புதன், 22 பிப்ரவரி, 2017

அன்று இதே நாளில்...பேடன் பவல் 

தன்னலமற்ற மனித நேயப் பணியினை செய்ய சாரணர் இயக்கத்தைத் தொடங்கிய ராபர்ட் பேடன் பவல் பிரபு 1857ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

இவர் 1906ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோற்றுவித்தார். 1907 ஆம் ஆண்டு சாரணியம் ஓர் சோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கியது. முதலில் தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது.

இவருடைய பிறந்த நாளையே 1995ஆம் ஆண்டிலிருந்து உலக சாரணர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது சாரணியத்தின் லட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவு கூறும் தினமாக உள்ளது.

சாரணியத்தின் தந்தை என அழைக்கப்படும் இவர் தனது 83வது வயதில் (1941) மறைந்தார்.


தில்லையாடி வள்ளியம்மை

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடியில் பிறந்தார்.

சிறு வயதிலேயே தன்னைச் சுற்றி நிகழும் சமுதாயப் போக்குகளை கவனித்து, ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட வரி மற்றும் பல்வேறு கொடுமைகளை எதிர்த்து காந்தியடிகளுடன் போராட்டங்கள் நடத்தினார்.

'சொந்த கொடிகூட இல்லாத நாட்டின் கூலிகளுக்கு இவ்வளவு வெறியா?" என்றார் ஓர் ஆங்கிலேய அதிகாரி. உடனே தனது சேலையைக் கிழித்து அந்த அதிகாரியின் முகத்தில் எறிந்த வள்ளியம்மை, 'இதுதான் எங்கள் தேசியக் கொடி" என்றாராம்.

பலன் கருதாமல் தியாக உணர்வுடன் போராடி வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை தன்னுடைய 16வது வயதில் (1914) தனது பிறந்த நாளன்றே மறைந்தார்.

ஜார்ஜ் வாஷிங்டன்

அமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் 1732ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் பிறந்தார்.

இவர் 1753-ல் ராணுவத்தில் சேர்ந்தார். பிறகு 1775-ல் அமெரிக்கப் புரட்சியில் ராணுவத்தின் தலைமைத் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1783-ல் அமெரிக்க சுதந்திரப் போர் முடிந்தது. அர்ப்பணிப்பு உணர்வுடன் போரை நடத்தி வெற்றிக்குப் பெரும் பங்காற்றினார். 1789-ல் அமெரிக்காவின் முதல் அதிபராகப் பதவி ஏற்றார். 100 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரே அதிபர் இவர்தான்.

அமெரிக்க வரலாறே இவரிடம் இருந்துதான் தொடங்குவதாகவும் கருதப்படும் பெருமைகுரிய இவர் 67வது வயதில் (1799) மறைந்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக