மனிதன் இயங்கத் தேவையானது கார்போஹைட்ரேட் அதேபோல இயந்திரங்களை இயங்கத் தேவையானது ஹைட்ரோகார்பன். ஹைட்ரோகார்பன்கள் என்பவை கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் மூன்றும் கலந்த ஒரு வேதியல் கலவை.
இவை ஆக்சிஜனின் உதவியோடு எரிந்து ஏராளமான சக்தியை வெளியிடும் எரிபொருட்களாகும். இதை எரிக்கும்போது வெளிவரும் வெப்பத்தைப் பயன்படுத்தி தான் நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் எந்திரங்கள், மோட்டார்கள் இயங்குகிறது. பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, ஷேல் எரிவாயு போன்றவற்றை மொத்தமாக ஹைட்ரோகார்பன்கள் என்றழைக்கிறோம்.
மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டம்
சிறு சிறு அளவுகளில் ஹைட்ரோகார்பன்கள் புதைந்திருக்கும் நிலப்பரப்புக்களை அரசு கண்டுபிடித்திருக்கிறது. சிறிய அளவில் இருப்பதால் அதை எடுக்க செலவு அதிகம், எனவே அரசு அதை தனியார் நிறுவனத்திடம் ஏலத்திற்கு விடுகிறது.
மொத்தம் 31 நிலப்பகுதிகள் (discovered small field ) இந்தியாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் பகுதியும், மற்றும் காரைக்கால் பகுதியும் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதே போல அசாம் மாநிலத்தில் 11 இடங்களும், ஆந்திர மாநிலத்தில் 4 இடங்களும், ராஜஸ்தானில் 2 இடங்களிலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 இடங்களிலும் மற்றும் குஜராத் மாநிலத்தில் 5 இடங்கள் என இதற்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஹைட்ரோகார்பன் திட்டம் தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் மீண்டும் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஏன் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது?
இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க.
எரிவாயு உற்பத்திக்கான முதலீட்டை அதிகப்படுத்த மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்க.
எரிபொருட்கள் இறக்குமதியை குறைக்க.
இந்த திட்டத்தை இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியுமா?
விளைநிலங்கள் பாதிக்கப்படும்.
நிலத்தடி நீரும், நீர் நிலைகளும் அழிந்து போகும்.
உணவுப் பாதுகாப்பு கேள்விக் குறியாகும்.
செடி கொடிகள், மரம் மட்டைகள் மறைந்து போகும்.
கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகும்.
ஹைட்ரோகார்பன் நச்சுப் பொருட்களான பென்சீன், பெட்ரோலியம் போன்றவற்றை சுவாசிப்பதனால் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். சிறுநீரகங்கள், மூளை, நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.
ஹைட்ரோகார்பன்கள் எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் தன்மை உடையவை. மூடிய அறைகளுக்குள் இவை எரிந்தால், மிகவும் ஆபத்தான கார்பன்-மோனாக்சைடு உருவாகும். இம்மாதிரியான காரணங்களால்தான் எண்ணெய்க் கிணறுகளில் வேலை செய்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைவாக காணப்படுகிறது.
ஆக்கப்பூர்வமான திட்டம் என்றாலும் அதன் ஆபத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், விஞ்ஞானத் திட்டங்களை நிறைவேற்றும்போது இயற்கைக்கும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே சுற்றுசூழல் ஆர்வலர்கள் அரசின் முன் வைக்கின்ற கோரிக்கையாக உள்ளது.
தகவல் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கு நன்றிகள் ஐயா.
நீக்குநல்லதொரு பகிர்வு... நன்றி அக்கா
பதிலளிநீக்குநன்றிடா.
நீக்குகாலத்துக்கு ஏற்ற பதிவு.
பதிலளிநீக்குநன்றி ஐயா.
நீக்கு