நீ என்னைச் சந்தித்தாய்
காரும் பாரும் நிறைந்த பாரிலே
ரசாயனக் கலவை நீர் இட்ட முட்டைகள் பறக்க
பாதையின் பள்ளத்தில் இருந்த நீரோ
பணக்காரப் பாரியின் அன்பளிப்பாய்
பாமர மக்கள் படையின் மீது தெறிக்க
கொடைகாத்த வள்ளல் வாழ்ந்த
நம் பாரின் மீது பற்றுடைய நான்
பாலிதின் கவரிலான குடை கொண்டு
பாதையில் சென்ற பள்ளிக் குழந்தையைக் காக்க
நீ என்னைப் பார்க்க
உன் பருவத்தின் உணர்ச்சி உனைச் சரிக்க
பக்கபலமாய் உன் பார்வை
என் உருவத்தினைப் பதிவிறக்கியது
4-ஜி பாஸ்ட் நெட் ஒர்க் போல
மறுபிறப்பு மானுடத்தின் சிறப்பன்றோ
நீ என்னை மீண்டும் சந்தித்தாய்
நான் உனைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற
ஒருநொடிக்காக ஒருத்தவம் நீயிருக்க
உன் பின்னால் நீ பார்க்கவில்லையே
இயந்திரமாய் வேலைசெய்த வாகன ஓட்டுனர்
ஒரு நொடி இமைக்கு இரக்கம் காட்ட
உன் இரத்தம் ஈரம் காய்ந்த
இயந்திர உலகிற்கு நீரூற்றியது
இப்போது
நான் திரும்பிப் பார்க்கிறேன் உன்னை அல்ல
முன்ஜென்மத்தில் வண்டியிழுத்த மாடு
மஞ்சள் நிற மாறு வேடமிட்டு
வாகனமாய் மறுபிறப்பெடுத்துத்
தன்னை மறந்தவர்களுக்குப் பாடம் புகட்ட
உன்னைப் பலியிட்டு
மரணத்தால் தன்னை நினைவூட்டியது
இன்றாவது திரும்பிப் பார் மானிடா
அழிந்து கொண்டிருப்பது
மாடுகளின் இனம் அல்ல
நன்றி மறந்த மானுடனின் மானம்
சிந்தித்துச் செயல்படுவோம் - நம்
சந்ததியருக்கு வழி கொடுப்போம்
பவித்ரா வெங்கடேசன்,
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்.