சனி, 27 பிப்ரவரி, 2016

நன்றி மறப்பது நன்றன்று..!!Image result for நன்றி மறப்பது நன்றன்று


வீடு வீடாகப் பொருட்களை வினியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்பப் பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் அவனிடம் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என நினைத்தான். கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். அவனுக்கோ சாப்பாடு கேட்க ரொம்பக் கூச்சம்.

'கொ... கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?' தயக்கத்துடன் கேட்டான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியைக் கவனித்தாள்.

உள்ளே போய் ஒரு கப் பால் கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலைக் குடித்துப் பசியாற்றிய சிறுவன் கேட்டான், `நான் எவ்வளவு கடன்பட்டிருக்கேன்?'

`கடனா? அப்படியொன்றுமில்லை. அன்பான செயலுக்கு விலை இல்லை என அம்மா சொல்லியிருக்கிறார்...', அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.

'ரொம்ப ரொம்ப நன்றி...' சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. அந்த சிறுவன் நகரிலேயே பெரிய டாக்டர் ஆனான். அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனை வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்தப் பெண்ணின் ஊரைப் படித்ததும் அவருக்குள் சின்ன மின்னல். விரைவாக அறைக்குப் போய் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவளேதான். தனது பசியாற்றிய நல்ல உள்ளம் படைத்தவள்.

அன்று முதல் தனது அத்தனை உழைப்பையும் செலுத்தி அவளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்குப் பின் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்தப் பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படிக் கட்டப் போகிறேனோ எனும் பதற்றத்துடன் அதைப் பிரித்த அவள் திகைத்துப் போனாள்.

அந்த பில்லின் கடைசியில் எழுதப்பட்டிருந்தது, `ஒரு கப் பாலில் உங்கள் கடன் எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்.' அவளுடைய கண்கள் கசிந்தன.

மனிதனுக்கு இருக்க வேண்டிய மகத்தான குணாதிசயங்களில் ஒன்று நன்றி சொல்லுதல்.

அமெரிக்காவில் நீங்கள் காரில் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். ஒருவர் உங்களை முந்திச் செல்ல நீங்கள் அவருக்கு வழிவிட்டால் அவர் உங்களுக்கு 'நன்றி' சொல்லி விட்டுத்தான் போவார். சாலையில் ஒருவர் கடக்க நீங்கள் வண்டியை நிறுத்தினால் அவர் 'நன்றி' சொல்வார். கடையில் ஒரு பொருள் வாங்கும் போது கூட கடைக்காரருக்கு `நன்றி' சொல்வார்கள்.

நன்றி சொல்லும் வழக்கம் அவர்களிடம் ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. நல்லவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம், தப்பில்லை.

நன்றி என்பது ஒரு சின்ன வார்த்தைதான். ஆனால் அது மனதளவில் தரும் உற்சாகமும், மகிழ்ச்சியும் அளவிட முடியாதது. அது ஒரு வார்த்தையாய் நின்று விடாமல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஊற்றெடுக்க வேண்டும் என்பது மட்டுமே கவனிக்க வேண்டிய விஷயம்.

சின்னச் சின்ன விஷயங்களில் நன்றி சொல்லத் தெரியாதவர்களால் பெரிய விஷயங்களிலும் நன்றி சொல்ல முடியாது என்கிறது எஸ்தோனிய பழமொழி ஒன்று.

நன்றியைச் சொல்ல இந்த நவீன யுகத்தில் ஏகப்பட்ட வழிகள் உண்டு. ஓர் எஸ்.எம்.எஸ், ஒரு சின்ன மின்னஞ்சல் வரி கூட உங்கள் நன்றியை எடுத்துச் செல்லலாம்.

எதிர்பாராத நேரத்தில் ஒருவரை ஒரு `நன்றி' மூலம் மகிழச் செய்வது அற்புதமான விஷயம். அந்த நபர் செய்த நல்ல பத்து விஷயங்களைப் பட்டியலிட்டு, அதற்காக உங்களுடைய மனமார்ந்த நன்றியையோ, பரிசையோ அளித்துப் பாருங்கள். அது அந்த நபருடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

நாம் செய்யும் மிகப்பெரிய தப்பு என்ன தெரியுமா? கூட இருப்பவர்களுக்கு நன்றி சொல்லாமல் விடுவதுதான். கூடவே இருப்பதால் அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லக் கூடாது என நினைத்து விடுகிறோம். நன்றி என்பது அலுவல் சமாச்சாரங்களுக்கு மட்டுமானது என தப்புக் கணக்கு போட்டு விடுகிறோம். கணவன், மனைவி, அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சி, தம்பி என எல்லோருக்கும் நன்றி சொல்வதே நல்ல பழக்கம்.

'தினமும் எனக்கு நீங்க தானே காபி போட்டு தர்றீங்க, இன்னிக்கு அதுக்கு ஒரு சின்ன நன்றியா, நானே காபி போட்டு உங்களை எழுப்பறேம்மா' என அம்மாவை ஒரு நாள் நெகிழச் செய்யுங்கள்.

அப்பாவுடைய ஆடைகளை எல்லாம் இஸ்திரி போட்டு வைத்து அப்பாவுக்கு ஒரு நாள் நன்றி சொல்லுங்கள். அதிகாலையில் எழுந்து வீட்டைப் பெருக்கி மனைவிக்கு ஒரு நாள் நன்றி சொல்லுங்கள். இப்படி சின்னச் சின்ன அன்பின் செயல்களால் நன்றி சொல்வது வார்த்தைகளால் நன்றி சொல்வதை விட ரொம்ப வலிமையானது.

இன்னும் ஒரு படி மேலே போய் சிந்தியுங்கள். உங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண்ணுக்கோ, தோட்டக்காரருக்கோ, காவல்காரருக்கோ என்றைக்காவது மனசார நன்றி சொல்லியிருக்கிறீர்களா?

ஒரு பாராட்டு, ஒரு பரிசு, ஒரு மனமார்ந்த நன்றி என அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சிப் பக்கத்தை எழுதியிருக்கிறீர்களா? எல்லா மனிதரும் கடவுளின் பிம்பங்கள் என்கிறோம், அதில் பலவீனர்களை எப்போதுமே ஒதுக் கியே வைக்கிறோமே, தப்பில்லையா ?

சொல்லப்படாத நன்றி எப்படிப்பட்டது தெரியுமா?

'ஒருவருக்கு அழகான ஒரு பரிசுப் பொருளை வாங்கி, அதை அருமையாக கிப்ட் கவரில் போட்டு அப்படியே வீட்டில் வைத்திருப்பது போன்றது' என்கிறார் வில்லியம் ஆர்தர் வேர்ட்.

யாராவது நமக்கு ஒரு கெடுதல் செய்தால் நாள் கிழமை குறித்து மனசுக்குள் கல்வெட்டாய் வைப்பதும், அவர் நமக்குச் செய்த நன்மைகளை காற்றில் எழுதி காணாமல் செய்வதும் நமது பழக்கம். அதை அப்படியே உல்டாவாகப் பண்ணிப் பழக வேண்டும். தீயது செய்தால் காற்றில் எழுது, நல்லதெனில் மனதில் எழுது.

வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கும் 'நன்றி' சொல்லும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் நமது செயல்களைப் பார்த்து வளரும். எனவே நாம் நன்றியுடையவர்களாய் இருக்க வேண்டியது அடிப்படைத் தேவையாகி விடுகிறது.

நன்றி சொல்ல வேண்டும் எனும் மனம் இருந்தால் உங்களுக்கு அதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். நல்லவற்றுக்கு மட்டுமல்லாமல் சோதனைகள், பலவீனங்கள், தோல்விகள் இவற்றுக்குக் கூட நீங்கள் நன்றி செலுத்தலாம்.

ஓர் அழகான ஆங்கிலப் பாடல் உண்டு. அந்தப் பாடலின் சில வரிகளை இப்படித் தமிழில் மொழிபெயர்க்கலாம்.

என்னிடம் இல்லாதவற்றுக்காய் நன்றி, அவைதான் அவற்றை நோக்கி என்னை பயணிக்க ஊக்குவிக்கின்றன.

என்னிடம் இருக்கும் குறைவான அறிவுக்காய் நன்றி, அதுதான் என்னை கற்றுக்கொள்ள வைக்கிறது.

எனது கடினமான நேரங்களுக்காய் நன்றி, அவைதான் என்னை வலிமையானவனாய் மாற்றுகின்றன.

எனது குறைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு நிறைவைத் தேடும் தாகத்தைத் தருகின்றன.

எனது பிழைகளுக்காய் நன்றி, அவைதான் எனக்கு அனுபவப் பாடத்தை அள்ளித் தருகின்றன.

எனது சோர்வுக்காய் நன்றி, அதுதான் எனது உழைப்பின் மேன்மையை எனக்கு உணர்த்துகிறது.

எனது சோதனைகளுக்காய் நன்றி, அவைதான் சோதனைகளைச் சாதனையாய் மாற்றும் மனநிலையைத் தருகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு ஹம்பேக் திமிங்கலம் வலையில் சிக்கிக் கொண்டது. உடல் முழுதும் கயிறுகள் சிக்கிக் கொள்ள திமிங்கலத்தால் நீந்த முடியவில்லை. அந்த 50 அடி நீள திமிங்கலத்தின் கட்டுகளை அறுக்க பாதுகாப்பாளர்கள் திட்டமிட்டார் கள்.

திமிங்கலம் மெல்ல வாலை அசைத்தாலே ஆள் காலியாகிவிடலாம். கட்டறுத்தபின் கோபத்தில் அது குதித்தாலும் காலி எனும் திகில் நிமிடங்களுடன் ஆட்கள் போராடினார்கள். கயிறுகளை அறுத்தார்கள். திமிங்கலம் கண்களை உருட்டி எல்லோரையும் உற்று உற்றுப் பார்த்தது. கட்டுகள் அவிழ்த்து முடித்ததும் ஆனந்தத்தில் கடலுக்குள் நீச்சலடித்தது.

பின் எல்லோரும் ஆச்சரியப்படும் ஒரு விஷயம் நடந்தது. அந்த பிரம்மண்டமான திமிங்கலம் திரும்ப வந்தது. வந்து, கட்டுகளை அவிழ்த்த ஒவ்வொரு நபர் முன்னாலும் சென்று தன் முகத்தினால் அவர்களை மெல்ல முட்டித் தள்ளி தன் நன்றியைச் சொன்னது. எல்லோரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது எனும் வள்ளுவர் வரிகள் திமிங்கலத்தின் செயலில் வெளிப்பட்டன. நன்றி அறிவித்தல் திமிங்கலத்திடம் கூட இருக்கிறது என்பதை அமெரிக்கப் பத்திரிகைகள் அப்போது வியப்புடன் வெளியிட்டன.

பிடிவாதப் பார்ட்டிகளுக்காக, நன்றி சொல்வதில் உள்ள மருத்துவத் தகவல்களையும் கையோடு சொல்லி விடுகிறேன்.

2007-ல் நடத்தப்பட்ட டாக்டர் எம்மோஸ் ஆய்வு ஒன்று, 'நன்றியுடையவர்களாய் இருப்பவர்கள் மன அழுத்தமற்றவர்களாகவும், நிம்மதியான தூக்கம் உடையவர்களாகவும் இருப்பார்கள்' என்றது. இதனால் அவர்களுடைய உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியடைகிறது.

'நன்றி தெரிவிக்கும் தம்பதியரின் குடும்ப வாழ்க்கை நிலையாகவும், வலிமையாகவும் இருக்கும்' என 2010-ல் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வு தெரிவித்தது.

அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று, 'நன்றி தெரிவித்து வாழ்பவர்கள் ரொம்பவே ஆனந்தமாய் இருப்பார்கள்' என தனது கண்டுபிடிப்பை வெளியிட்டது.

வாழ்க்கை ரொம்பவே அழகானது. நமது ஐம்புலன்களும் நம்மை வினாடி தோறும் வியக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன. எவ்வளவோ அழகான விஷயங்களை, மனிதர்களைக் காண்கிறோம். பேச்சுகளை, இசையைக் கேட்கிறோம். பலவற்றை உணர்கிறோம். சுவைகளை ரசிக்கிறோம். நமது புலன்களின் பரிசளிப்புக்கு நன்றி சொன்னதுண்டா? இல்லாத விஷயம் கிடைக்கும்போதுதான் நன்றி சொல்ல வேண்டுமென்பதில்லை. இருக்கின்ற விஷயத்துக்காகவே நன்றி சொல்லலாம்.

நன்றி சொன்னால் பேரழகு!
நன்றி செய்தால் பாரழகு !

Image result for நன்றி மறப்பது நன்றன்றுநன்றிகள் பல தீமைக்கும் நன்மை செய்வோம் தினேஷ் குமார் ஐயா அவர்களுக்கு..!!

9 கருத்துகள்:

 1. நன்றி என்ற இந்த மூன்றெழுத்துகளுக்குள் மறைந்திருக்கும் வாழ்வியல் நுட்பங்களை அழகுபடமொழிந்தீர்கள் வைசாலி. இந்த இடுகை பெரிதாக இருந்தாலும், ஏதேவொரு இனம்புரியாத ஈா்ப்பு இந்த மொழி நடையில் உள்ளது. இவ்விடுகையில் பல செய்திகளைத் தாங்கள் பல இணையதளங்களில் பெற்றிருக்கலாம். இருந்தாலும் தங்களுக்கென்று இதுபோன்ற ஒரு எளிய மொழி நடையை உருவாக்கிக்கொள்ளுங்கள். இந்தப் பதிவை நன்றியுடன் எனது முகநூலில் பகிர்ந்துள்ளேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 2. ஆமாம் ஐயா.இந்த மூன்று எழுத்தில் மறைந்திருக்கும் அழகை கண்டு நானும் வியந்து போனேன்.அதனால் பகிர்ந்தேன் ஐயா.கட்டாயம் எளிய மொழியில் உருவாக்கிக் கொள்கிறேன் ஐயா.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. இந்தக் குழுவில் எழுதப்படும் பங்குச் சந்தை வர்த்தகம் போலும் பாடம்சார்ந்த பதிவுகள் பலருக்கும் பயனுடையதாக இருக்குமென்றே நினைக்கிறேன். ஆனால், என்னை, இதுபோலும் பொதுவான செய்திகளே ஈர்க்கின்றன. எனவே அவ்வப்போது பொதுவான தகவல்களையும் சுவையான செய்திகளையும் பகிர்வது நல்லது என்று தோன்றுகிறது. கணினித் தொழில்நுட்பம் பற்றி முனைவர் இரா.குணசீலன் அவர்கள் அவ்வப்போது எழுதலாமே? இக்குழுவில் இயங்கும் அனைத்து மாணவியர்க்கும் என் அன்பான வாழ்த்துகள், குறிப்பாகப் பலரது பதிவுகளிலும் தொடர்புகளை வளர்த்து -வளர்ந்து- வரும் வைசாலி செல்வத்துக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கணினி தொழில்நுட்பம் சாா்ந்த பதிவுகளை இந்த வலைப்பதிவில் எழுதுகிறேன் ஐயா.
   தங்கள் வருகைக்கு நன்றிகள்.

   நீக்கு
  2. ஐயா தங்களின் வருகைக்கு மிகவும் நன்றி.தொடர்ந்து எழுதுகிறோம்..நன்றி ஐயா.

   நீக்கு
 4. நன்றி சாதரண வார்த்தை என நினைத்தேன். இதற்குள் இத்தனை நன்மை உள்ளது என தெரிந்து கொண்டேன். மதிப்பிற்குரிய பதிவை பதிவு செய்ததற்கு நன்றி வைசாலி.இனி நானும் அதை பின்பற்றுகிறேன்.

  பதிலளிநீக்கு
 5. மிக சிறப்பான உண்மை. அனைவரும் கற்க வேண்டும். யானும் கற்றேன். நன்றி வைசாலி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா.நன்றி என்ற மூன்று எழுத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளை தெரிந்துக் கொள்வோம்.அதை பின்பற்றுவோம் ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் பல ஐயா.

   நீக்கு