தமிழ் இலக்கிய வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் இலக்கிய வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

சங்க காலம் பொற்காலம்

          சங்க காலம் பொற்காலம்


முன்னுரை;


       1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலம் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. இதற்கு காரணம் அக்கால மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல், தமிழ்மொழி ஆட்சி, இலக்கியவளம், புலமைப்போற்றல், பண்பாடு நாகரிகம் என சொல்லிக் கொண்டே போகலாம்.
அரசியல்;




     இனக்குழு சமுதாயம் ஒழிந்து நிலவுடைமைச் சமுதாயமும் முடியாட்சி சமுதாயமும் தோன்றிய காலம் சங்க காலம் எனப்படுகிறது. ஊர்ப்புறங்கள் இனக்குழு நாகரிகத்தையும், நகரங்கள் நிலவுடைமை நாகரிகத்தையும் கைக்கொண்டிருந்தன. ஊர்ப்புறத்தலைவர்கள் குடைவோலை முறையிலும், அரசர்கள் வாரிசு அடிப்படையிலும் தேரந்தெடுக்கப்பட்டனர். போரும், பூசலும் மக்களை பெரிதாகப் பாதிக்கவில்லை. மக்கள் போர்க்காலத்தும் அமைதி வாழ்க்கையே வாழ்ந்தனர் என்பதும் போர் என்பது மன்னர்க்கும் மறவர்க்கும் உரியது என்பதும் அக்கால இயல்பாய் இருந்தது. ஒரு நாட்டு புலவரும் வாணிகரும் வேறு நாடு செல்வதற்கு எத்தடையும் விதிக்கப்படவில்லை. பொதுமக்களிடையே கிளர்ச்சி போன்றன நடைபெறவில்லை. மன்னன் மக்கள் மனமறிந்து செயல்பட்டான். மக்கள் கருத்துகளை அவர்கள் சார்பாகப் புலவர்கள் மன்னனிடம் எடுத்துக் கூறினர். நல்லாட்சி நடந்தது. தமிழ் வேந்தர்கள் வெற்றிகள் பல பெற்றன.

தமிழ்மொழி ஆட்சி;
       தமிழ்  நாட்டைத தமிழர்களே ஆண்ட காலம் சங்ககாலம். அக்கால அரசில் தமிழொன்றே ஆட்சி மொழியாய் இருந்தது. பின் ஆண்ட களப்பிரர்களோ, பல்லவர்களோ தமிழைப் புறக்கணித்தனர். அவர்கள் காலத்தில் சமஸ்கிரதமும், பாலியும், பிராகிருதமும் ஆட்சி செய்தன. பிற்கால பல்லவர் காலத்தில் தமிழ் தலையெடுத்து     ஆட்சிமொழி ஆயிற்று என்றாலும் சமஸ்கிருத ஆதிக்கம் ஓய்ந்து விடவில்லை. பிற்கால சோழர் காலத்திலும் இதே நிலை, ஊர்ப்புறத்தலைவர்கள் குடைவோலை முறைக்குத் தகுதியாக வேண்டுமெனில் வேத கல்வி பயின்றாக வேண்டும். பின் வந்தவர்களும் தங்கள் தாய் மொழியையே ஆட்சி மொழியாக கொண்டனர். இத்தகைய வரலாற்றில் ஆராயும் போது தமிழ் ஆட்சி செய்தகாலம், தமிழனால்  தமிழன் ஆழப்பட்ட காலமாகிய சங்ககாலம் பொற்காலமே.

இலக்கியவளம்;

          ஆட்சி  அரசியல்தான்  மொழியின் இலக்கிய வளர்ச்சிக்கு அடித்தளம். கம்பராமாயணமும், பெரியபுராணமும் சோழர் காலத்தின் தான் தோன்றியது. பாட்டும் தொகையுமாகிய சங்ககால இலக்கிய விழுமத்திற்கு அக்கால அரசியலும் நல்லாட்சியுமே காரணமாக இருக்க முடியும். சிறந்த இலக்கியங்கள் தோன்றும் காலம், ஒரு நாட்டிற்கு நற்காலம் என்பது உண்மை. ஈடும் இணையுமற்ற தூய தனித்தமிழ் இலக்கியங்கள் தோன்றிய காலம் சங்ககாலமாகும்.
புலமை போற்றல்;
               அறிவுடை யோனாறு அரசும் செல்லும்
என்று  அறிவாளிகளின் மேன்மையை அரசனே அறிவிக்கிறான். இனம் குலம் ஆகிய வேற்றுமைக்கு அப்பாற்பட்டதாகக் கல்வி போற்றப்பட்டது.
              கற்கை நன்றே  கற்கை நன்றே
              பிச்சை புகினும் கற்கை நன்றே
எனச் செல்வத்தினும் கல்வியே பெருமை சேர்ப்பது என அக்காலத்தார் கருதினார். அறிவுக்கும் கல்விக்கும் முதன்மை கொடுக்கும் சமுதாயம் செல்வத்திலும் முதன்மை பெறுதலை இன்றும் காணலாம்.
                அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
                 அஃதறி கல்லா தவர்.
என்ற வள்ளுவர் சொல் பொய்யன்று. அறிவார்ந்த சமுதாயம் அறிஞர்களை போற்றியது.
புலவரின் செயற்பாடு;

         பொருளையும் பொன்னையும் பரிசாகப் பெறும் இரவலர்கள் தாம் புலவர்கள் என எள்ளி நகையாடுவோர் உளர். புலமைக்குப் பரிசு ஒரு மதிப்பீடு என்றே அக்காலப்புலவர்கள் எண்ணினர். பரிசுக்காக பொய் கூறி ஒருவனை வாழ்த்தியதில்லை. அஙர்கள், வரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கையை மேற்கொண்டவராயினும், எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே என மன்னனை எதிர்ப்பதில் இறுமாப்புற்றனர். அவர்தம் அறிவு, ஆட்சிக்கும் மக்களுக்கும் மன்னனுக்கும் பயன்பட்டது. அறிவுடையோர் வழிகாட்ட அரசன் ஆட்சி புரிந்ததால் ஆட்சி சிறப்புற்றது.
பெண்மை போற்றல்;

           பெண்களில் பெருந்தொகையினர் படித்தவராயிருந்தனர், பெருமைமிகு புலவர்களாக முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் விளங்கினர். ஔவையார், வெள்ளி வீதியார், நக்கண்ணையார், ஆதிமந்தியார் போன்ற பெண்பாற் புலவர்களின் பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. கல்வியுரிமை மட்டுமன்றிச் சமுதாயத்தின் பிற உரிமைகளும் பெற்றிருந்தனர். பெண்கள் விரும்பியவனைக் கணவாக்ப் பெறும் உரிமை, கணவன் தேடிவந்த பொருளைப் பாதுகாக்கவும் செலவிடவும் உரிமை, அரசு பணிகளில் பணியாற்றும் உரிமை எனப் பெண்கள் பெற்ற உரிமைகள் பல.
பண்பாடும் நாகரிகமும்;
         சங்க சமுதாயம் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் மேம்பட்டு விளங்கியது. சிற்பம், ஓவியம், போன்ற கலைகள் வளர்ச்சி பெற்றிருந்தன. கலைஞர்களாகிய பாணர்களும், கூத்தரும், விறலியும் அரசராலும் ஏனைப் புரவலராலும் மதிக்கப்பட்டனர். சங்க கால மக்கள் உடல்சார் வாழ்க்கையைவிட உள்ளஞ்சார்ந்த வாழ்க்கைக்கு சிறப்பிடம் கொடுத்தனர். அதனால் அன்பு, அருள், வாய்மை, நட்பு போன்ற நற்பண்புகளைப் பெற்று விளங்கினர்.
பொதுமை அறம்;
         சாதிசமய பூசல்கள் சங்ககாலத்தில் இல்லை. தீண்டாமைக் கொடுமை அறவே இல்லை. ஏற்றத்தாழ்வற்ற அக்காலச் சமுதாயத்தில் எல்லா இனத்தவரும் ஒன்றி வாழ்ந்தனர். காதலர்களை இனம், சாதி, கொடுமை ஆகியன கட்டுப்படுத்தாத காலம் அது. நீதி, தண்டனை போன்றவை அனைவர்க்கும் பொதுவாய் இருந்தன.
தொழில்வளர்ச்சி;

         உழவு, நெசவு போன்ற அடிப்படைத் தொழில்கள் மேலோங்கி இருந்தன. உழவுத்தொழில் வளர்ச்சிக்காக கரிகாலன் காவிரியில் கல்லணை கட்டினான்.  தமிழ் அரசர்கள் பலர் பாசன ஏரிகளை ஏற்படுத்தி நீர்வளம் பெருகச் செய்தனர். பட்டினும், மயிரினும், பருத்தி நூலினும் நெய்யப்பட்ட ஆடைகள் உள்நாட்டு தேவைகட்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் உற்பத்தி செய்யப்பட்டன.
முடிவுரை;
       சங்க காலத்தின் பெருமைகளை சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும், பிறநாட்டார் குறிப்புகளும் அழகாக எடுத்துரைக்கின்றன. பொற்காலம் என்ற ஒன்று தமிழ்நாட்டில் நிலவியிருக்குமானல் அது சங்க காலமாகத்தான் இருக்கும்.


சனி, 27 பிப்ரவரி, 2016

தமிழ் இலக்கண வரலாறு


முன்னுரை
            தமிழ் நூல்களில் மிகப் பழமையாக விளங்கும் நூல் தொல்காப்பியம் ஆகும்.இதனை இயற்றியவர் தொல்காப்பியர்.இவரை சமணர் என்றும் சைவர் என்றும் கருதுவர்,மற்றும் பிற இலக்கண நூல்கள் அபிநயம்,யாப்பருங்கலம்,யாப்பருங்கலக்காரிகை,வச்சனந்திமாலை,நன்னூல் போன்ற இலக்கண நூலின் ஆசிரியர்கள் சமணர்கள் ஆவார்.

அபிநயம்
            அகத்தியரின் மாணவர் அவிநயரால் இயற்றப்பட்ட இலக்கணநூல் இது. இது அகவலாலும்,வெண்பாவலும் ஆனது.இந்த நூல் எழுத்து,சொல்,யாப்பு, பாட்டியல் பற்றி கூறும்.இதன் காலம் கி.பி.5அல்லது 6 ஆம் நூற்றாண்டு. யாப்பருங்கலவிருத்தி,வீருத்தி,வீரசோழியம்,நேமிநாதம்,மயிலைநாதர் உரை ஆகியவற்றில் 90-ஆம் மேற்பட்ட அவிநயனார் நூற்பாட்கள் மேற்கோளாக காட்டப்பட்டுள்ளன.இது முத்தமிழ் பற்றியதாக இருக்கலாம் என்பர்.
யாப்பருங்கலம்
            இதன் ஆசிரியர் அமிர்தசாகர்,குணசேகரர் என்றும் கூறுவர்.இந்த நூல் சந்தம்,தாண்டகம் ஆகியவற்றிற்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது.இது சூத்திப்பாவால் ஆன யாப்பு நூல்.இதன் காலம் 10-ஆம் நூற்றாண்டு.

யாப்பருங்கலங்காரிகை
            இதன் ஆசிரியர் அமிர்தசாகர்.இது கட்டளை கலித்துறையால் ஆனது.இதன் உரை ஆசிரியர் குணசாகரர்.``காரிகை கற்று கவிபானடலாம்’’. இதன் உரை ஆசிரியர் குணசாகரர்.காரிகை காலம் 10-ஆம் நூற்றாண்டு.
நேமிநாதம்
            22-ஆம் தீர்த்தங்கர் நேமிநாதர் பெயரால் இந்நூல் அமைந்தது. இதன் ஆசிரியர் குணவிர பண்டிதா.இதன் அதிகாரங்கள் எழுத்தும்,சொல்லும் 96-சூத்திரங்களை கொண்டுள்ளது.இதன் அளவு கருதி சின்னூல் என்பர்.

வச்சணந்திமாலை
            இதனை வெண்பா பாட்டியல் என்பர்.இந்த நூல் 96-வகை பிரபந்தங்கள்,மங்கள எழுத்து ஆகியன பற்றி கூறும்.மொழி,செய்யுள்,பொது எனும் மூன்று இயல்களை பெறும்.இதன் ஆசிரியர் குணவீர பண்டிதர்.அலர் தன் ஆசிரியர் அச்சணந்தி பெயரால் யாத்தார்.என்பர்.இதன்ர காலம் கி.பி.13-ஆம் நூற்றாண்டு.

நன்னூல்
            தொல்காப்பியம் இதன் முதல் நூல்.இருப்பினும் பல இடங்களில் மாற்றம் கொண்டுள்ளது.எளிமையும்,தெளிவும்,பகுப்பு வகைகளும் கொண்டுது. இதற்கு காண்டிகை உரை,விருந்தி உரை உள்ளன இந்த நூலுக்கு மயிலைநாதர்,சங்கரநமச்சிவாயர்,இராமானுஜ கவிராயர்,சிவஞானமுனிவர் போன்ற பல சமயத்தாரும் உரைகூறியுள்ளனர்.இதன் ஆசிரியர் பவணந்திமுனிவர்.இதன் காலம் 13-நூற்றான்டின் பகுதி ஆகும்.

நம்பியகப்பொருள்
            இந்நூலை அகப்பொருள் விளக்கம் என அழைப்பர்.இதன் ஆசிரியர் நற்கவிராசநம்பி அகம் பற்றிக் கூறும் இந்நூல் அகத்தினையில்,ஒழியல் எனும் ஐந்து இயல்களை கொண்டது.தஞ்சை வாணண் கோவை.இந்நூலின் துறைகளுக்கு ஏற்ற இலக்கியமாக,இயற்றப்பட்டது.

முடிவுரை

            இவ்வாறாக மேலே கூறப்பட்ட இலக்கண நூல்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு பெற்று சிறந்து விளங்குகின்றன.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

நாலடியார்



                  நாலடியார்

முன்னுரை:


          பதினெண் கிழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்ததாக திகழ்வது நாலடியார். கற்போர்  உள்ளத்தில் எளிதில் பதியுமாறு சான்றுகளுடன் தெளிவாகவும் எடுத்துரைப்பது நாலடியார். பொருட்பால்,அரசியலில் கல்வி எனும் அதிகாரத்தில் இடம்பெற்ற பாடல்கள் இங்கு காண்போம்.

 கல்வி அழகு:

             
பாடல்:
                குஞ்சி அழகு, கொடுந் தானைக் கோட்டழகும்,
                மஞ்சள் அழகும், அழகு அல்ல; நெஞ்சத்து,
                நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்,
                கல்வி அழகு அழகு.
          
           பொருள்;  

            
     தலைமுடியைச் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல, மனதளவில் உண்மையாக நடந்து கொள்கிறோம் என்னும் நடுவு நிலைமையாம் ஒழுக்க வாழ்க்கையைத் தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகு ஆகும்.

தமிழின் தொன்மையும் சிறப்பும்

              தமிழின் தொன்மையும் சிறப்பும்
 முன்னுரை;

திங்களொடும்  செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும்
 பொங்குகடல் இவற்றோடும் பிறந்ததமிழ்”- பாவேந்தர் பாரதிதாசன்
என்று பாடலின் மூலம் தமிழின் தொன்மையை நன்கு உணரலாம். தமிழின் முதன்மையையும் தொன்மையையும் அகம் மற்றும் புறச்சான்றுகள் மூலம் நன்கு உணரலாம்.
அகச்சான்றுகள்;

.தமிழின் தொன்மையைக் கூறும் அகச்சான்றுகள் பல அவற்றுள் சில,
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றிய மூத்த குடி – புறப்பொருள் வெண்பாமாலை.
சேர சோழப் பாண்டியர் போலப் படைப்புக்காலந்தொட்டு
மேம்பட்டு வரும் குடி – பரிமேலழகர்
     இவ்வாறு தமிழ் சான்றோர் பலரும் தமிழின் தொன்மையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
     3500 ஆண்டுகளுக்கு முன்தோன்றிய தொல்காப்பியர் தமக்கு முன் வாழந்த தமிழ் அறிஞர்களை என்மனார் புலவர், யாப்பறி புலவர், தொன்மொழிப் புலவர், நூல்நவில் புலவர் என்று குறிப்பிடுகிறார். தொன்மைக் காலத்து வாழ்ந்த தொல்காப்பியரே தமிழைத் “தொன் மொழி” எனக் கூறியுள்ளார்.
தொன்மச்சான்று;

      உலகத் தோற்றத்தின் போது, சிவபெருமானின் உடுக்கையிலிருந்து ஒருபுறம் தமிழும், மறுபுறம் வடமொழியும் தோன்றின என்று கூறுவார்கள். இதை
தழற்புரை நிறக்கடவுள் தந்ததமிழ் என்று கம்பரும்
ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை என்று தமிழன்னை கூறுவதாக பாரதியாரும் கூறியுள்ளார்.
     தமிழின் தோற்றமும் தொன்மையும் அறியமாட்டாத ஒரு சிலர் கற்பனையாகத் தொன்மக் கதைகளைக் கட்டி வழிபடுவராயினர். இருப்பினும் இந்த தொன்மக் கதைகளாலும் தமிழின் தொன்மை புலனாகிறது.
வடமொழிச்சான்று;
       ஒரு காலத்தில் இந்தியாவின் இலக்கிய மொழிகளாக இருந்தவை தென் தமிழும், வடமொழியும் ஆகும். இவ்விரு மொழிகளும் ஒன்றுக்குள் ஒன்றாக ஊடுருவ முயன்றன. முதல் வேதமாகிய “இருக்கு வேதத்திலேயே முத்து” முதலிய தமிழ்ச் சொறகள் காணப்படுகின்றன. அகத்தியர், வால்மீகியார், கோதமனார் போன்றோர்களின் பாடல்கள் வேதங்களில் காணப்படுகிறது. அதே வேளையில், அவர்களை தமிழ் சங்க புலவர்களாக இறையனார் களவியலுறை குறிப்பிடுகிறது. இவர்களின் தமிழ் பாடல்கள் இன்றும் புறநானூறு முதலிய சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
திராவிட மொழியிற்சான்று;


      திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ் என்றும், தொல் திராவிட மொழிகள் பெரும்பாலும் தமிழோடு ஒத்துள்ளன என்றும் மொழியியலாளர் கூறுவர்.  வடமொழியின் தாக்கத்தால் முதலில் தெலுங்கு உருவாயிற்று. பின், கன்னடம் உருவாயிற்று என்பதனை,
மழலைத் திருமொழியில் சில வடுகும் சில தமிழும்
குழறித்தரு கருநாடியார் குறுகிக் கடைதிறமின் – கலிங்கத்துபரணி
ஆரியர் இந்தியா வரும் முன் தமிழே இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்தது என்றும், இதனாலேயே இந்த, மராத்தி முதலிய வட இந்திய மொழிகளின்  தொடரமைப்பு தமிழோடு ஒத்தும், ஆரிய மொழிகளாகிய சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தின், ஜெர்மன் முதலிய மொழிகளோடு வேறுபட்டும் விளங்குகின்றன என்றும் மொழியியலாளர் கருதுகின்றன.
தொல்பொருள் ஆய்வுசான்று;

      சிந்துச் சமவெளியில் புதையுண்ட மொகஞ்சதாரோ, அரப்பா நகரங்களில் தமிழ் முத்திரைகள் காணப்படுகின்றன என்று ஈராசு பாரதியார் கருதுகின்றார். ஆரியர் வருகைக்கு முற்பட்ட இந்நாகரிகம் திராவிடருடையது என நிறுவப்பட்டமையால் “கற்கால இந்தியா முழுமையிலும் வழங்கிய மொழி தமிழே. சமஸ்கிருத பிராகிருத சம்பந்தமான மொழிகள் வழங்கவில்லை” என்று நா.சி.கந்தசாமிபிள்ளை குறிப்பிடுகிறார். இதிலிருந்து இந்தியாவின் முதன் மொழி தமிழ் என்பதும், அது காலப்போக்கில் மேற்கு ஆசிய நாகரிக நாடுகளிடையே பரவி மாற்றமுற்றது என்பது தெளிவாகின்றன.
புவியியற்சான்று;
      தமிழ்நாட்டின் தெற்கிலுள்ள இந்துப் பெருங்கடலில் மிகப் பெரிய நிலப்பரப்பு ஒன்று இருந்ததெனப் புவியியலார் கருதுகின்றனர். அதற்கு இலெமுரியா எனப் பெயரிட்டார் ஹெக்கல். அவர் “தமிழ் நாட்டின் தென்பகுதியே மாந்தரின் முதற் பிறப்பிடம்” என்றார். அது மனித நாகரிக தொட்டில் என்கின்றனர். இலெமூரியாவே பழைய தமிழகம் எனப்படுகிறது.
கல்வெட்டு சான்று;

      கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து செதுக்கப்பட்ட கல்வெட்டுகளில் தமிழின் வரிவடிவம் காணப்படுகிறது. இப்பழைய எழுத்து முறையைத் தென் பிராமி என்று கூறி, வட மொழிக்கு உரிய எழுத்தாக்க முனைந்தனர். இப்போது ஆய்வு வல்லுநர்கள் வரிவடிவம் என்பது தமிழருடையதே எனக் கருதுகின்றனர். தமிழருக்கும் ஆரியருக்கும் உறவு ஏற்பட்ட பிற்காலத்தில் ஆரிய மக்கள் தமிழரின் உதவியைப் பெற்று, வடமொழிக்குரிய ஒலிகளுக்குத் தமிழ் நெடுங்கணக்குப் போல வரிவடிவாகிய எழுத்துக்களை ஆக்கிக் கொண்டார்கள் என்பார் நா.பி. கந்தசாமிபிள்ளை. தமிழ் மொழியின் வரிவடிவம் எழுத்துத் தொன்மையை நிலைநாட்டுவன.
முடிவுரை;

     தமிழ் பிறமொழிக் கலப்பின்றி இயங்கும் திறனுடையது. உலகின் பெரும்பாலான மொழிகட்கு இத்தனித்தன்மை கிடையாது. தமிழில் வடமொழித் தாக்கம் கூடக் காலத்தால் முன்னோக்கிச் செல்ல செல்லக் குறைந்து போதலைக் காண முடியும். மேற்கூறப்பட்ட செய்திகள் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் நமக்கு புலப்படுத்துகின்றன.

திருக்குறள் பற்றி புலவர்களின் கருத்து


திருவள்ளுவர்:

                       திருக்குறளை இயற்றியவர் 'திருவள்ளுவர்'. இவரின் வேறு பெயர்கள்: "நாயனார் , தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யில் புலவர்" என்பனவாகும்.  

திருக்குறள்:

                       திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள்: "முப்பால், உத்திரவேதம், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை" என்பனவாகும்.


திருக்குறள் குறித்து மற்ற பல புலவர்களின் கருத்து

            "கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
            குறுகத் தறித்த குறள்  -இடைக்காடர்

             "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

              குறுகத் தறித்த குறள்" -ஔவையார்.                                                                       

              "திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு

              உருத்தகு நற்பலகை ஒக்க - இருக்க

              உருத்திர சன்மர் என உரைத்து வானில்

              ஒருக்கஒ என்றது ஓர் சொல்"                                                                                                                                                            -அசரீரி

            "தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட

              பனையளவு காட்டும் படித்தால் - மனைஅளகு

              வள்ளைக்கு உறங்கும் வளநாட! வள்ளுவனார்

              வெள்ளைக் குறட்பா விரி"                                                                                                                                                        - கபிலர் .

 

              "மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்

              மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும்

              தாமுடைய மன்னர் தடமுடிமேல் தார்அன்றோ?

              பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்"                                                                                                                                                           -சீத்தலை சாத்தனார்.


              "மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாண்அடியால்

              ஞாலம் முழுதும் நயந்து அளந்தான் - வால்அறிவின்

              வள்ளுவருந்  தங்குறள்வெண் பாஅடியால் வையத்தார்

              உள்ளுவால் லாம் அளந்தார் ஓர்ந்து"                                                                                                                                                                            -  பரணர்.

             
             "எப்பொருள் யாரும் இயல்பின் அறிவுறச்

                செப்பிய வள்ளுவர் தாம்செப்பவரும் - முப்பாற்குப்

                பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை

                நேர்வனமற்ற(று) இல்லை நிகர்"                                                                                                   - உத்திரசன்ம கண்ணர்.


                 "செய்யா மொழிக்கும் திருவள் ளுவர்மொழிந்த

                  பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே; - செய்யா

            அதற்குஉரியர் அந்தனரே, ஆராயின் ஏனை

            இதற்குஉரியர் அல்லாதார் இல்"                                                                                                                           - வெள்ளி வீதியார்.


           "கான்நின்ற தொங்கலாய்! காசி தந்ததுமுன்

           கூநின்று அளந்த குறள்என்ப - நூன்முறையான்

                வான்நின்று மண்ணின்று அளந்ததே வள்ளுவனார்

                தாம்நின்று அளந்த குறள்"                                                                                                                                    - பொன்முடியார்.

                 இவ்வாறு திருக்குறள் பற்றியும் திருவள்ளுவர் பற்றியும் மேலும் பல புலவர்கள் பாடியுள்ளனர்

புதன், 3 பிப்ரவரி, 2016

தன் வாயால் கெடுதல்



                
பழமொழி

                         முன்றுறையரையனார்

பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைகள்

சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் – நல்லாய்!

மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்

நுணலுந்தன் வாயால் கெடும்.


நுணலும் தன் வாயால் கெடும் என்பது பழமொழி. நுணல் – தவளை.
மண்ணுக்குள் முழுகி ஒளிந்து கொள்ளும் தவளை தன் குரலைக் காட்டிக் கத்தி பாம்பிடம் அகப்படும். அதுபோல, பொல்லாங்கான பேச்சுக்களைப் பேசிவிட்டு மறைந்து திரியும் பேதையும், தன்னுடைய சொல்லினாலேயே துயரினுள் அகப்படுவான். அவனுடைய உண்மையான தன்மையைப் பிறர் அறிந்து, அவனை வெறுப்பார்கள்.  

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

கருமியின் செல்வம்



               
பழமொழி

                     முன்றுறையரையனார்

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற

முழங்கும் முரசுடைச் செல்வம்தழங்கருவி

வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ

நாய்பெற்ற தெங்கம் பழம்.


நாய்பெற்ற தெங்கம் பழம் என்பது பழமொழி. தெங்கம்பழம் – முற்றிய தேங்காய். நாய்க்கு கிடைத்த முழுத் தேங்காயை அதனாலும்  தின்ன முடியாது; பிறர் எடுத்துச் சென்று அநுபவிக்கவும் அது விடாது. அதனைப் போன்றே தான் பெற்ற செல்வத்தை வறுமையாளர்களுக்கு வழங்கித் தருமம் செய்யாமலும், தானும்  அநுபவிக்காமல் காக்கும் கருமியின் செல்வமானது அவனுக்கும் பிறர்க்கும் பயன்படாமல் அழியும்.