இந்த பகுதியானது தமிழக அரசின் 1972 வருட வனவிலங்கு
பாதுகாப்புச் சட்டம் பிரிவு 26(1)ன் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அரசானை
எண் 44 நாள் 29.2.2000ன் படி அரசிதழில் அறிவிக்கப்பட்டு 22.03.2000 அன்று சரணாலயமாக
உருவெடுத்தது.
வடமுகம் வெள்ளோட்டில் அமைந்துள்ள பெரியகுளம் ஏரியில்
(புல எண் 584) 75.935 ஹெக்டேர் பரப்பும், ஓடை புறம்போக்கில் அமைந்துள்ள (புல எண்
503) 1.250 ஹெக்டேர் பரப்பும் சேர்த்து மொத்தம் 77.185 ஹெக்டேரில் இந்த பறவைகள் சரணாலயம்
அமைந்துள்ளது.
இந்த பகுதி அதிக அளவில் புலம் பெயர்ந்து வரும்
பறவைகளுக்கும், குடியிருக்கும் பறவைகளுக்கும் தொடர்ந்து ஒரு சிறந்த புகழிடமாக இருந்து
வருவதால் இங்கு வருகை புரியும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
சரணாலதயத்தை பார்வையிட
உகந்த காலம்
ஜூலை முதல் செப்டம்பர் வரை பறவைகள் கூடுகட்டி
இனப்பெருக்கம் செய்வதை காண உகந்த மாதங்கள். அக்டோபர் முதல் பிப்ரவரி வரையான மாதங்கள்
அதிக அளவில் புலம் பெயர்ந்து வருகை புரியும் பறவைகளை காண்பதற்கு உகந்த மாதங்கள். மார்ச்
முதல் ஜூன் மாதங்கள் இங்கு குடியிருக்கும் பறவைகளின் இனப்பெருக்கத்தை காண உகந்த மாதங்கள்.
பறவைகள்
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் தங்கி வாழும்
பறவைகள் தவிர இடம் பெயர்ந்து (வலசை) வாழும் பறவைகளும் பெரிய அளவில் வருகை புரிகின்றன.
இவற்றில் சுமார் 25 வகையான நீர் பறவை இனங்கள் அடங்கியது. இடம் பெயரும் (வலசை) பறவைகள்
வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும் நேரத்தில் சரணாலம்
வரத் தொடங்கும். சரணாலத்தில் உள்ள குளம்,
சதுப்புநிலம், மரங்கள் மற்றும் புகழிடத்தின்
அருகில் உள்ள விவசாய வயல்வெளிகளில் பறவைகளுக்கு தேவையான அளவு மீன்கள், பூச்சிகள்,
மற்ற உணவுப்பொருட்கள் கிடைப்பதற்கும், பறவைகள் ஓய்வு எடுப்பதற்கும், கூடுகட்டி முட்டைகள்
இடுவதற்கும் உகந்த வாழ்விடமாக திகழ்கிறது. சரணாலயத்தில் தங்கி வாழும் பறவை இனங்களுக்கு
தேவையான மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் இக்குளத்தில் ஏராளமாக உள்ளன.
சமீபத்திய கணக்கெடுப்பின்படி 150 வகைக்கும் மேற்பட்ட
நிலம் சார்ந்த மற்றும் நீர்வாழ் பறவையினங்களை உள்ளடக்கி மொத்தம் 27,000 க்கும் மேற்பட்ட
பறவைகள் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் உண்ணிக்கொக்கு, சின்னக்கொக்கு மற்றும் சிறிய
நீர்காகம் போன்ற வகைகள் அதிகமாக இருக்கின்றன.