிலை பங்குச் சந்தை;


முதன்மைச் சந்தையில் பங்குகளை வாங்கியவர்கள், தம் பங்குகளை விற்கவோ, மற்றவர்கள் வாங்கவோ அணுகுவது இரண்டாம் நிலைப் பங்குச் சந்தை அல்லது வெளிச்சந்தை ஆகும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை மட்டுமே வாங்கவோ விற்கவோ இயலும். அதாவது, பங்குகளை வெளியிட்ட நிறுவனங்கள், விதிமுறைப்படி பங்குச் சந்தையில் தங்கள் பங்குகளைப் பதிவு செய்து, பட்டியலில் சேர்க்கச் செய்ய வேண்டும். பின்பே அப்பங்குகளின் பரிவர்த்தனை நடைபெறும். பங்குகளின் விலை, நிறுவனத்தின் தரத்திற்கும், சந்தையின் பல்வேறு காரணிகளைப் பொறுத்தும், சந்தையில் அப்பங்குகளுக்கான தேவையைப்  பொறுத்தும் மாறிக்கொண்டே இருக்கும் (volatile). பரிவர்த்தனை செய்ய விரும்புபவர், சந்தை நிலவரத்திற்கேற்ற விலையைக் கொடுத்து பங்குகளை வாங்கவோ, அல்லது விலையைப் பெற்றுக்கொண்டு விற்கவோ செய்வார்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர் அந்நிறுவனத்தின் பங்குதாரர் எனப்படுவார். பங்குதாரருக்கு, நிறுவனத்தின் லாபத்தைப் பொறுத்து ஈவுத்தொகை/பங்காதாயம் (Dividend) கிடைக்கும். தேவையான பொழுது, தரகர்கள் மூலமாக, பங்குகளை விற்றுப் பணமாக்கிக் கொள்ளவும் செய்யலாம்.
அடுத்த வாரம் பங்குத்தரகர்கள் மற்றும் அவர்களிடம் நாம் இரண்டு வகையான கணக்குகளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.தொடர்ந்து இணைந்திருங்கள்.நன்றி..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக