வியாழன், 30 ஆகஸ்ட், 2018

அகத்தாய்வு செய்வோம்...

நேற்று ஒரு ஆங்கில புத்தகம ( யூ வில் வின் ) படிக்கும் போது ஒரு கதை படித்தேன் அதிலிருந்து நான் என்ன கற்றுக் கொண்டேன என்பது குறித்த பதிவே இது...

ஒரு பலூன் வியாபாரி அழகழகான பலூன்களை விற்றுக் கொண்டிருக்கிறார்.
அவருடைய வியாபாரம் தொய்வு ஏற்படும் போதெல்லாம் அந்த பலூன்களில் ஹுலியம் வாயுவை நிரப்பி பறக்க விடுவார்.
அது பறக்கிறதைப் பார்த்து நிறைய பேர் அதை வாங்கிக் கொள்ள ஓடி வருவார்கள்.
பச்சை நீலம் ஊதா சிவப்பு ஆரஞ்சு என பல நிறங்களில் அந்த பலூன் இருக்கும்.
ஒரு சமயம் ஒரு சிறுவன் அந்த பலூன் வியாபாரியிடம் நின்று கொண்டு " கருப்பு நிற பலூனைப் பறக்க விட்டால் அதுவும் பறக்குமா " என்று கேட்டான்.
அதற்கு அந்த பலூன் வியாபாரி வெளியே இருக்கின்ற நிறத்தால் அந்த பலூன் பறக்கவில்லை அதற்கு உள்ளே இருக்கின்ற ஒரு வாயுவால் தான் அது பறக்கிறது என்று கூறினார்.

ஆம். நமக்குள்ளே ஆயிரமாயிரம் ஆற்றல்கள் கொட்டி கிடக்கின்றன்.
அகத்தாய்வு செய்யாமல் புறத்தாய்வு மட்டும் செய்து கொண்டிருக்கிறோம்.
வெளித் தோற்றம் சில வருடங்களுக்குப் பிறகு இல்லாமல் போய்விடும்.
ஆனால் நம்முடைய அகத்தில் இருக்கின்ற பண்புகள் நாம் இந்த மண்ணில் இல்லாத போது கூட நம்மைப் பற்றி பேச வைக்கும்.

அகத்தாய்வு செய்வோம்.
நம்மைப் பற்றி ஆழமாய் அறிவோம்.
ஆற்றல்களை வெளியே கொண்டு வருவோம்.
சராசரி மனப்பான்மை கடந்து சாதனைகள் புரிவோம்.

புதன், 29 ஆகஸ்ட், 2018

மனமே மாறிவிடு

ஒரு சில ரகசியங்களை நாம் நமக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்வோம்.
சில சமயங்கள் அந்த ரகசியங்களெல்லாம் வேறு யாருக்காவது தெரிந்து விட்டது என்றால் கோபம் கொள்வோம்.

அது நியாயமா???
ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்.
நம்முடைய ரகசியங்களை நம்மாலேயே பாதுகாக்க முடியவில்லை அதனால் தான் பகிர்ந்து கொள்கிறோம்.
நம்மால் பாதுகாக்க முடியாத நம்முடைய ரகசியங்களை மற்றவர்கள் பாதுகாப்பார்கள் என நம்புவது எப்படி நியாயம்.......????

எழுத்தாணி பிடித்து இலக்கியத்தை நிமிர்த்திய பெண்கள்

சென்ற ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்றதற்காக கல்லூரியின் தாளாளரிடம் வாழ்த்துப் பெற சென்றிருந்தேன்.
அந்த சமயத்தில் எங்கள் தமிழ்த் துறைத் தலைவர் குணசீலன் ஐயாவிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது ஐயா என்ன தலைப்பு குடுத்தாங்க எந்த கருத்த மூலமா வைச்சு பேசுனீங்க என்று கேட்டார்.
நான் ‌"ஔவைப் பாட்டியின பாட்டே பண்பாடு" எனும் தலைப்பில் அவரின் பாடல் வரிகளை சொல்லி நிகழ்கால உதாரணத்தை சொல்லி பேசினேன் ஐயா என்று சொன்னேன்.
ஐயா : எந்த ஔவையாரைப் பற்றி பேசினீர்கள்?
நான் : எந்த ஔவையாரா! எனக்கு தெரிந்தது ஒரே ஒரு ஔவையார் தான் ஐயா.
ஐயா : இல்லை பா. இலக்கியத்தையும் வரலாற்றையும் நன்றாக படித்து பாருங்கள். நான்கு ஔவையார் இருக்கிறார்கள்...

நீண்ட நாட்கள் கழித்து நினைவுகளை அசை போடும் போது தான் ஒரு கருத்து தோன்றியது.

ஆரம்ப பள்ளியில் ஆரம்ப பாடமாக ஆத்திச்சூடி தந்திருக்கிறார்கள்.அதை எழுதியவர் குறித்த முழுமையான பார்வையும் புரிதலுமே நமக்கு இல்லையே. இன்னும் எத்தனையோ தகவல்கள் நம்மை சுற்றியும் இருக்கின்றன.
அதைத் தேடி கண்டுபிடிக்க வேண்டியது நம் கடமை என தேடித் தெரிந்து கொண்டேன்.
அதனை இன்று எழுத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டும் என விரும்பியதன் விளைவு இந்த பதிவு.

அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை பெண்கள் அடிமைகளாகவே இருந்தார்கள் என தவறான புரிதல் நம் எண்ணத்தில் திட்டமிட்டு ஏற்றப்பட்டிருக்கிறது..

இன்று ஓர் ஆச்சர்யம்.
சங்க காலத்தில் 41  பெண் புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
அவர்களின் பெயர்கள்.

1. அஞ்சியத்தை மகள் நாகையார்
2. அஞ்சில் அஞ்சியார்
3. அள்ளூர் நன்முல்லையார்
4. ஆதிமந்தியார்
5. ஊன்பித்தை
6. ஒக்கூர் மாசாத்தியார்
7. ஔவையார்
8. கச்சிப்பேட்டு நன்னாகையார்
9. கழார்க்கீரன் எயிற்றியார்
10. காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்
11. காமக்காணிப் பசலையார்
12. காவற்பெண்டு
13. குமுழிஞாழலார் நப்பசலையார்
14. குறமகள் குறியெயினி.
15. குறமகள் இளவெயினி
16. குன்றியனார்
17. தாயங்கண்ணியார்
18. நக்கண்ணையார்
19. நல்வெள்ளியார்
20. நன்னாகையார்
21. நெடும்பல்லியத்தை
22. பாரி மகளிர்
23. பூங்கண் உத்திரையார்
24. பூதப்பாண்டியன் தேவியார்
25. பெருங்கோழிநாய்கண் மகள் நக்கண்ணையார்
26. பேய்மகள் இளவெயினி
27. பொதும்பில் புல்லாளங் கண்ணியார்
28. பொன்மணியார்
29. பொன்முடியார்
30. போந்தைப் பசலையார்
31. மதுரை மேலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
32. மாரிப் பித்தியார்
33. மாறோக்கத்து நப்பசலையார்
34. முள்ளியூர்ப் பூதியார்
35. வருமுலையாரித்தி.
36. வெண்ணிக் குயத்தியார்
37. வெண்பூதியார்
38. வெண்மணிப் பூதியார்
 39. வெள்ளிவீதியார்
40. வெள்ளெமாளர்
41. வெறிபாடிய காமக்காணியார்.

புணர்ச்சியில் ஈடுபட மட்டுமே பெண் என்ற நிலையை மாற்றி
 *எழுத்து*  எனும் புரட்சியில் ஈடுபடவும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை சங்க காலங்களிலேயே மெய்பித்தவர்கள் இவர்கள்.
வாய்ப்பிருந்தால் இவர்களைப் பற்றிய செய்திகளையும் இவர்கள் இயற்றிய பாடல்களையும் படித்து பார்ப்போம்.
பயன் பெறுவோம்.
நன்றி : இது குறித்த பார்வை என் மனதில் எழக் காரணமாக இருந்த எங்கள் ஐயா முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கு.

சனி, 25 ஆகஸ்ட், 2018

கல்லூரி வழி பயணம்




இளஞ்சூடான வெயிலில் பள்ளிக்கு செல்லும் சிறு பிள்ளைகள் மத்தியில் நானும் தயாரானேன் என் கல்லூரிக்கு செல்ல !!

பரபரபரப்பான நகரத்தை தாண்டி என் கல்லூரிக்கு செல்ல அழகான அமைதியான ஒரு காட்டு வழி பாதை !!

பனி போல் பொழியும் சாரல் மழையில் குளங்கள் சிரித்திட, 
அதில் உள்ள அல்லி மலர்கள் ஆனந்தத்தில் மூழ்கிட ! 

ஊரை காவல் காத்தப்படி உள்ள எல்லை சாமியை ரசித்தவாறு பயணம் தொடர்கிறது 
மழை பெய்தால் இரு புறமும் ஓடைகள் அதில் முளைக்கும் கோரைகள் ,
பச்சை போர்வை போர்த்தியது போல் உள்ள கடலை  சாகுபடி ,
பெண் மயிலை கவர தொகை விரிதாடும் ஆண் மயிலின் சிறகு ஓசையில் நான் சிலிர்த்தட!! 

ஏர் உழுத இடத்தில் தாயுடன் உணவு தேடும் மயில் குஞ்சுகள் 
அதை விரட்ட வந்த கிழவி வீட்டு தோட்டத்தில் உள்ள வாழை கன்றை கன்று குட்டி திங்க , 
அதன் மேல் ஒய்யாரமாய் காதல் பேசும் இரட்டை வால் குருவிகள், 
கரையோர பனைகள் அதில் பனங்காய்களை விட அதிகமான கல் பானைகள் அதன் சுவையில் மயங்கிய வண்டுகளின் கூட்டம் , 
மீனை எதிர்நோக்கும்  மீன்கொத்தி, பாறை மீது தண்டால் எடுக்கும் ஓணான், தார் ஊற்றிய சாலையில் ஒரு புறம் திதிப்பான கரும்பும், மறுபுறம் சூரியனும் ஈடு தரும் நிறத்தில் மாம்பழங்கள்.

தாயிடம் பால் குடிக்க ஓடும் இளங்கன்று அதனை மெய்தபடி மரத்தடி நிழலுக்கு ஓடும் பாசமிகு அண்ணன் தங்கையின் அளவில்லா ஆனந்தத்தை ரசித்தவாரு கல்லூரிக்குள் நுழைந்தேன் என் எதிர்காலத்தை நோக்கி?????


வியாழன், 23 ஆகஸ்ட், 2018

நட்பு அன்றும் இன்றும்


                                  உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே 
                                  இடுக்கண் களைவதாம் நட்பு. 788      
என்கிறார் வான்மறை தந்த வள்ளுவர்.

உண்மையான நட்பு என்பது தனது நன்பனுக்கு ஆபத்து வருகின்ற தக்க காலத்தில் உதவுவதாக இருக்க வேண்டும்.
புறநானூறிலே "தன் தோழற்கு வருமே" எனும் ஒரு பாடலில் ஒரூஉத்தனார் நட்பை அழகாய் ஆழமாய் கூறியிருக்கிறார்.
அந்த பாடல் வரிகள்.

கோட்டம் கண்ணியும் கொடுந்திரை அடையும்-
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்-
ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய-
திணிநிலை அலறக் கூவை போழ்ந்து தன்-
வடிமான் எகம் கடிமுகத்து ஏந்தி-
ஓம்புமின் ஓம்புமின் இவண்! என ஓம்பாது-
தொடர்கோள் யானையின் குடர்கால் தட்பக்-
கன்றுஅமர் கறவை மான;
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே.  
புறநானூறு -275

இந்த பாடலின் பொருள் எனது பார்வையில்.

அழகான கண்ணியும்
 மென்மையான ஆடையும் 
மன்னனின் பெருமையைப் பாடிப்பாடி அவனை கவருதலும்
அவனுக்கு ஏற்புடையது அல்ல.
போரிலே தன்னுடைய நண்பன் பகைவர்களால் சூழப்பட்டிருக்கும் சமயத்திலே
போர்வாளினை ஏந்திக் கொண்டு முன்னே நண்பனை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிற பகைவர்களையெல்லும் அழித்துக் கொண்டே இவன் முன்னோக்கி செல்கின்றான்.
சுற்றி நிற்கும் கூட்டமெல்லாம் இவனுக்கு எதாவது ஆகிவிடுமோ என்று
நிறுத்துக!!நிறுத்துக!! என்று கத்துகின்றன.
அதனையெல்லாம் பொருட்படுத்தாமல்
"கன்றை நோக்கி செல்லுகின்ற தாய்ப்பசுவைப் போல தன்னுடைய தோழனைக் காக்க செல்லுகின்ற இவனுடைய வீரத்தை 
என்னவென்று சொல்லது.

இந்த பாடல் வரிகளைப் பார்க்கும் போது தற்போது நடந்த சம்பவம் ஒன்று கண்முன்னே வந்து போகிறது.
கும்பகோணத்தில் நடந்த தீ விபத்து நாம் அனைவரும் அறிந்ததே.
அதில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி க் கொண்டிருந்த ஒரு சின்னப் பாப்பாவை தூக்க அந்த பாப்பாவின் சித்தப்பா வருகிறார்.
அப்போது அந்தப்பெண் சொல்லுகிறாள்.
"சித்தப்பா என்ன மட்டும் தூக்காதீங்க.என் தோழியும் அங்க அடிபட்டு கிடக்குறா அவளையும் தூக்குங்க"
என்று..
உண்மையிலே அந்த சின்னப்பிள்ளையினுடைய நட்பு போற்றுதற்குரியது தான்.
இன்னும் ஒரு சில இடங்களில் இதுபோன்ற நட்புகள் வாழ்ந்து கொண்டிருப்பதில் மனம் மகிழ்வடைகிறது.
"நல்ல நண்பர்களைத் தேடுவதை விட்டுவிட்டு முதலில் நாம் நல்ல நண்பராய் இருப்போம்".