தமிழ் வளர்த்த அறிஞர்கள
அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை
இளமைக் காலம் முதலாகவே, திருக்குறளை மிகுந்த வேட்கையோடும், நிறைந்த ஈடுபாட்டோடும் பயின்று வந்த சேதுப்பிள்ளை (1896 - 1961), 'இல்லை உலகில் இது போலொரு நூல்' என வியந்தார். அதன் வெளிப்பாடே 'திருவள்ளுவர் நூல் நயம்' எனும் திருநூலை உருவாக்கம் செய்து, தமிழின் பெருமையை எடுத்துரைப்பதாகியது. அறிஞர் சேதுப்பிள்ளை தமிழில் படைத்தளித்த உரைநடை நூல்கள் பதினேழு. அவற்றிற்குள்ளே சேதுப்பிள்ளையின் புகழைப் பெரிதும் ஓங்கச் செய்த 'தமிழகம் - ஊரும் பேரும்' என்ற ஆய்வுப் பெருநூல், செந்தமிழுக்குச் சிறந்த சொத்தானது. சேதுப்பிள்ளையின் செந்தமிழ்த் திறமறிந்த பேரறிஞர் கா.சு.பிள்ளை, இவரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் பணியாற்ற உதவினார்.
பண்டிதர் அருணகிரிநாதர்
எழுத்தாற்றலும், கற்பனையாற்றலும் மிகுந்த நாவல் ஆசிரியராக திகழ்ந்த அருணகிரிநாதர் (1895 - 1974) எழுதிய 'குமுதரஞ்சனி',' அமிர்தசாகரன்',' அமிர்த குமாரி','சற்குணவல்லி','பத்மாசனி','திருக்கழுக்குன்றத்துக் கொலை' ஆகிய நாவல்கள் மிகவும் பிரபலமானவை. தமிழாசிரியர் பொறுப்பையே விட்டுவிட்டு புதினங்களைப் படைப்பதில் நாளும் ஈடுபட்டார் இவர். வரலாற்று நூல்கள் படைப்பதிலும் சாதனை படைத்தார் அருணகிரிநாதர். 'புத்தர்', 'அசோகர்', 'அயல்நாட்டுப் பெரியோர்', 'சேம்ஸ் கார்ல்பீல்டு', ' வில்லியம் மில்லர்' ஆகிய நூல்கள் பெரும் புகழ் பெற்றவை. இவருடைய கவியாற்றலை 'வடபழநியாண்டவர் அந்தாதி' தமிழுலகிற்கு தெளிவுபடுத்தியது.
ந.சி.கந்தையாபிள்ளை
இலங்கையில் கந்தரோடை என்னுமிடத்தில் நன்னியர் சின்னத் தம்பியின் புதல்வராகப் பிறந்தார் அறிஞர் ந.சி.கந்தையாபிள்ளை (1893 - 1967). பத்துப்பாட்டு, அகநானூறு, பதிற்றுப்பத்து, கலிங்கத்துப் பரணி, பரிபாடல், கலித்தொகை முதலிய சங்கநூல்கள் பலவற்றை வசன நடையில் எழுதிய இவர் இலங்கைத் தமிழறிஞராவார். 'தமிழ் ஆராய்ச்சி', 'தமிழ் விளக்கம்', 'முச்சங்கம்', ' நமதுநாடு', 'திராவிடம் என்றால் என்னஉ', 'நமது நாடு', ' தமிழர் சமயம் எது?', முதலிய ஆராய்ச்சி நூல்கள் அப்பெருந்தகையின் அறிவூட்டத்தையும், ஆய்வு நாட்டத்தையும் தெளிவுபடுத்தின. 'அறிவுரைக்கோவை',' அறிவுரை மாலை', 'பொருளுரைக் கொத்து' ஆகிய நூல்கள் இவருக்கு பெரும் புகழை தேடித்தந்தன.
அவ்வை.சு.துரைசாமிப் பிள்ளை
சங்க இலக்கியங்கள் பலவற்றுக்கு தெளிவான உரை எழுதி தமிழக மக்களால் நினைக்கப்படுபவர் துரைசாமிப் பிள்ளை (1903-1981). துரைசாமிப் பிள்ளை அவர்கள் கம்பீரமான தோற்றமும், கணீரென்ற குரல் வளமும் கொண்டவர். சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார். தமிழ்ப்பற்றும், சைவப்பற்றும் இவருடைய இரு கண்களாகத் திகழ்ந்தன. தமிழ்த் தாமரை, சைவத் திறவு, கோமகள் கண்ணகி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவர் இயற்றிய 'சைவ இலக்கிய வரலாறு' என்னும் நூலை அண்ணாமலைப் பல்கலைக்கழகமே வெளியிட்டுள்ளது. இவருடைய உரைப்பணியையும், சைவப்பற்றையும் கண்ட, தமிழறிஞர்கள் இவரை 'உரை வேந்தர்' என்றும், 'சித்தாந்த கலாநிதி' என்றும் அழைத்தனர்.
ஞா.தேவநேயப் பாவாணர்
தமிழன்னையின் கண்களில் வழிந்த அவலக் கண்ணீரை தமது எழுத்து வன்மையாலும், வலுவான இலக்கியச் சசான்றுகளாலும் துடைத்தெறிந்தவர் தமிழ்ப் பெரியவர் தேவநேயப் பாவாணர் (1902-1981). தொல்காப்பியம் எழுத்ததிகாரம் குறிப்புரை, தொல்காப்பியம் செசால்லதிகாரம் குறிப்புரை, ஒப்பியன்மொழி நூல், பழத்தமிழாட்சி, தமிழ் இலக்கிய வரலாறு போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். சேசலம் தமிழ்ப்பேரவை 1955ம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில், பாவாணரின் அருந்தமிழ்த் தொண்டைப் பாராட்டி 'திராவிட மொழி நூல் ஞாயிறு' என்னும் பட்டமும், வெள்ளித் தட்டமும் வழங்கிப் பாராட்டியது. மேலும் தமிழக அரசு இவருக்கு, 1979ம் ஆண்டு வள்ளுவர் கோட்டத்தில் 'செசந்தமிழ்ச் செசல்வர்' என்னும் பட்டம் வழங்கி பாராட்டியது.
அண்ணாமலை செட்டியார்
சிவ பக்தியையும், தமிழ்ப்பணியையும் தமது இரு கண்களாகக் கருதியவர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் (1881-1948). தனியொருவராய் நின்று இயல் தமிழ் வளர்ச்சிக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தையும், இசைத் தமிழ் வளர்ச்சிக்காகப் தமிழிசைச் சங்கமும் கண்ட பெருமைக்குரியவர். இவரின் வாழ்வு நகமும், சதையும் போலத் தமிழோடு பின்னிப் பிணைந்தது. பெரும் பணக்காரராக திகழ்ந்த இவர், தமிழுக்கென்று ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென விரும்பினார். ஏற்கனவே தமிழகத்தில் இருந்த சென்னைப் பல்கலையில் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. எனவே, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம், தர வேண்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை 1929ம் ஆண்டு நிறுவினார். முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழ் அண்ணாமலை செட்டியாரின் காலத்தில் மிகவும் நலிவுற்றிருந்தது. இதனை கருத்தில் கொண்டு 1943ம் ஆண்டு 'தமிழிசைச் சங்கம்' என்னும் அமைப்பினை உருவாக்கினார். இதற்கு தலைவராகவும் இவரே விளங்கினார். அண்ணாமலை செட்டியாரின் கொடை வன்மையைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு 'சர்' என்னும் பட்டத்தை வழங்கி
மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
'தமிழத்தாத்தா' உ.வே.சாமிநாத அய்யரின் ஆசிரியராகத் திகழ்ந்து தமிழுக்கு பெருமை சேர்த்த தமிழறிஞர் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1815-1876). இளமையிலேயே தமிழார்வம் கொண்டு, தமிழை கற்றுத் தெளிய எதையும் செய்யலாம் என்ற ஆவலுடன் இவர் விளங்கினார். தலபுராணங்கள் பாடுவதில் வல்லவரான இவர், கோவை, பிள்ளைத்தமிழ், அந்தாதி போன்ற சிற்றிலக்கியங்கள் பாடுவதில் பெரும்புகழ் பெற்று விளங்கினார். நினைத்த அளவிலேயே விரைந்து கவிபாடும் திறமை மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் தனிச் சிறப்பு. இவரது புலமையை கண்டு வியந்த திருவாவடுதுறை ஆதீன மடம், மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களுக்கு 'மகா வித்துவான்' என்னும் பட்டமளித்து சிறப்பித்தது.
தண்டபாணி தேசிகர்
பத்மபூஷண் விருது பெற்ற முதல் தமிழ் அறிஞர் தண்டபாணி தேசிகர் (1903-1990). உ.வே.சாமிநாத அய்யரிடம் பயின்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்வான் பட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கியவர்.திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் இவர் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய போது, தற்போது முதல்வராக உள்ள கருணாநிதி இவரது மாணவர். தண்டபாணி தேசிகர் மறைவின் போது, கருணாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'தாய்ப்பால் தந்த அஞ்சுகம் அன்னையைப் போல், தமிழ்ப்பால் தந்த பேராசன்' என்று குறிப்பிட்டிருந்தார். குன்றக்குடி அடிகளாரும் தண்டபாணி தேசிகரின் மாணவர் தான். திருக்குறளில் இவருக்கு இருந்த புலமையால் தமிழக அரசு இவருக்கு திருவள்ளுவர் விருது வழங்கிப் பாராட்டியது.
பா.வே.மாணிக்க நாயக்கர்
பொறியியல் தமிழ் அறிஞர் என்று மாணிக்க நாயக்கரை (1871-1931) குறிப்பிடலாம். 'தமிழ் தொல்பெருந் தனிமொழி. இவ்வுலகிலேயே தன்னிகரற்றுத் தனித்தியங்கும் பண்டைமொழி. ஹா, ஹீ என்று மூச்சைசப் பறிக்காமல் மூச்சுச் செசட்டுடன் இயங்குவது தமிழ் ஒன்றே. வலிய எழுத்தொலிகளால் மூச்சு வீணாகிறது. பிற செசால் கலப்பால் தமிழின் தூய்மை கெடுகிறது' என்று கூறியவர். இவர் இயற்றிய தமிழ் ஒலியிலக்கணம் எனும் நூல் ஆங்கிலத்திலும் வெளியானது. மரநூல் எனும் தலைப்பில் இவர் வெளியிட்ட நூல் அறிவியல் தமிழுக்கு இவரது மிக முக்கிய கொடையாகும்.
மயிலை சீனி வேங்டசாமி
தமிழ் மொழியில் மறந்ததும், மறைந்ததுமான சிறந்த செய்திகள், அளவு கடந்து உள்ளன. அத்தகைய சீரிய செய்திகளை வெளிக்கொணர்ந்து, வீசிய உணர்வுடன் வெளியிட்ட வித்தகப் பெரும் புலவர், அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி (1900-1980) ஆவார். ஐந்திலக்கணங்களில் ஒன்றான யாப்பைப் பற்றி 'யாப்பருங்கல விருத்தி' என்னும் நூலை படித்தார் சீனி வேங்கடசாமி அவர்கள். இந்த நூலின் உரையாசிரியர், தமது உரை விளக்கத்தில், பல்வேறு நூல்களிலிருந்து சில செய்யுள்களை எடுத்துக் காட்டுகளாக இயம்பியிருந்தார். அப்படி எடுத்துக்காட்டுகளாக கூறிய நூல்கள், தற்போது எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மறைந்து போன, பேணிக் காக்கப்படாத அந்நூல்களைச் சற்றே எண்ணிப் பார்த்து, மனம் கலங்கினார் அறிஞர் சீனி. வேங்கடசாமி. 'அட்டா! எத்தனை, எத்தனை நூல்களைத் தமிழன்னை இழந்து விட்டாள்?' என நெகிழ்ந்து நெடுமூச்சு விட்டார் அப்பெரும் புலவர். இத்தகைய நூல்களின் பெயர்களை தொகுத்து வெளியிட நினைத்து, அதனை செயல்படுத்தினார் சீனி. வேங்கடசாமி.
'மறைந்து போன தமிழ் நூல்கள்' என மகுடமிட்டு, ஓர் அரிய திருநூலைப் படைத்த இப்பேரறிஞர்,' களப்பிரர் காலத் தமிழகம்' என்னும் ஆய்வு நூல் வெளியிட்டுப் பெருமை பெற்றார். இவை தவிர, 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' என்றோர் அரிய நூலை எழுதி வெளியிட்ட அப்பேராசானே, முதன் முதலில் அழகுக் கலைகள் பற்றித் தமிழில் எழுதிய பெருமை பெற்றார். 'கொங்கு நாட்டு வரலாறு, துளுவ நாட்டு வரலாறு, சேரன் செங்குட்டுவன், மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன், மூன்றாம் நந்தி வர்மன் முதலிய நூல்கள் அறிஞர் சீனி வேங்கடசாமி வழங்கியுள்ள வரலாற்றுச் செல்வங்கள். இவர் தமிழின் வரலாற்றில், தனி ஓர் அத்தியாயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அருமையான பகிர்வு தோழி..
பதிலளிநீக்கு