சனி, 15 பிப்ரவரி, 2020

சிரிப்பு மருந்து

அழகான ஒரு மலைக்கிராமம். அந்தக் கிராமத்தில் எப்பொழுதும் நீர்வளம் வற்றாது. வயல்கள் விளைச்சலுடன் பசுமையாகக் காணப்படும். அந்தக் கிராமத்தில் 60 வயதுடைய ஒரு தாத்தா வசித்துவந்தார். இவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இந்தத் தாத்தாவுக்குத் திருமணம் ஆகவில்லை. இவர் தாய் மட்டும் இவருடன் இருந்தார். தாத்தா பெரிய மீசை வைத்திருப்பார். தலையில் எப்பொழுதும் ஒரு தொப்பி அணிந்திருப்பார். பாரம்பரியத்தை மதிப்பவர். எனவே எப்பொழுதும் வேட்டி, சட்டை உடுத்துவார். இவருடைய தாய் மிகவும் வயதானவள். எனவே தாத்தா தன் தாய்க்கு உணவு கொடுத்துக் கவனித்துக் கொள்வார். இவருடைய முகத்தில் சிரிப்பே வராது. யாருடனும் பேசமாட்டார். தன் தாயையும் மற்றவர்களுடன் பேச அனுமதிக்கமாட்டார். எனவே ஊர் மக்கள் இவரைக் கோபக்கார மீசைத் தாத்தா என்றுதான் அழைப்பார்கள். 

தாத்தா தினமும் அதிகாலையில் எழுந்து உணவு சமைத்துத் தன் தாய்க்குக் கொடுத்துவிட்டு, தானும் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு அருகில் உள்ள பூங்காவிற்குச் செல்வார். செல்லும்போது ஒரு செய்தித்தாள், மீன் தூண்டில் ஆகியவற்றை எடுத்துச்செல்வார். மிகப்பெரிய அழகான பூங்கா, அங்கே ஒரு மரம். அந்த மரத்தில் வெள்ளைப் பூக்கள் பூக்கும். பூங்காவிற்கு அருகில் சிறிய குளம். அந்தக் குளத்தில் மீன்கள் நிறைந்து காணப்படும். தாத்தா சமைத்துத் தாய்க்கு உணவு கொடுத்துவிட்டுப் பூங்காவிற்குச் செல்வார். வெள்ளைப் பூ மரம் தாத்தாவைவிட ஒரு அடி உயரம். மரத்தின் அடியில் ஒருவர் மட்டும் அமரக்கூடிய மரப்பலகை இருக்கும். அதில் தாத்தா அமர்ந்து செய்தித்தாள் படிப்பார். ஏதோ யோசித்துக்கொண்டு கோபமாக அமர்ந்திருப்பார். 

மாலைநேரம் வந்தது. பூங்காவில் குழந்தைகள் நிறைந்து காணப்பட்டனர். ஆனால் எந்தக் குழந்தையும் மரத்தடியில் சென்று விளையாடவில்லை. மற்ற சிறுவர்கள் கோபக்கார மீசைத் தாத்தா நம்மை எல்லாம் அடித்துவிடுவார் என்று பூங்காவில் இருந்து நேரமாக வீட்டிற்குச் சென்றனர். தாத்தா தனது தூண்டிலை எடுத்துக்கொண்டு குளத்திற்குச் சென்றார். அங்குள்ள மீன்களைப் பிடித்தார். பிறகு பிடித்துவைத்த மீன்களை எல்லாம் மீண்டும் குளத்திற்குள் விட்டுவிடுவார். தாத்தாவின் மீதி வாழ்க்கை இவ்வாறே சென்றது. ஏன் மீன்களைப் பிடிக்கிறாய்? ஏன் வீணாகக் குளத்தில்விடுகிறாய்? என்ன ஆனது? என்று தாத்தாவின் தாய் கேட்டாள். உன் வேலையைப் பார் எனக்குத் தெரியும் என்று தாத்தா கூறினார். தாத்தாவின் செயல்களையெல்லாம் அந்த ஊரின் சாமியார் கவனித்துக் கொண்டிருந்தார். தாத்தா மறுபடியும் பூங்காவிற்குச் சென்று செய்தித்தாள் படித்தார். ஒரு அழகான பெண்குழந்தை பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தது. இந்தக் குழந்தையைப் பார்க்கும்போது, தாத்தாவின் சிறுவயது நினைவு வந்தது. 

யார் இந்தக் குழந்தை?.  நம் கிராமத்தில் இவளைப் பார்த்ததில்லை என்று முதல் முறையாக யோசித்தார். சரி, யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று தூண்டில் எடுத்துக்கொண்டு மீன்பிடிக்கச் சென்றார். மீன்களைப் பிடித்து மீண்டும் குளத்தில் விட்டுவிட்டார். வீட்டிற்குச் செல்லும்போது, அந்தக் குழந்தை இன்னும் பூங்காவில் இருப்பதைப் பார்த்தார். உடனே அந்தக் குழந்தையைத் தூக்கித் தனது கையில் வைத்துக்கொண்டார். பூங்காவைக் கடந்து சிறிது தூரம் வந்துவிட்டார். குழந்தையின் பெற்றோர் தாத்தாவைச் சந்தித்து நீங்கள் வைத்திருக்கும் குழந்தை எங்களுடையது என்றனர். தாத்தா அவர்களிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டார். குழந்தையின் தாய் மிகவும் நன்றி ஐயா! நீங்கள் எங்களுடைய வாழ்க்கையைக் காப்பாற்றிவிட்டீர்கள் என்றாள். இவள் கிடைத்திருக்கவில்லை எனில் நாங்கள் இறந்திருப்போம் என்று நன்றி கூறினாள். தாத்தா எதுவும் பேசாமல் மௌனமாக வீட்டிற்குச் சென்றார். தாய் என் மகனுக்கு என்ன வியாதி! அதற்கு என்ன மருந்து! என்று நினைத்து மிகவும் வருத்தப்பட்டாள். 

அடுத்தநாள் காலையில் தாத்தா பூங்காவிற்குச் சென்றார். இவரின் செயல்களையெல்லாம் கவனித்த சாமியார் இவரிடம் பேசலாம் என்று போனார். தாத்தா ஒரு பார்வை பார்த்தார். சாமியார் சென்றுவிட்டார். பூங்காவிற்கு அந்தப் பெண் குழந்தை மீண்டும் வந்தது. தாத்தா எதையும் கண்டுகொள்ளாமல் செய்தித்தாள் படித்தார். அந்தக் குழந்தை தாத்தாவிடம் சென்று மரத்தின் அடியில் உள்ள வெள்ளைப் பூக்களையெல்லாம் கோர்த்துப் பூச்செண்டாகத் தாத்தாவிடம் கொடுத்தது. அந்தக் குழந்தை தாத்தாவின் கன்னத்தில் முத்தமிட்டது. அத்தி பூத்தாற்போல தாத்தா சிரித்தார். பூங்காவில் உள்ள மற்ற குழந்தைகள் ஆச்சரியத்துடன் தாத்தாவைப் பார்த்தனர். தாத்தா குழத்திற்குச் சென்று இரண்டு மீன்களைப் பிடித்தார். அவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அதனைப் பார்த்த தாய் அதிர்ந்து போனாள். இவன் என்மகன்தானா என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக்கொண்டாள். அந்த மீன்களைச் சமைத்துத் தன் தாய்க்குக் கொடுத்தார். அம்மா இந்தக் குழம்பு சுவையாக உள்ளதா என்று அன்புடன் தாத்தா கேட்டார். ம்ம்ம்… என்றாள் தாய். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துச் சிரித்தார். தாய் கனவா என்று தன் கையைக் கிள்ளிப் பார்த்தாள். இல்லை, இல்லை நினைவு என்றார் தாத்தா. அடுத்தநாள் சிரித்துக்கொண்டே தாத்தா பூங்காவிற்குச் சென்றார். 

ஊர் மக்கள் வியந்து பார்த்தனர். பூங்காவிற்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்தார். குழந்தைகள் அனைவரும் ஐ…. அன்பான மீசைத் தாத்தா என்று அழைத்தனர். சாமியார் எப்படியோ தாத்தா சிரித்துவிட்டார் என்று கிளம்பினார். குழந்தைகள் அன்பான மீசைத் தாத்தா நாங்களும் மீன்பிடிக்க வருகிறோம் என்றனர். தாத்தா சிரித்துக் கொண்டே ம்ம்ம்…. என்றார். தாத்தா வீட்டிற்குச் சென்றார். தனது தாய் மீசைப் பையா உனக்குச் சிரிப்புதான் மருந்து என்றால் நான் என்றோ நகைச்சுவை சொல்லியிருப்பேன் என்றாள். அதற்குத் தாத்தா ஹா ஹா ஹா ஹா….. என்று வயிறு குலுங்கச் சிரித்தார். அம்மா உணவை விடச் சிரிப்புதான் சிறந்த மருந்து என்றார்.

விடாமுயற்சி

அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

பவித்திரம்


16.மெய்தான்
கண்மூடித் திறக்கும் போதெல்லாம் நீ வந்தாய்
கண்ணென்பதின்றியும் நீ என் நெஞ்சில் நின்றாய்
கண்கள் சொல்வது பொய்யானாலும்
கண்ணே நீ என்னை வென்றது மெய்தான்
இனி நம் வாழ்வோ தீபம் ஏற்றிய நெய்தான்

17.உன் பாசம் அறிந்தேன்
உன்னைக் கண்ட நொடியினிலே
நான் உனதானேன்!
உன்னைக் காணாத வலியினிலே
நான் உயிர் சாய்ந்தேன்!
உயிர் உருகும் நிலையினிலும்என்
உள்ளிதையம் சொன்னதே
உன் பெயரையமனும் தவறிவிட்டான்
பாசைக் கயிரைநானும்
அறிந்து கொண்டேன்உன்
திடமான பாச கயிரை உயிரே.

18.வீழாது
உந்தன் ஒரு சொல்லுக்காக
ஜென்மம் மாய்ப்பேன், என் மரணத்தை ஜெயிப்பேன்
உன்னுள் வாழ, மீண்டும் பிறப்பேன்
உன் மீது நான் கொண்ட காதல், என்னோடு சாகாது
உன்னுள் என் எண்ணம் தீண்டாமல் போகாது
என்றும் என் காதல் வீழாது.

19.தாமதம் வேண்டாம்
உன் விழியால், நான் வீழ்ந்ததும்
என் வழியில், நீ நடந்ததும்
நம் காலத்தை, நாம் வென்றதும்
நம்முள் நாம் இணைந்ததும்,
நாமே இணையானதும், நம் இதயம்
நம்மைத் துறந்ததும், சிறகைக் கொண்டு
பறந்ததும்
நம் கனவில் நாம் கரைந்ததும்
காதல் அல்லவா
இனியும் தாமதம் இன்றி என்னை
அள்ளிச் செல்லவாதலைவனே!.

20.உன்னை நான் சந்திக்கிறேன்
நான் சிந்திக்கும் ஒவ்வோரு நொடி சிந்திப்பிலும் நீ
என்னைச் சந்திக்கிறாய் நிலவாக
இவ்வுலகமே மாறியதே இருளாக! – என்னுடன்
இணைந்திடவே நீ வரவேண்டும்என்
ஜீவனின் ஒளியாக என் ஏழு
ஜென்மத்தின் வரமாக..
காலங்கள் கரைந்து ஓடினாலும்,
கவிதையில் வரிகள் மாறினாலும்,
உன்னுள்தான் நான் வாழவேண்டும்
உன்னைத்தான் நான் உணரவேண்டும்
உயிரெங்கே ஓடினாலும்..
உறவெல்லாம் வாடினாலும்..
உன்னுள்ளத்தில் உயரவேண்டும்
உன் மடியில்தான் விழவேண்டும்..

பவித்திரம்


11.வேண்டும்
இதழசைக்காமல் பேசவேண்டும்
இமைக்காத கண்கள் வேண்டும்
இசையின்றிப் பாடல் வேண்டும்
பகலிலும் நிலவு வேண்டும்
இரவினிலே வெப்பம் வேண்டும்
கண்ணீரில்லா அழுகை வேண்டும்
பரிமாறப் புன்னகை வேண்டும்
பசிகண்ட பாசம் வேண்டும்
ருசிகொண்ட நேசம் வேண்டும்
தாகமில்லாமல் தண்ணீர் வேண்டும்
தேகமெல்லாமல் செந்நீர் வேண்டும்
வேகமில்லா விவேகம் வேண்டும்
சோகமில்லா மனமும் வேண்டும்
சொர்க்கம் இப்புவியிலே வேண்டும்..

12.தனிமை
நான் தனிமரம்தான்
தனிமையும் ஒரு வரம்தான்
பல கிளைகளை நான் படைப்பேன்
பாசங்களை நான் கொடுப்பேன்
நேசமதைக் கோலைப் போட்டு
நந்தவன் சொல்லை ஏற்று
நாளுமதை நான் வளர்பேன்
நல்லதொரு உலகம் படைப்பேன்..

13.காதல்
உன்னை நான் காதலித்த நாட்கள்
கடந்துவிட்டன
என்னை நீ கண்ட காட்சியெல்லாம்
கலைந்துவிட்டது
நாம் கொண்ட கனவெல்லாம்
கரைந்துவிட்டது
நம் காதல் மட்டும் மீண்டும்
ஏனோ, மலர்ந்துவிட்டது

14.மனமே நீயாக
நானும்கூடப் பார்த்ததில்லைஅந்த
மனம் என்னும் ஒன்றைஅதை
மறக்க நினைத்த நேரத்திலேதான்
தெரிந்தது, என் மனமே நீ என்று
தவித்தேன் உயிருடன், மறந்தேன் நான்
மறக்க நினைத்த நிகழ்வினைக் கூட..

15.துணையானது
சில நினைவுகள் சிறிதாயினும்,
பல நினைவுகள் பெரிதாயினும்,
உன் நினைவுகளுடன் என் உயிர் சாயனும்
நாம் காதலில் மலர்வளையம் சூடனும்
காதல் அழியாதது, கனவோ கலையாதது
மனமோ மாறாதது உன் நினைவே துணையானது..

பவித்திரம்

6.உன் வாழ்க்கை
உனது வாழ்க்கை, உனது கொள்கை
உனது உரிமை, உனது உலகம்
உய்வது நீ, உயர்வதும் நீ
அழைப்பதும் நீ, உணர்வாய் நீ
நின்னலம், உன் வளம்
உன்பலம், உனது மூலதனம்..

7.எண்ணம்
பாக்களில் பலவகை
புன்னகை ஓர் புதுசுவை
பூக்களில் பல மணம்
பதறுமோ என் மனம்
சலிக்கிறது ஏழு வண்ணம்
விழிக்கிறது உன் எண்ணம்..

8.உணர்ந்துவிட்டேன்
காலம் கடந்து நான் வந்துவிட்டேன்
காகம் கரையும் நான் உணர்ந்துவிட்டேன்
காதல் கடந்து நான் வந்துவிட்டேன்
கல்லும் கரையும் நான் உணர்ந்து கொண்டேன்

9.வலிகள்
நெஞ்சமெல்லாம் பஞ்சத்தில் ஆழ்ந்தது
உன் அன்பின் ஆதரவின்றிக்
கொஞ்சம் கொஞ்சம் பாசம் அறிந்தது
உன் பார்வைக் கனலில்
கெஞ்சக்கெஞ்ச நேசம் அறிந்து
உன் வியர்வைத் துளியில்
மிஞ்சமிஞ்ச வலிந்து நிறைந்தது
உன்னால்தான் வலிகளும் நேர்ந்தன
நேற்றைய நாளைக் காலம் மறந்தது
நேர்ந்ததை எண்ணி நெஞ்சம் கலைந்தது
இன்றைய நாளை ஏற்காது நின்றது
இறுதியில் தான் கண்கள் சிவந்தன
செம்மண்ணில் பனித்துளி வழிந்தது..

10.நீங்காது
என்றும் நீங்காது உன்
நினைவு என்னுள்ளும்
என் நிறைவிலும் கூட.