ஞாயிறு, 30 டிசம்பர், 2018

‘10 திருக்குறள் எழுதினால் அபராதம் இல்லை’


பெரம்பலூர்: பெரம்பலூரில்  வாகன தணிக்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் ஹெல்மெட் அணியாத மாணவர்களுக்கு 10 திருக்குறளை எழுத கூறி வினோததண்டனை அளித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக  பரவி வருகிறது. பெரம்பலூர் போக்குவரத்து காவல்துறையில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வருபவர் நாவுக்கரசர். இவர் நேற்று பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் வாகன தணிக்கையில் இருந்தார். அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்த  நான்கைந்து இளைஞர்களை மடக்கினார். அவர்களிடம், ‘‘ஏன் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டுகிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்’’ என கேட்டார். அவர்கள் நாங்கள் பள்ளியில் படிக்கிறோம், கல்லூரியில்  படிக்கிறோம் என்ற பதில்களைத் தெரிவித்துள்ளனர்.

உடனே அவர்களிடம், ‘‘நீங்கள் மாணவர்கள் என்றால் அபராதம் செலுத்தவேண்டாம். ஆளுக்குப் பத்து திருக்குறளை எழுதிகாட்டிவிட்டு செல்லுங்கள்’’ என்று இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார். இதற்கு, தங்களுக்குத் தெரிந்த  திருக்குறளை எழுதிக்கொடுத்தனர். அதில் சிலர் மற்ற மாணவர்கள் எழுதியதைக் காப்பியடித்தும் எழுதினர். மாணவர்கள் எழுதிய திருக்குறகளை வாங்கிப்பார்த்த இன்ஸ்பெக்டர் காப்பியடித்தீர்களா எனக்கேட்டு சிரிக்கவும்,  மாணவர்கள் பதற்றம் தணிந்தனர்.பிறகு அவர்களிடம் பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள், லைசென்ஸ் வாங்கிக்கொண்டு பைக்கில் செல்லுங்கள், பைக்கில் பெட்ரோல் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுச் செல்வது போல், ஹெல்மெட்  இருக்கிறதா, லைசென்ஸ் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு செல்லுங்கள், நீங்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை எனக்கூறி அனுப்பிவைத்தார்.இன்ஸ்பெக்டர் நாவுக்கரசரின் இந்த வித்தியாசமான அணுமுறையை சாலையோரம் செல்லும் மற்றவர்கள் செல்போன்களில் படமெடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்பெக்டர்  நாவுக்கரசருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது....

நன்றி தினகரன் நாளிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக