அன்புடையீருக்கு வணக்கம்,
இன்றைய பதிவில் இருந்து நான் புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளேன்.ஒவ்வொரு வலைப்பதிவர்களுடனும் அவரவர் துறைச் சார்ந்த எனது ஐயங்களுடன் ஒரு பேட்டிக் கண்டு அதனை பதிவாக வெளியிட உள்ளேன்.இது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நோக்கத்துடன் தொடர உள்ளேன்.
எனது ஐயங்களுடன் வலைப்பதிவர் நா.முத்து நிலவன் ஐயா.எனது ஐயங்கள் பின்வருமாறு.
1.மேடைப்பேச்சுக்களில் எவ்வாறு பதற்றமின்றி பேசுவது..??
ஆழமிருக்கும் கடலில் அலையிருக்காது,
ஆழம் குறைந்த கரையில் அலையடிக்கத்தான் செய்யும்.
“அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம்...” இருந்தால் பதற்றம் வராது.
முக்கியமாக சட்டியில் இருந்தால் அகப்பை நிறைய வரும்,
அந்த நம்பிக்கையிருந்தால் பேச்சு அழகாக வெளிப்படும்.
பேசுவதற்காகத் தயார் செய்தால் “எதையும்ப விட்டுவிட்டோமோ?” எனும் நினைப்பு அமைதியைக்குலைக்கவே செய்யும். ஏற்கெனவே நிறையப் படித்து, செய்திகளோடு இருப்பவர்கள் அதிலிருந்துதானே பேசப்போகிறோம் என அமைதியாகவே தொடர்வார்கள்.
“நீங்க எப்படி எந்தத் தலைப்பிலும் பேசிவிடுகிறீர்கள்?” எனும் கேள்விக்கு வாரியார் சொன்ன பதில் இது -
“மேலே டேங்க் ஃபுல்லா இருந்தா, கீழ எந்தக் குழாயத் திறந்தாலும் தண்ணி வரும்”
2.இன்றைய கல்வி பாடத்திட்டத்தில் எதனை குறையாக கருதுகிறீர்கள்..??
ஏற்கெனவே கேள்விகளோடு இருக்கும் குழந்தைகள், மாணவரிடம் கேள்விகளை வீசும் கல்விமுறை! அவர்களைக் கேள்விகேட்க விட்டு, சிந்திக்க விட்டு, விடைகளைக் காணச் செய்யும் முறை வரவேண்டும்.
ஏற்கெனவே வட்டம் போட்டு அதில் சதுரம் போடச் சொல்வதால் சிந்தனையைக் கூட இப்படித்தான் சிந்திக்க வேண்டும் என்பதான தேர்வுமுறையும் மாறவேண்டும்.
குறிப்பாக மனப்பாட முறை மாறி, சொந்த சிந்தனையை வெளிப்படுத்த வாய்ப்பு வேண்டும்.
3.பெண் கல்விக் குறித்த தங்களின் கருத்துகள் என்ன..??
ஈவெரா பெரியார் சொன்னதுதான் என் கருத்தும் -
“அவர்கள் கையில் இருக்கும் கரண்டியப் பிடுங்கிவிட்டு, புத்தகங்களைக் கொடுக்க வேண்டும்” பெண்ணுரிமை என்பது ஆணுக்கு எதிரானதல்ல, சமமானது, இதைப் பெண்களிடமல்ல, ஆண்களிடம்தான் பேசவேண்டும்.
4.சமூகத்தில் எவ்வித மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று கருதுகிறீர்கள்..??
“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை”- கண்ணதாசன்.
”தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்,
நான் வந்தால் மாற்றுவேன் என்பது புதிய பொய்”-கந்தர்வன்.
மக்களால் மக்களுக்கான மக்கள் அரசை மக்கள்தான் அமைக்க வேண்டும், கதாநாயகன் வரமாட்டான்!
5.இன்றை இளைய சமுதாயத்திற்கு தங்களின் அறிவுரையும் கருத்துக்களும் என்ன..??
எங்கள் தலைமுறையை விடவும் அறிவும், வாய்ப்பும் அதிகம் கிடைக்கும் இளைய தலைமுறை, எல்லாவற்றையும் உடனே உடனே அனுபவிக்க அவசரப்படுவதை நிதானப்படுத்திக்கொள்ள வேண்டும். “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்றாலும்,
“யூஸ் அன் த்ரோ”முறையில் அம்மா-அப்பாவையும் தூக்கி எறிந்து விடாமல், பழமையில் கால்பதித்து, புதுமையில் சிறகு விரிக்கப் பழகவேண்டும். கண்ணாடி, டார்ச்,மின்விளக்கு, தீக்குச்சி போன்ற ஒளிதரும் பொருள் போலும் பிறமொழி அறிவு முக்கியம்தான் என்றாலும், பார்க்கக் கண் வேண்டும் கண் என்பதே தாய்மொழி அறிவு. நாடும் மொழியும் நமதிரு கண்கள். அறிவே உயர்வுதரும்.
புதியன காண்க, புவியை நடத்து, பொதுவில் நடத்து. யாதும் ஊரே யாவரும் கேளிர்!
எனது ஐயங்களுக்கு விடையளித்த முத்து நிலவன் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள்.
தொடரும்...
அருமையான தொடக்கம் நல்ல கேள்விகளும் கவிஞரின் சிறந்த பதில்களும் நன்று வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவருக ஐயா.தங்களின் மறுமொழியின் ஊக்குவிப்பு நன்றிகள்.தயாராக இருங்கள் நீங்களும் இது போன்ற என்னுடைய ஐயங்களுக்கு விடையளிக்க வேண்டும் ஐயா.
நீக்குநன்றி.
பஞ்ச கேள்விகளுக்கும் ,அய்யா முத்துநிலவன் சொன்ன பதில்கள் ஒவ்வொன்றும் பஞ்ச் :)
பதிலளிநீக்குவருக ஐயா.தங்களின் மறுமொழிக்கு மிக்க நன்றிகள்.நீங்களும் இதில் உள்ளீர்,தயாராக இருங்கள் ஐயா.நன்றி
நீக்குசிறப்பானதோர் தொடக்கம்.. தொடரட்டும் உங்கள் கேள்விகள்.... தகுந்த பதில்களும்.....
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் மறுமொழியின் ஊக்கத்திற்கும் மகிழ்ச்சியும் நன்றிகளும் ஐயா.
நீக்குஉங்கள் முயற்சி வெல்லட்டும். ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்களது கேள்வி - பதில் நிறைகுடம் தளும்பாது என்பதற்கு எடுத்துக் காட்டு. விரைவில் என்னுடைய கேள்விகளுக்கான பதில்களை மின்னஞ்சல் வழி அனுப்பி வைக்கிறேன்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் மறுமொழிக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.தங்களின் பதில்களை பெற்று விட்டேன்.நன்றிகள் ஐயா.தொடர் ஆதரவுக்கும் மீண்டும் நன்றிகள் ஐயா.
நீக்குஆக்கபூர்வமான தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள் வைசாலி. கேள்விகள் கேட்டு புகழ்பெற்ற பதிவர்களின் அனுபவங்களைத் தொகுக்கும் தங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது.
பதிலளிநீக்குநன்று.
தங்களின் மறுமொழியின் ஊக்குவிப்புக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.தங்களின் உறுதுணையும் வாழ்த்தும் இல்லாமல் எனது முயற்சியும் வெற்றியும் இல்லை ஐயா.தங்களின் மாணவியாக என்றும் தங்களை பெருமிதம் அடைய செய்வேன் ஐயா.நன்றிக்கு நன்றியாக இருப்பேன் ஐயா.
நீக்கு
பதிலளிநீக்குவணக்கம் முத்துநிலவன் ஐயா,
எங்கள் கல்லூரி வலைப்பதிவைத் தாங்கள் தொடர்ந்து பார்வையிடுவதற்கும் எங்கள் மாணவிகளைத் தொடர்ந்து ஊக்குவித்தலுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் மாணவிகளின் கேள்விக்குத் தங்களின் பதில் மிக நன்றாக இருந்தது. குறிப்பாக,
யூஸ் அன் த்ரோ”முறையில் அம்மா-அப்பாவையும் தூக்கி எறிந்து விடாமல், பழமையில் கால்பதித்து, புதுமையில் சிறகு விரிக்கப் பழகவேண்டும். கண்ணாடி, டார்ச்,மின்விளக்கு, தீக்குச்சி போன்ற ஒளிதரும் பொருள் போலும் பிறமொழி அறிவு முக்கியம்தான் என்றாலும், பார்க்கக் கண் வேண்டும் கண் என்பதே தாய்மொழி அறிவு.
என்னை மிகவும் கவர்ந்தது. நன்றி.
பயன்தரும் பதிவுக்கு நன்றி சகோ.
பதிலளிநீக்குமுயற்சிக்கு எனது பாராட்டுகள் வைசாலி! தாமதமாகவே பார்க்கிறேன். விடைகள் வெளிவந்ததை ஒரு மின்னஞ்சல் வழி தெரிவித்திருந்தால் இத்தனை தாமதமாகப் பார்த்ததற்காக நான் வருந்த நேர்ந்திருக்காது! புதிய புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், உன்னைப் புதிய உலகின் பிரதிநிதியாக்க வாழ்த்துகள். நண்பர் முனைவர் இரா.குணசீலன் அவர்களுக்கும், உங்கள் கல்லூரி முதல்வர், பேராசிரிய நண்பர்கள் மற்றும் உன் மாணவத் தோழியர் அனைவர்க்கும் என் அன்பைத் தெரிவிக்க.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றிகள் ஐயா.தங்களுக்கு ஏற்கனவே மின்னஞ்சல் செய்துவிட்டேன் ஐயா.தங்களின் தொடர் ஆதரவுக்கு எனது அன்பு கலந்த நன்றிகள் ஐயா.
நீக்கு