இலக்கணப் பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கணப் பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 மே, 2016

பகுபதத்தின் கடைசி மூன்று உறுப்புகள்..!!



எது சந்தி..???
பகுதிக்கும்,இடைநிலைக்கும் நடுவில் வருவது சந்தி எனப்படும்.இரண்டையும் இணைக்கும் ஒரு சொல் சந்தி ஆகும்.
(எ-கா) படித்தான்-படி+த்+த்+ஆன்
படி-பகுதி,த்-சந்தி,த்-இறந்த கால இடைநிலை,ஆன்-ஆண்பால் விகுதி.
இதில் பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் வருவது சந்தி.
(எ-கா) கொடுத்தான்-கொடு+த்+த்+ஆன்
கொடு-பகுதி,த்-சந்தி,த்-இறந்தகால இடைநிலை,ஆன்-ஆண்பால் விகுதி.
சுருக்கம்; பொதுவாக ஒரு சொல்லை பிரிக்கும் போது பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் வரும் சொல் சந்தி எனப்படும்.
எது சாரியை..???


இடைநிலைக்கும் விகுதிக்கும் நடுவில் வருவது சாரியை எனப்படும்.இதுவும் சந்தியை போல் ஒரு சொல்லை இணைப்பது ஆகும்.
(எ-கா)உண்டனன்-உண்+ட்+அன்+அன்
உண்-பகுதி,ட்-இறந்தகால இடைநிலை,அன்-சாரியை,அன்-பலர்பால் விகுதி.
இதில் விகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் வருவது சாரியை ஆகும்.
(எ-கா)செய்குவேன்-செய்+கு+வ்+ஏன்
செய்-பகுதி,கு-சாரியை,வ்-எதிர்கால இடைநிலை,ஏன்-தன்மை ஒருமை வினைமுற்று.
இதில் பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் சாரியை வந்துள்ளது.ஏதாவது ஒரு சமயங்களில் மட்டுமே சாரியை என்பது பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் வரும்.
சுருக்கம்;விகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவில் இணைக்கும் ஒரு சொல் சாரியை எனப்படும்.
எது விகாரம்…???
விகாரம் என்பதன் பொருள் மாறுதல் எனப்படும்.ஒரு சொல் மாறி வருவது விகாரம் எனப்படும்.
(எ-கா) கண்டான்-காண்+ட்+ஆன்
கண்-காண் எனத் திரிந்தது.
வருகிறான்.வா+கிறு+ஆன்
வரு-வா எனத் திரிந்தது.
சுருக்கம்;பொதுவாக ஒரு சொல் வேறு ஒரு சொல்லாக மாறி வருவது விகாரம் எனப்படும்.

முற்றும்...

செவ்வாய், 24 மே, 2016

பகுபதத்தின் முதல் மூன்று உறுப்புகள்..!!!


முதல் மூன்று உறுப்புகள்;
1.பகுதி-பெயர்,வினை குறித்து வரும்.
2.விகுதி-பால்,இடம்,திணை குறித்து வரும்.
3.இடைநிலை-காலம் குறித்து வரும்.
எது பகுதி..??
ஒரு சொல்லின் முதல் பகுதியில் அதாவது முதல் உறுப்பு பகாப்பதமாக இருக்கும் அதுவே பகுதி எனப்படும்.
(எ-கா) பாடினான்=பாடு+இன்+ஆன் என்று பிரிக்கலாம்.இது ஒரு பகுபதம்.
பாடு-பகுதி.
முதல் உறுப்பு என்பது பாடு.இது ஒரு பகாப்பதம்.அதாவது செய்யும் வினையைக் குறிக்கும்.பாடு என்பதனை பிரித்தால் பொருள் தராது.எனவே இது பகாப்பதம்.
(எ-கா)காடன்-காடு+அன்.
காடு-பகுதி.
காடு என்பது முதல் பகுதி.இது  பெயர்ச்சொல்லைக் குறிக்கும்.இதனை பிரித்தால் பொருள் தராது.எனவே இது பகாப்பதம்.
சுருக்கம்; ஒரு சொல்லை முதலில் பிரித்துப் பார்த்தால் அதில் எது பகாப்பதமாக இருக்கிறதோ,அதுவே பகுதி எனப்படும்.
எது விகுதி..??
விகுதி என்பது ஒரு சொல்லின் கடைசி உறுப்பைக் குறிப்பது.செய்யுளில் அதிகமாக விகுதிகள் அமைவதற்கு காரணம் அவற்றின் ஓசையைக் (சந்தம்)குறிக்கும்.
(எ-கா)ஓடினான்-ஆன் என்பது கடைசி உறுப்பு.இது ஆண்பால் விகுதி.
ஓடினாள்-ஆள்.இது பெண்பால் விகுதி.
ஓடினார்-ஆர்.இது பலர்பால் விகுதி.
ஓடியது-து.இது ஒன்றன்பால் விகுதி.
ஓடின-.இது பலவின்பால் விகுதி.
ஓடினேன்-ஏன்.இது தன்மை ஒருமை விகுதி.
ஓடினம்,ஓடினாம்,ஓடினோம்,ஓடினொம்-அம்,ஆம்,ஒம்,ஓம்.இது தன்மை பன்மை விகுதிகள்.
கண்டாய்,சொல்லுதி,செய்வை-ஆய்,இ,ஐ.இவைகள் முன்னிலை ஒருமை விகுதிகள்.
வருவீர்-இர்,ஈர்.இவைகள் முன்னிலை பன்மை விகுதிகள்.
வளர்க.வாழிய-க,இய.இவைகள் வியம்கோள் வினைமுற்றுகள்.
சுருக்கம்;உயர்திணையா,அஃறிணையா என்பதை பற்றியும் ஒருமையா பன்மையா என்பதை பற்றியும் அறிவது விகுதி.
 எது இடைநிலை..??
பகுதிக்கும்,விகுதிக்கும் இடையில் வருவது இடைநிலை எனப்படும்.இதனை பெயர் இடைநிலை,வினை இடைநிலை என்று இரு வகையாகப் பிரிக்கலாம்.
பெயர் இடைநிலை;
(எ-கா)தலைவர்-தலை+வ்+அர்
காலம் காட்டாது.எனவே இது இடைநிலையைக் குறிக்காது.
வினை இடைநிலை;(இறந்த கால இடைநிலைகள்)
(எ-கா)படித்தான்-படி+த்+த்+ஆன்.முதல் த் சந்தி.இரண்டாவது த் இடைநிலை.
உண்டான்-உண்+ட்+ஆன்.இதில் ட் இடைநிலை.
தின்றான்-தின்+ற்+ஆன்.இதில் ற் இடைநிலை.
உறங்கினான்-உறங்கு+இன்+ஆன்.இதில் இன் இடைநிலை.
(த்,ட்,ற்,இன் இறந்த கால இடைநிலைகள்)
நிகழ்கால இடைநிலை;
(எ-கா)படிக்கிறான்-படி+க்+கிறு+ஆன்.இதில் கிறு இடைநிலை.
படிக்கின்றான்-படி+க்+கின்று+ஆன்.இதில் கின்று இடைநிலை
பேசாநின்றான்-பேசு+ஆநின்று+ஆன்.இதில் ஆநின்று இடைநிலை.
(கிறு,கின்று,ஆநின்று நிகழ்கால இடைநிலைகள்)
எதிர்கால இடைநிலைகள்;
(எ-கா)காண்பான்-காண்+ப்+ஆன்.இதில் ப் இடைநிலை.
செய்வான்-செய்+வ்+ஆன்.இதில் வ் இடைநிலை.
(ப்.வ் எதிர்கால இடைநிலைகள்)
சுருக்கம்;மூன்று காலத்தை உணர்த்தி பகுதிக்கும்,விகுதிக்கும் நடுவில் வருவது இடைநிலை எனப்படும்.

   தொடரும்....

ஞாயிறு, 22 மே, 2016

பதங்கள் பற்றி அறிவோம்..!!!




நாம் பார்த்திருப்போம்,சில பள்ளி மாணவர்கள் தமிழ் பாடம் என்றாலே பிடிக்காது என்பார்கள்.காரணம் இலக்கணம் பகுதி தான்.தமிழில் மிகவும் கடினமானது இலக்கணம் பகுதி தான் என்பது அவர்களின் கருத்து.அதற்கு காரணம் அவர்களின் ஆர்வமின்மை மற்றும் ஆசிரியர்கள் கற்றுவித்தல் முறை ஆகியவை தான் இலக்கணம் பகுதியை கடினமானது என்று கருதுக்கின்றனர்.இலக்கணத்தில்  நான் புரிந்துக் கொண்டதை  தங்களோடு பகிரவுள்ளேன்.


பதங்கள்;

பதம் என்றாலும்,மொழி என்றாலும்,கிளவி என்றாலும்,சொல் என்றாலும் ஒன்று தான்.

பதங்களின் வகைகள்;

1.பகாப்பதம்

2.பகு பதம்

பகுத்தல்;

பகுத்தல் என்றால் பிரித்தல் என்று பொருள்படும்.

1.பகாப்பதம்;

பிரிக்க முடியாதவை பகாப்பதம் எனப்படும்.

சொல் வகைகள்;

1.பெயர்ச்சொல்

2.வினைச்சொல்

3.இடைச்சொல்

4.உரிச்சொல்

பகாப்பதம் வகைகள்;

1.பெயர் பகாப்பதம்.

2.வினை பகாப்பதம்.

3.இடை பகாப்பதம்.

4.உரி பகாப்பதம்.

பெயர் பகாப்பதம்;

(எ-கா) நீர்,அம்மா,மான்,மலர்.

இவைகளை பிரித்தால் பொருள் இருக்காது.

வினை பகாப்பதம்;

(எ-கா) ஓடு,பாடு,வா

செய்யும் செயலை குறிப்பதால்,இவைகள் வினைகள் எனப்படும்.பிரித்தால் பொருள் தராது.

இடை பகாப்பதம்;

(எ-கா) போல,ஆல்,ஐ,அது.

வேற்றுமை உருபுகளை பிரிக்க இயலாது.

உரி பகாப்பதம்;

(எ-கா) சால,கடி,உறு

இவைகளை பிரித்தால் பொருள் தராது.

2.பகு பதம்;

பிரிக்க முடியும்.பிரித்தால் பொருள் தரும்.அவைகளே பகு பதம் எனப்படும்.

பகு பதத்தின் வகைகள்;

பெயர் பகுபதம்.

வினை பகுபதம்

பகுபதத்தின் உறுப்புகள்;

1.பகுதி-முதல் பகுதி.

2.விகுதி-கடைசி பகுதி.

3.இடைநிலை-நடுப்பகுதி.

4.சந்தி-இணைப்பது

பகுதிக்கும் இடைநிலைக்கும்  நடுவிலும் அல்லது இடைநிலைக்கும் பகுதிக்கும் நடுவிலும் வருவது சந்தி  ஆகும்.

5.சாரியை-இதுவும் கிட்டதட்ட சந்தியை போல தான் வரும்.

6.விகாரம்-மாறுதல்.

அதாவது ஒரு சொல் திரிந்து வருவது.

(தொடரும்)………

அடுத்த பதிவில் பகுபதத்தின் உறுப்புகள் பற்றி விரிவாகவும் எளிமையாகவும் பார்க்கலாம்.நன்றி.