வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

உளறல்களுக்கு பேச்சு வடிவம் கிடைத்த மேடை



எங்க அம்மாவுக்கும் எனக்கும் உள்ள உறவு தொப்புள்கொடி உறவு
திருப்பூர் குமரனுக்கும் இந்த தேசத்துக்கும் உள்ள உறவு தேசியக்கொடி உறவு.
கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவு தாலிக்கொடி உறவு.
இந்த மாதிரி எந்த ஒரு இணைப்பும் இல்லாமல் நண்பர்களிடையே மலர்ந்து மணம் வீசுகின்ற உறவு தான் நட்பு எனும் நேசக்கொடி உறவு.


இந்த வரிகளை என் வாழ்வில் எந்நாளும் மறக்க மாட்டேன் .
ஏனென்றால்
முதன்முதலாய்
தொலைக்காட்சி கேமாராவைப் பார்க்கிறேன்.
சந்தித்திராத கூட்டத்தை சந்திக்கிறேன்.
பெற்றோரை நீங்கள் பேசுவதைப் பார்க்க அழைத்து வாருங்கள் என்று சொல்லி கொடுக்கப்பட்ட சீட்டு இரண்டு கைப்பையிலே கண்ணுறங்குகிறது.


எட்டாம் வகுப்பு பாப்பா என்ன பேசப் போகுது என பார்க்கும் பெருங்கூட்டம்.
பேச்சாளர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் ஒருஙங்கிணைப்பாளர் வாசிக்க என் பெயரை மட்டும் காணவில்லை.
அழுகை கலந்த பயம்.

எல்லா பெயரும் சொல்லி முடித்த பிறகு மேடையில் இருக்கின்ற பேச்சாளர்களின் பெயரையெல்லாம் சொல்லிவிட்டேன்.
இந்த மேடையில் ஒரு  கத்தி அமர்ந்திக்கிறது என்று சொல்லி என்னை அறிமுகம் செய்தார்.

இப்படியெல்லாம் சொல்லுகிறாரே திக்காமல் ஒழுங்காக பேசி முடிப்போமா எனும் பயம் ஆழ்மனதில்...
பேசும் போது லியோனி ஐயாவிடம்
உங்களுக்கு எதாவது கஷ்டம் னா அதப்போய் உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லுவீங்களா.
இல்ல உங்க அண்ணன் தம்பி கிட்ட சொல்லுவீங்களா.
சொல்ல முடியாதுங்க ஐயா.
நமக்கு ஏற்படுற கஷ்டத்தையும் நஷ்டத்தையும் பகிர்ந்து கொள்ளக் குடிய உறவு ஒன்னு இந்த உலகத்துல இருக்குணா அது நட்பா மட்டுந்தாங்கயா இருக்க முடியும் என நான் இந்த வரியை முடிக்கும் போது அரங்கமை கையொலியால் நிரம்பிப் போனது.
இதற்குப் பின் லியோனி ஐயா என்னிடம் என்ன பத்தி எப்டிமா இவ்ளோ கரக்டா தெரிஞ்சு வைச்சுருக்க என கேட்ட போது ஒரு குழந்தையோட மனது தாய்க்கு தான் தெரியும்.
தாயோட மனது புள்ளைக்கு தான் தெரியும்.
அது போல ஒரு பேச்சுத் தலைவரோட மனசு இன்னொரு பேச்சாளருக்கு தானங்கய்யா தெரியும் என சொல்லினேன். மீண்டும் அரங்கம் கையொலியால் நிரம்பியது.
எப்படியொ வெற்றிகரமாக பேசி முடித்து விட்டேன் என்னும் மனமகிழ்வோடு
 சிறந்த பேச்சாளருக்கான விருதையும் அந்த அரங்கத்தில் வாங்கி விட்டேன்...

முதன்முதலாய் தொலைக்காட்சி காட்டிய கொடுத்த அணுபவம் தற்போது கூட இதை எழுதும் போது அந்த நினைவுகள் ஊசலாடிக் கொண்டே செல்கிறது.


நினைவுகள் மகதாதானவை தான்..

அஞ்சல் குறியீட்டு எண்

       
                                                          அஞ்சல் குறியீட்டு எண் அல்லது பின்கோடு என்பது இந்தியாவில் அஞ்சல்துறைகாக அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் எண் ஆகும். இந்த முறை ஆகஸ்ட் 15 1972ஆம் நடைமுறைக்கு வந்தது. இதில் மொத்தம் ஆறு எண்கள் உள்ளது. அஞ்சலக சுட்டு எண்ணின் முதல் இலக்கம் அஞ்சலகம் அமைந்துள்ள மண்டலம். இரண்டாவது இலக்கம் உள் மண்டலம். மூன்றாவது இலக்கம் மாவட்டத்தையும் குறிக்கிறது. இறுதி மூன்று இலக்கங்கள் குறிப்பிட்ட அஞ்சலகத்தை குறிக்கும்.

மனிதாபிமானம்

 தெரசா ஒரு நாள்  ஒருவரிடம் இல்லாதவருக்காக உதவி கேட்க அவரோ உமிழ் நீரை உமிழ்ந்தார் ஆனால் அன்னையோ கோப படாமல் எனக்கு இதை தந்து விட்டீர்கள் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்ட தெரசா வாழ்ந்த இந்த ஊரில் ஏழைகளுக்கு உதவ அனைவரின் உள்ளம் மறுக்கிறது.                             ஒரு நாள் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தேன் அப்போது ஒரு மெலிந்த உடலும், அழுக்கான துணியையும், தடுமாறிய நடையும் உடைய முதியவர், ஒருவரிடம் பிச்சை கேட்க அவரோ கண்டு கொள்ளாமல் திரும்பி கொண்டார் அந்த ஈமுதியவரோ பாவமாக மீண்டும் தடுமாறி சென்று விட்டார். நான் அவரை தேடி போய் என்னால் முடிந்த பணத்தை தந்து உதவினேன். இன்றைய சமுகத்தின் அவலமே இது தான். இல்லாதவர்க்கு உதவ நம்மில் பலருக்கு மனம் வருவதில்லை காரணம் கேட்டால் அவர்கள் கூறும் விடையோ கோபம் அளிக்கிறது.  அவர்கள் இவர்களை ஏமாற்றிவிடுவாங்களாம். மாதம் முன்னூறு ரூபாய்க்கு போனுக்கு டேட்டா கார்டு போடுவோம், இருநூறு ரூபாய்க்கு பீட்ஸா வாங்கி மூன்று துண்டுகள் சாப்பிட்டு ஒரு துண்டை குப்பையில் எரியும் நாம் இல்லாதவருக்காக ஒரு பத்து ரூபாய் கொடுத்தால் ஏமார்ந்துவிடுவோமாம். 

நீங்களும் பட்டயக் கணக்காளர் (CA )ஆகலாம்.




                   




           







வணிகம் என்பது என்று நாம் சம்பாதித்ததில் இருந்து சேமிப்பிற்காக எடுத்து வைத்தோம அதிலிருந்து தான் தொடங்கியது.

இன்று வணிகவியல் துறை மேன்மேலும் தன்னை காலத்திற்கேற்றாற் போல் தகவமைத்துக் காக்கிறது. முன்பு,  பி. காம் மட்டுமே இருந்தது ஆனால், இன்று பி. காம் எவ்வளவு உட்பிரிவுகள் ஈ-காமர்ஸ்,பினான்ஸியல் மார்க்கெட்டிங்  என வளர்ந்துள்ளது.

எந்த ஒரு நிறுவனத்திலும் நிதிநிலை நடவடிக்கைகள் நடக்காமல் இருப்பது இல்லை.  எனவே பட்டயக்கணக்காளர் என்று சொல்லப்படுகின்ற சார்ட்டேடு அக்கவுண்டன்ட் படிப்பு  மிகச் சிறப்பானதாகும்.  ஏனெனில் ,  அவரின்  துணையின்றி வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது. பொருளாதாரம், நிர்வாகவியல், தகவல் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றத்தால் தொழில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

சி. எ என்று சொல்லப்படும் சார்ட்டேடு அக்கவுண்டன்ட்  எனும் படிப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ்  இயங்கும் தி இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டேடு அக்கவுண்ட் ஆஃப் இந்தியா (இ. சி. ஏ. ஐ) நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

சி. எ முடிக்க
                    1.காமன் புரபசியன்ஷி(சி.பி.டி)
                    2.இன்டக்ரேட்டட் புரபஷனல் காம்படன்ஸ் கோர்ஸ்
                   3.ஆர்ட்டிக்கள்ஷிப் டிரெய்னிங்
ஆகிய நிலைகளை கடக்க வேண்டும்.

காமன் புரபசியன்ஷி நுழைவு தேர்வு எழுத பிளஸ் 2முடித்திருந்தாலே போதும்.  பொருளியல் வணிகவியல் சார்ந்த கேள்விகளே அதில் இடம்பெறும்.
  பி. காம் பட்டதாரிகள் சிபிடி தேர்வு எழுத தேவையில்லை. 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்த தேர்வு 4 பகுதிகள் கொண்டது. மைனஸ் மார்க் உள்ளது. குறைந்தது 100மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.  40  விழுக்காடு குறைவாக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் மறுதேர்வு எழுத வேண்டும்.

இடைநிலைத்தேர்வு (இன்டக்ரேட்டட் புரபஷனல் காம்படன்ஸ் கோர்ஸ்)  இதில் மொத்தம் 7 தாள்கள் உள்ளன. இதில் 50 விழுக்காடு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

இடைநிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு பட்டயக்கணக்காளரிடம் முன்று ஆண்டுகள் செயல்முறை பயிற்சி வழங்கப்படும்.  இந்த காலகட்டத்தில் ஊதியமாக 10,000 ஆயிரத்திற்கும் அதிகமாக வழங்கப்படும். இரண்டரை ஆண்டுகள் செயல்முறை பயிற்சியில் ஈடுபட்டிருந்தால் இறுதித்தேர்வை எழுதலாம்.

இறுதித்தேர்வில் 8 தாள்கள் இடம்பெறும். ஒவ்வொரு தாளிலிலும் 40 விழுக்காடு மதிப்பெண்ணுடன் மொத்தம் 50விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும்.
இதில் வெற்றி பெற்ற பிறகு "அசோசியேட் ஆஃப் சார்ட்டட் அக்கவுண்டன்ஷிப்" சான்றிதழ்  வழங்கப்படும். அதன்பிறகு ஐ. சி. ஏ. ஐ.  யில் சேர்ந்து  ஆடிட்டர் பணியைத் தொடரலாம்.

ஐசிஏஐ யில் இட ஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை.  மாறாக தகுதியான மாணவர்களுக்கு வாய்ப்பு அளித்து கட்டணச்சலுகையும் வழங்கப்படுகிறது.
எனவே சி. ஏ படிப்பை சாதிக்கும் வெறியோடும் அர்ப்பணிப்பு உணர்வுடன் படித்தால் குறைந்து முன்று நான்கு வருடங்களில் நீங்களும் சி. ஏ ஆகலாம்.




வியாழன், 30 ஆகஸ்ட், 2018

புறம் பேசுதல் ஒரு பெரு குற்றம்


சித்திர குப்தரும் எமனும் ஒரு வழக்கை பற்றி பேசி கொண்டு இருந்தனர்,  எம தர்ம ராஜாவிடம் தீர்ப்பு கேட்க விஷயத்தை கூறினார். ஒரு நாட்டில் ஒரு ராஜா தன் ஊரில் உள்ள அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார் அப்போது ஒரு கருடன் பாம்பை தூக்கி கொண்டு சென்றது அந்த பாம்பு வலி தாங்க முடியாமல் நஞ்சை கக்கியது அந்த நஞ்சோ உணவின் மீது விழுந்துவிட்டது அதை அறியாமல் அந்த உணவை சமையல்காரர் பரிமாற அதை உண்டு மூன்று பேர் இறந்து விட்டனர். சித்ர குப்தருக்கு இபோது இந்த இறப்பு பாவத்தை யார் மீது சுமத்துவது என்ற சந்தேகத்தை எமனிடம் கேட்டார்,ஏனென்றால் ராஜா நல்ல எண்ணத்தில் உணவு கொடுத்தார் அதில் விஷம் உள்ளது அவருக்கு தெரியாது, சமையல் காரரும் விஷம் உள்ளது தெரியாமல் பரிமாறி விட்டார், கருடன் தன் உணவிற்காக பாம்பை தூக்கி சென்றது, பாம்போ வலி தாங்காமல் விஷத்தை கக்கி விட்டது இவர்கள் யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என்று குப்தர்  கேட்க எமனோ பொறுங்கள் காலம் வரும் போது விடை கூறுகிறேன் என்றார். சிறிது காலம் கழித்து அந்த ஊருக்கு புதிதாக  இரண்டு பேர் வந்தனர் அவர்கள் ராஜா அன்னதானம் வழங்குவதை அறிந்து அங்கு போக விரும்பி ஒரு பெண்ணிடம் வழி கேட்டனர் அனால் அவளோ அவர்களிடம் பாத்து போங்கள் எண்ணென்றால் அங்கு உணவு உண்பவர் அனைவரும் செத்து போகிறார்கள் என்று நக்கலாக கூறுகிறாள் இப்போது எமன் சித்ர குப்தரிடம் அந்த இறப்பு பாவத்தை இவள் மீது சுமத்து என்றார். பாவம் அவள் மீது சுமத்த படுகிறது. ஒரு நல்ல செயலை தப்பான எண்ணத்தில் பிறரிடம் புறம் கூறுவது கூட ஒரு பெரும் பாவம் தான். 

அகத்தாய்வு செய்வோம்...

நேற்று ஒரு ஆங்கில புத்தகம ( யூ வில் வின் ) படிக்கும் போது ஒரு கதை படித்தேன் அதிலிருந்து நான் என்ன கற்றுக் கொண்டேன என்பது குறித்த பதிவே இது...

ஒரு பலூன் வியாபாரி அழகழகான பலூன்களை விற்றுக் கொண்டிருக்கிறார்.
அவருடைய வியாபாரம் தொய்வு ஏற்படும் போதெல்லாம் அந்த பலூன்களில் ஹுலியம் வாயுவை நிரப்பி பறக்க விடுவார்.
அது பறக்கிறதைப் பார்த்து நிறைய பேர் அதை வாங்கிக் கொள்ள ஓடி வருவார்கள்.
பச்சை நீலம் ஊதா சிவப்பு ஆரஞ்சு என பல நிறங்களில் அந்த பலூன் இருக்கும்.
ஒரு சமயம் ஒரு சிறுவன் அந்த பலூன் வியாபாரியிடம் நின்று கொண்டு " கருப்பு நிற பலூனைப் பறக்க விட்டால் அதுவும் பறக்குமா " என்று கேட்டான்.
அதற்கு அந்த பலூன் வியாபாரி வெளியே இருக்கின்ற நிறத்தால் அந்த பலூன் பறக்கவில்லை அதற்கு உள்ளே இருக்கின்ற ஒரு வாயுவால் தான் அது பறக்கிறது என்று கூறினார்.

ஆம். நமக்குள்ளே ஆயிரமாயிரம் ஆற்றல்கள் கொட்டி கிடக்கின்றன்.
அகத்தாய்வு செய்யாமல் புறத்தாய்வு மட்டும் செய்து கொண்டிருக்கிறோம்.
வெளித் தோற்றம் சில வருடங்களுக்குப் பிறகு இல்லாமல் போய்விடும்.
ஆனால் நம்முடைய அகத்தில் இருக்கின்ற பண்புகள் நாம் இந்த மண்ணில் இல்லாத போது கூட நம்மைப் பற்றி பேச வைக்கும்.

அகத்தாய்வு செய்வோம்.
நம்மைப் பற்றி ஆழமாய் அறிவோம்.
ஆற்றல்களை வெளியே கொண்டு வருவோம்.
சராசரி மனப்பான்மை கடந்து சாதனைகள் புரிவோம்.

புதன், 29 ஆகஸ்ட், 2018

மனமே மாறிவிடு

ஒரு சில ரகசியங்களை நாம் நமக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்வோம்.
சில சமயங்கள் அந்த ரகசியங்களெல்லாம் வேறு யாருக்காவது தெரிந்து விட்டது என்றால் கோபம் கொள்வோம்.

அது நியாயமா???
ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்.
நம்முடைய ரகசியங்களை நம்மாலேயே பாதுகாக்க முடியவில்லை அதனால் தான் பகிர்ந்து கொள்கிறோம்.
நம்மால் பாதுகாக்க முடியாத நம்முடைய ரகசியங்களை மற்றவர்கள் பாதுகாப்பார்கள் என நம்புவது எப்படி நியாயம்.......????

எழுத்தாணி பிடித்து இலக்கியத்தை நிமிர்த்திய பெண்கள்

சென்ற ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்றதற்காக கல்லூரியின் தாளாளரிடம் வாழ்த்துப் பெற சென்றிருந்தேன்.
அந்த சமயத்தில் எங்கள் தமிழ்த் துறைத் தலைவர் குணசீலன் ஐயாவிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது ஐயா என்ன தலைப்பு குடுத்தாங்க எந்த கருத்த மூலமா வைச்சு பேசுனீங்க என்று கேட்டார்.
நான் ‌"ஔவைப் பாட்டியின பாட்டே பண்பாடு" எனும் தலைப்பில் அவரின் பாடல் வரிகளை சொல்லி நிகழ்கால உதாரணத்தை சொல்லி பேசினேன் ஐயா என்று சொன்னேன்.
ஐயா : எந்த ஔவையாரைப் பற்றி பேசினீர்கள்?
நான் : எந்த ஔவையாரா! எனக்கு தெரிந்தது ஒரே ஒரு ஔவையார் தான் ஐயா.
ஐயா : இல்லை பா. இலக்கியத்தையும் வரலாற்றையும் நன்றாக படித்து பாருங்கள். நான்கு ஔவையார் இருக்கிறார்கள்...

நீண்ட நாட்கள் கழித்து நினைவுகளை அசை போடும் போது தான் ஒரு கருத்து தோன்றியது.

ஆரம்ப பள்ளியில் ஆரம்ப பாடமாக ஆத்திச்சூடி தந்திருக்கிறார்கள்.அதை எழுதியவர் குறித்த முழுமையான பார்வையும் புரிதலுமே நமக்கு இல்லையே. இன்னும் எத்தனையோ தகவல்கள் நம்மை சுற்றியும் இருக்கின்றன.
அதைத் தேடி கண்டுபிடிக்க வேண்டியது நம் கடமை என தேடித் தெரிந்து கொண்டேன்.
அதனை இன்று எழுத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டும் என விரும்பியதன் விளைவு இந்த பதிவு.

அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை பெண்கள் அடிமைகளாகவே இருந்தார்கள் என தவறான புரிதல் நம் எண்ணத்தில் திட்டமிட்டு ஏற்றப்பட்டிருக்கிறது..

இன்று ஓர் ஆச்சர்யம்.
சங்க காலத்தில் 41  பெண் புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
அவர்களின் பெயர்கள்.

1. அஞ்சியத்தை மகள் நாகையார்
2. அஞ்சில் அஞ்சியார்
3. அள்ளூர் நன்முல்லையார்
4. ஆதிமந்தியார்
5. ஊன்பித்தை
6. ஒக்கூர் மாசாத்தியார்
7. ஔவையார்
8. கச்சிப்பேட்டு நன்னாகையார்
9. கழார்க்கீரன் எயிற்றியார்
10. காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்
11. காமக்காணிப் பசலையார்
12. காவற்பெண்டு
13. குமுழிஞாழலார் நப்பசலையார்
14. குறமகள் குறியெயினி.
15. குறமகள் இளவெயினி
16. குன்றியனார்
17. தாயங்கண்ணியார்
18. நக்கண்ணையார்
19. நல்வெள்ளியார்
20. நன்னாகையார்
21. நெடும்பல்லியத்தை
22. பாரி மகளிர்
23. பூங்கண் உத்திரையார்
24. பூதப்பாண்டியன் தேவியார்
25. பெருங்கோழிநாய்கண் மகள் நக்கண்ணையார்
26. பேய்மகள் இளவெயினி
27. பொதும்பில் புல்லாளங் கண்ணியார்
28. பொன்மணியார்
29. பொன்முடியார்
30. போந்தைப் பசலையார்
31. மதுரை மேலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
32. மாரிப் பித்தியார்
33. மாறோக்கத்து நப்பசலையார்
34. முள்ளியூர்ப் பூதியார்
35. வருமுலையாரித்தி.
36. வெண்ணிக் குயத்தியார்
37. வெண்பூதியார்
38. வெண்மணிப் பூதியார்
 39. வெள்ளிவீதியார்
40. வெள்ளெமாளர்
41. வெறிபாடிய காமக்காணியார்.

புணர்ச்சியில் ஈடுபட மட்டுமே பெண் என்ற நிலையை மாற்றி
 *எழுத்து*  எனும் புரட்சியில் ஈடுபடவும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை சங்க காலங்களிலேயே மெய்பித்தவர்கள் இவர்கள்.
வாய்ப்பிருந்தால் இவர்களைப் பற்றிய செய்திகளையும் இவர்கள் இயற்றிய பாடல்களையும் படித்து பார்ப்போம்.
பயன் பெறுவோம்.
நன்றி : இது குறித்த பார்வை என் மனதில் எழக் காரணமாக இருந்த எங்கள் ஐயா முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கு.

சனி, 25 ஆகஸ்ட், 2018

கல்லூரி வழி பயணம்




இளஞ்சூடான வெயிலில் பள்ளிக்கு செல்லும் சிறு பிள்ளைகள் மத்தியில் நானும் தயாரானேன் என் கல்லூரிக்கு செல்ல !!

பரபரபரப்பான நகரத்தை தாண்டி என் கல்லூரிக்கு செல்ல அழகான அமைதியான ஒரு காட்டு வழி பாதை !!

பனி போல் பொழியும் சாரல் மழையில் குளங்கள் சிரித்திட, 
அதில் உள்ள அல்லி மலர்கள் ஆனந்தத்தில் மூழ்கிட ! 

ஊரை காவல் காத்தப்படி உள்ள எல்லை சாமியை ரசித்தவாறு பயணம் தொடர்கிறது 
மழை பெய்தால் இரு புறமும் ஓடைகள் அதில் முளைக்கும் கோரைகள் ,
பச்சை போர்வை போர்த்தியது போல் உள்ள கடலை  சாகுபடி ,
பெண் மயிலை கவர தொகை விரிதாடும் ஆண் மயிலின் சிறகு ஓசையில் நான் சிலிர்த்தட!! 

ஏர் உழுத இடத்தில் தாயுடன் உணவு தேடும் மயில் குஞ்சுகள் 
அதை விரட்ட வந்த கிழவி வீட்டு தோட்டத்தில் உள்ள வாழை கன்றை கன்று குட்டி திங்க , 
அதன் மேல் ஒய்யாரமாய் காதல் பேசும் இரட்டை வால் குருவிகள், 
கரையோர பனைகள் அதில் பனங்காய்களை விட அதிகமான கல் பானைகள் அதன் சுவையில் மயங்கிய வண்டுகளின் கூட்டம் , 
மீனை எதிர்நோக்கும்  மீன்கொத்தி, பாறை மீது தண்டால் எடுக்கும் ஓணான், தார் ஊற்றிய சாலையில் ஒரு புறம் திதிப்பான கரும்பும், மறுபுறம் சூரியனும் ஈடு தரும் நிறத்தில் மாம்பழங்கள்.

தாயிடம் பால் குடிக்க ஓடும் இளங்கன்று அதனை மெய்தபடி மரத்தடி நிழலுக்கு ஓடும் பாசமிகு அண்ணன் தங்கையின் அளவில்லா ஆனந்தத்தை ரசித்தவாரு கல்லூரிக்குள் நுழைந்தேன் என் எதிர்காலத்தை நோக்கி?????


வியாழன், 23 ஆகஸ்ட், 2018

நட்பு அன்றும் இன்றும்


                                  உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே 
                                  இடுக்கண் களைவதாம் நட்பு. 788      
என்கிறார் வான்மறை தந்த வள்ளுவர்.

உண்மையான நட்பு என்பது தனது நன்பனுக்கு ஆபத்து வருகின்ற தக்க காலத்தில் உதவுவதாக இருக்க வேண்டும்.
புறநானூறிலே "தன் தோழற்கு வருமே" எனும் ஒரு பாடலில் ஒரூஉத்தனார் நட்பை அழகாய் ஆழமாய் கூறியிருக்கிறார்.
அந்த பாடல் வரிகள்.

கோட்டம் கண்ணியும் கொடுந்திரை அடையும்-
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்-
ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய-
திணிநிலை அலறக் கூவை போழ்ந்து தன்-
வடிமான் எகம் கடிமுகத்து ஏந்தி-
ஓம்புமின் ஓம்புமின் இவண்! என ஓம்பாது-
தொடர்கோள் யானையின் குடர்கால் தட்பக்-
கன்றுஅமர் கறவை மான;
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே.  
புறநானூறு -275

இந்த பாடலின் பொருள் எனது பார்வையில்.

அழகான கண்ணியும்
 மென்மையான ஆடையும் 
மன்னனின் பெருமையைப் பாடிப்பாடி அவனை கவருதலும்
அவனுக்கு ஏற்புடையது அல்ல.
போரிலே தன்னுடைய நண்பன் பகைவர்களால் சூழப்பட்டிருக்கும் சமயத்திலே
போர்வாளினை ஏந்திக் கொண்டு முன்னே நண்பனை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிற பகைவர்களையெல்லும் அழித்துக் கொண்டே இவன் முன்னோக்கி செல்கின்றான்.
சுற்றி நிற்கும் கூட்டமெல்லாம் இவனுக்கு எதாவது ஆகிவிடுமோ என்று
நிறுத்துக!!நிறுத்துக!! என்று கத்துகின்றன.
அதனையெல்லாம் பொருட்படுத்தாமல்
"கன்றை நோக்கி செல்லுகின்ற தாய்ப்பசுவைப் போல தன்னுடைய தோழனைக் காக்க செல்லுகின்ற இவனுடைய வீரத்தை 
என்னவென்று சொல்லது.

இந்த பாடல் வரிகளைப் பார்க்கும் போது தற்போது நடந்த சம்பவம் ஒன்று கண்முன்னே வந்து போகிறது.
கும்பகோணத்தில் நடந்த தீ விபத்து நாம் அனைவரும் அறிந்ததே.
அதில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி க் கொண்டிருந்த ஒரு சின்னப் பாப்பாவை தூக்க அந்த பாப்பாவின் சித்தப்பா வருகிறார்.
அப்போது அந்தப்பெண் சொல்லுகிறாள்.
"சித்தப்பா என்ன மட்டும் தூக்காதீங்க.என் தோழியும் அங்க அடிபட்டு கிடக்குறா அவளையும் தூக்குங்க"
என்று..
உண்மையிலே அந்த சின்னப்பிள்ளையினுடைய நட்பு போற்றுதற்குரியது தான்.
இன்னும் ஒரு சில இடங்களில் இதுபோன்ற நட்புகள் வாழ்ந்து கொண்டிருப்பதில் மனம் மகிழ்வடைகிறது.
"நல்ல நண்பர்களைத் தேடுவதை விட்டுவிட்டு முதலில் நாம் நல்ல நண்பராய் இருப்போம்".

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

விளம்பரங்கள் வெறுப்பல்ல


         நாம் தொலைக்காட்சிகளில் படம் பார்க்கும் போது விளம்பரங்கள் வரும் எனில், அதை டக்கென்று மாற்றி விடுகிறோம். ஏனெனில் அனைத்து விளம்பரங்களுமே வெறுப்பைத் தான் தருகின்றன என்பது நம் பொதுவான எண்ணம்.

சில விளம்பரங்கள் நமது முன்னேற்றத்தை பறைசாற்றுவதாக அமைகிறது.  பாத்திரம் கழுவும் ஜெல் விளம்பரம்.  இதில் கணவர் டீ வைக்கும் போது பாத்திரம் கருகி விடும். அதை அவர் ஒருவிதமான அன்பு கலந்த பயத்தில் வெளிப்படுத்துவார்.  முன்பெல்லாம் பெண்கள் சமைக்கும் போது மிகவும் கவனத்துடன் சமைப்பார்கள். இல்லையெனில், கணவர் திட்டுவார் என்ற பயமே மேலோங்கி இருக்கும். ஆனால், இன்றைய தலைமுறை எவ்வளவு வளர்ந்திருக்கிறது. சமையல்கட்டு,சமையல் என்பது பெண்களுக்கான ஒன்றே என்று இருந்த சமுதாயம் எவ்வளவு முன்னேறி இருக்கிறது. "வீட்டு வேலைகளை ஆண்,பெண் இருவருமே பகிர்ந்து  கொள்ளலாம். என்றளவுக்கு இந்த சமுதாயம் வளர்ந்துள்ளது.

பெண்களுக்கான அதைத்து அங்கீகாரங்களும் இந்த தாய்திருநாட்டில் வழங்கப்படுகிறது.  சமீப காலத்தில், சவுதி அரேபியாவில் கூட பெண்களுக்கு மகிழுந்து ஓட்ட  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த மாதிரியான விளம்பரங்கள் நமது சமுதாய முன்னேற்றத்தை பறைசாற்றுவதாக அமைகிறது. இன்றைய அவசர காலத்தில் இந்த மாதிரியான விளம்பரங்களை சில நிமிடம் ரசித்துப் பார்த்து நமது முன்னேற்றத்தை கண்டு பெருமையடையுங்கள்.

இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களில் தான் வாழ்க்கை அழகாகும்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

 



 கடந்த சில  மாதங்களாகவே நாம் இந்த வார்த்தையை அதிகம் கேட்கிறோம்  இது என்னை மிகவும் காயப்படுத்தியது.  என்னதான் வாட்ஸ் அப்பில்  நாளை கல்லூரி விடுமுறை என்று ஸ்டேடஸ் வைத்தாலும் மனம் ஒரு விதத்தில் வலிக்கிறது.
        முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களாக இருந்தாலும் சரி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் மறைவாக இருந்தாலும்
 இன்றைய தலைமுறை "தலைவர்கள் இறந்தால் பள்ளி,கல்லூரிக்கு ஒருநாள் விடுமுறை கிடைக்கும் என்று மகிழ்ச்சி அடைவது மிகவும் மன வேதனையை அளிக்கிறது. எதற்காக பள்ளிக்கு செல்கிறோம் என்று தெரியாமலே பள்ளிக்கு செல்கின்றனர் குழந்தைகள். அவர்கள் வீட்டிலிருந்து விளையாடி உறவுகளை தெரிந்து கொள்ளும் வயதில் பள்ளிக்கு அனுப்பிவிடுகிறோம்.இதனால்,பள்ளிக்குழந்தைகளுக்கு  யார் இறந்தால் என்ன எனக்கு  'ஒருநாள் விடுமுறை 'என்ற மனோ நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்களில் மட்டுமல்ல கல்லூரியில் எனது தோழியர் கூட்டம் கூட "நாமெல்லாம் யாரு ஒரு நாள் விடுமுறைக்காக முக்கிய தலைவர்களையே இறக்க சொன்னவர்கள் " என கெத்து காட்டுகிறார்கள். இத்தனை வருடங்களாக நமது கல்வி இதனையா போதித்தது இல்லையே..
        தலைவர்களை இழந்து
              தமிழகமே வாடுகிறது
ஆனால்,
       இந்த மாணவ சமுதாயம் மகிழ்ச்சி  அடைகிறது.  காரணம் "பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை 
இனிமேலாவது,
             வேதனையடையுங்கள்
                   நல்ல தலைவர்களை                   இழந்ததற்காகவும்,  இன்று பள்ளி, கல்லூரிகளிலில் கற்க வேண்டியதை தவற விட்டோம் என்று........ 

வெள்ளமாக மாறிய மழை


               





ஊசி மழையாய்  நீ தூறிய போது உன்னை எண்ணிக்கொண்டே ரசித்தேன்......
உன்னோடு சேர்ந்து விளையாடினேன்
பள்ளியை விட்டு வரும்போது கொட்டும் மழையாய்என் தலையில் கொட்டியபோது நானும் உன்னை கொட்ட நினைத்தேன்...
உன்னோடு சேர்ந்தே வீட்டுக்குச்சென்று அம்மாவிடம் திட்டு வாங்கினேன்...
கனமழையாய் என் தெருவில் நுழைந்த போது வெளியே வரமுடியாமல் குடிசையின் ஓட்டையில் நீ விழுந்ததை நான் வேடிக்கைப்பார்த்தேன்...
ஒருநாள்,
      நீ வெள்ளமாய்வந்தாய் என் வீடே தண்ணீரில் தத்தளித்தது. என் உடைமைகளெல்லாம்  தண்ணீரில் மிதந்தது. மகாலட்சுமி வீட்டிற்கு வந்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம்..  நீ என் வீட்டிற்குள் வந்திருக்கிறாய் என் வீடு முற்றிலும் அழிந்து விட்டது...
இனிமேலாவது,
         என் குடிசை வீடு  
             ஓட்டு வீடாகுமா? என்ற கனவுகளோடு மிதக்கிறேன் என் குடிசை வீட்டில்......

     


அம்மாவுக்காக...


       





பாஞ்சி வயசுல ஏ அப்பாவுக்கு வாக்கப்பட்டதுல இருந்து பதினாறு வயசுல புள்ளை பெத்ததுல இருந்து இன்னைக்கு வரைக்கும் குடும்பத்துக்காகவே வாழ்றியே அம்மா உன்னோட கனவுகளை மறந்திட்டையா? இல்ல மறைச்சிட்டையா?

வாழ்க்கையினா என்னென்னு தெரியாத வயசுல மாமியார்கிட்டையும், நாத்தனார்,நாத்திகள்கிட்டயும் என்னென்ன பாடுபட்டையோ?

அண்ணே சோத்துக்கு அழுவ நா பாலுக்கு அழுவ மாமியார்  துணிதுவைக்கனும்ன்னு அழுவ  நாத்தனார் சோறு போடுங்க அண்ணின்னு கத்த நாத்திகளெல்லாம் ஒருடம்ளர் காபி வச்சித்தாம்மான்னு கேட்க அத்தனை வேலையையும் அசால்டா செஞ்சிப்புட்டு இன்னைக்கு ஏ மவனுக்கு துணிதுவைக்கமுடியலேன்னு ஆதங்கப்படுறியே அம்மா....

குழந்தையில இருந்து ஆளானது வரைக்கும் ஒரு வேலை செய்யவிட்டிருப்பியா அம்மா வேலைக்குப்போய் மாடுமாதிரி உழைச்சு தீபாவளிக்கு போனஸ் கொடுத்தாங்கன்னா எங்களுக்காகவே தங்கத்துல கால் பவுன் தோடு எடுத்து தருவியே அம்மா நாம போட்டு இருக்க தோடுக்கு சின்னதா ஒரு மாட்டல் எடுத்துக்களான்னு ஒரு கணம்கூட யோசிக்கலையா  அம்மா.....

பாத்திரம் கழுவுடின்னு கத்துவ ஆனா பத்து நிமிஷத்துல நீயே கழுவிடுவ
வீட்டைக் கூட்டுடின்னு வெளக்கமாற எடுப்ப ஆனா எங்கையில கொடுக்காம நீயே கூட்டிடுவ  துணி துவைச்சி நாலுவாரம் ஆகுதுடின்னு என்ன தொவக்காம மொத்த துணியையும் நீயே தொவச்சிடுவ சுடசுட தட்டுல சோறு போட்டு கையில கொடுப்ப விக்கும்போது விவேகமா தண்ணி கொடுப்ப
ஒரு நாள்,
 நீ ஊருக்குப் போயிட்ட நீயில்லாத வீட்டுல ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல தெரியுமா அம்மா...

உனக்கு  தா ஆயிரம் கஷ்டம் புள்ளைய காலேஜ்ல சுத்தி விடனும் பைய வெளியில போக டிப்டாப்பா நாலு சட்டை வாங்கனும் அப்பாவுக்கு சர்க்கரை மாத்திரை வாங்கனும்
இதுக்கு நடுவுல,
    உன்னோட கழிஞ்ச சேலைய முந்தானையில இருக்கி முடிச்சி மறைச்சிட்டையா  அம்மா....

வாழ்க்கையில உன்னோட சந்தோஷம்னு எதாவது இருக்கா அம்மா நா முதல் மதிப்பெண் வாங்குனா சந்தோஷப்படுவ, பாப்பா பாஸ் ஆனா சந்தோஷப்படுவ, அண்ணே தலையில எண்ணெய் வச்சிகிட்டா சந்தோஷப்படுவ, அப்பா சிரிச்சா மொத்தமா சந்தோஷப்படுவ இதெல்லாம் நீ இல்லையே அம்மா  நாங்க எல்லாருமே சேர்ந்தா அது நீ தானா அம்மா
அம்மான்னா அது ஒருத்தவங்க இல்ல அது ஒரு குடும்பம்!!

உனக்குன்னு நகை நட்டு வாங்கனும் பட்டுசேலை வாங்கனும்னு  என்னைக்குமே புலம்புனதே இல்ல  புள்ளைய நல்லா படிக்க வைக்கனும் நல்ல இடத்துல பாத்து கல்யாணம் பண்ணி வைக்கனும் பையன ஊரே பாத்து பெருமைப்படனும் இப்படித்தான் புலம்பி இருக்க
          உன்னோட புலம்பலெல்லாம் 
             நிச்சயமா ஒருநாள் நனவாகும் 
                  உன்னோட புள்ளைகளாள.....



முன்னாள் மாணவியாக நான்...!




வாழ்க்கை பயணம் எங்கே தொடங்கும்.?  எங்கே முடியும் என்று யாராலும் சொல்ல முடியாது.. கடைசி வரை எதை தேடுகிறோம்.?  எதற்காக இந்த பயணம்.? என்று கூட தெரியாமல் இருக்கிறோம்..

வாழ்க்கையில் நாம் கற்றுக் கொண்டதை விட நமக்கு கற்பிக்கப்பட்டவை தான் அதிகம். ஒவ்வொரு நபர்களும் ஒவ்வொரு அனுபவம். அனுபவங்களே நம்மை செதுக்குகிறது.

நான் எதை பற்றி எழுதுவது என்று தெரியாமல் தான் எழுத துவங்கினேன்.. இப்பதிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பல நினைவுகளையும் வெளிப்படுத்தும் என்று நம்பிக்கையுடன் எனது தமிழ் உறவுகளோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

கல்லூரி சேர்ந்த முதல் நாள். பல பல கற்பனை கனவுகளோடு உள்நுழையும் சாதரண மாணவி. கல்லூரியில் கிடைத்த ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் உதவியோடு நடைப் பழகும் மாணவி. முதலாமாண்டு படித்து கொண்டிருக்க தமிழ் மீது ஏற்பட்ட ஆர்வம் அதற்கு சரியான உந்துதலாக அவளது ஆசிரியர் துணை நிற்க. தமிழ் தட்டச்சு பயில துவங்குகிறாள். அவளின் ஆர்வம் தமிழ் தட்டச்சு மூலம் வலையுலகிற்கு அறிமுக செய்யப்படுகிறார். அவரின் ஆசிரியரின் உறுதுணையாக இருக்க பல சமூகத் தளங்களில் தனது நிழற்படங்கள் மூலமும் உண்மை முகவரியுடனும் வலம்வர துவங்குகிறார்.

ஒவ்வொரு நாளும் புதுப்புது நண்பர்கள். அனைவரும் அறிவு மற்றும் அனுபவத்தில் சிறந்தவர்கள். தவறுகளை சுட்டிக் காட்டி திருத்தவும் ஒரு பெரும் நட்பு வட்டம் கிடைக்கிறது. பெண்கள் சமூகத் தளங்களில் இருக்க இயலாது என்பதை மாற்றி அமைக்கப்பட்டது அவரின் ஆசிரியர் மூலம் தான்.

இதுவரை 2500 - க்கும் மேற்பட்ட நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் என வலம்வரும் மாணவி. மூன்று முறை வலைப்பதிவர் என்ற ஆர்வத்தை பாராட்டி விருதுகளும் மூன்று கல்லூரிக்கு வலைப்பதிவர் என்ற முறையில் சிறப்பு  விருந்தினராக பங்கேற்றும் தமுஎகச - வில் ஒரு முறை சிறப்பு பேச்சாளராகவும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் மாநில மாணவிகள் ஒருங்கிணைப்பாளராகவும் ஈரோடு வாசகசாலை சிறப்பு வாசகராகவும் என பல இடங்களில் தனித்துவமாக திகழும் அந்த சாதாரண மாணவி இப்போது சாதனை மாணவியாக உங்கள் முன்பு நான் வைசாலி செல்வம்.

கே. எஸ். ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவியான நான் வைசாலி செல்வம் என்ற பெயருடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் இணையத்தில் வலம்வருகிறேன்.இதற்கு காரணமாக இருந்த  எமது கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் என்னை ஊக்குவித்த எமது கல்லூரி பேராசிரியர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகளும் என்னை சகோதரியாகவும் தோழியாகவும் உற்சாகப்படுத்திய எமது சகோதரிகளுக்கும் எனது தமிழ் எழுத்துகளை வாசித்து பிழைகளை சுட்டியும் என்னை வளர்த்து கொண்டிருக்கும் எனது தமிழ் உறவுகளாகிய வலைப்பதிவர் அனைவருக்கும் கனிவான நன்றிகள்.

என்னை பெற்றெடுத்த தாய் தந்தைக்கும் உடன்பிறப்புகளும் நன்றிகள். எல்லாருக்கும் நன்றிகள் சொல்லி விட்டேன். ஆனால் ஒருவருக்கு சொல்லவில்லை. ஆம் என்னை பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக பல முறை அறிமுகப்படுத்தியவர் ஒருவர் இருக்கிறார்.என்னை பெற்றவர்களை விட என்னை பற்றி தெரிந்தவர் அவரே. எனக்கு தெரியாது எனக்குள் என்ன திறமை இருக்கிறது என்று. ஆனால் எனக்குள் இருந்த திறமையை வெளிப்படுத்த அவரால் மட்டுமே முடிந்தது.

எனது வாழ்நாளில் நான் அடைந்த மிகப்பெரிய பொக்கிஷம் தான் அவர். எனது குரு என்பதை விட எனது வெற்றிகளின் தந்தை என்று சொல்வதில் மகிழ்கிறேன். ஆம் அவர் வேறு யாருமில்லை தங்கள் அனைவருக்கும் அறிமுகமானவர். முனைவர் இரா. குணசீலன் வலைப்பதிவராக உங்கள் அனைவருக்கும் அறிமுகமானவர். என்னுடைய செயல்களின் வெற்றிக்கு தந்தை இவரே.

மூன்றாண்டு எனக்கு கிடைத்த அங்கீகாரம்  இவரையே சாரும். இப்பதிவு என்னை பற்றிய தற்பெருமை அல்ல. எமது கல்லூரியின் முன்னாள் மாணவியாக எமது கல்லூரியில் நான் அடைந்த மாற்றங்கள். எமது கல்லூரி என்னை மட்டுமல்ல என்னை போல பல மாணவிகளின் தனித்திறமைகளை கண்டுபிடித்து ஊக்குவிக்கும் இடமாக பார்க்கிறேன் அதனை வெளிப்படுத்தவே இப்பதிவு.

குருவிற்கு  நிகரில்லை குருவின்றி நிறைவில்லை.எமது கல்லூரியே எனது வாழ்க்கையின் முதல் திருப்புமுனை.. 

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

அன்புள்ள அப்பா....

சமீபத்தில் என் அப்பாவிடம் ஏன் அப்பா இவ்ளோ கஷ்டப்பட்டும் என்ன படிக்க வைக்குறீங்க என்று கேட்டேன்.
அதற்கு அவர் நான் தான் வானத்த அன்னாந்து பாத்து பாத்்து விவசாயம் செஞ்சு செஞ்சு ஏமாந்து போய்டேன்.
ஆனா நான் பெத்த புள்ளையும் பையனும் மத்தவங்க அன்னாந்து பாக்குற அளவுக்கு உயரனும்.
அதா சாமி படிக்க வைக்குறேன் என்று சொன்னார்.
இது பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்தது.
அப்துல் கலாம் ஐயாவின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற பட்டிமன்றத்தில் இந்த கருத்தை பதிவு செய்தேன்.
இதை இன்று என் அப்பாவிடம் சொன்னேன்.
அவரை அறியாமல் அவர் கண்களிலிருந்து கண்ணீர் கரைபுரண்டோடியது.
நான் அவர் அருகில் இல்லை இருப்பினும் அதை உணர்ந்தேன்.
நிச்சயம் பிறர் பார்த்து வியக்கும் உயரத்திற்கு சென்று என் தந்தையை பெருமைப் பட வைப்பேன் எனும் உறுதியோடு நிறைவு செய்கிறேன்.

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்

நட்பு




அப்பாவின் முன்னின்று உரையாட ஒருவீரனால் மட்டுமே முடியும். 

அம்மாவின் முன்னின்று உரையாட  சீரியல்களை பார்த்தாலே முடியும்.

அண்ணனிடம் முன்னின்று உரையாட 
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்தாலே முடியும்.

தங்கையிடம் முன்னின்று உரையாட பேஸ்புக்கில் போஸ்ட் பார்த்தாலே முடியும்.

ஆனால், நண்பனிடம் முன்னின்று உரையாட எந்தவித காரணமும் தேவையில்லை உன்வாழ்க்கையின் சுகம் துக்கம் அனைத்தையும் எந்தவித ஒளிவுமறைவின்றி நண்பனிடம் மட்டுமே உன்னால் பகிர்ந்து கொள்ளை முடியும். 

வாழ்க்கை


வாழ்க்கை என்பது புத்தகம் போல்
அதில் முதல் பக்கம் கருவறை
கடைசி பக்கம் கல்லறை
இடையில் உள்ள பக்கங்களை
கண்ணீரால் வாசிக்காதே
புன்னகையால் வாசி
தவிர்க்க முடியாமல் சில இழப்புகள்
வெளிப்படுத்த முடியாமல் சில உண்மைகள்
அனுபவிக்க முடியாமல் சில சந்தோசங்கள்
இவைகள் நிறைந்தது  தான்
வாழ்க்கை,

கவிதையாக்கம் - 
ப.குமுதம், இரண்டாமாண்டு கணிதவியல்

தட்டச்சு - ச.கீர்த்தனா, முதலாமாண்டு கணிதவியல்


புதன், 15 ஆகஸ்ட், 2018

பிறப்பின் வலி


நடந்து கொண்டிருக்கிறது பாலியல் பிரச்சினைகளுக்கெல்லாம் என்னுடைய தீர்வு என்னவென்றால்
இனிமேல் ஒவ்வொரு பெண்ணின் பிரசவ அறைகளிலும் கணவன் அணுமதிக்கப் பட வேண்டும்.அந்தப் பெண் படுகின்ற வேதனை காட்சிப் படுத்தப் பட வேண்டும்.
தன்னுடைய மனைவி இவ்வளவு கஷ்டப்பட்டு தன் பிள்ளையைப் பெற்றிருக்கிறாள் என்பதை அறிந்த எந்த ஆணும் வேறொரு பெண்ணின் வாழ்வை சிதைக்க மாட்டான்.
தன்னுடைய தாய் இவ்வளவு வேதனைகளைத் தாங்கி தன்னை பெற்றிருக்கிறாள் என்பதை அறிந்த எந்த பிள்ளையும் வேறொரு பெண்ணின் வாழ்வை சிதைக்க மாட்டான்.
வெளிநாடுகளில் இருக்கிற மருத்துவமனைகளிலெல்லாம் கணவர்கள் அணுமதிக்கப் படுகிறார்கள்.
தமிழகத்திலும் இதை அமுல்படுத்தினால் பாலியல் பிரச்சனைகள் குறையும்.

பள்ளிக்கூட நாட்கள்

                பள்ளிக்கூட நாட்கள்



             






கிழிஞ்ச மஞ்சப்பையோடு
ஒட்ட சிலேட்டடோடும்
ஒடுங்கிப்போன தட்டோடும்
இன்று யாரும் பள்ளி செல்வதில்லை.


புத்தகங்களை மலை போல
சுமந்து கொண்டு
மனதிலே வீட்டுப்பாடத்தை
எழுதவில்லையே என்ற பயத்தை
சுமந்து கொண்டு வேன் என்று சொல்லப்படும் அந்த நாய் பிடிக்கும்
வண்டியில் அவர்களது பயணம்
தொடங்குகிறது.

அன்று,
மதிய உணவு இடைவேளையில்
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"
என்று குறள் சொல்லி தோழி,காகம்,மைனாவோடு
பகுத்து உண்டதை மனம் மறக்க மறுக்கிறது.

முட்டை சாப்பிடவேண்டும்
என்ற ஆசையில் தான்
வருகைப்பதிவேட்டில் 100/100 கிடைத்தது

தாய்மொழியாம் தமிழில்
ஆசிரியர் பாடம் நடத்தும் வேளைகளில்,
முணுமணு வென்று பேசிய தருணங்கள்
ஆனால்,
 இன்றோ தாய்மொழியில் பேசினால்
அபராதமாம்...
ஆசிரியர் அடித்தால் கூட "அம்மா" என்று  கத்தக்கூடாது. "மம்மி" என்றே கத்த வேண்டும்.
பள்ளிக்கு செல்வதை மாணவர்கள்
நேசிக்க வேண்டும்
வெறுக்க கூடாது.
பள்ளிக்கூடங்கள்
எவ்வாறு சாதிக்க வேண்டும் என்பதை
கற்றுக்கொடுக்கவேண்டும்
எவ்வாறு சம்பாதிக்க வேண்டும்
என்பதை அல்ல......




   



அம்பறாத்தூணி

இன்றைய இளைய சமுதாயத்தை அதிகம் கவர்ந்த பாட்டு இது.
பாக்காத நேரத்தில் பாக்குறதும்.
குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும் எனத் தொடங்கும் பாடல்.என் நட்பு வட்டத்தில் அதிகம் நிலைப்பாட்டில் வைக்கப்பட்ட பாட்டு இது.
சரி முழுமையாகத்தான் கேட்டுப் பார்ப்போமே என கேட்டேன்.இடையில் இருந்த நான்கு வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.அவை
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயர் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
இவை தான் என்னை கவர்ந்த அந்த வரிகள்.
சமீபத்தில் நூலகத்தில் நாஞ்சில் நாடன் அவர்களின் கம்பனின் அம்பறாத்தூணி எனும் நூலை எடுத்தேன்.
திடீரென ஒரு பக்கத்தில் மேற்கண்ட பாடல் வரிகள் இடம் பெற்றிருந்தன.
எனக்கோ அது ஆச்சர்யத்தின் உச்சம்.
அதை படிக்கும் போது தான் தெரிந்தது அது ஒரு குறுந்தொகை பாடல் என்று.
இது நம் சங்க இலக்கியத்தில் இருக்கும் பாடல் என்று தெரிந்ததும் மனதிற்குள் ஒரு பூரிப்பு.
தவறாது இனிமேல் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் படிப்போம்.
நம் தமிழில் இல்லாத கருத்துக்கள் இல்லை என்பதை ஏற்போம்.
நன்றி: இந்த பாடலை இயற்றியவருக்கு.

தாய்மொழி

சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று சொல்வதற்கு பதிலாக happy independence day என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்‌.
ஆங்கிலேயனிடமிருந்து விடுதலை பெற்று ஆங்கிலத்திற்கு அடிமையாகியிருக்கிறோம்.
வருடம் இரண்டு நாள் கொண்டாடுவது சுதந்திரம் அல்ல.
வருடம் முழுவதும் கொண்டாடுவது தான் சுதந்திரம்.

மயில்சாமி அண்ணாதுரை ஏவுகணைக் காதலன்


சந்திராயன் 1 ஆளில்லா விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சமயம்.
600 விஞ்ஞானிகள் கொண்ட குழுவிற்கு நம் மண்ணின் மைந்தன் மயில்சாமி அண்ணாதுரை தலைமை ஏற்றார்.வழிநடத்தினார். திட்ட இயக்குனர் பொறுப்பிலும் இருந்தார்.
வெற்றி அடைந்த சந்திராயன் திட்டத்தை உலகமே கொண்டாடுகிறது.
அந்த நேரத்தில் அனைத்து உதடுகளின் உச்சரிப்பில் மயில்சாமி அண்ணாதுரை எனும் பெயர்.
அப்போது அவர் செய்த செயல் அவர் மீது மேலும் ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.அது என்னவென்றால் அவருடைய இயற்பியல் ஆசிரியரிடம் அவர் பேசும் வார்த்தைகள்.

"வணக்கம்.ஆசிரியர் குண்டுராவ் அவர்களா ?
நான் உங்கள் முன்னாள் மாணவன் பேசுகிறேன்.
என்னை உங்களுக்கு நேரில் பார்த்தால் கூட அடையாளம் தெரியாது.
ஒரு வாரமாக செய்தித்தாள்களில் மயில்சாமி அண்ணாதுரை எனும் பெயர் வருகிறதே....
அது நான் தான் என்றார் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்.
மறுமுனையில் பேராசிரியர் குண்டுராவ் அவர்கள்.
உலகமே பார்த்து வியந்து கொண்டிருக்கிற மயில்சாமி அண்ணாதுரை என் மாணவரா??? என்கிறார் பெரிய ஆச்சரியத்துடன்.

மயில்சாமி அவர்கள் நீங்களும் பெங்களூரில் தான் இருக்கிறீர்கள் என கேள்விப் பட்டேன். நானே உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் என்று கூறினார்.
அதற்கு ஆசிரியர்..
இல்லை சாதனை படைத்திட்ட உங்களை நானே நேரில் வந்து சந்திக்கிறேன் என்று கூறியதற்கு அண்ணாதுரை அவர்கள் "எவ்வளவு சாதனை செய்திருந்தாலும் ஆசிரியர் ஆசிரியர் தான் மாணவன் மாணவன் தான்"  நான் வந்து பார்ப்பது தான் முறை என்று கூறி அவரை நேரில் சென்று சந்தித்து காலில் விழுந்து வாழ்த்து பெற்றார்.இந்த சம்பவத்தை பேராசிரியர் அவர்கள் பாராட்டு விழாவில் பேசும் போது சொல்லி நெகிழ்ந்திருக்கிறார்.
அத்தனை உயரத்திற்கு சென்ற போதும் ஏற்றிவிட்ட ஏணியை மறவாமல் எனக்கு இயற்பியல் என்றாலே பிடிக்காது.அதன் மீது தீீராக்காதல் வரும் அளவிற்கு எனக்கு பாடம் நடத்தியவர் இவர். இந்த திட்டத்திற்கு இயற்பியல் தான் அடிப்படை. இது வெற்றி பெற்றதற்கு இவரும் ஒரு காரணம் என்று சொல்லி பெருமைப் பட்டவர்.
தமிழ்மொழியை தாய்மொழியாய் கொண்டவர்கள் பாடமொழியாய் படித்தவர்கள் தோற்றுப் போக மாட்டார்கள் என்பதற்கு இவர் ஒரு வாழும் உதாரணம்.
ஆசிரியரை மதிக்கும் பண்பாளரை!
தாய்மொழித் தமிழால் உயர்ந்தவரை!
பல மேடைகளில் தமிழ்மொழியைத் தாங்கி பிடித்தவரை!
விஞ்ஞானத்தை வளர்க்கும் விருட்சத்தை!
செய்தித்தாள்களிலும் புத்தகங்களிலுமே கண்டுகளித்து தன்னம்பிக்கை தந்ந இவரை நேரில் பார்க்க முடியவில்லையே எனும் ஏக்கம் தீர்ந்து போகப் போகிறது.
இன்னும் நிறைய தாக்கம் பெறப் போகிறோம் இவர் பேச்சைக் கேட்டு.
ஆம்.இவர் எங்கள் கல்லூரிக்கு வருகை தரப் போகிறார் எனும் பெருமையோடு என் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

ஆலும் வேலும்...

"

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று பழமொழி உண்டு

நாலும் என்பது நாலடியார், இரண்டும் என்பது திருக்குறள்

செ.இந்துஜா இரண்டாம் ஆண்டு வணிகம் &கணினி பயன்பாட்டியல்

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

நட்பு

வானையும் பூமியையும் இணைக்கும்
மழை என்னும் சங்கிலியே நட்பு
கடலின் சிறப்பை சொல்ல காற்றில்
கூட கலந்திருக்கும் உப்பே நட்பு
ஒரு மனிதனை பெற்றெடுப்பது தாய்
தோள் தட்டி வளர்ப்பது தந்தை
உயிரையே கொடுத்து உயர்த்துவது நட்பு
ரோஜா மலர்களுக்கு முட்கள் தான் நண்பன்
ஒருவன் மலர்கின்ற ரோஜா என்றால் 
அவன் பாதுகாத்து மலரவைப்பது நட்பு
தாய் கடவுளுக்கு நிகரான வரமாம் 
துணை கடவுள் கொடுத்த வரமாம்
நண்பன் கடவுளுக்கே கிடைக்காத வரமாம்
நட்பை மதித்துப் புரிந்துகொண்வனுக்கு
அது வரமோ- ஆனால்
மதிக்காது மதியிழந்தவனுக்கு அது சாபமே!

ச.கீர்த்தனா
முதலமாண்டு இளங்கலை கணிதம்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு