ஞாயிறு, 17 ஜனவரி, 2016

உழவு தொழில்நுட்பம் வரமா? சாபமா?முன்னுரை;

பழங்காலத்தோடு ஒப்பிடுகையில் இன்றைய உழவு முறையானது முற்றிலும் வேறுபட்டது. எளிமையானது, சுலபமானது மற்றும் ஆபத்தானது. தொழில்நுட்ப வளர்ச்சியால் நெல் உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் பார்ப்போம்.

அவசர உலகம்;

நம் கையில் கடிகாரமா?

கடிகாரத்தின் கையில் நாமா?   

என்று குழம்பும் வகையில் காலத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். எல்லாவற்றையும் விரைவாக பார்த்துவிட்டு விரைவாகவே சென்றுவிடுகிறோம். அக்கால மக்கள் எல்லாம் நூறு வயது வரை வாழ்ந்தனர். நாமோ சில காலங்களில் நோய்வாய்பட்டு இறந்து விடுகிறோம். இதற்கு காரணம் நம் உணவு முறைகளே என்பது நமக்கு புரிவதில்லை. அக்காலத்தில் ஒரு வருடம் விளைந்த பயிர் இன்று மூன்று மாதத்தில் விளைகிறது. இது சாதகமான நிலை என நிலைக்கலாம். ஆனால் இது பத்துமாதத்தில் பிறக்க வேண்டிய குழந்தை மூன்று மாதத்தில் பிறப்பதற்கு சமம். இதனால் உடலுக்கு தீங்கே  விளைகிறது.

வரமா? சாபமா?

ஏர்க்கலப்பையை வைத்து உழுது, உழவர் சேற்றில் இறங்கி மிதித்து நிலத்தை சமன்செய்து, தகுதி வாய்ந்த விதையை தேர்ந்தெடுத்து தூவினர். ஆனால் இன்றோ அவர்கள் பார்த்து பார்த்து செய்த வேலைகள் கருவிகள் மூலம் எளிதில் செய்யப்பட்டது. அன்றோ நாற்றுநடும் போது அவர்கள் பாடிய நாற்றுபுறப் பாடல்கள், இன்று யாரும் அறிந்திடாத பொக்கிஷம் ஆகிவிட்டது. அவர்கள் உழவை நேசித்த விதமும், உழவில் அவர்களுக்கு இருந்த அர்ப்பணிக்கு உணர்வும், அவர்கள் பாடிய நாட்டுப்புற பாடல்களும் நமக்கு தெரியாமல் போய்விட்டது. நம் நாட்டின் முதுகெலும்பான உழவுத் தொழிலை நம் முன்னோர்கள் செய்த விதத்தை மறக்க வைத்த தொழில்நுட்பம் வரமா? சாபமா? என்று தெரியவில்லை. நம் வேலையை எளிதாக்கினாலும் நம் பண்பாட்டை மறக்கச் செய்தது.

நீரின்றி அமையாது உழவு;

விளைச்சல் பெருக முக்கிய ஆதாரமாக அமைவது நீர்தான். அத்தகைய நீர் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும், சுத்தமானதாக இருக்க வேண்டும். ஆனால் இன்று வயலுக்கு பாய்ச்சப்படும் நீர் எவ்வாறு இருக்கிறது? மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பயன்படுத்தப்பட்ட அசுத்தமான நீராக உள்ளது. ஆறுகள் எல்லாம் மனிதனின் செயல்பாட்டால் அசுத்தமாக உள்ளது. அசுத்தமான நீரை வயலுக்கு பாய்ச்சுவதால் மண் வளம் பாதிக்கப்படுகிறது, நெற்கதிர் பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நெற்கதிரை உட்கொள்ளும் போது நமக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

உயிர்கொள்ளும் உரம்;

பழந்தமிழர்கள் உரமாக இலை, தழை, மற்றும் விலங்குகளின் கழிவுகளைப் பயன்படுத்தினர். இதனால் விளைச்சல் பெருகியதோடு மட்டுமல்லாமல் சத்தானதாகவும் இருந்தது. ஆனால் இன்று செயற்கை உரங்களை பயன்படுத்துகின்றனர். இவைகளால் உடலுக்கு பெருந்தீங்கு விளைகிறது. மேலும் பயிர் பாதுகாப்பு என்னும் பெயரில் பயிர்களில் பூச்சிக் கொல்லிகளை அடிக்கின்றனர். இவை பூச்சிகளுக்கு உடனடி விஷமாகவும், மனிதர்களுக்கு நீண்ட நாள் விஷமாகவும் அமைகிறது. பூச்சிகளால் உண்ண முடியாத விஷத்தைத் தான் நாம் உணவு என உட்கொள்கிறோம். இவ்வாறு தொடர்ந்து பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி வந்தால் மண் வளம் பாதிக்கப்பட்டு விலை நிலம் பாலைவனமாக மாறிவிடும். அதன்பின் பசியை மறக்க மாத்திரையை பயன்படுத்த வேண்டி வரும்.

தொழில்நுட்ப வளர்ச்சி;

தொழில்நுட்ப வளர்ச்சியால் நன்மைகள் பல இருந்தாலும் தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. அவசர உணவு என்னும் பெயரில் எமனை நாமே அழைக்கிறோம். அனைத்து வகையான உணவு பொருளிலிலும் கலப்படம். அரிசியிலும் பிளாஸ்டிக் அரிசியைக் கண்டுபிடித்துவிட்டனர். வளர்ச்சி என்னும் பெயரில் அதிக அளவு செயற்கையைப் பயன்படுத்துவதால் இயற்கை எல்லாம் அழிந்து கொண்டே வருகிறது.

உணவே மருந்து என்பது மாறி மருந்தில் தான் உணவு என்றாகிவிட்டது.

இந்த நிலை மாறினால் மட்டுமே நோயற்ற வாழ்வை நம்மால் வாழ முடியும். அயல்நாடுகளில் எல்லாம் ஒவ்வொரு வீட்டின் மாடியிலும் விவசாயம் செய்கின்றனர். கட்டாயம் செய்ய வேண்டும் என்பது அவர்கள் கடமை. ஏனென்றால் அவர்களுக்கு விளை நிலங்கள் இல்லை. அதனால் மாடியில் விவசாயம் செய்கின்றனர். ஆனால் விளை நிலங்களை விலை நிலங்களாக மாற்றும் கொடுமை  நம் நாட்டில் மட்டுமே நடக்கிறது.

முடிவுரை;

மேற்கூறியவற்றையெல்லாம் சிந்திக்க வேண்டும். நம் நாட்டை வளமுடையதாக மாற்ற போராட வேண்டும்.
மாற்றங்களில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பர். உழவுக்கு மீண்டும் உயிரூட்ட வேண்டியது இளைஞர்களாகிய நமது கடமையாகும்.

2 கருத்துகள்:

  1. உண்மை தான் தோழி..இந்த அவசரமான காலம் என்னும் கடிகாரத்தில் நாம் தான் முள் போன்று பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.தொழில் நுட்பம் நமது நேரத்தை கடினம் இல்லாமல் நேரத்தை குறைக்கவே கண்டறிப்பட்டது ஆனால் இன்று அந்த தொழில் நுட்பமே நமது ஆயுள் நாட்களையும் குறைத்துவிடுக்கிறது என்ற உண்மையை இன்னும் சிலர் உணராதது மட்டுமே வருத்தை அளிக்கிறது தோழி.இந்த பதிவு என்னை சிந்திக்க வைத்தது.இளைஞர்கள் அனைவரும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை அறிந்தால் மருந்தே உணவு மாறி உணவே மருந்து என்ற நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    நன்றி வாழ்த்துக்கள் தோழி..

    பதிலளிநீக்கு