குறுந்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறுந்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

தலைவனை எண்ணி தலைவியின் வருத்தம்

    
  பாலை

           
உள்ளது சிதைப்போ ருளரெனப் படாஅர்  
இல்லோர் வாழ்க்கை யிரவினு மிளிவெனச் 
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்  
சென்றனர் வாழி தோழி யென்றும் 
கூற்றத் தன்ன கொலைவேன் மறவர்  
ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த 
படுமுடை பருந்துபார்த் திருக்கும் 
நெடுமூ திடைய நீரி லாறே.
               - பாலை பாடிய பெருங்கடுங்கோ(பா.எ-283) 

     




                        
திணை
       பாலை
துறை
    

    
            தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு, "அவர் பிரிய, ஆற்றேனாயினேன் அல்லேன்” அவர் போயின கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன்" என்று கிழத்தி சொல்லியது,
                             


துறை விளக்கம்
      தலைவன் பொருள் ஈட்டச் சென்ற காலத்தில் ஆற்றான் எனக் கவன்ற தோழியை நோக்கி, "அவர் பிரிவு கருதி வருந்தேன்; அவர் சென்ற பாலை நிலத்தில் உள்ளார் செய்யும் தொழில் கொடுமை எண்ணி அஞ்சினேன்" என்று தலைவி கூறியது.
பாடல் விளக்கம்
        தம் முன்னோரால் தேடி வைக்கப்பட்ட செல்வத்தை செலவு செய்பவர் செல்வர் என்று உலகத்தாரால் மதிக்கப்படமாட்டார்.  தாமாக
பொருள் இல்லாதார் முந்தையோர் பொருளை செலவு செய்தல்
இரத்தலைக் காட்டினும் இழிவு உடையது என்று சொன்ன ஆண்மைத் தன்மையை யாம் தெளியும்படி எடுத்துக் கூறி பொருள் தேட தலைவர் சென்றார் அவர் வாழ்க! எமனை போன்ற கொலைத் தொழிலைச் செய்யும் வேலை உடைய மறச் சாதியார் வழியின் இடத்தே தங்கி, வழிப் போவாரைக் கொன்றதனால் உண்டான புலாலை பருந்துகள் எதிர்நோக்கித் தங்கி இருக்கின்ற  பழமையான அச்சம் தரும் வழியே தலைவர் சென்றுள்ளார் என தலைவி தன் வருத்தத்தை தோழியிடம் கூறுகிறாள்.

தலைவியின் உடல் மெலிவு





                     நெய்தல்
           மாரி அம்பல் அன்ன கொக்கின்
           பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு
           கண்டல் வேரளைச் செலீஇயர்அண்டர்
           கயிறு அரி எருத்தின்கதழும் துறைவன்
           வாராது அமையினும் அமைக!
           சிறியவும் உள  ஈண்டு விலைஞர் கைவளையே.
                                -குன்றியனார்(பா.-117)
              


திணை
       நெய்தல்
துறை
      வரைவு நீட்டித்தவிடத்து தலைமகட்கு தோழி சொல்லியது,
துறை விளக்கம்

        தலைவன் திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்துவதை கண்டு வருந்திய தலைவிக்கு தோழி கூறியது.


பாடல் விளக்கம்
          மாரிக்காலத்து மலரும் அம்பல் மலரின் தண்டினைப் பார்த்து கொக்குகள் என்று எண்ணி அஞ்சிய நண்டுகள் தாழையின் வேர்களிடையே சென்று மறையும்,இடையரால் பிணிக்கப்பட்ட அறுத்துச் செல்லும் எருதைப் போல விரைந்து செல்லுதற்கு இடமாகிய கடற்றுரை உடையவன் தலைவன்,அவன் உன்னை திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்துவதால் உன் உடல் மெலிந்து உன் கைவளையல் தானே நவிழும்.அம்மெலிவை பிறரிடமிருந்து மறைப்பதற்காக விற்பவரிடமிருந்து சிறிய வளையல்களை வாங்கி அணிகிறாய் என்று தலைவியிடம் தோழி கூறுகிறாள்.


வியாழன், 21 ஜனவரி, 2016

தலைவியின் வருத்தம்


                            மருதம்


           


           நோம் என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே
           புன் புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
           கட்கு இன் புது மலர் முட் பயந்தா அங்கு,
           இனிய செய்த நம் காதலர்
           இன்னார் செய்தல் நோம், என் நெஞ்சே!
                          -அள்ளுர் நன்முல்லையார்(பா.-202)
                   
திணை
      மருதம்
 துறை
     வாயிலாகப் புக்கத் தோழிக்கு தலைமகள் வாயில் மறுத்த்து
துறை விளக்கம்
         பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனுக்குத் தூதாகவந்த தோழியைநோக்கி, “தலைவர் இப்பொழுது எனக்கு இன்னாமையைத் தரும்ஒழுக்கத்தினராதலின் என் நெஞ்சு வருந்தும்; அவரை ஏற்றுக் கொள்ளேன்என்று தலைவி கூறியது.
பாடல் விளக்கம்
        தோழி,என் நெஞ்சு வருந்தும் முல்லை நிலத்தில் அமைந்துள்ள சிறிய இலைகளையுடைய நெருஞ்சியினது புது மலர் முன்னர் கண்ணுக்குத் தோன்றும் பின்னர் தான் அதன் முள் தெரியும். அதுபோல முன்னர் இனியது செய்த என் தலைவன் இப்போழுது இன்னாமை செய்யும் போது என் நெஞ்சு வருந்துகிறது என்று தலைவி கூறுகிறாள்.

தலைவியின் மென்மை



                              முல்லை





  
     முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
     கழுவுறு கலிங்கம், கழாஅது உடீஇ
     குவளை உண்கண் குய்ப்புகை கமழுத்
     தான் துழந்து அட்டதீம் புளிப் பாகர்
     இனிதுஎனக் கணவன் உண்டலின்
     நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.
                                -கூடலூர் கிழார்(பா.-167)
திணை       
       முல்லை
துறை
       கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது.


துறை விளக்கம்

   



     திருமணமான மகளின் குடும்ப  நிலையை பற்றி செவிலித்தாய் நற்றாய்க்கு உரைப்பது.

பாடல் விளக்கம்
       முற்றிய தயிரினை  பிசைந்த போது காந்தள் மலரை போன்ற மெல்லிய விரலை கொண்ட தலைவியின் கைகள் சிவந்தன, மேலும் தாளிப்பின் போது வரும் புகையானது குவளை போன்ற அவளது  கண்ணின் மையை கலைத்தது, தானே தூழாவி சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பை தன் தலைவன் இனிது என உண்ணும் போது தலைவியின் முகமானது நுண்ணிதாக மகிழ்ந்தது. இவ்வாறு தலைவியின் குடும்ப நிலையைப் பற்றி செவிலித்தாய் நற்றாய்க்கு உரைக்கிறாள்.
                    
          

செவ்வாய், 19 ஜனவரி, 2016

தலைவி கூந்தலின் நறுமணம்


                   
          எட்டுத்தொகையில் ஒன்று குறுந்தொகை.நான்கு அடி சிறுமையும் எட்டடிப் பெருமையும் உடையது.இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.இந்நூல் 401 செய்யுட்களை உடையது. எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்துக் கூறும் வெண்பா இந்நூலை நல்ல குறுந்தொகை எனச் சிறப்பித்துக் கூறுகிறது.இந்நூலுக்கு பேராசிரியர்ரும்,நச்சினார்க்கினியரும் உரைவகுத்திருந்தனர்.
                   குறிஞ்சி
        கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
        காமம் செப்பாது கண்டது மொழிமோ;
        பயிலியது கெழீஇய நட்பின் மயில்இயல்
        செறி எயிற்று அரிவை கூந்தலின்
        நறியவும் உளவோ,நீ அறியும் பூவே?
                                -இறையனார்(பா.-2)
               
திணை
       குறிஞ்சி
துறை
           இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிகண் இடையீடுபட்டு நின்ற தலைமகன் நாணின் நீக்குதற் பொருட்டு,மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவள் மாட்டு நிகழ்த்திக் கூடி,தனது அன்பு தோற்ற நலம் பாராட்டியது.
துறை விளக்கம்
           தலைவன் தலைவியின் நாணத்தை நீக்குதற் பொருட்டு அவளை சிரிக்க வைக்க முயலுகிறான்.
பாடல் விளக்கம்
               தேனை ஆராயந்து உண்ணுகின்ற அழகிய சிறகினை உடைய தும்பியே நீ என் நிலத்து வண்டாதலின் எனக்கு சாதகமாக கூறாமல் நீ அறிந்த உண்மையை கூறுவாயாக என்னோடு பழகிய பழக்கத்தால் பொருந்திய காதலையும்,மயில் போன்ற மென்மையையும், நெருங்கிய பற்களையும் உடைய இத்தலைவியின் கூந்தலை போல நறுமணமுடைய பூக்கள் வேறு உள்ளனவோ?