உலகெங்கும் பல கட்டுப்பாடுகள்,கண்காணிப்புகளையும் மீறி நடந்துவரும்
விலங்கு வேட்டை,உயிரின நேசர்களை மட்டுமன்றி உலகின் எதிர்காலம் குறித்த அக்கறை கொண்ட
அனைவரையுமே கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது.அதிலும் விலங்குகளின் சொர்க்கபுரியாகத் திகழும்
ஆப்பிரிக்கக் கண்டம் சமீபகாலமாக அவற்றின் கொலைக்களமாக மாறிவருவது வேதனை.
ஆப்பிரிக்காவின் கம்பீர அடையாளமான ஆப்பிரிக்க யானைகளும் இந்த
வெறித்தன வேட்டைக்குத் தப்பவில்லை.எனவே யானைகள் வேட்டையாடப்படுவதைத் தடுப்பது குறித்தும்
அழிவிலிருந்து பற்றியும் பேச்சு நடத்துவதற்காக ஆப்பிரிக்கத் தலைவர்கள் சமீபத்தில் கென்யாவில்
கூடினர்.அப்போது சட்டவிரோத யானைத் தந்த வணிகத்தை நிறுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகள்
எடுக்கப்பட வேண்டும் என்று கென்ய அதிபர் உஹீரு கென்யாட்டா வலியுறுத்தினார்.
ஆப்பிரிக்கா முழுவதும் புதிய தலைமுறை வேட்டையாளர்களால் யானைக்
கூட்டங்கள் சுற்றிவளைக்கப்படுவதாக கென்யாட்டா கூறினார்.இந்த வேட்டைக்காரர்கள் தேவையான
ஆயுத வசதிகளையும் சர்வதேச சந்தைகளுடன் பலமான தொடர்புகளையும் கொண்டவர்கள் எனவும் அதனால்
மோசமான விளைவுகள் ஏற்படுவதாகவும் கென்ய அதிபர் கூறினார்.
ஆப்பிரிக்க அரசாங்கங்களின் தலைவர்களுடன் வணிக நிறுவனங்களின்
தலைவர்களும் விஞ்ஞானிகளும் கலந்து கொண்ட இந்த மாநாடு யானைகளை நிம்மதிப் பெருமூச்சு
விடச் செய்யுமா என்பது வருங்காலத்தில் தெரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக