ஞாயிறு, 12 ஜூன், 2016

சோன்யா கோவலெவ்ஸ்காயா


                   Image result for sonya kovalevskaya

     சோன்யா 1850 ஆம் ஆண்டு ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் பிறந்தார்.  அவரது தந்தையின் மைத்துனர் ஒருவருக்கு கணிதத்தல் அதிக ஆர்வம் இருந்தது.  அதன் காரணமாக சோன்யாவுக்கும் கணிதத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது.  அக்காலத்தில் ரஷ்யாவில் பெண்கள் அதிகம் கல்வி கற்கும் வழக்கம் இல்லை.
     நிக்கோலாய் நிகன்ரோவிச் டிர்டர் என்னும் கணித நிபுணர் எழுதிய நூலைப் படித்த சோன்யா, அந்நூலைப் பற்றிய மிகச்சிறந்த விமர்சனம் எழுதி அனுப்பினார்.  அதைப் படித்த நிகன்ரோவிச் வியந்தார்.  அவர் சோன்யாவின் கணித ஆற்றலைப் புரிந்து சோன்யாவைப் பாராட்டினார்.
     மேலும் அவர் சோன்யாவின் தந்தையைச் சந்தித்து, சோன்யாவுக்கு கணிதம் கற்பிக்க வேண்டும் என்று அவரது தந்தையை வற்புறுத்தினார்.  அதற்கு சோன்யாவின் தந்தையும் சம்மதித்தார்.  அவர் சோன்யாவிற்கு 17 வயது ஆகும்போது, தனிப்பட்ட முறையில் நுண்கணிதம் கற்பிக்க ஏற்பாடு செய்தார்.  சோன்யாவும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நுண்கணிதத்தைச் சிறந்த முறையில் கற்றுக்கொண்டார்.  சோன்யா மேற்படிப்பு கற்க விரும்பினார்.
     அக்காலத்தில் ரஷ்யாவில் மேற்படிப்பு வசதிகள் இல்லை.  எனவே அவர் வெளிநாடு செல்ல தீர்மானித்தார்.  அதன் காரணமாக அவர் திருமணம் செய்துகொள்ள முன்வந்தார்.  சோன்யா, “விளாடிமிர் கோவலெவ்ஸ்காயா” என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
     அதற்குக் காரணம், விளாடிர் கோவலெவ்ஸ்காயா ஐரோப்பிய நாடுகளை அறிந்த ஒரு பதிப்பாளராகத் திகழ்ந்தார்.  அதன் பிறகு சோன்யாவின் பெயர் சோன்யா கோவலெவ்ஸ்காயா என்று மாறியது.
     சோன்யாவும் அவரது கணவரும் ஹைடில்பெர்க் நகருக்குப் பயணமானார்கள்.  அங்குள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயில இருவருக்கும் அனுமதி கிடைத்தது.  சோன்யா விஞ்ஞானிகளான “ஹெல்ம் போல்ட்ஸ், கிர்சாஃப்” போன்றோருடன் விஞ்ஞானம் பயின்றார்.  ”கோனிக்ஸ்பொர்கர்” என்னும் கணிதமேதையுடன் சேர்ந்து கணிதம் பயின்றார்.
     “வியர்ஸ்ட்ராஸ்” என்பவரின் மேற்பார்வையில் அவர் வேற்றுமைச் சமன்பாட்டில் (Differential Equations) கணித ஆய்வுகள் மேற்கொண்டார்.  வியர்ஸ்ட்ராஸ் சோன்யாவுக்கு “டாக்டர்” பட்டம் பெற தொடர்ந்து உற்சாகம் தந்தார்.  சோன்யா அவ்வேளையில் பெர்லின் நகரில் வசித்து வந்தார்.
     சோனியா “ஏபெலின் இன்டக்ரல்” என்னும் தலைப்பில் தனது கணித ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்.  1874ஆம் ஆண்டு சோன்யாவின் ஆய்வுக் கட்டுரைகளுக்காக டாக்டர் பட்டம் (Ph.D)  வழங்கப்பட்டது.  அவரது ஆய்சிக் கட்டுரைகள் “க்ரெல்” என்னும் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டன.
     வேற்றுமைச் சமன்பாட்டில் அவர் செய்த ஆய்வுகள் காச்சி – கோவலெவ்ஸ்காயா தேற்றம் என்னும்  (Cauchy – kovaleskaya Theorem) பெயரில் வெளியிடப்பட்டது.  சோன்யாவின் கணவர் விளாடிமிர் கோவலெவ்ஸ் காயாவும் டாக்கர் பட்டம் பெற்றார்.
     1874 ஆம் ஆண்டு சோன்யாவும் அவரது கணவரும் ரஷ்யாவுக்குத் திரும்பினர்.  ஜெர்மன் நாட்டில் டாக்டர் பட்டம் பெற்றிருந்தும், அவர்கள் அருவரும் ரஷ்யாவில் ஆரம்பப் பள்ளிக்கூடங்களிலேயே பாடம் நடத்த அனுமதிக்கப்பட்டனர்.  அவர்கள் சட்டக்கல்வி பயின்றாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
     எனவே அவர்கள் சட்டத் தேர்வை எழுத முற்பட்டனர்.  விளாடிமிர் 1875 ஆம் ஆண்டே சட்டத் தேர்வில் வெற்றி பெற்றார்.  அதன் பிறகும் விளாடிமிருக்கு சரியான வேலை அமையவில்லை.
     இவ்வேளையில் சோன்யாவுக்கு “சோஃபியா” என்ற பெண் குழந்தை பிறந்தது.  அவர் 1881 ஆம் ஆண்டு தனது மகளுடன் பெர்லின் நகருக்கே திரும்பிச் சென்றார்.  கணவர் விளாடிமிர் மட்டும் ரஷ்யாவிலேயே தங்கிவிட்டார்.  சோன்யா பெர்லின் நகருக்கு வந்த சில நாட்களில் அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.  அவரது கணவர் விளாடிமிர் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதே அதிர்ச்சிக்குக் காரணம் ஆகும்.
     இருப்பினும் சோன்யா மனம் துவண்டுவிடவில்லை.  அவர் ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகருக்குச் சென்றார்.  அங்கே பெண்கள் உயர்கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர்.
     அவ்விடத்தில் ”ஆக்டா” என்னும் பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்றார்.  அப்பத்திரிகையில் பணிபுரிந்து வந்தபோது அவருக்கு பல கணித நிபுணா்களோடு நட்பு ஏற்பட்டது.  ஸ்டாக்ஹொம் நகரில் சோன்யாவின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவே நடந்தது.  மேலும் “ஹோக்ஸ்கோலா” என்னும் இடத்தில் ஒரு கல்விக்கூடத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பும் சோன்யாவுக்கும் கிடைத்தது.  அவ்வாறு புகழ்பெற்று விளங்கிய சோன்யா தனது 41வது வயதிலேயே காலமானார்.
குறிப்பு – படித்ததில் பிடித்தது
நூல்   - உலக கணித மேதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக