செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

தமிழின் தொன்மையும் சிறப்பும்

              தமிழின் தொன்மையும் சிறப்பும்
 முன்னுரை;

திங்களொடும்  செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும்
 பொங்குகடல் இவற்றோடும் பிறந்ததமிழ்”- பாவேந்தர் பாரதிதாசன்
என்று பாடலின் மூலம் தமிழின் தொன்மையை நன்கு உணரலாம். தமிழின் முதன்மையையும் தொன்மையையும் அகம் மற்றும் புறச்சான்றுகள் மூலம் நன்கு உணரலாம்.
அகச்சான்றுகள்;

.தமிழின் தொன்மையைக் கூறும் அகச்சான்றுகள் பல அவற்றுள் சில,
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றிய மூத்த குடி – புறப்பொருள் வெண்பாமாலை.
சேர சோழப் பாண்டியர் போலப் படைப்புக்காலந்தொட்டு
மேம்பட்டு வரும் குடி – பரிமேலழகர்
     இவ்வாறு தமிழ் சான்றோர் பலரும் தமிழின் தொன்மையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
     3500 ஆண்டுகளுக்கு முன்தோன்றிய தொல்காப்பியர் தமக்கு முன் வாழந்த தமிழ் அறிஞர்களை என்மனார் புலவர், யாப்பறி புலவர், தொன்மொழிப் புலவர், நூல்நவில் புலவர் என்று குறிப்பிடுகிறார். தொன்மைக் காலத்து வாழ்ந்த தொல்காப்பியரே தமிழைத் “தொன் மொழி” எனக் கூறியுள்ளார்.
தொன்மச்சான்று;

      உலகத் தோற்றத்தின் போது, சிவபெருமானின் உடுக்கையிலிருந்து ஒருபுறம் தமிழும், மறுபுறம் வடமொழியும் தோன்றின என்று கூறுவார்கள். இதை
தழற்புரை நிறக்கடவுள் தந்ததமிழ் என்று கம்பரும்
ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை என்று தமிழன்னை கூறுவதாக பாரதியாரும் கூறியுள்ளார்.
     தமிழின் தோற்றமும் தொன்மையும் அறியமாட்டாத ஒரு சிலர் கற்பனையாகத் தொன்மக் கதைகளைக் கட்டி வழிபடுவராயினர். இருப்பினும் இந்த தொன்மக் கதைகளாலும் தமிழின் தொன்மை புலனாகிறது.
வடமொழிச்சான்று;
       ஒரு காலத்தில் இந்தியாவின் இலக்கிய மொழிகளாக இருந்தவை தென் தமிழும், வடமொழியும் ஆகும். இவ்விரு மொழிகளும் ஒன்றுக்குள் ஒன்றாக ஊடுருவ முயன்றன. முதல் வேதமாகிய “இருக்கு வேதத்திலேயே முத்து” முதலிய தமிழ்ச் சொறகள் காணப்படுகின்றன. அகத்தியர், வால்மீகியார், கோதமனார் போன்றோர்களின் பாடல்கள் வேதங்களில் காணப்படுகிறது. அதே வேளையில், அவர்களை தமிழ் சங்க புலவர்களாக இறையனார் களவியலுறை குறிப்பிடுகிறது. இவர்களின் தமிழ் பாடல்கள் இன்றும் புறநானூறு முதலிய சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
திராவிட மொழியிற்சான்று;


      திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ் என்றும், தொல் திராவிட மொழிகள் பெரும்பாலும் தமிழோடு ஒத்துள்ளன என்றும் மொழியியலாளர் கூறுவர்.  வடமொழியின் தாக்கத்தால் முதலில் தெலுங்கு உருவாயிற்று. பின், கன்னடம் உருவாயிற்று என்பதனை,
மழலைத் திருமொழியில் சில வடுகும் சில தமிழும்
குழறித்தரு கருநாடியார் குறுகிக் கடைதிறமின் – கலிங்கத்துபரணி
ஆரியர் இந்தியா வரும் முன் தமிழே இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்தது என்றும், இதனாலேயே இந்த, மராத்தி முதலிய வட இந்திய மொழிகளின்  தொடரமைப்பு தமிழோடு ஒத்தும், ஆரிய மொழிகளாகிய சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தின், ஜெர்மன் முதலிய மொழிகளோடு வேறுபட்டும் விளங்குகின்றன என்றும் மொழியியலாளர் கருதுகின்றன.
தொல்பொருள் ஆய்வுசான்று;

      சிந்துச் சமவெளியில் புதையுண்ட மொகஞ்சதாரோ, அரப்பா நகரங்களில் தமிழ் முத்திரைகள் காணப்படுகின்றன என்று ஈராசு பாரதியார் கருதுகின்றார். ஆரியர் வருகைக்கு முற்பட்ட இந்நாகரிகம் திராவிடருடையது என நிறுவப்பட்டமையால் “கற்கால இந்தியா முழுமையிலும் வழங்கிய மொழி தமிழே. சமஸ்கிருத பிராகிருத சம்பந்தமான மொழிகள் வழங்கவில்லை” என்று நா.சி.கந்தசாமிபிள்ளை குறிப்பிடுகிறார். இதிலிருந்து இந்தியாவின் முதன் மொழி தமிழ் என்பதும், அது காலப்போக்கில் மேற்கு ஆசிய நாகரிக நாடுகளிடையே பரவி மாற்றமுற்றது என்பது தெளிவாகின்றன.
புவியியற்சான்று;
      தமிழ்நாட்டின் தெற்கிலுள்ள இந்துப் பெருங்கடலில் மிகப் பெரிய நிலப்பரப்பு ஒன்று இருந்ததெனப் புவியியலார் கருதுகின்றனர். அதற்கு இலெமுரியா எனப் பெயரிட்டார் ஹெக்கல். அவர் “தமிழ் நாட்டின் தென்பகுதியே மாந்தரின் முதற் பிறப்பிடம்” என்றார். அது மனித நாகரிக தொட்டில் என்கின்றனர். இலெமூரியாவே பழைய தமிழகம் எனப்படுகிறது.
கல்வெட்டு சான்று;

      கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து செதுக்கப்பட்ட கல்வெட்டுகளில் தமிழின் வரிவடிவம் காணப்படுகிறது. இப்பழைய எழுத்து முறையைத் தென் பிராமி என்று கூறி, வட மொழிக்கு உரிய எழுத்தாக்க முனைந்தனர். இப்போது ஆய்வு வல்லுநர்கள் வரிவடிவம் என்பது தமிழருடையதே எனக் கருதுகின்றனர். தமிழருக்கும் ஆரியருக்கும் உறவு ஏற்பட்ட பிற்காலத்தில் ஆரிய மக்கள் தமிழரின் உதவியைப் பெற்று, வடமொழிக்குரிய ஒலிகளுக்குத் தமிழ் நெடுங்கணக்குப் போல வரிவடிவாகிய எழுத்துக்களை ஆக்கிக் கொண்டார்கள் என்பார் நா.பி. கந்தசாமிபிள்ளை. தமிழ் மொழியின் வரிவடிவம் எழுத்துத் தொன்மையை நிலைநாட்டுவன.
முடிவுரை;

     தமிழ் பிறமொழிக் கலப்பின்றி இயங்கும் திறனுடையது. உலகின் பெரும்பாலான மொழிகட்கு இத்தனித்தன்மை கிடையாது. தமிழில் வடமொழித் தாக்கம் கூடக் காலத்தால் முன்னோக்கிச் செல்ல செல்லக் குறைந்து போதலைக் காண முடியும். மேற்கூறப்பட்ட செய்திகள் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் நமக்கு புலப்படுத்துகின்றன.

5 கருத்துகள்:

  1. நீங்கள் உங்கள் தாய்மொழியில் பேசுகிறீர்கள்
    நாங்கள் மொழிகளின் தாய்மொழியில் பேசுகிறோம் என்று கூறும் தகுதி நம் தமிழர்களுக்கு மட்டுமே உண்டு. அத்தகைய தொன்மைச் சிறப்பை அழகுபட எடுத்துரைத்தமைக்கு நன்றிகள் நந்தினி.

    பதிலளிநீக்கு
  2. மகிழ்ச்சி. இன்னும் ஆழமாக ஆய்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு