குழந்தைகளின் முதல் நண்பன் பொம்மை. குழந்தைகளுக்குப் பொம்மைகளோடு விளையாடுவதும் உறவாடுவதும் அலாதியான ஆனந்தம். பார்க்கும் ஒவ்வொரு பொம்மையையும் வாங்கித்தரச் சொல்லி அடம்பிடிக்காத குழந்தைகளே இல்லை. தூங்கும்போது, குளிக்கும்போது என நாள் முழுக்க பொம்மைகளை உடன் வைத்திருந்தாலும் அவர்களின் ஆசை தீராது.
விலங்குகளை, பறவைகளை, பொருட்களை… மொத்தத்தில் வெளி உலகை குழந்தைகள் தெரிந்துகொள்ள உதவும் முதல் சாதனம் பொம்மைகளே. அந்தக் காலத்தில் மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை குழந்தைகளுக்குக் கொடுத்தார்கள். இப்போதோ, பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொம்மைகள்தான் குழந்தைகள் கைகளில் தவழ்கின்றன. இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளில் அதிக அளவில் காரீயம் உள்ளிட்ட நச்சுக்கள் கலந்திருப்பதாகத் தெரிவிக்கின்றன ஆய்வுகள்.
பொம்மைகளில் எது பாதுகாப்பானது, எது ஆபத்தானது எனக் கண்டறிந்து வாங்குவது அவசியம். விலை மலிவானது, எளிதில் கிடைக்கக்கூடியது என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல், எது குழந்தைக்கு அவசியம் என அறிந்து, வாங்கிக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளைக் கவரும் பொருட்கள்
பிரபல கார்ட்டூன் வடிவங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பைகளில், தாலேட்ஸ் (Phthalates) என்ற ரசாயனம் 3,000 பி.பி.எம் என்ற அளவுக்குக் கலந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்த பிளாஸ்டிக் பொருளாக இருந்தாலும் அதில், 1,000 பி.பி.எம் வரைதான் தாலேட்ஸ் கலந்திருக்க அனுமதி உள்ளது. ‘பாக்பேக்’ எனும் பைகளில் குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன்களை அச்சிட்டு, அதன் முன் வடிவத்தில் தாலேட்ஸ் பிளாஸ்டிக் பொருத்தப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் இந்தப் பொம்மையைப் பயன்படுத்தும்போது, வாயில்வைக்க வாய்ப்பு உள்ளது. எனவே தாலேட்ஸ் பிளாஸ்டிக் பொருத்தப்பட்ட பைகளைத் தவிர்ப்பது நல்லது.
குழந்தைகள் குளிக்கும் வாட்டர் டப்பில் ரப்பர் வாத்துகளை நீந்தவிடுவது உண்டு. குழந்தைகளைக் குளிக்கவைக்க பெற்றோர் செய்யும் யுக்தி இது. இந்த வாத்து பொம்மையில் 1,400 பி.பி.எம் தாலேட்ஸ் கலக்கப்படுகிறது.
இரும்பை ஈர்க்கும் அல்லது ஒட்டிக்கொள்ளும் காந்தங்களில் (Magnet) செய்யப்பட்ட பொம்மைகளைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. மிகச்சிறிய பொம்மைகளில்கூட இப்போது, காந்தம் இருக்கிறது. இதைக் குழந்தைகள் விழுங்கிவிட வாய்ப்புள்ளது. காந்தம் மற்றும் காந்தத்தால் தயாரிக்கப்படும் பொம்மைகளை 10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்குத் தரலாம்.
குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்படும் கிளிப்கள், பிரேஸ்லெட், மேலாடைகளில் தகதகவென மினுங்கும் ஜிகினா மற்றும் ஜிமிக்கிகள் பதிக்கப்பட்டு இருக்கும். இவை கை, முகம், ஆடைகளில் ஒட்டி அலர்ஜியை ஏற்படுத்தலாம். தெரியாமல் கண், வாயில் பட்டால், எரிச்சல் உணர்வும் ஏற்படும்.
ஃபர் பொம்மை பாதுகாப்பானதா?
ஃபர் பொம்மைகளில் தூசு அதிகமாகப் படிய வாய்ப்பு இருக்கிறது. இதை வைத்து குழந்தைகள் விளையாடும்போது தும்மல், வீசிங் அலர்ஜி, சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம். ஃபர் பொம்மை தூசுகளை ஈர்த்து வைத்துக்கொள்ளும். அதைத் தொடும்போதும் உதறும்போதும் தும்மல் மூலமாக நுரையீரல் வரை தூசுகள் செல்லும்.
குழந்தைகள், ஃபர் பொம்மைகளை வாயில் கடித்து, பஞ்சு போன்ற அதன் நூலைச் சப்பி விழுங்கவும்கூடும். இது, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். சாலையோரக் கடைகளில் வாங்கும் ஃபர் பொம்மைகள், தரமானவையாக இருக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. நாளடைவில் பஞ்சு போன்ற முடிகள் வீடு முழுதும் பரவி, உணவு, நீர் போன்றவற்றிலும் கலந்து, பாதிப்பை ஏற்படுத்தலாம்.
வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதாலும் இதே பிரச்னை வரும். விலங்குகளின் முடி, மூக்கு, வாய் மூலமாக உடலுக்குள் சென்று ஆஸ்துமா, வீசிங், நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம்.
கிரயான், கலர் பெயின்டிங்சீனாவில் தயாரிக்கப்படும் கிரயானில் ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) எனும் பிளாஸ்டிக் கெமிக்கல் உள்ளது. இது, காற்றில் பரவி குழந்தைகளுக்கு சுவாசம் தொடர்பானப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்தும்போது, நுரையீரல் வீக்கம், புற்றுநோய் வரலாம் என்கிறது அமெரிக்க சுகாதார நிறுவனம் (U.S. Occupational Safety and Health Administration (OSHA)).
தொடர்ந்து, பிளாஸ்டிக் பொம்மைகளை வாயில் வைப்பதால், அதிலிருக்கும் பெயின்ட் உரிந்து, வாய்க்குள் செல்லலாம். இந்தப் பழக்கத்தைக் குழந்தை தொடர்ந்து செய்தால், ரத்தசோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், சிறுநீரகம், கணையம், கல்லீரல் போன்ற உள் உறுப்புகள் பாதிக்கக்கூடும்.
பொம்மைகளை அருகில் வைத்து விளையாடலாம். ஆனால், வாயில் வைக்கக் கூடாது என்பதைக் குழந்தைகளுக்கு அறிவுறுத்துவது நல்லது.
பொம்மைகளை வாங்கும்போது பிராண்டட் பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கலாம். CE Mark, BS EN 71, Lion Mark போன்ற முத்திரைகள் கொண்ட வெளிநாட்டு பொம்மைகள் ஓரளவுக்குப் பாதுகாப்பானவை.
ஃபர் பொம்மைகளின் நூல் இழைகள் உதிர்கின்றனவா என உதறிப்பார்த்து வாங்கலாம். நூல் உதிராத பொம்மைகள் என்றாலும், சாலை ஓரங்களில் வாங்குவதைவிட பொம்மைக் கடையில் வாங்குவது பாதுகாப்பானது. ஃபர் பொம்மையைத் தவிர்த்து, நூலிழைகள் இல்லாத, சாஃப்ட் துணியில் வரும் பொம்மைகளை வாங்கலாம். பிளாஸ்டிக் பொம்மைகளில் 2, 3 அல்லது `V’, 7 எனப் பொறிக்கப்பட்டிருக்கும் எண்கள் இருந்தால், அவற்றை அவசியம் தவிர்க்கவும். எண் 1, 2, 4, 5 எண்கள்கொண்ட பொம்மைகளை வாங்கலாம். எடை இல்லாத மரபொம்மைகள் வாங்கலாம். இதில், செதில்கள் இருக்காது. புரியாத மொழியில் லேபிள் இருப்பவற்றைத் தவிர்க்கலாம்.
ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள்
இரும்பு ஸ்பிரிங், எலாஸ்டிக் ரப்பர் பாண்டு, எலாஸ்டிக் கயிறு கட்டிய பொம்மைகளைக் குழந்தைகள் இழுத்து விளையாடும்போது, கண், கை, கால்களில் சுளீரென அடிபட நேரலாம்.
குட்டி பொம்மைகள், அழகான வடிவில் இருக்கும் மெழுகு பொம்மைகளைக் குழந்தைகள் விழுங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
கூர்மையான முனைகள்கொண்ட பொம்மைகளால் ஆபத்து ஏற்படலாம். கண் போன்ற முக்கிய உறுப்புகள் பாதித்தால், குழந்தையின் எதிர்காலமும் மோசமாகும்.
பாலிஸ்டர், நைலான் துணிகளால் ஆன கைவினைப் பொம்மைகளைக் குழந்தைகள் வாயில்வைத்துச் சப்பினால், அந்த சாயங்கள் வயிற்றுக்குள் சென்றுவிடும்.
காரீயம், பாதரசம், காட்மியம் போன்ற உலோகங்கள் கலந்த பொம்மைகளை முற்றிலும் தவிருங்கள்.
பிஸ்பீனால் ஏ (Bisphenol A), வினைல் குளோரைடு (Vinyl chloride), டையாக்சின் (Dioxin), மற்றும் தாலேட்ஸ் (Phthalates) கலந்த பிளாஸ்டிக் பொம்மைகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.
வயதுக்கேற்ற பொம்மைகள்
0-3 மாதங்கள் – கண்களால் மட்டுமே பார்க்கும் வயது. அடர் நிறங்கள்கொண்ட திரைச்சீலைகள், ஊஞ்சலில் கட்டிவிடும் பொம்மைகள், பெரியவர் கை வைத்து அழுத்திச் சத்தம் ஏற்படுத்தும் பொம்மைகளைத் தரலாம்.
3-6 மாதங்கள் – தலைகுப்புற விழுந்து, நகர்ந்து செல்வதால், மென்மையான பொம்மைகள், நகர்ந்து செல்லும் பெரிய பொம்மைகளைத் தரலாம். பல் மருத்துவர் ஆலோசனையுடன், பற்களின் வளர்ச்சிக்கு உதவும் ‘டூத் டாய்ஸ்’ வாங்கித் தரலாம்.
6-9 மாதங்கள் – உட்கார்ந்து, நிற்கும் குழந்தைகளுக்கு, நடைவண்டி, பெரிய பந்து ஆகியவற்றைத் தரலாம்.
9-12 மாதங்கள் – நடப்பது, ஒடுவது எனச் சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு, கியூப்ஸ் விளையாட்டுப் பொருட்கள், பெரிய படங்கள் பதிந்த கதைப் புத்தங்கள், எடையில்லாத, அடுக்கிவைக்கும் பொம்மைகளைத் தரலாம்.
12- 18 மாதங்கள் – வண்ணம் தீட்டும் புத்தகம், படங்கள் இருக்கும் புத்தகங்களைக் கொடுக்கலாம். கலர் பென்சிலைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தக் கற்றுத்தருவது நல்லது.
பொம்மைகள்… கவனம்!
பிராண்டட் பொம்மைகள் மற்றும் பெயின்ட் உதிராத பொம்மைகளைக் கொடுக்கலாம்.
சாஃப்ட் டாய்ஸ்களைத் தரலாம். பி.வி.சி இல்லாத பொம்மைகள் ஓரளவுக்குப் பாதுகாப்பானவை.
நூலிழைகளால் செய்யப்படும் பொம்மைகள், எளிதில் தீப்பிடிக்கக்கூடியவை. இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
பெயின்ட் அடித்த பொம்மைகளாக இருந்தால், அது காரீயம் (Lead) கலக்காத பொம்மையாக இருக்க வேண்டும்.
எடை குறைவான பொம்மைகளைத் தேர்ந்து எடுக்கலாம்.
வண்ணம் தீட்டும் விளையாட்டுப் பொருட்களில், கெமிக்கல்கள் கலந்திருக்கக் கூடாது.
பெரிய பொம்மைகளை வாங்கித் தரலாம். இதனால், வாயில் வைத்து விழுங்குவது தடுக்கப்படும்.
குட்டிப் பந்து, கோலி போன்ற விளையாட்டுப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. அல்லது இந்தப் பொருட்களைப் பெற்றோர் பார்வையில் விளையாட அனுமதிக்கலாம்.
பேட்டரி பொருத்தப்பட்ட பொம்மைகள் என்றால், பேட்டரியைக் கழற்றாதவாறு கவனித்துக்கொள்ள வேண்டும்.
மர பொம்மைகளில் செதில் செதிலாக வந்தால் அவற்றைத் தரவே கூடாது. நன்கு மோல்டு செய்யப்பட்ட பொம்மைகளைத் தரலாம்.
மெட்டல் பொம்மையில் துரு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இயன்றவரை மெட்டல் பொம்மைகளைத் தவிர்க்க வேண்டும்.
கார், பைக் போன்ற பொம்மைகளைவிட பந்து, மனித வடிவில் உள்ள பொம்மைகளை வாங்கித் தரலாம்.
இன்றைய சூழலில் பலருக்கும் அறியும் வண்ணம் அருமையாக தொகுத்து தந்தமைக்கு நன்றி சகோ
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.
நீக்குபயனுள்ள பதிவு.. பலரும் படித்து படித்து பயனைடைய வேண்டுமென்ற உங்களின் நினைப்பிற்கு பாராட்டுக்கள்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.
நீக்குபயனுள்ள பதிவு...சகோ
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்கு