சனி, 15 பிப்ரவரி, 2020


21.மண்ணையடைந்தேன்
உன்னை என் வாழ்வில்
வானவில்லாய் வரைந்து
வண்ணங்கள் தீட்டி
வானாக வளர்ந்து
வாழ ஆசைப்பட்டேன்
எந்தன் எண்ணம் இன்று
வீணாகிபோக
வின்னைவிட்டு, மண்ணையடைந்தேன்.

22.திக்குமுக்கானேன்
காற்றிற்கு கூட எல்லை உண்டு
நம் காதலுக்கில்லை
என்றிருந்தேன், என் காதலே
என் மூச்சுக்காற்றை
முடக்க திக்குமுக்காடி நின்றேன்.







23.வாடுதே
உன்னோடு தான்
என் உயிர் வாழுதே
உன் பேர் சொன்னால்
என் இதல் வாடுதே
24.வாடினோம், நாடினோம்
நான் இன்று காணுகின்ற காட்சியெல்லாம் நீயாக
நான் இரவில் காணுகின்ற நிஜமாக
நீ என்னை காண வேண்டும்
நம் காதல் வாழ…. காலம் வீழ….
இனி நாம் ஆகவேண்டும்நதியோர கரையாக..
இதுவரை,
நதியாக ஓடினோம்
விதியாலே வாடினோம்
பதியாக வேண்டினோம்
மதியாலே மாறினேன்
எனினும்,
நாம் நற்கதியையே நாடினோம்..





25.திகைப்பு
நீ நீர், நிலவு, காற்று
நான் உன் பகலின் இரவு
வேர் என்ன நமக்குள் மறுப்பு
பார் உந்தன் வண்ண சிரிப்பு
உன் மேல் ஏனோ திகைப்பு
உன்னால் தானே ஆனது என் மனதும் சிகப்பு..

தன்னம்பிக்கை

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்!
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்!
உள்ளத்தில் உள்ளது தான் உலகம் கண்ணா!
இதை உணர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா!

- கவியரசு கண்ணதாசன்

கல்பனா சாவ்லாவுடன் விண்ணில் சென்ற ஆறு போ்

ரிக்  ஹஸ்பண்ட்
வில்லியம் மெக்கூல்
மைக்கேல் ஆண்டா்சன்
டேவிட் பிரௌன்
லாரா கிளார்க்
இலான் ரமோன்

பேய் வீடு

சென்னை மாநகரம். சென்னையில் ஒரு அழகான குடும்பம். அழகு என்றால் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனம் அதிகம் கொண்டவர்கள். சாலையில் உணவின்றி இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பவர்கள். மற்ற உயிரினங்களின் துன்பத்தை அதிகம் பகிர்ந்துகொள்வார்கள். தாய்-தந்தை. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன்.

மகள் கல்லூரியில் பயில்கிறாள். கல்லூரியில் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வாங்கப் பணம் கொடுப்பாள். இப்படிப்பட்ட குடும்பத்தை அழகு என்று கூறுவதில் ஒரு தவறும் இல்லை. கல்லூரி விடுமுறை நாளில் தன் தாத்தா ஊருக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு உதவி செய்வாள். இப்பொழுது அதுபோல விடுமுறை நாளில் தன் தாத்தா ஊருக்கு உதவி செய்யச் சென்றாள்.

அங்குள்ள ஒரு பாட்டி என்ன பாப்பா நன்றாக இருக்கிறாயா? உன்னால் இன்று நான் நலமாக உள்ளேன் என்றார். நான் நலமாக இருக்கிறேன் பாட்டி. உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றாள். தாத்தாவுடன் உணவு உண்டாள். பின்பு தாத்தா நம்ம ஊரில் இப்ப எல்லாரும் நலம். பக்கத்து கிராமத்துல கொஞ்சம் உதவி தேவைப்படுது. நீ அங்குள்ள மக்களுக்கு உதவி செய் என்றார். பேத்தியிடம் நீ தங்குவதற்கு வீடு தயாராக இருக்கிறது. உதவி செய்துவிட்டு ஒரு வாரத்தில் சென்னைக்குச் செல் என்றார். அத்துடன் சிறிது பணம் கொடுத்தார்.

அவள் கிராமத்திற்குச் சென்றாள். அங்குள்ள மக்களுக்குப் போதிய நீர், சாலை, மின்விளக்கு வசதிகளைச் செய்யவேண்டும் என்று நினைத்தாள். ஊருக்கு வந்த முதல் நாளிலேயே ஊர் மக்களிடம் மனு வாங்கி மேல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தாள். ஒரு பெரியவர் அம்மா நீ இங்கதான் ஒருவாரம் தங்கனும். இதுதான் உன் வீடு. வாடகை தரவேண்டாம் என்றார். அந்தப் பெண் இவ்வளவு பெரிய வீடு எனக்கு வேண்டாம் என்றாள். இல்லையம்மா, இந்த வீட்டில் தங்கிக்கொள் என்ற பெரியவர் அந்த வீட்டின்முன் மயங்கி விழுந்தார். அட தாத்தா விழுந்துவிட்டார் என்றாள். அருகில் இருந்த பெரியவர் இவர் இன்னும் சாப்பிடவில்லை. அதுதான் மயங்கிவிட்டார். நீ வீட்டிற்குப் போமா என்றார். 

“இவள் தனது பொருள்களை எடுத்துக்கொண்டு அந்த வீட்டிற்குச் சென்றாள். மிகப்பெரிய வீடு. வீட்டைச் சுற்றியும் அடர்ந்த மரங்கள், செடிகள் காணப்பட்டன. வீட்டின் கதவு பிரமாண்டமாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீட்டின் உள்நுழையும்போது மஞ்சள் துணியில் கட்டப்பட்டிருந்த எலுமிச்சைப்பழம் அவள் தலையில் விழுந்தது. அதிர்ந்து போனாள். வீட்டினுள் உணவு சமைத்து வைக்கப்பட்டிருந்தது. எப்பொழுது சமைக்கப்பட்டிருக்கும்? வீடு பூட்டியிருந்தது எப்படி? உள்ளே யாரும் இல்லை. சரி என்று சாப்பிட்டுவிட்டுத் உறங்கப் போனாள். இரவு வானம் இருள் சூழ்ந்ததாகக் காணப்பட்டது. சன்னல் திறந்து இருந்தது. தூரத்தில் வெளிச்சம். அதை உற்றுப் பார்த்தாள். முதலில் மஞ்சள் நிற விளக்கு தெரிந்தது. பிறகு பச்சை, நீலம் என மாறியது. இவள் பயந்துபோய் சன்னலை மூடிக்கொண்டாள். தூக்கம் வரவில்லை.

சன்னலில் இருந்து சத்தம் தோன்றியது. முதலில் கண்டுகொள்ளவில்லை. பிறகு சத்தம் வேகமாகக் கேட்டது. கீழ் அறையில் உறங்கலாம் என்று சென்றாள். அந்த வீட்டில் ஒரு சாமிபடம் கூட இல்லை. தன் மனதில் முருகா! முருகா! என்று வேண்டிக்கொண்டு உறங்கினாள். திடீரென்று யாரோ கதவைத் தட்டும் சத்தம். அவள் வீட்டைத் திறக்கும் முன்பு சத்தம் அதிகமானது. கதவின் அருகே சென்று அங்குள்ள சிறிய ஓட்டையில் வெளியே யாரென்று பார்த்தாள். யாரும் இல்லை. மிகவும் பயந்தாள். முகம் வியர்த்துப்போனது. வியர்வையால் உடல் நனைந்து போனாள். அப்பொழுது இரவு 12 மணி. சிறிதுநேரம் கழித்து ஊஞ்சல் ஆடும் சத்தம் கேட்டது. நாய் குரைத்தது. விசித்திரமான சத்தம் கேட்டது.

வீட்டினுள் இருந்த விளக்கு எரியவில்லை. பயத்தில் அலறினாள். வீட்டினுள் அவளை யாரோ அழைப்பதுபோல் இருந்தது. அப்படியே நடு வீட்டில் மயங்கி விழுந்துவிட்டாள். தண்ணீர் சொட்டு சொட்டாக மேலே விழுந்தது. எழுந்து கொண்டாள். தப்பித்தால் போதும் என்று தனது பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினாள். வீட்டின் முன் கார். அதிகாரிகள் நின்றனா். சினிமா நடிகர்கள் இருந்தனர். அவர்கள் ஏன் இப்படி ஓடிவருகிறாய் என்று அவளைப் பார்த்துக் கேட்டனர். அவள் பேய்! பேய்! என்றாள். அவர்கள் சிரித்துக்கொண்டு பேய் இல்லையம்மா. பேய் இருப்பதுபோல அலங்கரிக்கப்பட்ட வீடு என்றனர். 

அவளை அந்த வீட்டிற்குள் அழைத்துச்சென்று, முழுவதும் இயந்திரத்தால் பேய் வருவதுபோல் நாங்கள்தான் அலங்கரித்தோம். விளக்குகள் மாறி மாறி எரிந்ததும் எங்கள் வேலைதான். தோட்டத்தில் ஊஞ்சல் ஆடியது. ஊஞ்சலின் கயிற்றை நாங்கள் மரக்கிளையில் கட்டினோம். மரம் அசையும்போது ஊஞ்சல் ஆடும் என்றனர். இந்த வேலைப்பாடுகள் முழுவதும் பேய் படப்பிடிப்பிற்காகச் செய்யப்பட்டது. திடீரென்று தயாரிப்பாளர்களுக்கு உடல்நலம் சரியில்லை. எனவே நாங்கள் வீட்டை ஏற்பாடு செய்துவிட்டு, அப்படியே விட்டுவிட்டோம்.

இப்பொழுது தயாரிப்பாளர் குணமடைந்துவிட்டார். நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம் என்றார்கள்.  நீங்கள் வேறொரு வீட்டில் தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்துவிட்டோம் என்றனர். அந்த வீட்டில் பேய் ஏற்பாடு ஏதேனும் உள்ளதா என்றாள் அந்தப் பெண். இல்லையம்மா என்று சிரித்தனர். உங்கள் படத்தின் பெயர் என்ன என்று கேட்டாள். பேய் வீடு என்றனர். படம் வெற்றிபெற வாழ்த்து கூறினாள். அவர் ஊர் மக்களுக்கு உதவி செய்துவிட்டுச் சென்னை திரும்பினாள். நடந்ததை வீட்டார் கேட்டு சிரித்தனர். ஹா ஹா ஹா….

சிரிப்பு மருந்து

அழகான ஒரு மலைக்கிராமம். அந்தக் கிராமத்தில் எப்பொழுதும் நீர்வளம் வற்றாது. வயல்கள் விளைச்சலுடன் பசுமையாகக் காணப்படும். அந்தக் கிராமத்தில் 60 வயதுடைய ஒரு தாத்தா வசித்துவந்தார். இவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இந்தத் தாத்தாவுக்குத் திருமணம் ஆகவில்லை. இவர் தாய் மட்டும் இவருடன் இருந்தார். தாத்தா பெரிய மீசை வைத்திருப்பார். தலையில் எப்பொழுதும் ஒரு தொப்பி அணிந்திருப்பார். பாரம்பரியத்தை மதிப்பவர். எனவே எப்பொழுதும் வேட்டி, சட்டை உடுத்துவார். இவருடைய தாய் மிகவும் வயதானவள். எனவே தாத்தா தன் தாய்க்கு உணவு கொடுத்துக் கவனித்துக் கொள்வார். இவருடைய முகத்தில் சிரிப்பே வராது. யாருடனும் பேசமாட்டார். தன் தாயையும் மற்றவர்களுடன் பேச அனுமதிக்கமாட்டார். எனவே ஊர் மக்கள் இவரைக் கோபக்கார மீசைத் தாத்தா என்றுதான் அழைப்பார்கள். 

தாத்தா தினமும் அதிகாலையில் எழுந்து உணவு சமைத்துத் தன் தாய்க்குக் கொடுத்துவிட்டு, தானும் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவிற்குச் செல்வார். செல்லும்போது ஒரு செய்தித்தாள், மீன் தூண்டில் ஆகியவற்றை எடுத்துச்செல்வார். மிகப்பெரிய அழகான பூங்கா, அங்கே ஒரு மரம். அந்த மரத்தில் வெள்ளைப் பூக்கள் பூக்கும். பூங்காவிற்கு அருகில் சிறிய குளம். அந்தக் குளத்தில் மீன்கள் நிறைந்து காணப்படும். தாத்தா சமைத்துத் தாய்க்கு உணவு கொடுத்துவிட்டுப் பூங்காவிற்குச் செல்வார். வெள்ளைப் பூ மரம் தாத்தாவைவிட ஒரு அடி உயரம். மரத்தின் அடியில் ஒருவர் மட்டும் அமரக்கூடிய மரப்பலகை இருக்கும். அதில் தாத்தா அமர்ந்து செய்தித்தாள் படிப்பார். ஏதோ யோசித்துக்கொண்டு கோபமாக அமர்ந்திருப்பார். 

மாலைநேரம் வந்தது. பூங்காவில் குழந்தைகள் நிறைந்து காணப்பட்டனர். ஆனால் எந்தக் குழந்தையும் மரத்தடியில் சென்று விளையாடவில்லை. மற்ற சிறுவர்கள் கோபக்கார மீசைத் தாத்தா நம்மை எல்லாம் அடித்துவிடுவார் என்று பூங்காவில் இருந்து நேரமாக வீட்டிற்குச் சென்றனர். தாத்தா தனது தூண்டிலை எடுத்துக்கொண்டு குளத்திற்குச் சென்றார். அங்குள்ள மீன்களைப் பிடித்தார். பிறகு பிடித்துவைத்த மீன்களை எல்லாம் மீண்டும் குளத்திற்குள் விட்டுவிடுவார். தாத்தாவின் மீதி வாழ்க்கை இவ்வாறே சென்றது. ஏன் மீன்களைப் பிடிக்கிறாய்? ஏன் வீணாகக் குளத்தில்விடுகிறாய்? என்ன ஆனது? என்று தாத்தாவின் தாய் கேட்டாள். உன் வேலையைப் பார் எனக்குத் தெரியும் என்று தாத்தா கூறினார். தாத்தாவின் செயல்களையெல்லாம் அந்த ஊரின் சாமியார் கவனித்துக் கொண்டிருந்தார். தாத்தா மறுபடியும் பூங்காவிற்குச் சென்று செய்தித்தாள் படித்தார். ஒரு அழகான பெண்குழந்தை பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தது. இந்தக் குழந்தையைப் பார்க்கும்போது, தாத்தாவின் சிறுவயது நினைவு வந்தது. 

யார் இந்தக் குழந்தை?.  நம் கிராமத்தில் இவளைப் பார்த்ததில்லை என்று முதல் முறையாக யோசித்தார். சரி, யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று தூண்டில் எடுத்துக்கொண்டு மீன்பிடிக்கச் சென்றார். மீன்களைப் பிடித்து மீண்டும் குளத்தில் விட்டுவிட்டார். வீட்டிற்குச் செல்லும்போது, அந்தக் குழந்தை இன்னும் பூங்காவில் இருப்பதைப் பார்த்தார். உடனே அந்தக் குழந்தையைத் தூக்கித் தனது கையில் வைத்துக்கொண்டார். பூங்காவைக் கடந்து சிறிது தூரம் வந்துவிட்டார். குழந்தையின் பெற்றோர் தாத்தாவைச் சந்தித்து நீங்கள் வைத்திருக்கும் குழந்தை எங்களுடையது என்றனர். தாத்தா அவர்களிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டார். குழந்தையின் தாய் மிகவும் நன்றி ஐயா! நீங்கள் எங்களுடைய வாழ்க்கையைக் காப்பாற்றிவிட்டீர்கள் என்றாள். இவள் கிடைத்திருக்கவில்லை எனில் நாங்கள் இறந்திருப்போம் என்று நன்றி கூறினாள். தாத்தா எதுவும் பேசாமல் மௌனமாக வீட்டிற்குச் சென்றார். தாய் என் மகனுக்கு என்ன வியாதி! அதற்கு என்ன மருந்து! என்று நினைத்து மிகவும் வருத்தப்பட்டாள். 

அடுத்தநாள் காலையில் தாத்தா பூங்காவிற்குச் சென்றார். இவரின் செயல்களையெல்லாம் கவனித்த சாமியார் இவரிடம் பேசலாம் என்று போனார். தாத்தா ஒரு பார்வை பார்த்தார். சாமியார் சென்றுவிட்டார். பூங்காவிற்கு அந்தப் பெண் குழந்தை மீண்டும் வந்தது. தாத்தா எதையும் கண்டுகொள்ளாமல் செய்தித்தாள் படித்தார். அந்தக் குழந்தை தாத்தாவிடம் சென்று மரத்தின் அடியில் உள்ள வெள்ளைப் பூக்களையெல்லாம் கோர்த்துப் பூச்செண்டாகத் தாத்தாவிடம் கொடுத்தது. அந்தக் குழந்தை தாத்தாவின் கன்னத்தில் முத்தமிட்டது. அத்தி பூத்தாற்போல தாத்தா சிரித்தார். பூங்காவில் உள்ள மற்ற குழந்தைகள் ஆச்சரியத்துடன் தாத்தாவைப் பார்த்தனர். தாத்தா குழத்திற்குச் சென்று இரண்டு மீன்களைப் பிடித்தார். அவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அதனைப் பார்த்த தாய் அதிர்ந்து போனாள். இவன் என்மகன்தானா என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக்கொண்டாள். அந்த மீன்களைச் சமைத்துத் தன் தாய்க்குக் கொடுத்தார். அம்மா இந்தக் குழம்பு சுவையாக உள்ளதா என்று அன்புடன் தாத்தா கேட்டார். ம்ம்ம்… என்றாள் தாய். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துச் சிரித்தார். தாய் கனவா என்று தன் கையைக் கிள்ளிப் பார்த்தாள். இல்லை, இல்லை நினைவு என்றார் தாத்தா. அடுத்தநாள் சிரித்துக்கொண்டே தாத்தா பூங்காவிற்குச் சென்றார். 

ஊர் மக்கள் வியந்து பார்த்தனர். பூங்காவிற்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்தார். குழந்தைகள் அனைவரும் ஐ…. அன்பான மீசைத் தாத்தா என்று அழைத்தனர். சாமியார் எப்படியோ தாத்தா சிரித்துவிட்டார் என்று கிளம்பினார். குழந்தைகள் அன்பான மீசைத் தாத்தா நாங்களும் மீன்பிடிக்க வருகிறோம் என்றனர். தாத்தா சிரித்துக் கொண்டே ம்ம்ம்…. என்றார். தாத்தா வீட்டிற்குச் சென்றார். தனது தாய் மீசைப் பையா உனக்குச் சிரிப்புதான் மருந்து என்றால் நான் என்றோ நகைச்சுவை சொல்லியிருப்பேன் என்றாள். அதற்குத் தாத்தா ஹா ஹா ஹா ஹா….. என்று வயிறு குலுங்கச் சிரித்தார். அம்மா உணவை விடச் சிரிப்புதான் சிறந்த மருந்து என்றார்.