ஞாயிறு, 2 டிசம்பர், 2018

சாதிகள் வேண்டாம்

இந்த சமூதாயம்

சலவைத் தொழிலாளியின் உழைப்பை ஏற்றுக்கொள்கிறது.
ஆனால்
அந்த சலவைத் தொழிலாளியை ஏற்றுக் கொள்வதில்லை.

இந்த சமுதாயம்
முடிவெட்டுபவரினுடைய உழைப்பை ஏற்றுக் கொள்கிறது.
ஆனால்
முடிவெட்டுபவரை ஏற்றுக் கொள்வதில்லை.

இப்படித்தான்
ஒவ்வொரு சாதியை சார்ந்தவர்களின் உழைப்பை மட்டும் ஏற்றுக் கொண்டு விட்டு
மனிதர்களை ஒதுக்கி வைக்கிற கேடு கெட்ட சமுதாயம் இது.

சாதியின் பெயரால் எத்தனை காதல்கள் முளைக்கையிலே கிள்ளியெறியப் படுகிறது.

வேறு சாதியை சார்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் கொலை செய்து விட்டு அதற்கும் பெயர் வைக்கிறார்கள் ஆணவக்கொலை என்று.

இந்த உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் படைத்தவர் பிரம்மன் என்றால்
பிரம்மனின் சாதி தானே நாம் அனைவரும்.

இந்த உலகம் ஆதாம் ஏவாலின் வழி தோன்றியது என்றால் நாம் அனைவரும் ஆதாம் ஏவாலின் சாதி தானே.

எங்கிருந்து வந்தது இத்தனை சாதிகள்...

ராவணனின் ஆட்சியில் கூட மக்கள் ஓரளவு சமமாய் நடத்தப்பட்டனர்.

ராமனின் ஆட்சியே தொழில் அடிப்படையில் மக்களை பிரித்தனர்.
அன்று தொழில் சாதியாய் மாறியது.
இன்று சாதி தொழிலாய் மாறியிருக்கிறது.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று கரும்பலகையில் எழுதி சொல்லிக் கொடுத்து விட்டு
சாதிச் சான்றிதழ் எங்கே என்று கேட்கின்ற சமூகத்தில் வாழ்கிறோம்.


சாதிகளை கடந்தும் இன்று மனிதர்கள் சாதித்து கொண்டிருக்கிறார்கள்.

இவர் தொட்டால் தீட்டு
பார்த்தால் தீட்டு
படித்தால் தீட்டு என்றார்கள்.

அப்படிப்பட்ட அம்பேத்கர் தான் அரசியலமைப்பு சாசனத்தையே தீட்டினார்.

யாருடைய கை படக்கூடாது என்று நினைத்தார்களோ அவருடைய கை பட்டதனால் தான் வைகையே சுத்தமானது.

சாதனைக்கு பின் சில நேரங்களில் சாதி மறைந்து விடுகிறது.

 இளைஞர்களுடைய நட்பு சில சமயங்களில் சாதியை எதிர்க்கிறது.
சில சமயங்களில் எரிக்கிறது.

வாக்கு செலுத்தும் போது பயன்படாத சாதி
வாழ்வதற்கு மட்டும் பயன்படுகிறது.

 ஒன்றை மட்டும் நாம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் சாதிக்காக பிறந்தவர்கள் அல்ல.
சாதிக்கப் பிறந்தவர்கள்.

 இந்த பதிவை நான் எழுதுவதற்க்குக் காரணம்.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் ஒரு வசனம்.

நீங்க நீங்களா இருக்குற வரையும் நாங்க நாயா இருக்க வேண்டியது தான்.

இந்த வசனம் தான்.
மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக