ஞாயிறு, 10 ஜனவரி, 2016

அம்மா

அம்மா






அ – உயிர்

ம் – மெய்

மா – உயிர் மெய்

அம்மா என்ற சொல்லுக்கு இத்தனை அழகான பொருள் தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் இல்லை.உலகிலேயே மிக அழகான சொல் என்றால் அம்மாதான்! எந்த உயிரை எடுத்துக் கொண்டாலும் தன்னலமற்ற ஒரு உறவு என்றால் அம்மாதான். இதை நன்கு அறிந்த ஒரு அறிஞன்,

தெய்வம் பூமிக்கு வருவதில்லை

தாயைப் பதிலுக்கு அனுப்பி வைத்தான்.

என்று கூறினார். தன்னலமான பிள்ளைகளைப் பார்த்திருப்போம். ஆனால் தன்னலமான அன்னையை எங்கும் பார்த்திருக்கமாட்டோம்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் – திருமூலர்

நான் பெற்ற துன்பம் என்னோடு போகட்டும் – அம்மா

தனக்காக வாழாமல் தன் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணிப்பவள் தான் அன்னை என்னும் அன்புள்ளம் கொண்டவள். பணத்திற்காக வெளியூர் சென்று பணிபுரியும் மகனைப் பெற்ற தாய் கண்ணீர் மல்க எழுதிய கவிதையை ஒரு நூலில் படித்தேன். அக்கவிதை,

மகனே…

நீ பிறந்த அன்று

தோட்டத்தில் வைத்தோம்

ஒரு தென்னங்கன்று

எங்கள் வியர்வையில்

நீ உயர்ந்தாய்

நாங்கள் வார்த்த தண்ணீரில்

தென்னை வளர்ந்தது

எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்

உனக்கு இன்பம் தருகிறது

இங்கே இருக்கும் தென்னை மரம்

எங்கள் இருவருக்கும்

சுக நிழலும் சுவை நீரும் தந்துதவுகிறது

ஒருநாள்……

நீ ஈ மெயிலில் மூழ்கியிருக்கும்போது

எங்களை ஈ மொய்த்த செய்தி வந்து சேரும்

இறுதிப் பயணத்தில்

நீ இல்லாமற் போனாலும்

தென்னை ஓலை

எங்கள் கடைசி மஞ்சமாகும்!

ஒரு அன்னையின் தவிப்பை அழகாக கூறுகிறது இக்கவிதை. ஆயிரம் பேர் நம்மிடம் அன்புகாட்டினாலும் அன்னைப் போல வருமா? பிள்ளை தன்னுடைய அன்பைப் பிரதிபலிக்காவிடினும், தாய் அதைப் பொருட்படுத்தமாட்டாள். தாயையோ தாயன்பையோ அலட்சியப்படுத்தாதீர்கள். தாயின் மனதை புண்படுத்தாதீர்கள். தாய் பாசத்தின் வேர்களினால்தான் பாரதத்தின் பண்பாட்டு மரம் பூத்துக் குலுங்குகிறது. அந்த வேர்களை யாரும் வெட்டிவிடாதீர்கள்.   


4 கருத்துகள்:

  1. தங்களை அன்புடன் வரவேற்கிறேன் நந்தினி அக்கா..
    அருமை இன்றைய வாழ்க்கையில் அனைத்து தாயின் ஏக்கம் இது தான்..
    வாழ்த்துக்கள் ..

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஐயா உங்களைப் போன்ற நல்உள்ளங்களின் ஆதாரவை என்றும் வேண்டுகிறோம்.

    பதிலளிநீக்கு