வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 ஏப்ரல், 2016

யார் அவர் என்று கண்டுபிடிங்கள்



                யார் அவர் என்று கண்டுபிடிங்கள்


அவரது குழந்தைப் பருவம் கொடூர உணர்வை அவரது மனதில் தூண்டிவிட்டது. சுருங்கச் சொன்னால், குழந்தைப் பருவத்தில் அவர் சந்தோசப்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் கிட்டவில்லை.

வாய்ப்புகளுக்காக அவரது குழந்தை மனம் ஏங்கியது! ஆனால், அந்தக் குழந்தையின் தந்தை  தன் மகன் எந்த வகையிலும் சந்தோசப்படுவதற்கான சந்தர்ப்பங்களைத் தரவில்லை. அவர் தன் மகனுக்குத் தந்ததெல்லாம் என்ன தெரியுமா?

அடி, அடி, அடி என்று இருபத்து நான்கு மணி நேரமும் அடித்துக் கொண்டே இருக்கும் சூழலுக்குள் அந்தக் குழந்தை தள்ளப்பட்டிருந்தது. அதாவது, இதற்கு அடிப்பார்கள், இதற்கு அடிக்க மாட்டார்கள் என்று அந்த நிலைமையைப் புரிந்து கொள்ளும் வகையில் இல்லை.

நின்றால் அடி, அமர்ந்தால் அடி, படுத்தால் அடி, சாப்பிட உட்கார்ந்தால் அடி, உடலில் அந்த அடிகள் உருவாக்கிய தழும்புகளுக்குக் கணக்கில்லை.
இவ்வாறு தந்தையின் கரங்களால் அடிபட்டு அந்தக் குழந்தை துடித்தபோது, வாடா, கண்ணே! என்று அக்குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு, அதன் கன்னத்தில் முத்தமாரி பொழிந்தாள் குழந்தையின் தாய்!

இப்படிப் பட்ட சூழ்நிலையில் அந்தக் குழந்தையின் மனதில் பதிந்த பிம்பம் இதுதான்; “ அப்பா என்றால் அடிப்பவர்; அம்மா என்றால் அணைப்பவர்” அதனாலயே, தன்னை அடிப்பதற்கு தந்தை தன் கையை ஓங்கியபோது, அந்தக் குழந்தை அம்மாவின் பின்னால் பதுங்கிக் கொண்டது. 

மனத்தளவில் அந்தக் குழந்தை தாயின் குழந்தையாக மட்டுமே வளர்ந்து வந்தது.இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தக் குழந்தை வளர்ந்து வாலிப் பருவம் எய்தி, பிறரது கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தனது திறமையை வெளிப்படுத்தியது. ஆனால் படிப்பில் ஆர்வம் குறைவாகவே இருந்தது.

டீன் ஏஜ்-க்குள் நுழைந்துவிட்டார் அவர். அதாவது பதினாறவது வயதை அடைந்துவிட்டார். தனது பதிமூன்றாவது வயதில்  தந்தையை இழந்தார். 
அதன் பிறகு மூன்று வருடங்கள் பள்ளியில் பாடங்களுடன் மல்யுத்தமும் நடத்தினார். முடிவில் எந்தத் தகுதியும் பெறாமல் பள்ளியிலிருந்து விடை பெற்றார்.

அவருக்கு படிப்பு ஏறவில்லை என்றாலும், ஓவியத்தில் ஆர்வம் இருந்தது. ஆனாலும் அவரால் சிறந்த ஓவியராக முடியவில்லை. ஓவியத்தைவிட கட்டடக்கலை, சிற்பக்கலையில் ஆர்வம் காட்டும்படி  பிறர் அவரைத் தூண்டினார்கள். அவற்றிலும் நுழைந்து தனது திறமையைக் காட்ட முனைந்தார். ஆனால், அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.

அவர் சிறு வயது முதலே அரசியல் பற்றிய திண்ணைப் பேச்சுக்களைக் கேட்ட வண்ணமிருந்தார். ஆனாலும் அரசியல் புரியாத வயதில், தனது நண்பர்களுடன் அரசியல் பற்றி, அவருக்குத் தெரிந்த அளவுக்கு விவாதம் நடத்தினார்.

இதற்கிடையே வயிற்றுப் பிழைப்பை நடத்துவதற்காக ஓவியம் வரைந்து விற்பனை செய்தார். அவர் பொதுவாக முதலில் சில தினக்கூலி வேலைகள், அப்புறம் சாயப்பட்டறையில் வேலை, பிறகு, வாழ்த்து அட்டைகளை பார்த்து படம் வரைந்து கொண்டுபோய், கடைகளில் கொடுத்து சில்லறை சேர்க்கிற சுய தொழில் என்று வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார் அவர்.

காலமும் பொழுதும் அவரை இந்தப் பொழப்பு உனக்கு வேண்டாம் என்று மூலதனம் தேவைப்படாத தொழிலான அரசியலில் மூக்கை நுழைத்து, தலை தூக்கிப் பார் என்று அவரைத் தள்ளிவிட்டன.

அரசியலில் கொள்கையை விடவும், யுக்தியும், சொல்லாடலும் மட்டுமே இருந்தால், குறுகிய காலத்தில் மிக உயர்ந்த இடத்திற்கு சென்றவிட முடியும் என்பதை புரிந்து கொண்டார் அவர்.

பேச்சுக்கலையில் குரல் ஏற்ற இறக்கங்களில், எந்தச் சொல்லுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், எந்தச் சொல்லை வருடிக் கொடுக்க வேண்டும், எப்போது குரலை உயர்த்த வேண்டும், எப்போது சொற்பொழிவை  சங்கீதமாக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர் மிக விரைவில் கற்று, அக்கலையில் விற்பன்னர் ஆகிவிட்டார்.

எந்த அரசியலில் அவர் மூக்கை நுழைத்து, அதில் அவர் தன்னை முடிசூடா மன்னர் ஆக்கிக் கொண்டாரோ, அந்த அரசியல் களத்தில் தனக்கு எதிராக எவரும் மூக்கை நுழைத்துவிடக்கூடாது என்பதில் கண்கொத்திப் பாம்பாக இருந்தார் அவர்.

காலமும் சூழலும் அவருக்கு கைக் கொடுத்தது. அவரை அரசியல் அரியணையில் ஏற்றிவிட்டு, காலம் அவரை வேடிக்கை பார்த்தது.
இளம் வயதில் ஓரிரு ரொட்டித் துண்டுகள் கிடைக்காதா என்று தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்த அவர், ஆட்சி பீடம் ஏறியதும், ஆட்சியில் இருந்ததும் சொற்பகாலமே! அதாவது பன்னிரெண்டு ஆண்டுகள்!

கொலைகளைச் செய்வதற்கென்ற பிறந்து, ஆட்டம் போட்டு அடங்கி போன அவர் யார் என்று கண்டுபிடிங்கள்????