ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

'கூச்ச சுபாவமே எனது கேடயம்!"

 'கூச்ச சுபாவமே எனது கேடயம்!" என்றார் மகாத்மா காந்தி. அன்று அவருக்குக் கேடயமாக இருந்த விஷயம், இன்று இளைஞர்களுக்குத் தடையாக இருக்கிறது. கை குலுக்குவதில் இருந்து மைக் பிடிப்பது வரை, இன்று பல இளம் பருவத்தினரை கூச்சம்தான் ஆட்டிப் படைக்கிறது. கூச்ச சுபாவத்தினால் இளைஞர்கள் இழக்கும் வாய்ப்புகள், சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? இதில் இருந்து மீண்டு வருவது எப்படி? பொதுவாக, கூச்சம் என்பது அறிமுகம் இல்லாதவரிடம் ஆறு முதல் எட்டு நிமிடங்கள் வரையும், அறிமுகமானவர்களிடம் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரையும் நீடிப்பதாகச் சொல்கின்றன மனநல ஆய்வுகள். அந்த நிமிடங்களைத் தைரியமாகத் தாண்டிவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்த நேரத்தைச் சாதகமாக மாற்றத் தெரியாவிட்டால் அதுவே உங்களுக்குப் பாரமாகி விடும். உங்களின் கூச்சத்துக்கு நீங்கள் மட்டும்தான் முழுமுதற் காரணம். ஏனெனில், பிறக்கும்போதே கூச்ச சுபாவத்துடன் யாரும் பிறப்பது இல்லை. 'கூச்சம் என்பது ஒருவகையில் பலர் தங்களின் சௌகர்யத்துக்காக அவர்களே வளர்த்துக் கொள்ளும் ஒரு குணம்" என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். 'மற்றவர்கள் நம்மைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டும், கருணையாகப் பார்க்க வேண்டும்" என்று உள்ளுக்குள் வேண்டி விரும்பியே பலர் கூச்ச சுபாவத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். பின்னாளில் அதுவே அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாகவும் வந்து நிற்கிறது. ஏனெனில், கூச்சம் கொஞ்ச நாளில் பயமாக மாறிவிடும். நீங்கள் பயந்து ஒதுங்கும்போது, உங்கள் மேல் மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். அப்புறம் எப்படி ஜெயிப்பீர்கள்? சின்ன தயக்கம் கூட, நமக்குள் இருக்கும் திறமையை நாம் உணராதபடி செய்துவிடுகிறது. திறமைகள் இருந்தும் சிலர் தோற்றுப் போவதற்குக் கூச்சமே முதல் காரணம். 'சிரமம் இன்றி எதுவும் இல்லை, சிரமம் என்பது எதுவும் இல்லை" என்பதை உணர்ந்து, தங்களுக்குள் ஏற்பட்ட தயக்கத்தைத் தாண்டி தங்களுக்குள் தங்களைக் கண்டுபிடித்தவர்களே சாதனையாளர்களாகின்றனர். பெற்றோரின் அதிகப்படியான பாதுகாப்பும், அக்கறையும் ஒருவனுக்கு கூச்ச உணர்வை ஏற்படுத்திவிடும். பெற்றோர்கள் ஒருவனை எதற்கெடுத்தாலும் 'தப்பு", 'இது குற்றம்" என்று அடக்கி வைக்கும் போது, அவனுக்கு மன தைரியம் இல்லாமல் போய்விடுகிறது. மகனையோ, மகளையோ எந்தக் காரியத்தையும் செய்யவிடாமல் தடுத்து, பெற்றோர்களே செய்து முடிப்பது ஆபத்தான வளர்ப்பு முறையாகும். இதனால், எந்தக் காரியத்தையும் துணிச்சலாகச் செய்யும் தைரியம் அவர்களுக்குள் வளராமலேயே போய்விடும். கூச்சம் 'ஒரு வியாதி" என்பதைக் கண்டுபிடித்து அதை அடியோடு அழித்து விடவேண்டும். உலகத்தில் மொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் கூச்சம், பயம், தயக்கத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். உங்களுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும், கூச்சம் உங்களை இரண்டுபடி கீழே இறக்கி விட்டுவிடும். உடல், சூழல் என இரண்டு காரணங்களால் அதீத கூச்ச உணர்வு ஏற்படுகிறது. மூளையில் செரட்டோனின் (serotonin) என்ற ரசாயனம் குறையும்போது தானாகவே பயம், பதற்றம், குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை, தயக்கம் போன்ற உணர்ச்சிகள் உருவாகும். இதை மாற்றுவதற்கான சூழ்நிலை இல்லையென்றால், கூச்சம் நம் குணமாகவே மாறிவிடும். இதைத்தான் கூச்ச சுபாவம், பயந்த சுபாவம் என்று சொல்கிறோம். ஒன்றே ஒன்றுதான்... கூச்சப்படுபவர்களால் தங்களின் அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற வாழ்க்கையை அடைய முடியாது. கூச்சம், தயக்கம் எதுவும் இல்லாதவன்தான் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்குச் செல்ல முடியும்!

10 கருத்துகள்:

 1. பயனுள்ள பதிவுடா சரண்யா.கூச்சம் என்ற வார்த்தையில் தான் நாம் அனைவரும் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம் என்பது உண்மைதான்.அருமை சரண்யா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அக்கா.. நாம் அனைவரும் கூச்சத்தை தவிர்த்து வாழ்வில் முன்னேற பழகுவோம்.....

   நீக்கு
 2. நல்லதொரு கட்டுரை பகிர்விற்கு பாராட்டுக்கள்.....

  பதிலளிநீக்கு
 3. சரண்யா இப்போ உளவியல் எழுத்தாளராகிவிட்டீர்கள். நன்று.

  பதிலளிநீக்கு
 4. தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 5. தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு