இணையதள தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இணையதள தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 ஜூன், 2020

கூகுள் ஆட்சென்சும் தமிழ்ப்பதிவுகளும்


கூகுள் ஆட்சென்சும் தமிழ்ப்பதிவுகளும் என்ற இப்பதிவானது வலைப்பதிவு, யூடியூப் ஆகிய இரு தளங்களிலும் ஆட்சென்சின் இன்றைய நிலையையும், புதிய பதிவர்களுக்கான ஆட்சென்சு குறித்த அறிமுகமாகவும் அமைகிறது.

சனி, 18 நவம்பர், 2017

செயற்கை நுண்ணறிவுத்திறனும், தமிழ் கற்றல்,கற்பித்தல் நுட்பங்களும்

கனடாவில் 7-9 அக்டோபர் 2017 நடைபெற்ற இணைய மாநாட்டில் வழங்கிய கட்டுரை......

                                         
     மனிதர்களின் அறிவை இயற்கையான அறிவு, செயற்கையான அறிவு என வகைப்படுத்த இயலும். குலவித்தை கற்றுப் பாதி, கல்லாமற் பாதி என்ற பழமொழி கூட இக்கருத்தையே எடுத்துரைக்கிறது. இதையே வழக்கில் தன்னறிவு, சொல்லறிவு எனவும் கூறுவதுண்டு. மனிதர்களுக்கு எப்படி கல்வி என்ற முறை செயற்கையாக தம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுகிறதோ அதுபோல,  கணினி  அல்லது  இயந்திரங்கள்  ஆகியவற்றை வைத்துக்கொண்டு அவற்றுக்குக் கற்பித்தல் வழியாக நுண்ணறிவை உருவாக்குகின்ற முறையே செயற்கை நுண்ணறிவுத்திறன் (Artificial Intelligence) என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களுக்கு ஒத்த அல்லது மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட கணிப்பொறிகளை உருவாக்குவதே இத்துறையின் நோக்கம். வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் வழி தமிழ்மொழியைக் கற்றல், கற்பித்தல் குறித்த ஆய்வாக இக்கட்டுரை அமைகிறது.
ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம்
           ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 2020-ம் ஆண்டு 50 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படலாம் என கடந்த ஆண்டு ஆய்வுகளும் வெளிவந்தன. 2030-ம் ஆண்டில் சர்வதேச பொருளாதாரத்தில் ஏஐ நுட்பத்தின் பங்கு 15.7 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று பிடபிள்யூசி நிறுவனம் தனது ஆய்வில் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் 6.6 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் ஏஐ தொடர்பான வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட், கூகுள், ஐபிஎம், ஃபேஸ்புக், ஜெனரல் எலெக்ட்ரிக், அமேசான், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தற்போது இந்த தொழில்நுட்பம் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் எல்லாத்துறைகளிலும் இருக்கும் என்பதால் இத்தொழில்நுட்பமானது தமிழ் மொழியில் எந்த அளவு பயன்படுகிறது, என்பதை அறிந்து எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பத்துக்கு ஏற்ப நாம் நம் தமிழ் மொழியின் நுட்பங்களை வளர்த்துக்கொள்வது நம் கடமையாகவுள்ளது.
கணினிக்கு தமிழ் கற்பித்தல்
      இயங்குதளம் முதல் இணையம் வரை வன்பொருள், மென்பொருள் என பல்வேறு நிலைகளில் தமிழ் எழுத்துருச் சிக்கல் பெரிதாக இருந்தது. ஒருங்குறி அதற்கு நல்ல தீர்வாக அமைந்தது. இன்று, சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கண பிழை திருத்தி, வட்டார வழக்கு பயிற்றுவித்தல், எந்திர மொழிபெயர்ப்பு நுட்பங்கள்,  எழுத்துக்களைப் பேச்சாகவும், பேச்சை எழுத்தாகவும் மாற்றுதல், ஒளி எழுத்துணரி (OCR), இயற்கை மொழி ஆய்வு (Natural Language Processing) செயற்கை நியுரல் கட்டமைப்புகள், (Artificial Neural networks) ஆழக் கற்றல்     (Deep Learning) வரை பல்வேறு நுட்பங்கள் கணினிக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன. வளர்ந்துவரும் ஒவ்வொரு நுட்பங்களுக்கும் ஏற்ப தமிழ் மொழியை நாம் தகவமைத்துக்கொள்ளவேண்டும். அதற்கான கலைச்சொல் வளங்களை உருவாக்கவேண்டும். தமிழ் வழி நிரலாக்கம் சராசரி மக்களின் பயன்பாட்டுக்கும் வரவேண்டும்.
கணினி வழி தமிழ் கற்றலும், கற்பித்தலும்
      குழந்தைகளுக்கான அடிப்படைத்தமிழ் தொடங்கி தமிழாய்வு வரை கணினி வழி தமிழ் கற்பதற்கான வழிமுறைகளையும், எழுத்து, ஒலி, ஒளி என பல்வேறு வடிவங்களில் கணினி, இணையம், மென்பொருள், குறுஞ்செயலிகள் போன்றவற்றில் தமிழ் கற்பதற்கான சூழல்களை உருவாக்கவேண்டும். மேலும் கணினியில் நழுவம் தொடங்கி தோற்றமெய்மை (Virtual reality) வரை தமிழ் கற்பித்தலுக்கான வாய்ப்புகள் உள்ளன. வலைப்பதிவு, சமூகத்தளங்கள் என காலத்துக்கு ஏற்ப வகுப்பறைகளைக் கடந்து மாணவர்களுடன் ஆசிரியர்கள் தொடர்பில் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழ் கற்றல் கற்பித்தலுக்குக் கணினியை சரியாகப் பயன்படுத்தினால்  உலகுபரவி வாழும் தமிழர்களும் அடுத்த தலைமுறையினருக்குக்கும் தமிழைக் கொண்டு சேர்க்கமுடியும்.
தமிழ் கற்றல், கற்பித்தலில் மனிதனும் ஏஐ நுட்பமும்
     தமிழ் கற்றல் என்பது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை நடைபெற்றாலும், உள்நாடு, வெளிநாடு எனவும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்ற நிலையிலும் தமிழ் பேச மட்டுமே தெரிந்தவர்கள், எழுத்து வடிவத்தை அறியாதவர்கள் எனவும் தமிழ் கற்போர் பல வகையில் உள்ளனர். இந்நிலையில் தமிழ் கற்றல், கற்பித்தல் என்பது கணினி மனிதனிடம், மனிதன் கணினியிடம்  என இரு நிலைகளில் நிகழ்கிறது. அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு, நினைவுத்திறன், செயல்திறன், உணர்வுகளைக் கையாளும் திறன் என பல்வேறு செயல்பாடுகள் மனிதனை அடிப்படையாகக் கொண்டு கணினிக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
ஐ.கியு + இ.கியு = ஏ.ஐ (IQ + EQ = AI)
            Intelligence quotient என்ற சொல்லை நுண்ணறிவு என்றும், சுருக்கமாக அதை IQ என்றும் அழைக்கிறோம். அதுபோல Emotional Intelligence என்ற சொல் உணர்வுகளை கையாளும் அறிவைக் குறிப்பதாக அமைகிறது. அதைச் சுருக்கமாக  EQ என அழைக்கிறோம். Artificial Intelligence என்ற சொல்லை,  செயற்கை நுண்ணறிவு என்றும் AI என்றும் அழைக்கிறோம். இன்று மனிதர்களின் நுண்ணறிவுத்திறனை அறிந்துகொள்ளப் பல இணையதளங்கள் உள்ளன. மனித உணர்ச்சிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உளவியல் அடிப்படையில் பல புரிதல்கள் ஏற்பட்டுள்ளன. மனிதர்களின் இயற்கையான அறிவைக்கடந்து திறன்பேசி போன்ற பல நுட்பியல் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் தேடுபொறி முதல் சமூகத்தளங்கள் வரை இணையத்திலும் சராசரி மக்களின் பயன்பாட்டிலுள்ள நுட்பியல் கருவிகளிலும் மனித நுண்ணறிவை அளவிடும் முறைகளும், உணர்வுகளை கையாளும் நுட்பங்களும் மேம்படுத்தப்படவேண்டிய நிலையிலேயே இருக்கின்றன. திறன்பேசி முதல் பல்வேறு நுட்பியல் கருவிகளிலும் இதனைக் கருத்தில்கொள்ளவேண்டும்.
மனிதன் -  ஏ.ஐ நுட்பம்
      கணினியும், இணையமும், மென்பொருள்களும், குறுஞ்செயலிகளும் மனிதனோடு கற்றல், கற்பித்தல் என்ற நிலைக்கு வந்துவிட்டன. இந்நிலையில் யுடியுப், கான் அகாடமி போன்ற காணொளி வழி கற்பித்தல், ஸ்மார்ட் கிளாஸ், வர்சுவல் கிளாஸ் என்றழைக்கப்படும் வகுப்பறைச் சூழல்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்துவிட்டன. சராசரி ஆசிரியரின் மொழியறிவு, பொது அறிவு, பொதுவான அறிவு, நினைவுத்திறன், கற்பனை வளம், ஒப்பீட்டு அறிவு, உவமை  ஆகியன ஏ.ஐ நுட்பியல் கருவிகளுக்குப் போதுமானதாகக் கற்பிக்கப்படவில்லை. கணினி வழி தமிழ் கற்பித்தலுக்கான வாய்ப்புகள் நிறைய உருவாக்கப்பட்டிருந்தாலும், கணினி, மனிதனிடம் கற்கவேண்டிய பண்புகள் நிறையவே உள்ளன.  
நிறைவாக..
·         மனிதர்களை ஒத்த அல்லது மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட கணினிகளை  உருவாக்கும் நோக்குடன் வளர்ந்துவரும் துறையே ஏஐ என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவுத்திறன் என்ற துறையாகும்.
·         ஏஐ நுட்பத்தால் இன்றைய சூழலில் கணினி முதல் கணினி சார்ந்த பல்வேறு நுட்பியல் கருவிகளும் திறன்மிக்கனவாகவும் அவரவர் மொழியிலும் பயன்படுத்த இயலும் என்ற சிறந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனால் இந்நுட்பத்தால் தமிழ் கற்றல் கற்பித்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது.
·         இயங்குதளம் முதல் இணையம் வரை வன்பொருள், மென்பொருள் சமகால பயன்பாடுகளில் ஏஐ என்ற நுட்பம் பெரும்பங்கு வகிக்கிறது. அதனால் கணினிக்கு தமிழ் கற்பித்தல் வழியாக தமிழ் மொழியின் பெருமையை மேலும் உலகறியச் செய்ய இயலும்.
·         சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கண பிழை திருத்தி, வட்டார வழக்கு பயிற்றுவித்தல், எந்திர மொழிபெயர்ப்பு நுட்பங்கள்,  எழுத்துக்களைப் பேச்சாகவும், பேச்சை எழுத்தாகவும் மாற்றுதல், ஒளி எழுத்துணரி (OCR), இயற்கை மொழி ஆய்வு (Natural Language Processing) செயற்கை நியுரல் கட்டமைப்புகள், (Artificial Neural networks) ஆழக் கற்றல்     (Deep Learning) என பல்வேறு முறைகளில் கணினிக்கு தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது.
·         மேலும் கணினி வழியாகத் தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான சிறப்பான களங்கள் உருவாகியுள்ளன. ஐ.கியு, இ.கியு, ஏ.ஐ, என்னும் அறிவு குறித்த தெளிவான புரிதல், செயற்கை நுண்ணறிவுத்திறன் வழி தமிழ் கற்றல் கற்பித்தல் குறித்த ஆய்வில் எதிர்காலத்தில் மிகச்சிறப்பான வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.
·         கணினிக்குத் தேவையான தமிழ் மொழி அறிவை முறையாகக் கற்பித்தால் எதிர்காலத்தில் கணினிகளை மனிதனுக்கு மாற்றாக மட்டுமின்றி மனிதனுக்குப் போட்டியாகவும் உருவாக்கமுடியும்.

·         ஒருகாலத்தில் அஷ்டாவதானி, தசாவதானி, சதாவதானி என்று மனிதர்களின் திறமைகளைப் போற்றினோம். இன்று மனிதனுக்குப் போட்டியாக கணினிகள் பல்வேறு திறன்களுடன் வளர்ந்துவருகின்றன. இச்சூழலில், கணினிக்கு தமிழ் சார்ந்த பொது அறிவைக் கற்பிப்பது மிக எளிதாக உள்ளது. ஆனால் பொதுவான அறிவு அதாவது அதைக் கேட்பரின் திறனறிந்து எவ்வாறு சொல்வது என்ற அறிவைக் கணினிக்குக் கற்பிப்பது நம்முன் உள்ள மிகப்பெரிய இலக்காகவே உள்ளது.

திங்கள், 20 பிப்ரவரி, 2017

எதுக்கு அலைச்சல்..நாங்க இருக்கிறோம்..பேஸ்புக்...!!



➽ இன்றைய நவீன உலகில் மிகவும் முக்கிய பிரச்சனையாகக் கருதப்படுபவது வேலை இல்லா இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தான்.

➽ இதுபோன்ற இளைஞர்களை கருத்தில் கொண்டு சமூக வலைத்தளமான பேஸ்புக்... நாங்க இருக்கிறோம் எதற்கு உங்களுக்கு அலைச்சல்..! என்று அடுத்த அதிரடிக்கு தயாராகி விட்டது.

➽ வேலையில்லா பட்டதாரிகள் இனிமேல் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கோ, அல்லது வேலைவாய்ப்பு தரும் பத்திரிகைகளையோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இனி அனைத்து வேலைவாய்ப்பு குறித்தும் அறிந்து கொள்வதற்காக பேஸ்புக் ஏற்பாடு செய்துள்ளது.

➽ பேஸ்புக் பொழுதுபோக்கிற்கு மட்டுமின்றி பல ஆக்கப்பூர்வமான செயல்களுக்கும் உதவுகிறது. அந்த வகையில் தற்போது வேலை தேடுபவர்களுக்கும், வேலைக்கு ஆட்கள் எடுப்பவர்களுக்கும் ஒரு புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

➽ முதல்கட்டமாக கனடா உட்பட சில நாடுகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உள்பட பல நாடுகளில் இந்த வசதி விரிவுபடுத்தப்பட உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

➽ இதன்படி பேஸ்புக் இனிமேல் 'JOBS " என்ற புக்மார்க்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் வேலை தேடுவோர் பேஸ்புக்கில் இருந்து நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அதே போல் வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களும் இந்த பகுதியை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான திறமையானவர்களை தேர்வு செய்து கொள்ளலாம். நல்ல விஷயம் அல்லவா!


செவ்வாய், 29 நவம்பர், 2016

மின்னூல் உருவாக்குவது எப்படி?

LibreOffice Writer,  sigil,  Calibre  போன்ற கட்டற்ற இலவச மென்பொருட்கள் கொண்டு மின்னூல் உருவாக்குவது எப்படி?
காணொளி – https://youtu.be/0CGGtgoiH-0
FreeTamilEbook.com ல் மின்னூல் வெளியிட விரும்பும் நூலாசிரியர்களும்,
பங்களிப்பாளர்களும் இந்தக் காணொளியைக் காண வேண்டுகிறேன்.
இனி நீங்களே எளிதில் மின்னூல் உருவாக்கி அனுப்பலாம்.


நன்றி இலவச மின்னூல் தகவல் மையம்.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

அதிரடியாக ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக்கின் 'அகுய்லா'..!

மிகப்பெரிய சமூக வலைதலமான பேஸ்புக், இன்டர்நெட் மூலம் உலகை இணைக்கும் திட்டமான சூரிய சக்தி மூலம் இயங்கும் தனது ட்ரோன் ஆன 'அகுய்லா'வை (Aquila) தொடங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று தொடங்கப்பட்ட இந்த ட்ரோன் தான் உலகை முன்னேற்ற உதவும் முதன்மை இணைய அணுகலை (primary internet access) கொண்டு முதல் முழு அளவிலான டிரோன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அகுய்லா ட்ரான் ஆனது பறக்கவல்ல தற்கால விமானம் வடிவமைப்பின் முன்னோட்டம் என்றும் இதன் மூலம் வளரும் உலகின் அத்தியாவசிய இணைய அணுகல் பெற முடியும் என்றும் பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் பதிவின் கீழ் 'இரண்டு ஆண்டு பொறியியல் வேலைகளுக்கு அகுய்லா ட்ரோன் வெற்றிகரமாக தனது முதல் விமான விமானத்தை தொடங்கியது என்பதை அறிவிக்க பெருமைப்படுகிறேன். சூரிய சக்தி மூலம் இயங்கும் இந்த விமானம் உலகின் தொலை தூர பகுதிகளுக்கு 'பீம்' () வழிமுறையில் இணைய வசதியை வலபிக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியாக நீண்ட ஆளில்லா விமானம் சார்ந்த வரலாற்றை நாங்கள் உருவாக்கிவிட்டோம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
'மாதிரிகள் மற்றும் விமானம் அமைப்பு மற்றும் வளர்ச்சி குறித்து இரண்டு ஆண்டுகளாய் சேகரிக்கப்பட்ட தரவுவுகளின் கீழே இதன் இயக்கம் இருக்கும். இதற்கு முன்பு நிகழ்த்தப்படாத வண்ணம் 60,000 அடி உயரத்தில் இருந்துகொண்டே லேசர்கள் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் 'அக்குய்லா' ஒரு மாதங்களுக்கும் மேல் வானத்தில் தங்கும்' என்றும் மார்க் சூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
'உலகம் முழுவதையும் இன்டர்நெட் மூலம் இணைப்பது மற்றும் இணைய வசதிக்கான சாத்தியமே இல்லாத 4 பில்லியன் மக்களை ஆன்லைனுக்கு கொண்டு வருவது தான் எங்கள் முக்கிய நோக்கம்' என்றும் மார்க் சூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

சனி, 9 ஜூலை, 2016

மார்பிங் என்றால் என்ன..??



மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அழிப்பது எப்படி? என்பது பற்றிய தகவல்கள் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் பல பெண்களுக்கு இன்னமும் சரியாக தெரிவதில்லை.

ஒரு பெண்ணின் புகைப்படத்திலுள்ள தலையை அகற்றி அதை இன்னொரு பெண்ணின் புகைப்படத்தில் பொருத்தி அந்த படத்தை சமூக விரோதிகள் பேஸ்புக்கில் வெளியிடுகிறார்கள். இந்த முறைக்கு ‘‘மார்பிங்” என்று ஆங்கிலத்தில் பெயர். இந்த ‘‘மார்பிங்” வகை குற்றங்கள் உலகம் முழுவதும் மிக அதிக அளவில் நடந்து வருகிறது.

தங்களுடைய பேஸ்புக் பக்கங்களில் பதிவு செய்து வைத்திருக்கும் பெண்களின் புகைப்படங்களை, அவர்களுடைய பேஸ்புக் பக்கங்களுக்குள் சமூக விரோதிகள் நுழைந்து அந்த புகைப்படங்களை திருடி எடுத்து இவ்வாறு ‘‘மார்பிங்” செய்து விடுகிறார்கள்.

சில பெண்கள் தங்கள் புகைப்படங்களை மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருப்பதுண்டு. அவர்கள் மொபைல் போன் தொலைந்து அது குற்றவாளிகள் கையில் கிடைக்கும் போது அந்த பெண்களின் புகைப்படங்களை எடுத்து ‘‘மார்பிங்” செய்து பேஸ்புக் மற்றும் இணைய தளத்தில் வெளியிடுகிறார்கள்.

பொதுவாக இதுபோன்ற குற்றங்களில் பெண்களின் வருங்கால வாழ்க்கையை மனதில் கொண்டு பெற்றோர்களும் காவல் துறையிடம் புகார் கொடுக்க தயங்குகிறார்கள்.

இது போன்ற தங்களது சித்தரிக்கப்பட்ட ஆபாச படங்கள் பேஸ்புக்கிலோ அல்லது இணைய தளத்திலோ வந்தால் அவற்றை எப்படி? உடனடியாக நீக்க வேண்டும் என்ற யுக்தியை பெண்களும் மற்றும் பெற்றோர்களும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்கள் தங்களது ஆபாச படத்தை பேஸ்புக்கில் பார்த்தால் உடனடியாக அந்த படத்தின் மேல் வலது பக்கத்திலுள்ள அம்புக் குறியை அழுத்தினால் ‘‘ரிப்போர்ட் போட்டோ” என்ற ஒரு ஆப்சன் வரும். அதை நீங்கள் கிளிக் செய்துவிட்டால் 72 மணி நேரத்தில் அந்த ஆபாச புகைப்படம் பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்டு விடும். அதே போல் பேஸ்புக்கிலுள்ள ‘‘ஹெல்ப் சென்டர்” உபயோகித்து புகார் செய்தால் அந்த ஆபாச படம் நிச்சயம் நீக்கப்பட்டு விடும்.

ஒரு வேளை பேஸ்புக்கை தவிர வேறு வெப் சைட்டில் உங்கள் ஆபாச புகைப்படம் வந்தால் ‘‘கான்டெக்ட் யூஸ்” என்ற ஆப்சனுக்கு நீங்கள் புகார் செய்தால் அந்த ஆபாச படம் அல்லது வீடியோ உடனே நீக்கப்பட்டு விடும். இந்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காத பட்சத்தில் நீங்கள் காவல்துறையிடம் தயங்காமல் புகார் அளிக்க வேண்டும். அப்போது தான் குற்றவாளிகளை தப்பிக்க விடாமல் வேறு யாருக்காவது கெடுதலை செய்வதற்கு முன் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று கொடுக்க முடியும்.

பேஸ்புக்கில் ‘‘பிரைவெட் செட்டிங்ஸ்” என்ற ஒரு வசதி உள்ளது. அதை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் உங்களுடைய நெருங்கிய நண்பர்களை தவிர வேறு யாரும் உங்கள் புகைப்படங்களை பார்க்க இயலாது. இணைய தளத்தில் உங்கள் புகைப்படத்தை பகிர்வு செய்யும் போது மிகவும் எச்சரிக்கையுடன் பகிர்வு செய்ய வேண்டும். மிகவும் நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே உங்கள் புகைப்படத்தை பகிர வேண்டும்.

பேஸ்புக்கில் பெண்கள் தனியாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்யக்கூடாது. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவேண்டும். காரணம் இப்படிப்பட்ட புகைப்படத்திலிருந்து ‘‘மார்பிங்” செய்வது மிகவும் கடினம். யாராவது பெண்களை புகைப்படம் எடுத்தால் அதை தடுத்து நிறுத்துங்கள். இந்த புகைப்படங்கள் ஆபாச புகைப்படங்களாக மார்பிங் செய்யப்படலாம்.

இந்த கணினி உலகத்தில் போலிகளை உருவாக்குவது மிகவும் எளிது. எனவே ஆபாச காட்சிகள் பெரும்பாலும் போலியானவையே. இந்த போலி ஆபாச படங்களால் பெண்கள் பலியாவதை தடுத்து நிறுத்த, அந்த சமயங்களில் பெற்றோர்கள், கணவர்கள் மற்றும் உறவினர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

அந்த ஆபத்தான கட்டத்தில் பாதிப்புக்கு உள்ளான அந்த பெண்களுக்கு உறுதுணையாக இருந்து அந்த பெண்களை மீட்க முயல வேண்டுமே யொழிய, சந்தேக கண்களை அந்த பெண்கள் மீது பாய்ச்சி அந்த பெண்களின் உயிரை மாய்த்துக் கொள்ள பெற்றோர்களும் மற்றும் சம்பந்தப்பட்டவர்களும் காரணமாகி விடக்கூடாது. இது நம் அனைவருக்கும் தெரிவிக்கும் செய்தியாகும்.

வெள்ளி, 1 ஜூலை, 2016

பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்படுவதைத் தடுக்கும் வழி..!!!



சில நேரங்களில் உங்களின் பேஸ்புக் கணக்கு வேறு ஒருவரால்  ஹாக் செய்யப்படும் அனுபவம் உங்களுக்கு நேரிட்டிருக்கலாம்.இதுவரை ஏற்படவில்லை என்றாலும் வருமுன் காப்பதற்கு சில நடைமுறைகளை இங்கே பார்க்கலாம்.இவை அனைத்தும் பேஸ்புக் நிறுவனத்தாலேயே அறிவுறுத்தப்படும் விஷயங்கள் ஆகும்.

1.பாஸ்வேர்டு பாதுகாப்பு….;

பேஸ்புக்கில் பயன்படுத்தும் பாஸ்வேர்டு கடினமானதாகவும் வேறு தளங்களில் பயன்படுத்தாததாகவும் இருக்க வேண்டும்.நம்பர் மற்றும் ஸ்டிரிங்கையும் பயன்படுத்தி உருவாக்குவதே சிறந்தது.குறைந்தது 6 எழுத்துகள் வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

2.பிரைவேட் பிரவுசிங்..;

பேஸ்புக்கை பயன்படுத்திய பின்னர் ’லாக் அவுட்’ செய்து எப்போதும் பிரவுசரை பூட்டி விடுங்கள்.முடிந்தால் கணினியை அணைத்துவிடுங்கள்.இன்டர்நெட் சென்டராக  இருந்தால் இது ரொம்பவும் முக்கியம்..”Remember Me”-ஐ  எப்போதும் செக் செய்யக்கூடாது.

3.மின்னஞ்சல் பாதுகாப்பு..;

பேஸ்புக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கையும் எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.ஏனெனில் தொடர்புடைய மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்த முடிந்தால் பேஸ்புக்கிலும் எளிதாக நுழைந்துவிடலாம்.இரண்டுக்கும் எப்போதும் வேறு பாஸ்வேர்டை தருவதே நல்லது.

4.பாதுகாப்பு கேள்விகள்..;

பேஸ்புக் கணக்கைத் தொடங்கும்போது சில பாதுகாப்புக் கேள்விகள் கேட்பார்கள்.அவை,பாஸ்வேர்டை மறந்துவிட்டால் கணக்கை மீண்டும் பயன்படுத்த உதவும்.எனினும் இவற்றில் எப்போதும் கடினமான  கேள்வி-பதில்களை தேர்வு செய்யுங்கள்.அவ்வாறு செய்யும்போது மற்றவர்கள் அவற்றை ஊகிக்க முடியாது.இதுவரை கேள்வி-பதில்களை செட் செய்யவில்லை என்றால் Account settings page சென்று அவற்றை உருவாக்கிக் கொள்வது நல்லது.

5.லாகின் செய்யும்போது..;

எப்போதும் Facebook.com சென்ற பின்னரே லாகின் செய்யுங்கள்.மின்னஞ்சலில் வரும் தெரியாத இணைப்புகளில் லாகின் செய்ய வேண்டாம்.

புதன், 22 ஜூன், 2016

நீண்ட நேரம் கணினியை பயன்படுத்துவோருக்கு..!!!





அன்றாடம் நீண்ட நேரம் கணினியை பயன்படுத்துவோருக்கு உடலில் சோர்வு,பின் கழுத்து,முதுகு மற்றும் தலைவலி,கைகள்,மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை வலி போன்ற  பாதிப்புகள் ஏற்படுகின்றன.தொடர்ந்து கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதால் இமைகளில் சிமிட்டல் குறைந்து கண்கள் உலர் தன்மை அடைகின்றன.இதனால் கண்களில் உறுத்தல்,எழுத்துகள் இரண்டாகவும் பலவாகவும் தெரிதல்,பார்வைத் தெளிவற்றுத் தோன்றுதல் போன்ற சிரமங்கள் ஏற்படுகின்றன.இந்நிலைகளை தவிர்க்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

புதன், 1 ஜூன், 2016

பென் டிரைவில் வைரஸ் தாக்கினால்..!!!






தற்போது தகவல்களைச் சேமிக்கப் பயன்படுத்தப்படுவை யு.எஸ்.பி,பென் டிரைவ்கள்.இதில் முக்கியமான பிரச்சனை ’வைரஸ்’ தான்.வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென் டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கும் வாய்ப்பு அதிகம்.
அவ்வாறு பாதிக்கும் போது உங்கள் பென் டிரைவில் உள்ள பைல்கள்  மறைக்கப்பட்டு விடும்.கணினியில் பென் டிரைவை திறந்தால் எந்த பைலும் இருக்காது.காலியாக இருக்கும்.ஆனால் ‘பிராப்பர்டீஸ்’ சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.காரணம் நம் தகவல்களை வைரஸ் மறைத்து வைத்துவிட்டது.
பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் பார்மட்(format) செய்து பென் டிரைவை திரும்பப் பெறலாம்.ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்தப் பைல்களை பத்திரமாக மீட்பது என்று பார்ப்போம்.
இதற்கு நீங்கள் எந்த மெனபொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாகச் செய்துவிடலாம்.கீழே உள்ள வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றி பைல்களை மீட்டெடுக்கலாம்.
 



1.முதலில் பென் டிரைவை உங்கள் கணினியில் செருகிக் கொள்ளுங்கள்.
2.Start-Run-CMD-Enter கொடுக்கவும்.
3.இப்பொழுது பென் டிரைவ் எந்த டிரைவில் உள்ளது என்று பாருங்கள்.மை கம்ப்யூட்டர் செல்வதன் மூலம் அதைக் கண்டறியலாம்.
4.உதாரணமாக E என்ற டிரைவில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அதற்கு நீங்கள் E என்று கொடுத்து ‘என்டர்’ அழுத்த வேண்டும்.
5. attrib s h/s/d *.* என டைப் செய்யுங்கள்.ஒவ்வொரு பகுதிக்கும் சரியான ஸ்பேஸ் கொடுக்கவும் .நீங்கள் சரியாகக் கொடுத்துள்ளீர்கள் என்று உறுதி செய்துகொண்டு என்டரை அழுத்துங்கள்.சில வினாடிகள் பொறுத்திருங்கள்.இப்போது உங்கள் பென் டிரைவை சோதித்துப் பாருங்கள்.பைல்கள் அனைத்தும் திரும்ப வந்திருக்கும்.

ஞாயிறு, 29 மே, 2016

ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்...



 


ஆப்பிள் நிறுவனத்தின்
ஸ்டீவ் ஜாபின் இறுதி வரிகள்...

நான் வணிக உலகில்
வெற்றியின் உச்சத்தை
அடைந்திருக்கிறேன்.

பிறரின்
பார்வையில் என் வாழ்க்கை
வெற்றிகரமானது.
எப்படியிருந்தாலும் என்
பணிச்சுமைகள் எல்லாம்
தாண்டி நானும் வாழ்க்கையில்
சிறிது சந்தோசங்களை
அனுபவித்திருக்கிறேன்.

பணமும் வசதிகளும் மட்டுமே
வாழ்க்கையில்லை என்பதை
இறுதியில் தான் அறிந்து
கொண்டேன்.

இதோ இந்த மரணத்தருவாயில், நோய் படுக்கையில் படுத்து
கொண்டு என் முழு
வாழ்க்கையையும் திரும்பி
பார்க்கும் இந்த தருணத்தில்
வாழ்க்கையில் எனக்கு கிடைத்த
அங்கீகாரங்கள், பணம் , புகழ்
எல்லாம் செல்லா காசாக ,
அர்த்தமற்றதாக மரணத்தின் முன்
தோற்று போய் நிற்பதை
உணர்கிறேன்.

இந்த இருளில் என் உயிரை தக்க
வைக்க போராடிக் கொண்டிருக்கும் மருத்துவ
இயந்திரங்களின் மெல்லிய
சத்தங்கள் மட்டுமே காதுகளில்
ரீங்கரிக்கிறது.
கடவுளின்
மூச்சுக்காற்றையும் மரணத்தையும் மிக அருகில்
உணர்கிறேன்.

வாழ்க்கையில் நாம் வாழ்வதற்கு
போதுமான பணம் சம்பாரித்த
பின், பணத்திற்கு
சம்மந்தமில்லாத
விஷயங்களையும் சம்பாரிக்க
தொடங்க வேண்டும் என்பது
இப்போது புரிகிறது.
அது
உறவாகவோ, இல்லை எதாவது
கலை வடிவமாகமாவோ , நம் இளமையின் கனவாகவோ
இருக்கலாம். அது தான் வாழ்வில் மிக முக்கியமானது.

அதைவிட்டு பணத்தை மட்டுமே
நோக்கமாக கொண்டு ஓடும்
மனிதனின் வாழ்க்கை
முற்றிலும் வேறு திசையில்
திரும்பிவிடுகிறது என்
வாழ்க்கையை போல.

கடவுள் நம் புலன்களின் மூலம்
அனைவரின் மனதில் இருக்கும்
அன்பை உணரசெய்யும் சக்தியை
கொடுத்திருக்கிறார், பணத்தால்
நாம் உண்டாக்கியிருக்கும் எல்லா சந்தோசங்களும் வெறும்
பிரமைகள் தான்.

நான் சம்பாரித்த பணம் எதையும்
இங்கு கொண்டுவர முடியாது.
நான் மகிழ்ந்திருந்த என்
நினைவுகள் மட்டுமே
இப்போது என்னுடன்
இருக்கிறது.

அன்பும் காதலும் பல மைல்கள்
உங்களுடன் பயணிக்கும்.
வாழ்க்கைக்கு எந்த
எல்லைகளுமில்லை. எங்கு
செல்ல ஆசைப்படுகிறீர்களோ அங்கு செல்லுங்கள்.
தொட
நினைக்கும் உயரத்தை தொட
முயற்சியுங்கள்.

நீங்கள்
வெற்றியடைவது உங்கள்
எண்ணத்திலும் கைகளிலும்
தான் உள்ளது.
உங்கள் பணத்தை வைத்து நீங்கள்
என்ன வேண்டுமானாலும் வாங்கலாம்,
ஆனால் அந்த
பணத்தின் மூலம் உங்கள்
வலியை, உங்கள் துயரை யாரும்
வாங்கிகொள்ளுமாறு செய்ய
முடியாது.

பணத்தின் மூலம் வாங்கும்
பொருட்கள்
தொலைந்துவிட்டால் மீண்டும்
வாங்கிவிடலாம்.
ஆனால் நீங்கள்
தொலைத்து அதை பணத்தால்
வாங்க முடியாது என்ற ஒன்று
உண்டென்றால் அது உங்கள்
வாழ்க்கை தான்.

வாழ்க்கையில் எந்த கட்டத்தில்
நீங்கள் இருந்தாலும்
பரவாயில்லை , இப்போது
வாழ்க்கையை வாழ
ஆரம்பியுங்கள்.

நாம் நடித்து
கொண்டிருக்கும் வாழ்க்கை
எனும் நாடகத்தின் திரை எப்போது வேண்டுமானாலும் இறக்கப்படலாம் என்பதை
நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் குடும்பத்தினருக்கு, மனைவிக்கு, நண்பர்களுக்கு,
அன்பை வாரி வழங்குங்கள்.

உங்களை நீங்கள் சந்தோசமாக
வைத்து கொள்ளுங்கள்.
அனைவரையும் மனமார
நேசியுங்கள்.
மரணப்படுக்கையில் ஸ்டீவ்.

அனைவருக்கும் ஸ்டீவ் கூறிய வரிகள் புரிந்து இருக்கும்.எனவே பணம் தான் வாழ்க்கை என்று கூறிய சிலரின் வாழ்க்கையை மரணம் எட்டிப் பார்க்கையில் தான் அவர்களுக்கு வாழ்க்கையின் அர்த்தம் புரிகிறது.

அவரின் மரணத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...!!!


உங்க கம்யூட்டர் வேகமாக இருக்கணுமா..??




எனது மடிக்கணினி பழுதாக இருந்த போது பல்வேறு இணைத்தளங்களிலும்,பலரிடமும் உதவியை நாடினேன்.அப்போது நான் ஒரு இணையத்தில் படித்ததை தங்களோடு இப்பதிவில் பகிரவுள்ளேன்.