ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

தேர்வுக்கு தயாராகுங்கள்...பொதுத் தேர்வுகள் நெருங்கிவிட்டன. இவ்வேளையில் மாணவர்களுக்கு இனம்புரியாத ஒருவித அச்சம், தடுமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை எப்படி தவிர்க்கலாம்?

பொதுத் தேர்வை ஏதோ மிகப் பெரிய தேர்வாக கருதி அஞ்சாமல், வழக்கமான மாதாந்திர தேர்வாக நினைத்தால், இயல்பாக இருக்க முடியும். பதற்றமும் கணிசமாக குறையும். அதற்காக அசட்டையாக இருந்துவிடக் கூடாது.

படிப்பதற்கு அட்டவணை தயார் செய்து கொண்டு படிப்பது நலம். எளிதான பாடங்களை இறுதி கட்டத்தில் படித்துக் கொள்ளலாம் என முடிவு செய்து, கடினமான பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தேர்வு முடியும் வரை சினிமா, டிவி, கைபேசி, இணையதளம் உள்ளிட்ட, பொழுதுபோக்கு சமாச்சாரங்களுக்கு ஓய்வு கொடுத்துவிடுவது நல்லது.

படிக்கும்போது இடையிடையே நன்றாக மூச்சை உள்ளிழுத்து, கண்களை மூடி, சில நிமிடங்கள் தியானம் செய்வது மனதை ஒருமுகப்படுத்தும்.

அதேபோல், பாடங்களில் சந்தேகம் ஏதேனும் புதிதாக எழுமேயானால், உடனடியாக ஆசிரியரிடம் கேட்டு தீர்த்துக் கொள்வது சிறந்தது.

கணிதம், இயற்பியல், வேதியியல் பாட சூத்திரங்களை மனப்பாடம் செய்வதை விட எழுதிப் பார்த்து பயிற்சி மேற்கொள்வது நல்லது.

முடிந்தவரை புத்தகங்களைப் பார்த்து மனனம் செய்துகொண்டே இருக்காமல், படித்ததை மனதிற்குள் அசை போட்டு பார்ப்பது நல்ல பலன் தரும்.

இரவு நெடுநேரம் கண் விழித்து படிக்காமல், பத்து மணியோடு படிப்பை நிறுத்திவிட்டு, ஆழ்ந்த உறக்கத்திற்குப் பின், அதிகாலையில் படிப்பை தொடர்வது நலம்.

அதிகமாக காபி, டீ போன்ற பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டாம். அவை உடலையும், மனதையும் மந்தமாக்க வாய்ப்புண்டு.

தேர்வுக்கு தயாராகும் நேரங்களில் எண்ணெய் மற்றும் கொழுப்பு சார்ந்த பதார்த்தங்களை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்ளுதல் நல்லது. அதேபோல் பட்டினி இருப்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

தேர்வுக்கு தயார் செய்யும்போது குழுவாக இணைந்து தயாரானாலும், தேர்வுக்கு ஒரு வாரம் முன்பிருந்து தனியாக படித்தலே சிறந்தது. இதனால், தேவையற்ற விவாதங்கள் தவிர்க்கப்பட்டு, மனம் ஒருநிலைப்படும்.

தேர்வு அறையில், வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் விடையளிக்க தேவைப்படும் கால அவகாசத்தை முன்பே திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, 'எல்லாம் தெரியும்" என்கிற மனப்பான்மை அறவே வேண்டாம்! அதேபோல், 'எதுவுமே தெரியாது" என்கிற பய உணர்வும் வேண்டாம்!


2 கருத்துகள்:

 1. வணக்கம்
  அருமையான வழிகாட்டல் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு