வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

அன்பு(காதல்)

எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை

சிந்தனை

பொய் சொல்வது இரண்டாவது தீமைதான்.
ஆனால் கடன் வாங்குவதே முதலாவது தீமை.

கடுமையான போராட்டத்தின் பலனாகக்
கிடைக்கும் வெற்றிகளே மதிப்புடையவை.

அஞ்சாதே பெண்ணே

ஒரு அழகிய கிராமம். அழகிய மரங்களும் செடிகளும் மூலிகைத் தாவரங்களும் நிறைந்து காணப்படும். கமலம், கண்ணன் என்னும் தம்பதி அந்தக் கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை. அந்தப் பையன் இருபது வயதும் பெண் பதினேழு வயதும் உடையவள். அந்தப்பெண் மிகவும் பயந்த குணம் உடையவள். வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுக்கும் அஞ்சக்கூடியவள் பெண். அவள் குடும்பத்தில் உள்ள அண்ணன், பெற்றோர் என அனைவரும் அவளை ஏளனமாகப் பார்ப்பார்கள். ஆறுதல் கூற யாரும் இல்லை என வருந்துவாள். கல்லூரிக்குச் செல்வாள். விடுமுறை நாட்களில் கிராமத்தில் உள்ள மூலிகைச் செடிகளை ஆராய்ச்சி செய்வதற்காகச் செலவிடுவாள். ஒவ்வொரு மூலிகைச் செடியிலும் என்ன மருத்துவப் பயன் உள்ளது என்பதே இவள் ஆராய்ச்சி. இப்படியே இவள் வாழ்க்கை சென்றது. ஆனால் உயர்வும் எதிர்கொள்ளும் திறனும் இவளுக்கு வரவில்லை. பயன் என்னும் மடமை இவளைப் பின்தொடர்ந்து வந்தது.

ஒரு விடுமுறைநாளில் மூலிகை ஆராய்ச்சிக்காகக் காட்டிற்குச் சென்றாள். அங்கும் அவளுக்குப் பயம். இந்தக் காட்டிற்குள் ஏதேனும் வந்துவிட்டால் அதை எப்படி எதிர்கொள்வது. எனவே நான் சீக்கிரம் ஆராய்ச்சிகளை முடித்து வீடுதிரும்பவேண்டும் என்று நினைத்தாள். அவள் கண்ணுக்கு ஒரு குன்று தெரிந்தது. குன்றின் அருகிலும் அதன் மேலும் நிறைய நிறைய மூலிகைச் செடிகள் காணப்பட்டன. அதனருகில் அவள் சென்றாள். அங்குள்ள மூலிகைச் செடிகளை எடுத்துப் பார்க்கும்போது, அந்தக் குன்றின் அருகில் ஒரு சிறிய துளை உள்ளதைப் பார்த்தாள். அதனுள் மிகப் பழமையான சிறிய காகிதத் துண்டும் அதனடியில் மரத்தால் செய்யப்பட்ட சிறிய பெட்டி ஒன்றும் இருந்தது. பெட்டியினுள் ஒருசோடிப் பகடை இருந்தது. அந்தப் பகடையையும் துண்டுச் சீட்டையும் எடுத்துக்கொண்டாள். அந்தத் துண்டுச் சீட்டில் கிரேக்க எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. அவளுக்கு அந்த எழுத்துகள் புரியவில்லை. துண்டுச் சீட்டையும் பகடையையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றாள்.

மறுநாள் கல்லூரிக்குச் சென்றாள். மாலையில் வீடு திரும்பியவுடன் படிப்பு வேலைகளை முடித்தாள். தனது தாய் கமலம் இவளை உணவு உண்ண அழைத்தாள். சீக்கிரம் உணவு உண்டு படுக்கைக்குச் செல் என்றாள் தாய். படுக்கையறைக்குள் சென்றாள். திடீரென அவளுக்கு ஒரு நியாபகம். நான் எடுத்துவந்த பகடையில் விளையாடினாள். அந்தப் பகடையைப் பார்த்தவுடன் அதிர்ச்சி. பகடையில் 6, 4, 5 என்ற எண்கள் மட்டுமே இருந்தன. 1, 2, 3 ஆகிய எண்கள் இல்லை. ஆனால் ஏன் அந்த எண்கள் இல்லை என்று அவள் யோசிக்கவில்லை. பகடையை முதல்முறை உருட்டினாள். அப்பொழுது மணி இரவு 9. பகடையில் விழுந்த எண் 6. அந்தப் பகடை அவளை ஒரு புதிய இடத்திற்கு அழைத்துச் சென்றது. சில்லென்று தூய காற்று. மலைமீது இருந்து விழும் அருவி. அடர்ந்த காடுகள். இயற்கை எழில் மிகுந்து அப்பகுதி காணப்பட்டது. அவள் மகிழ்ச்சியாக இருந்தாலும் வீட்டிலிருந்த நாம் எப்படி இங்கு வந்தோம் என்பது அவளுக்குப் புரியவில்லை. இருந்தாலும் அந்த இயற்கை மிகுந்த இடத்தைப் பார்க்கும்போது அவளுக்கு ஒரு இன்பம். அப்படியே அங்கிருந்த கல்லின்மீது அமர்ந்தாள். திடீரென்று ஓடையில் ஒரு சலசலப்பு. மலையில் இருந்து விழும் அருவியின் சத்தம் அச்சலசலப்பால் கேட்கவில்லை. நீரோடையில் இருந்து ஒரு மிகப்பெரிய பாம்பு அவள் முன் நின்றது. அதிர்ச்சியும் பயமும் அவளை வெயிலில் விழுந்த பனிக்கட்டிபோல் உருக்கியது. அந்தக் கொடிய பாம்பிடமிருந்து எப்படியாவது மறைந்துகொள்ள வேண்டும் என்று ஓடினாள். மறுபடியும் பகடையை உருட்டினாள். 4 என்ற எண் விழுந்தது.

அவள் ஒரு பாலைவனத்திற்குச் சென்றாள். அங்கொரு புல்கூட இல்லை. அவளுக்கு மிகவும் பயம். இப்பொழுது நம் கிராமத்தில் என்ன நேரம்?. விடிந்திருக்குமோ! இங்கிருந்து எப்படிச் செல்வது?. இங்கிருந்து மீள வேண்டும் என்று பகடையை உருட்டினாள். பகடையில் விழுந்த எண் 5. அந்த இடம் அழகானது. விலங்குகள் அதிகம் இருந்தன. அணில்கள் மரங்களின் மீது ஏறிப் பழங்களைக் கொறித்துத் தின்னும் அழகான காட்சி. பறவைகள் கீச்சிடும் சத்தம். அவள் காதில் புல்லாங்குழலில் இருந்துவரும் ஓசையாகக் கேட்டது. திடீரென்று மலைகளை இயக்கவைக்கும் உயரமான உருவம் இங்கு வந்தது. அந்த உருவம் மனிதக் குரங்கு. கரிய நிறத்தில் மூழ்கி எடுத்ததுபோல அந்தக் குரங்கு இருந்தது. அவள் எப்படியாவது இந்தக் குரங்கிடமிருந்து எதிர்த்து மீள வேண்டும் என்று நினைத்து மயங்கிவிட்டாள். அந்தக் குரங்கு பழங்களைப் பறித்து அவள் அருகில் வைத்துவிட்டு, அவள் தலையைத் தடவிக்கொடுத்து அருகிலிருந்த ஓடை நீரை அவள் மீது தெளித்து அங்கிருந்து சென்றுவிட்டது. மயக்கம் தெளிந்த அவள் பழங்களை உண்டாள். அவளுக்கு என்ன நடக்கிறது என்று மீண்டும் புரியவில்லை. முதலில் ஏன் அந்தப் பாம்பு வந்தது, பிறகு யாருமில்லாப் பாலைவனம், அன்பான குரங்கு. இது ஏதோ காரணத்தால் நடந்திருக்கிறது. இவை என்னிடம் என்ன சொல்ல விரும்புகின்றன. காரணம் தேட ஆரம்பித்தாள். அவள் கையிலிருந்து தவறி பகடை கீழே விழுந்தது. எந்த எண்ணும் தெரியவில்லை. இருப்பினும் அவள் தனது வீட்டினுள் முன்பு எங்கு தூங்கிக் கொண்டிருந்தாளோ அங்கு அந்த அறைக்குள் சென்றாள்.

வீட்டிற்கு வந்த மகிழ்ச்சி இருப்பினும் அந்தப் பகடைக்குக் காரணம் தேட ஆரம்பித்தாள். அவள் மீண்டும் பகடையில் 6, 4, 5 என்ற எண்களை உருட்டி அதே இடத்திற்குச் செல்ல விரும்பினாள். சென்று அங்குள்ள கொடிய விஷயங்களை எதிர்கொள்ள விரும்பினாள். பகடை 6 உருட்டி மீண்டும் பாம்பு வந்த காட்டிற்குச் சென்றாள். அதே மலைமீதிருந்து விழும் அருவி. ஓடையின் சலசலப்புச் சத்தம் கேட்டது. பாம்பு வந்துவிட்டது. எதிர்கொள்ள வேண்டும் என்று மிடுக்காக நின்றாள். அங்கிருந்து வந்த பாம்பு, தன் தலையை அவள் முன் நீட்டியது. அவளோ கண்களில் சூரியனைப்போல் வெப்பத்தை வெளிப்படுத்தி, அஞ்சாதே என்று தனக்குள் வீர வார்த்தைகளைக் கூறினாள். அந்தக் கொடிய பாம்பை எதிர்த்து வீரத்திற்குப் பிறந்தவள்போல் ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பாம்பு பல துண்டுகளாக வெட்டப்பட்டு நீரோடையில் அடித்துச் செல்லப்பட்டது. பாலைவனம் பூப்பூத்தது. மனிதக் குரங்கு மாயமானது. துண்டுச் சீட்டில் இருந்த கிரேக்க எழுத்துகள் அவள் படிக்கக்கூடிய தமிழ் வார்த்தைகளாக மாறின. பகடையில் 1, 2, 3 ஆகிய எண்கள் தோன்றின. இவள் அதிர்ந்துபோனாள்.

முதலில் ஒரு பிரச்சினையை எப்பொழுது எதிர்கொள்ளத் துணிகின்றாயோ அப்பொழுது ஒரு தீர்வு கிடைக்கும். அந்தத் தீர்வு உனது வெற்றியாகும் என அந்தத் துண்டுச்சீட்டில் எழுதியிருந்தது. அதிர்ந்துபோனாள். அப்பொழுது யோசித்தாள். நான் முதலில் மறைந்துகொள்ள நினைத்தேன். பிறகு அந்தப் பிரச்சினையில் இருந்து மீளநினைத்தேன். இறுதியாக எதிர்கொண்டு வெற்றிபெற நினைத்தேன். அந்தத் துண்டுச் சீட்டில் இருந்தது உண்மையானது. பகடையை உருட்டி வீட்டிற்குச் சென்றாள். இந்தப் பகடை மற்றும் துண்டுச்சீட்டை அந்தக் குன்றில் வைக்கப் போனாள். குன்றின் அருகே சென்றவுடன் பகடை சாம்பல் ஆனது. பகடையுடன் அவளின் பயமும் அறியாமையும் சாம்பலாயின. துண்டுச் சீட்டில் இருந்த வாசகம் அப்படியே இருந்தது. ஏனென்றால் இவள்போன்ற பல பெண்களுக்குப் புதுமை ஏற்படுத்தும். அதனால் அந்தச் சீட்டைக் குன்றின்மீது பத்திரமாக வைத்துவிட்டு வந்தாள். பொழுது விடிந்தபோது மணி 6. அவளுக்குப் புதுமையாகவும் தெளிவாகவும் இருந்தது.

அவள் அன்றிலிருந்து மிடுக்கான நடையுடனும் கம்பீரத்துடனும் வெற்றிப் பாதையை நோக்கிப் பயணித்தாள். அஞ்சாத பெண்ணாக, பெண் சிங்கமாக மாறி தனது வாழ்க்கையில் வெற்றி பெற்றாள்.

வியாழன், 13 பிப்ரவரி, 2020

சிந்தனை

வெற்றியின் ரகசியம் எடுத்த செயலில் நிலையாக நிற்பது தான்.
பல அறிஞர்களுடன் உறவாடினால் நீயும் அறிஞனாவாய்.

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம் மனிதனை மாற்றுவதில்லை
அவனுக்குத் திரையிட்டு வைக்கிறது - ரெக்கோ போனி.

பணம்

எத்தனை காலம் உன்னை நினைத்து ஏங்கினாலும்
என்னிடம் மட்டும் நீ வருவதற்கு உன் மனம் விரும்புவதேயில்லை

புதன், 12 பிப்ரவரி, 2020

தாய்

பூமியும்
தாயும்
சமமானவர்கள்
இருவரும்
தம் மக்களைத் தாங்குகிறார்கள்

வெற்றி

பொதுவாக வெற்றி என்பது மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் முயற்சியைத் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்.

வாழ்க்கை

எடுத்துச் சொல்வதைவிட எடுத்துக்காட்டாக
வாழ்வதே சக்தி வாய்ந்தது - காஞ்சி மகா பெரியவர்

பவித்திரம்


12.உணர்ந்துவிட்டேன்
காலம் கடந்து நான் வந்துவிட்டேன்
காகம் கரையும் நான் உணர்ந்துவிட்டேன்
காதல் கடந்து நான் வந்துவிட்டேன்
கல்லும் கரையும் நான் உணர்ந்து கொண்டேன்.

13.மெய்தான்
கண்மூடித் திறக்கும் போதெல்லாம் நீ வந்தாய்
கண்னென்பதின்றியும் நீ என் நெஞ்சில் நின்றாய்
கண்கள் சொல்வது பொய்யானாலும்
கண்ணே நீ என்னை வென்றது மெய்தான்
இனி நம் வாழ்வோ தீபம் ஏற்றிய நெய்தான்

14.உன் பாசம் அறிந்தேன்
உன்னைக் கண்ட நொடியினிலே
நான் உனதானேன்!
உன்னைக் காணாத வலியினிலே
நான் உயிர் சாய்ந்தேன்!
உயிருறுகும் நிலையினிலும்என்
உள்ளிதையம் சொன்னதே
உன் பெயரையமனும் தவறிவிட்டான்
பாசக் கயிற்றை – நானும்
அறிந்து கொண்டேன்உன்
திடமான பாசக் கயிரை உயிரே.

15.தாமதம் வேண்டும்
உன் விழியால், நான் வீழ்ந்ததும்
என் வழியில், நீ நடந்ததும்
நம் காலத்தை, நாம் வென்றதும்
நம்முள் நாம் இணைந்ததும்,
நாமே இணையானதும், நம் இதயம்
நம்மைத் துறந்ததும், சிறகைக் கொண்டு
பறந்ததும்
நம் கனவில் நாம் கரைந்ததும்
காதல் அல்லவா
இனியும் தாமதம் இன்றி என்னை
அள்ளிச் செல்ல வாதலைவனே!.

16.உன்னை நான் சந்திக்கிறேன்
நான் சிந்திக்கும் ஒவ்வொரு நொடி சிந்திப்பிலும் நீ
என்னைச் சந்திக்கிறாய் நிலவாக
இவ்வுலகமே மாறியதே இருளாக! – என்னுடன்
இணைந்திடவே நீ வர வேண்டும்என்
ஜீவனின் ஒளியாக என் ஏழு
ஜென்மத்தின் வரமாக
காலங்கள் கரைந்து ஓடினாலும்,
கவிதையில் வரிகள் மாறினாலும்,
உன்னுள்தான் நான் வாழவேண்டும்
உன்னைத்தான் நான் உணரவேண்டும்
உயிரெங்கே ஓடினாலும்..
உறவெல்லாம் வாடினாலும்..
உன்னுள்ளத்தில் உயரவேண்டும்
உன் மடியில்தான் விழவேண்டும்..

17.நீங்காது
என்றும் நீங்காது உன்
நினைவு என்னுள்ளும்
என் நிறைவிலும் கூட.

பவித்திரம்


7.தனிமை
நான் தனி மரம்தான்
தனிமையும் ஒரு வரம்தான்
பல கிளைகளை நான் படைப்பேன்
பாசங்களை நான் கொடுப்பேன்
நேசமதைக் கோலைப் போட்டு
                     நந்தவன் சொல்லை ஏற்று  
நாளுமதை நான் வளர்பேன்
நல்லதொரு உலகம் படைப்பேன்

8.எண்ணம்
பாக்களின் பலவகை
புன்னகை ஓர் புதுசுவை
பூக்களில் பல மணம்
பதறுமோ என் மனம்
சலிக்கிறது ஏழு வண்ணம்
விழிக்கிறது உன் எண்ணம்..

9.காதல்
உன்னை நான் காதலித்த நாட்கள்
கடந்துவிட்டது
என்னை நீ கண்ட காட்சியெல்லாம்
கலைந்துவிட்டது
நாம் கொண்ட கனவெல்லாம்
கரைந்துவிட்டது
நம் காதல் மட்டும் மீண்டும்
ஏனோ, மலர்ந்துவிட்டது

10.மனமே நீயாக
நானும் கூடப் பார்த்ததில்லைஅந்த
மனம் என்னும் ஒன்றைஅதை
மறக்க நினைத்த நேரத்திலேதான்
தெரிந்தது, என் மனமே நீ என்று
தவித்தேன் உயிருடன், மறந்தேன் நான்
மறக்க நினைத்த நிகழ்வினைக் கூட

11.துணையானது
சில நினைவுகள் சிறிதாயினும்,
பல நினைவுகள் பெரிதாயினும்,
உன் நினைவுகளுடன் என் உயிர் சாயனும்
நாம் காதலில் மலர்வளையம் சூடனும்
காதல் அழியாதது, கனவோ களையாதது
மனமோ மாறாதது உன் நினைவே துணையானது


தமிழ்மொழி

அன்னை சொன்ன மொழி
ஆதியில் பிறந்த மொழி
இணையத்தில் இயங்கும் மொழி
ஈடிலாத் தொன்மை மொழி
உலகம் போற்றும் மொழி
ஊர்கூடி வியக்கும் மொழி
எட்டுத்திசையும் பரவிய மொழி
ஏட்டிலும் எழுதும் மொழி
ஐயத்தை நீக்கும் மொழி
ஒற்றுமை வளர்க்கும் மொழி
ஓதியே உயர்ந்த மொழி
ஔவையார் வளர்த்த மொழி
அஃதே நம் தமிழ்மொழி