சென்னை மாநகரம். சென்னையில் ஒரு அழகான குடும்பம். அழகு என்றால் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனம் அதிகம் கொண்டவர்கள். சாலையில் உணவின்றி இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பவர்கள். மற்ற உயிரினங்களின் துன்பத்தை அதிகம் பகிர்ந்துகொள்வார்கள். தாய்-தந்தை. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன்.
மகள் கல்லூரியில் பயில்கிறாள். கல்லூரியில் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வாங்கப் பணம் கொடுப்பாள். இப்படிப்பட்ட குடும்பத்தை அழகு என்று கூறுவதில் ஒரு தவறும் இல்லை. கல்லூரி விடுமுறை நாளில் தன் தாத்தா ஊருக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு உதவி செய்வாள். இப்பொழுது அதுபோல விடுமுறை நாளில் தன் தாத்தா ஊருக்கு உதவி செய்யச் சென்றாள்.
அங்குள்ள ஒரு பாட்டி என்ன பாப்பா நன்றாக இருக்கிறாயா? உன்னால் இன்று நான் நலமாக உள்ளேன் என்றார். நான் நலமாக இருக்கிறேன் பாட்டி. உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றாள். தாத்தாவுடன் உணவு உண்டாள். பின்பு தாத்தா நம்ம ஊரில் இப்ப எல்லாரும் நலம். பக்கத்து கிராமத்துல கொஞ்சம் உதவி தேவைப்படுது. நீ அங்குள்ள மக்களுக்கு உதவி செய் என்றார். பேத்தியிடம் நீ தங்குவதற்கு வீடு தயாராக இருக்கிறது. உதவி செய்துவிட்டு ஒரு வாரத்தில் சென்னைக்குச் செல் என்றார். அத்துடன் சிறிது பணம் கொடுத்தார்.
அவள் கிராமத்திற்குச் சென்றாள். அங்குள்ள மக்களுக்குப் போதிய நீர், சாலை, மின்விளக்கு வசதிகளைச் செய்யவேண்டும் என்று நினைத்தாள். ஊருக்கு வந்த முதல் நாளிலேயே ஊர் மக்களிடம் மனு வாங்கி மேல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தாள். ஒரு பெரியவர் அம்மா நீ இங்கதான் ஒருவாரம் தங்கனும். இதுதான் உன் வீடு. வாடகை தரவேண்டாம் என்றார். அந்தப் பெண் இவ்வளவு பெரிய வீடு எனக்கு வேண்டாம் என்றாள். இல்லையம்மா, இந்த வீட்டில் தங்கிக்கொள் என்ற பெரியவர் அந்த வீட்டின்முன் மயங்கி விழுந்தார். அட தாத்தா விழுந்துவிட்டார் என்றாள். அருகில் இருந்த பெரியவர் இவர் இன்னும் சாப்பிடவில்லை. அதுதான் மயங்கிவிட்டார். நீ வீட்டிற்குப் போமா என்றார்.
“இவள் தனது பொருள்களை எடுத்துக்கொண்டு அந்த வீட்டிற்குச் சென்றாள். மிகப்பெரிய வீடு. வீட்டைச் சுற்றியும் அடர்ந்த மரங்கள், செடிகள் காணப்பட்டன. வீட்டின் கதவு பிரமாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீட்டின் உள்நுழையும்போது மஞ்சள் துணியில் கட்டப்பட்டிருந்த எலுமிச்சைப்பழம் அவள் தலையில் விழுந்தது. அதிர்ந்து போனாள். வீட்டினுள் உணவு சமைத்து வைக்கப்பட்டிருந்தது. எப்பொழுது சமைக்கப்பட்டிருக்கும்? வீடு பூட்டியிருந்தது எப்படி? உள்ளே யாரும் இல்லை. சரி என்று சாப்பிட்டுவிட்டுத் உறங்கப் போனாள். இரவு வானம் இருள் சூழ்ந்ததாகக் காணப்பட்டது. சன்னல் திறந்து இருந்தது. தூரத்தில் வெளிச்சம். அதை உற்றுப் பார்த்தாள். முதலில் மஞ்சள் நிற விளக்கு தெரிந்தது. பிறகு பச்சை, நீலம் என மாறியது. இவள் பயந்துபோய் சன்னலை மூடிக்கொண்டாள். தூக்கம் வரவில்லை.
சன்னலில் இருந்து சத்தம் தோன்றியது. முதலில் கண்டுகொள்ளவில்லை. பிறகு சத்தம் வேகமாகக் கேட்டது. கீழ் அறையில் உறங்கலாம் என்று சென்றாள். அந்த வீட்டில் ஒரு சாமிபடம் கூட இல்லை. தன் மனதில் முருகா! முருகா! என்று வேண்டிக்கொண்டு உறங்கினாள். திடீரென்று யாரோ கதவைத் தட்டும் சத்தம். அவள் வீட்டைத் திறக்கும் முன்பு சத்தம் அதிகமானது. கதவின் அருகே சென்று அங்குள்ள சிறிய ஓட்டையில் வெளியே யாரென்று பார்த்தாள். யாரும் இல்லை. மிகவும் பயந்தாள். முகம் வியர்த்துப்போனது. வியர்வையால் உடல் நனைந்து போனாள். அப்பொழுது இரவு 12 மணி. சிறிதுநேரம் கழித்து ஊஞ்சல் ஆடும் சத்தம் கேட்டது. நாய் குரைத்தது. விசித்திரமான சத்தம் கேட்டது.
வீட்டினுள் இருந்த விளக்கு எரியவில்லை. பயத்தில் அலறினாள். வீட்டினுள் அவளை யாரோ அழைப்பதுபோல் இருந்தது. அப்படியே நடு வீட்டில் மயங்கி விழுந்துவிட்டாள். தண்ணீர் சொட்டு சொட்டாக மேலே விழுந்தது. எழுந்து கொண்டாள். தப்பித்தால் போதும் என்று தனது பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினாள். வீட்டின் முன் கார். அதிகாரிகள் நின்றனா். சினிமா நடிகர்கள் இருந்தனர். அவர்கள் ஏன் இப்படி ஓடிவருகிறாய் என்று அவளைப் பார்த்துக் கேட்டனர். அவள் பேய்! பேய்! என்றாள். அவர்கள் சிரித்துக்கொண்டு பேய் இல்லையம்மா. பேய் இருப்பதுபோல அலங்கரிக்கப்பட்ட வீடு என்றனர்.
அவளை அந்த வீட்டிற்குள் அழைத்துச்சென்று, முழுவதும் இயந்திரத்தால் பேய் வருவதுபோல் நாங்கள்தான் அலங்கரித்தோம். விளக்குகள் மாறி மாறி எரிந்ததும் எங்கள் வேலைதான். தோட்டத்தில் ஊஞ்சல் ஆடியது. ஊஞ்சலின் கயிற்றை நாங்கள் மரக்கிளையில் கட்டினோம். மரம் அசையும்போது ஊஞ்சல் ஆடும் என்றனர். இந்த வேலைப்பாடுகள் முழுவதும் பேய் படப்பிடிப்பிற்காகச் செய்யப்பட்டது. திடீரென்று தயாரிப்பாளர்களுக்கு உடல்நலம் சரியில்லை. எனவே நாங்கள் வீட்டை ஏற்பாடு செய்துவிட்டு, அப்படியே விட்டுவிட்டோம்.
இப்பொழுது தயாரிப்பாளர் குணமடைந்துவிட்டார். நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம் என்றார்கள். நீங்கள் வேறொரு வீட்டில் தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்துவிட்டோம் என்றனர். அந்த வீட்டில் பேய் ஏற்பாடு ஏதேனும் உள்ளதா என்றாள் அந்தப் பெண். இல்லையம்மா என்று சிரித்தனர். உங்கள் படத்தின் பெயர் என்ன என்று கேட்டாள். பேய் வீடு என்றனர். படம் வெற்றிபெற வாழ்த்து கூறினாள். அவர் ஊர் மக்களுக்கு உதவி செய்துவிட்டுச் சென்னை திரும்பினாள். நடந்ததை வீட்டார் கேட்டு சிரித்தனர். ஹா ஹா ஹா….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக