ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

பசித்திருக்கும் வயிறுகள்; பாழாகும் தானியங்கள்;



உணவு தானியச் சேமிப்புக் கிடங்குகள்;

நமது நாட்டில் போதிய தரமான உணவு தானியச் சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் ஆண்டிற்கு  58,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்கள் வீணாகிப் பாழாகின்றன.இந்த விவரம் இப்போது கூறப்பட்டதல்ல,இரண்டரை ஆண்டுகளுக்க முன்பே நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் அளித்த பதில்தான் இது.அதில் நாடெங்கிலும் கிடங்குகளில் பாழாகிக் கொண்டிருக்கும் 10 லட்சம் டன் உணவு தானியங்களை ஏழை எளியோருக்கு  இலவசமாக வழங்க உத்திரவிட்டதுடன், இது அமைச்சகத்துக்கு ஆலோசனை அல்ல,ஆணை என்று கூறி எச்சரித்தது.இதனைத் தொடர்ந்து நம் நாட்டில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் 8 கோடி குடும்பங்களில் 1.5 கோடி குடும்பங்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் விநியோகிக்க அரசு ஆவன செய்து வருவதாகக் கூறப்படுகிறது.


உலகில் பசியால் வாடும் 100 கோடி மக்களில் மூன்றில் ஒருவர் அதாவது 33 கோடிப் பேர் இந்தியர்கள் என்பதும் ஒவ்வொரு இரவும் நான்கில் ஓர் இந்தியன் பட்டினியாகப் படுக்கைக்குச் செல்கிறான் என்பதும் இந்தியக் குழந்தைகளில் ஏறக்குறைய பாதிக்குமேல் சத்தான உணவின்றி எடை குறைவாக உள்ளனர் என்பதும் நம் இந்திய அரசுக்குத் தெரிந்திருந்தும் இந்த மெத்தனப் போக்கு ஏன்..??




சீனா மற்றும் அமெரிக்காவின் வருவாய்;

சீனாவிலும்  அமெரிக்காவிலும் மக்கள் தங்கள் வருவாயில் ஆறில் ஒரு பங்கை மட்டுமே உணவுப் பொருட்களை வாங்கச் செலவிடும் நிலையில் அதற்கு இரண்டு மடங்கு அதிகமாக இந்தியாவில் நாம் நம் வருவாயில் மூன்றில் ஒரு பங்கைச் செலவழிக்கிறோம்.காரணம் விலைவாசி என்று கூறுவர்.

உழவனின் நிலை;

சரி,உற்பத்தி செய்யும் உழவனுக்குத் தான் இதன் பலன் செல்கிறது என்று எண்ணினால் நாம்தான் ஏமாறுவோம்.உண்மையில் டன் டன்னாக உணவை நாட்டு மக்களுக்காக உற்பத்திசெய்து தரும் நம் உழவன் தன் குடுபத்தினருக்கு உணவளித்துப் பாதுகாக்க முடியாத ஏழ்மை நிலையில் இருக்கின்றான்.அதனால்தான் நம்நாட்டில்   1991 முதல் 2001 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 80 லட்சம் விவசாயிகள் தங்களுக்கு தெரிந்த ஒரே தொழிலான விவசாயத்தை விட்டு நகர்ப்புறத்துக்குக் கையேந்தும் கூலியாகச் சென்றுவிட்டனர்.அதினும் கொடுமை 1997 முதல் 2007 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார்  இரண்டு லட்சம் விவசாயிகள் வறுமை பொறுக்க முடியாமல் குடும்பம் குடும்பமாகத் தற்கொலை செய்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர் என்பது.இவ்வாறு உற்பத்தி செய்யும் உழவனும் உயிர்விட ஏழை மக்கள் பசித்த வயிறுடன் வாழ பொதுமக்கள் விலைவாசி ஏற்றத்தால் வதைபட அரசு சரியான தீர்வைக்காண முனைந்து செயல்படாதது வேதனையை அளிக்கிறது.உலகின் மிகப்பெரிய இரயில் போக்குவரத்துக் கொண்ட நம் நாட்டில் தனியாக தொடர்வண்டித் துறைக்கென்று நிதிநிலை அறிக்கை மற்றும் தொடர் கண்காணிப்பு இருக்கும்பொழுது  சீனாவை அடுத்து உலகில் அதிக உணவு உற்பத்தி செய்யும் நம் நாட்டில் ஏன் தனி ஒரு வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரித்து தீவிரக் கண்காணிப்போடு செயல்படுத்தக் கூடாது..??

முடிவுரை;

வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும் 41 கோடிமக்களைக் கொண்ட நம் நாடு உயரவேண்டுமெனில் அவர்களையும் நாட்டுக்கு முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளையும் சேர்த்துதான் வளரமுடியும்.அவர்களை நாட்டின் பாரம் அல்ல.அவர்கள் தான் நாட்டின் பலம் அஸ்திவாரம்.இவர்களையும் சேர்த்து வளர்ந்தால் மட்டுமே  அது வளர்ச்சி.இவர்களை சேர்த்து இல்லாத வளர்ச்சி அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் போல பொடிப்  பொடியாகிவிடும்.இதனை உணர்ந்து அடிப்படையை அறுத்துக் கொண்டு வளர முயலாமல் சேர்த்துக் கொண்டு வளர முயலாமல் சேர்த்துக் கொண்டு சீர்பட வாழ்வோம் நேர்பட உயர்வோம்.



வயிறுகள் வாடாது தானியங்களைக் காத்திடுவோம்..!!

பயிர்கள் விளைத்திடும் உழவர்களை உயர்த்திடுவோம்..!!

2 கருத்துகள்: