ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

கேள் மனமே கேள்..!!


வைரமுத்து.





தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்

தங்கத்தைச் செங்கல்லாய்க் காண கேட்பேன்

விண்வெளியில்  உள்ளதெல்லாம்  அறியக் கேட்பேன்

விஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்..!!



மண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்

மனித இனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்

பொன்னுலகம் பூமியிலே தோன்றக் கேட்பேன்

போர்க்களத்தில் பூஞ்செடி பூக்கக் கேட்பேன்..!!




மேடையில் தோற்காத வீரம் கேட்பேன்

மேதைகளைச் சந்திக்கும் மேன்மைக் கேட்பேன்

வாடையிலும் நடுங்காத தேகம் கேட்பேன்

வாவென்றால் ஓடிவரும் கவிதை கேட்பேன்..!!



வானளந்த தமிழ்த்தாயின் பாலை கேட்பேன்

வைகை நதிப் புலவர்களின் மூளை கேட்பேன்

தேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்

தென்னாழி  தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்..!!



மானமகள் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்

மாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்

ஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்

ராஜராஜன் வைத்திருந்த வாளைக் கேட்பேன்..!!


ஆர்.ராஜாலட்சுமி,
வணிகவியல் முதலாமாண்டு,
படித்ததில் பிடித்தது.

2 கருத்துகள்: