ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

100 = 1000


அன்பான தமிழ் உறவுகளே வணக்கம்.

1000 இடுகைகள் எழுதியவுடன் எனக்குள் ஒரு இலக்குவைத்துக்கொண்டேன். சமூகத்தளங்களில் ஆங்கிலத்தில் எழுதும் பலரையும் தமிழில் எழுதவைக்கவேண்டும் என்பதுதான் அது. அதனால் பல கல்லூரிகளுக்கும் சென்று தமிழ்த்தட்டச்சு பற்றியும், தமிழில் வலைப்பதிவு எழுதுதல், விக்கிப்பீடியாவில் எழுதுதல் குறித்தும் உரையாற்றி வருகிறேன். தமிழ் இணையப்பல்கலைகழகத்தின் அறிவுறுத்தலுக்கிணங்கி எங்கள் கல்லூரியில் கணித்தமிழ்ப் பேரவை ஒன்றை ஆரம்பித்துள்ளோம். அதில் எங்கள் மாணவிகளுக்கு,

தமிழ்தட்டச்சுப் பயிற்சி, வலைப்பதிவில் தமிழ் எழுதுதல், விக்கிப்பீடியாவில் எழுதுதல், குறுஞ்செயலி உருவாக்கம், உள்ளிட்ட பயிற்சிகளை அளித்துவருகிறேன். கணித்தமிழ்ப் பேரவையின் உறுப்பினர்களாக விண்ணப்பித்திருந்த 100 மாணவிகளுள் முதல்கட்டமாக 50 மாணவிகளுக்கு மட்டும் இந்தப் பயிற்சி வழங்கிவருகிறேன். இந்த 50 மாணவிகளும் எங்கள் கல்லூரியின் வலைப்பதிவில் எழுதிவருகிறார்கள். இவா்கள் கடந்த 3 மாதங்களில் 100 இடுகைகள் எழுதியிருக்கிறார்கள். நான் எழுதிய 1000 இடுகைகளைவிட மதிப்புடையனவாக இந்த 100 இடுகைகளைக் கருதுகிறேன். ஏனென்றால் இந்த மாணவிகள் வெவ்வேறு துறை சார்ந்தவா்கள், சமூகத்தளங்களில் பெண் படைப்பாளிகள் ஆண்களுடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லாத இந்த நிலையில் இப்படி பெண் படைப்பாளிகளாக இம்மாணவிகள் தமிழ் எழுதுவது பெரிதென்று கருதுகிறேன். வலைப்பதிவில் நன்கு எழுதும் பயிற்சி பெற்ற இவா்கள் புதிய மாணவிகளுக்குப் பயிற்சி அளிப்பதுடன் தற்போது விக்கிப்பீடியாவில் எழுதும் பயிற்சி பெற்று வருகிறார்கள். கல்லூரியின் வலைப்பதிவில் சிறப்பாக எழுதிய மாணவிகளை கல்லூரி வலைப்பதிவின் ஆசிரியராக்குவதுடன் எனது வலையில் சிறப்பு விருந்தினராக தமது வலையை அறிமுகம் செய்யும் வாய்ப்பையும் வழங்கவுள்ளேன்.

எங்கள் வலையில் எழுதும் மாணவிகளின் படைப்புகளை பலரும் மறுமொழிகளால் ஊக்குவித்து வருகின்றனா். குறிப்பாக எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழாவுக்கு சிறப்பு சொற்பொழிவாளராக வந்த கவிஞர் முத்துநிலவன் ஐயா அவா்கள் எங்கள் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதிவரும் செ.வைசாலி என்ற வணிகவியல் முதலாமாண்டு மாணவியைப் பாராட்டி நூல் வழங்கி சிறப்பித்தார். எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழாவில் கணித்தமிழ்ப் பேரவையின் சிறந்த செயல்பாட்டுக்காகப் பாராட்டி இம்மாணவிக்கு கணித்தமிழ்ப் பேரவையின் சிறந்த மாணவி என்ற விருதும் வழங்கி எங்கள் முதல்வர் ஊக்குவித்தார்.

மேலும் வாசிக்க...

2 கருத்துகள்:

  1. நன்றிகள் பல ஐயா.என் வெற்றிக்கும் முயற்சிக்கும் தாங்கள் ஒருவர் மட்டுமே காரணம் ஐயா.தங்களின் உறுதுணையும் தூண்டுதலும் தான் என் வெற்றியும் முயற்சியும் ஐயா.இப்பொழுது நா.முத்துநிலவன் ஐயா போன்ற பலருடன் நல்ல நட்பு வட்டாரம் எனக்கு அமைந்துள்ளது ஐயா.நான் இப்பொழுது அவர்களின் கருத்துகளோடு பயணித்துக் கொண்டு இருக்கிறேன் ஐயா.இவை அனைத்தும் தாங்கள் என்னை இணையத்தில் அறிமுகப்படுத்தியது மட்டுமே ஐயா.

    தங்களின் மாணவியாக கட்டாயம் நான் தங்களிடம் கற்ற அனைத்தையுமே பிறருக்கும் எந்த பயனையும் எதிர்பாராமல் செய்து முடிப்பேன் ஐயா.என்னால் முடிந்த வரை அல்ல முடியும் வரை முயற்சிப்பேன் ஐயா.நன்றிகள் பல ஐயா.

    பதிலளிநீக்கு