வியாழன், 16 ஆகஸ்ட், 2018

நட்பு




அப்பாவின் முன்னின்று உரையாட ஒருவீரனால் மட்டுமே முடியும். 

அம்மாவின் முன்னின்று உரையாட  சீரியல்களை பார்த்தாலே முடியும்.

அண்ணனிடம் முன்னின்று உரையாட 
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்தாலே முடியும்.

தங்கையிடம் முன்னின்று உரையாட பேஸ்புக்கில் போஸ்ட் பார்த்தாலே முடியும்.

ஆனால், நண்பனிடம் முன்னின்று உரையாட எந்தவித காரணமும் தேவையில்லை உன்வாழ்க்கையின் சுகம் துக்கம் அனைத்தையும் எந்தவித ஒளிவுமறைவின்றி நண்பனிடம் மட்டுமே உன்னால் பகிர்ந்து கொள்ளை முடியும். 

வாழ்க்கை


வாழ்க்கை என்பது புத்தகம் போல்
அதில் முதல் பக்கம் கருவறை
கடைசி பக்கம் கல்லறை
இடையில் உள்ள பக்கங்களை
கண்ணீரால் வாசிக்காதே
புன்னகையால் வாசி
தவிர்க்க முடியாமல் சில இழப்புகள்
வெளிப்படுத்த முடியாமல் சில உண்மைகள்
அனுபவிக்க முடியாமல் சில சந்தோசங்கள்
இவைகள் நிறைந்தது  தான்
வாழ்க்கை,

கவிதையாக்கம் - 
ப.குமுதம், இரண்டாமாண்டு கணிதவியல்

தட்டச்சு - ச.கீர்த்தனா, முதலாமாண்டு கணிதவியல்


புதன், 15 ஆகஸ்ட், 2018

பிறப்பின் வலி


நடந்து கொண்டிருக்கிறது பாலியல் பிரச்சினைகளுக்கெல்லாம் என்னுடைய தீர்வு என்னவென்றால்
இனிமேல் ஒவ்வொரு பெண்ணின் பிரசவ அறைகளிலும் கணவன் அணுமதிக்கப் பட வேண்டும்.அந்தப் பெண் படுகின்ற வேதனை காட்சிப் படுத்தப் பட வேண்டும்.
தன்னுடைய மனைவி இவ்வளவு கஷ்டப்பட்டு தன் பிள்ளையைப் பெற்றிருக்கிறாள் என்பதை அறிந்த எந்த ஆணும் வேறொரு பெண்ணின் வாழ்வை சிதைக்க மாட்டான்.
தன்னுடைய தாய் இவ்வளவு வேதனைகளைத் தாங்கி தன்னை பெற்றிருக்கிறாள் என்பதை அறிந்த எந்த பிள்ளையும் வேறொரு பெண்ணின் வாழ்வை சிதைக்க மாட்டான்.
வெளிநாடுகளில் இருக்கிற மருத்துவமனைகளிலெல்லாம் கணவர்கள் அணுமதிக்கப் படுகிறார்கள்.
தமிழகத்திலும் இதை அமுல்படுத்தினால் பாலியல் பிரச்சனைகள் குறையும்.

பள்ளிக்கூட நாட்கள்

                பள்ளிக்கூட நாட்கள்



             






கிழிஞ்ச மஞ்சப்பையோடு
ஒட்ட சிலேட்டடோடும்
ஒடுங்கிப்போன தட்டோடும்
இன்று யாரும் பள்ளி செல்வதில்லை.


புத்தகங்களை மலை போல
சுமந்து கொண்டு
மனதிலே வீட்டுப்பாடத்தை
எழுதவில்லையே என்ற பயத்தை
சுமந்து கொண்டு வேன் என்று சொல்லப்படும் அந்த நாய் பிடிக்கும்
வண்டியில் அவர்களது பயணம்
தொடங்குகிறது.

அன்று,
மதிய உணவு இடைவேளையில்
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"
என்று குறள் சொல்லி தோழி,காகம்,மைனாவோடு
பகுத்து உண்டதை மனம் மறக்க மறுக்கிறது.

முட்டை சாப்பிடவேண்டும்
என்ற ஆசையில் தான்
வருகைப்பதிவேட்டில் 100/100 கிடைத்தது

தாய்மொழியாம் தமிழில்
ஆசிரியர் பாடம் நடத்தும் வேளைகளில்,
முணுமணு வென்று பேசிய தருணங்கள்
ஆனால்,
 இன்றோ தாய்மொழியில் பேசினால்
அபராதமாம்...
ஆசிரியர் அடித்தால் கூட "அம்மா" என்று  கத்தக்கூடாது. "மம்மி" என்றே கத்த வேண்டும்.
பள்ளிக்கு செல்வதை மாணவர்கள்
நேசிக்க வேண்டும்
வெறுக்க கூடாது.
பள்ளிக்கூடங்கள்
எவ்வாறு சாதிக்க வேண்டும் என்பதை
கற்றுக்கொடுக்கவேண்டும்
எவ்வாறு சம்பாதிக்க வேண்டும்
என்பதை அல்ல......




   



அம்பறாத்தூணி

இன்றைய இளைய சமுதாயத்தை அதிகம் கவர்ந்த பாட்டு இது.
பாக்காத நேரத்தில் பாக்குறதும்.
குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும் எனத் தொடங்கும் பாடல்.என் நட்பு வட்டத்தில் அதிகம் நிலைப்பாட்டில் வைக்கப்பட்ட பாட்டு இது.
சரி முழுமையாகத்தான் கேட்டுப் பார்ப்போமே என கேட்டேன்.இடையில் இருந்த நான்கு வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.அவை
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயர் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
இவை தான் என்னை கவர்ந்த அந்த வரிகள்.
சமீபத்தில் நூலகத்தில் நாஞ்சில் நாடன் அவர்களின் கம்பனின் அம்பறாத்தூணி எனும் நூலை எடுத்தேன்.
திடீரென ஒரு பக்கத்தில் மேற்கண்ட பாடல் வரிகள் இடம் பெற்றிருந்தன.
எனக்கோ அது ஆச்சர்யத்தின் உச்சம்.
அதை படிக்கும் போது தான் தெரிந்தது அது ஒரு குறுந்தொகை பாடல் என்று.
இது நம் சங்க இலக்கியத்தில் இருக்கும் பாடல் என்று தெரிந்ததும் மனதிற்குள் ஒரு பூரிப்பு.
தவறாது இனிமேல் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் படிப்போம்.
நம் தமிழில் இல்லாத கருத்துக்கள் இல்லை என்பதை ஏற்போம்.
நன்றி: இந்த பாடலை இயற்றியவருக்கு.

தாய்மொழி

சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று சொல்வதற்கு பதிலாக happy independence day என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்‌.
ஆங்கிலேயனிடமிருந்து விடுதலை பெற்று ஆங்கிலத்திற்கு அடிமையாகியிருக்கிறோம்.
வருடம் இரண்டு நாள் கொண்டாடுவது சுதந்திரம் அல்ல.
வருடம் முழுவதும் கொண்டாடுவது தான் சுதந்திரம்.

மயில்சாமி அண்ணாதுரை ஏவுகணைக் காதலன்


சந்திராயன் 1 ஆளில்லா விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சமயம்.
600 விஞ்ஞானிகள் கொண்ட குழுவிற்கு நம் மண்ணின் மைந்தன் மயில்சாமி அண்ணாதுரை தலைமை ஏற்றார்.வழிநடத்தினார். திட்ட இயக்குனர் பொறுப்பிலும் இருந்தார்.
வெற்றி அடைந்த சந்திராயன் திட்டத்தை உலகமே கொண்டாடுகிறது.
அந்த நேரத்தில் அனைத்து உதடுகளின் உச்சரிப்பில் மயில்சாமி அண்ணாதுரை எனும் பெயர்.
அப்போது அவர் செய்த செயல் அவர் மீது மேலும் ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.அது என்னவென்றால் அவருடைய இயற்பியல் ஆசிரியரிடம் அவர் பேசும் வார்த்தைகள்.

"வணக்கம்.ஆசிரியர் குண்டுராவ் அவர்களா ?
நான் உங்கள் முன்னாள் மாணவன் பேசுகிறேன்.
என்னை உங்களுக்கு நேரில் பார்த்தால் கூட அடையாளம் தெரியாது.
ஒரு வாரமாக செய்தித்தாள்களில் மயில்சாமி அண்ணாதுரை எனும் பெயர் வருகிறதே....
அது நான் தான் என்றார் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்.
மறுமுனையில் பேராசிரியர் குண்டுராவ் அவர்கள்.
உலகமே பார்த்து வியந்து கொண்டிருக்கிற மயில்சாமி அண்ணாதுரை என் மாணவரா??? என்கிறார் பெரிய ஆச்சரியத்துடன்.

மயில்சாமி அவர்கள் நீங்களும் பெங்களூரில் தான் இருக்கிறீர்கள் என கேள்விப் பட்டேன். நானே உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் என்று கூறினார்.
அதற்கு ஆசிரியர்..
இல்லை சாதனை படைத்திட்ட உங்களை நானே நேரில் வந்து சந்திக்கிறேன் என்று கூறியதற்கு அண்ணாதுரை அவர்கள் "எவ்வளவு சாதனை செய்திருந்தாலும் ஆசிரியர் ஆசிரியர் தான் மாணவன் மாணவன் தான்"  நான் வந்து பார்ப்பது தான் முறை என்று கூறி அவரை நேரில் சென்று சந்தித்து காலில் விழுந்து வாழ்த்து பெற்றார்.இந்த சம்பவத்தை பேராசிரியர் அவர்கள் பாராட்டு விழாவில் பேசும் போது சொல்லி நெகிழ்ந்திருக்கிறார்.
அத்தனை உயரத்திற்கு சென்ற போதும் ஏற்றிவிட்ட ஏணியை மறவாமல் எனக்கு இயற்பியல் என்றாலே பிடிக்காது.அதன் மீது தீீராக்காதல் வரும் அளவிற்கு எனக்கு பாடம் நடத்தியவர் இவர். இந்த திட்டத்திற்கு இயற்பியல் தான் அடிப்படை. இது வெற்றி பெற்றதற்கு இவரும் ஒரு காரணம் என்று சொல்லி பெருமைப் பட்டவர்.
தமிழ்மொழியை தாய்மொழியாய் கொண்டவர்கள் பாடமொழியாய் படித்தவர்கள் தோற்றுப் போக மாட்டார்கள் என்பதற்கு இவர் ஒரு வாழும் உதாரணம்.
ஆசிரியரை மதிக்கும் பண்பாளரை!
தாய்மொழித் தமிழால் உயர்ந்தவரை!
பல மேடைகளில் தமிழ்மொழியைத் தாங்கி பிடித்தவரை!
விஞ்ஞானத்தை வளர்க்கும் விருட்சத்தை!
செய்தித்தாள்களிலும் புத்தகங்களிலுமே கண்டுகளித்து தன்னம்பிக்கை தந்ந இவரை நேரில் பார்க்க முடியவில்லையே எனும் ஏக்கம் தீர்ந்து போகப் போகிறது.
இன்னும் நிறைய தாக்கம் பெறப் போகிறோம் இவர் பேச்சைக் கேட்டு.
ஆம்.இவர் எங்கள் கல்லூரிக்கு வருகை தரப் போகிறார் எனும் பெருமையோடு என் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

ஆலும் வேலும்...

"

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று பழமொழி உண்டு

நாலும் என்பது நாலடியார், இரண்டும் என்பது திருக்குறள்

செ.இந்துஜா இரண்டாம் ஆண்டு வணிகம் &கணினி பயன்பாட்டியல்

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

நட்பு

வானையும் பூமியையும் இணைக்கும்
மழை என்னும் சங்கிலியே நட்பு
கடலின் சிறப்பை சொல்ல காற்றில்
கூட கலந்திருக்கும் உப்பே நட்பு
ஒரு மனிதனை பெற்றெடுப்பது தாய்
தோள் தட்டி வளர்ப்பது தந்தை
உயிரையே கொடுத்து உயர்த்துவது நட்பு
ரோஜா மலர்களுக்கு முட்கள் தான் நண்பன்
ஒருவன் மலர்கின்ற ரோஜா என்றால் 
அவன் பாதுகாத்து மலரவைப்பது நட்பு
தாய் கடவுளுக்கு நிகரான வரமாம் 
துணை கடவுள் கொடுத்த வரமாம்
நண்பன் கடவுளுக்கே கிடைக்காத வரமாம்
நட்பை மதித்துப் புரிந்துகொண்வனுக்கு
அது வரமோ- ஆனால்
மதிக்காது மதியிழந்தவனுக்கு அது சாபமே!

ச.கீர்த்தனா
முதலமாண்டு இளங்கலை கணிதம்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு

திங்கள், 21 மே, 2018

நீண்ட நாட்களுக்கு பிறகு...



தென்றல் காற்று காதுகளை வருடிக் கொண்டும்..
மழைச்சாரல் உடலை நனைத்துக் கொண்டும்..
எனது உதடுகளோ மெல்லிசை வரிகளை முணுமுணுக்கிறது..
கைகளோ தாளம் இசைக்க கால்களோ துள்ளிக் குதிக்கின்றன..
மிதந்து வரும் மண்வாசனையில் உள்ளம் தொலைந்து போகிறது..
போர்வைக்குள் மறைந்து மறைந்து வெளியில் எட்டிப் பார்க்கிறது உடல்..
மரங்களை வெட்டியதால் கோவம் கொண்டு பொழிகிறதா.?
இல்லை ஏழை விவசாயிகள் சிரிக்கட்டும் என்று பொழிகிறதா.?
நாட்டில் நிலவும் அநியாயத்தை கண்டு அழுகிறதா.?
நீ வந்தாலும் அவஸ்தை தான்...
வராவிட்டாலும் அவஸ்தை தான்...
இயற்கையை செயற்கையால் மறைக்க இயலுமா..?
எவ்வளவுதான் தொழில்நுட்ப வளர்ச்சி கண்டாலும்
குளியலறையில்  செயற்கை ஷவரில் குளிப்பதை விட
இயற்கையாக அமைந்த ஷவரில் குளிக்கவே விரும்புகிறது..

என்ன சொல்வது என்று தெரியாமல்  எனக்கு எட்டிய வார்த்தைகளை கோர்த்து  எழுதிவிட்டேன். . மழையில் நனைந்த படி எனது எழுத்துக்களும் நனைக்கிறது..

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

யார் குற்றவாளி..?



உன்னை பெற்றவளும் உன் உடன் பிறந்தவளும் பெண் தானே அவர்களிடம் யாரேனும் இப்படி செய்தால் ஒப்புக் கொள்வாயா.?

நான்கு சுவர்களின் நடுவில் நடக்கும் இரகசியமான புனிதமான கலவியை என்றைக்கு நான்கு திரைகள் போட்டு கூத்தாடிகளும் ஊடகங்களும் திரையிட ஆரம்பித்தோ அன்றே அந்த புனிதம் தோல்வி அடைந்தது...

மேலும் பாலியல் கல்வியை வழங்க தவறிய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் கவனக் குறைவும் இதற்கு ஒரு காரணம் தான்..

பெண்களை தசைகளாவும்  ஆண்களை தவறாகவும் சித்தரித்த ஊடகமே பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகளுக்கு மற்றொரு காரணம்..

விருப்பத்துடன் தொடுவதால் ஒரு பெண் தாயாக மாறுகிறாள்.. விருப்பமின்றி தொடுவதால் ஒரு பெண் விலைமகள் ஆகிறாள்.. வற்புறுத்தி தொடுவதால் ஒரு பெண் கற்பை மட்டுமின்றி உயிரையே இழக்கிறாள்...

பாரதி காண விரும்பிய புதுமை பெண்ணாக வெளி வர நினைக்கும் பெண்களுக்கு இவைகளை காணும் போது அச்சம் மட்டுமே வெளி வருகிறது.. யாருடைய பிழை.? காதலுக்கும் காமத்துக்கும் வேறுபாடு தெரியவில்லையா.? இல்லை பெண்மைக்கு பாதுகாப்பு இல்லையா.?

போதும் கலாச்சாரத்தை மாற்றியதற்கு தண்டனையாக கருதுகிறேன்.. ஆடை குறைந்தது ஆண்மை பெருகியது பெண்மையை அழிந்தது.. போதும் இனியாவது விழித்துக் கொள் தமிழினமே... மேலை நாட்டவர்கள் கற்புடனும் உயிருடனும் இருக்கிறார்கள்..

நமது நிலை.? நமது நிகழ்காலம்.? நமது அடுத்த தலைமுறை.? இன்னும் அப் டேட் என்று சொல்லியது போதும்.. தந்தை களுக்கு ஒரு வேண்டுகோள் தங்களின்  மனைவி மற்றும் குழந்தைகள்  ஆகியோரின் ஆடையிலும் கலாச்சாரத்திலும் கவனமாக இருங்கள்.

டைட் லெக்கின்ஸ் டாப்ஸ் ஜீன்ஸ் மிடி என்று போட்டது போதும்.. உடலை மறைக்கவே ஆடை.. உடலை அழகுப் படுத்த ஆடை இல்லை..

ஆதங்கத்துடன் வைசாலி செல்வம்..

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

காமத்தோடு பெண்ணை நெருங்கும் ஆண்களுக்கு...




முகநூலில் படித்ததில் மிகவும் சிந்திக்க வைத்த பதிவு..
ஆசிரியர் : சுரேஷ் சுவி.

தாலி கட்டிய அன்றிரவோ இல்லை
மனதால் இணைந்த அந்த நிமிடங்களிலோ
அப்படி ஒரு ஆத்மார்த்தமான அரவணைப்பு
ஆடை கலைப்பு என
சுகமாக அரங்கேறும்
பல நிகழ்வுகள்

உனக்கு எப்படியோ தெரியவில்லை
எனக்கு மிகுந்த வலி இருப்பினும்
சுகமாக அனுபவித்தேன்

அன்றிலிருந்து
நிகழும் நிகழ்வுகளை அடுக்குகின்றேன் பார்

அதிகாலை எழுந்து
குளித்து சமைத்து
முத்தத்தோடு உனக்கு
உணவை கொடுத்து அனுப்பிய பின்பு
துணி துவைத்து
வீடு சுத்தம் செய்து
ஆடைகள் சமன் செய்து
அழகாக மடித்து வைத்து
உன் அம்மாவுக்கு இல்லை நம் அம்மாவுக்கு
பணிவிடை செய்து
மகனையும் மகளையும் பாடசாலை
அனுப்பி வைத்து
மறுபடியும் சமைத்து
நமது பிள்ளைகளை
பாசத்தோடும் கண்டிப்போடும் கண்காணித்து
ஓடிக்கொண்டே இருக்கிறேன் நான்

இன்னும் ஒன்று
சொல்கிறேன் கேள்

முதல் முறை கூடலின் போது
ஒரு வலி உணர்ந்தேனே
அதை விடவும் ரணம் என்றார்கள்
மகப்பேறு
பயந்து நடுங்கி நகர்ந்து கொண்டிருந்தேன்
பெருமையோடு நம் பிள்ளையை
வயிற்றில் சுமந்து
பெறுமாதம் வந்தவுடன் சொன்னார்கள்
குழந்தை வலம் மாறியதால்
வயிற்றை வெட்டி தான் எடுக்க வேண்டும்
என்று

இப்பொழுது
சொல்கிறேன் கேளுங்கள்

ஆடை சற்று விலகியவுடன்
எட்டி எட்டி பார்ப்பீர்களே
மறைவான பகுதி தெரிகிறதா என்று
முழுதாக உரித்து சுவையாக சுவைத்து
சூட்டைத் தணிப்பீர்களே
அப்போதெல்லாம் காம விருந்தாக
தெரிந்தவளை இப்போது பாருங்கள்

நன்றாக பாருங்கள்
விழிகளை விழித்துப் பாருங்கள்

நீங்கள் அடைய துடிக்கும்
மறைவான பகுதிக்கு மேல்
சதையை வெட்டி தைத்துள்ளார்களே
இதை நன்றாக பாருங்கள்

என்னை வெட்டியேனும்
என் குழந்தையை பத்திரமாக
வெளியில் எடுங்கள் என்று
ஒரு பெண் சொல்கிறாளே
உங்களை வெட்ட நீங்கள் சம்மதிப்பீர்களா?

இச்சை கொண்டு
நோக்கும் ஆண்கள்
இதை நன்றாக பார்த்து
பிறிதொரு பெண்ணை நோக்குங்கள்
கண்டிப்பாக காமம் கலக்காது
உங்கள் கண்களில்
தாய்மையின் மகத்துவம்
மட்டுமே தென்படும்
என்பேன் நான்!!

கூடலின் வலி
மகப்பேறின் வலி
வயிற்றை வெட்டித்
தைத்ததன் வலி
இவையெல்லாம்
மறந்து போகும்
இந்த மழலையின் முகம் பார்க்கையில்

ஒவ்வொரு பெண்ணும்
ஒவ்வொரு அதிசயம்....!!!