திங்கள், 18 ஜனவரி, 2016

சிறப்பு விருந்தினர் சொற்பொழிவு;



இந்தியப் பொருளாதாரம் மற்றும்  உங்கள் குறிக்கோள்;

முன்னுரை;


         அன்புடையீருக்கு வணக்கம்.(18.01.2016)  இன்று எங்கள் கல்லூரியில் வணிகவியல் துறையை சேர்ந்த மாணவிகளுக்கு கோயம்புத்தூர் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து  N.SENTHIL KUMAR  உதவிப் பேராசிரியர்  (வணிகவியல் துறை)  அவர்கள் சிறப்பு சொற்பொழி ஆற்றினார்.இந்தியப் பொருளாதாரம் மற்றும் உங்கள் குறிக்கோள் குறித்து  பேசினார்.

இந்தியப் பொருளாதாரம் ;

         இந்தியப் பொருளாதாரம் எதனால் பின்தங்கியுள்ளது.அதிலிருந்து வெளியேற மாணவிகளாகிய இளைய தலைமுறையின் முயற்சி மற்றும் தனி நபர் வருமானம் உயர்வு மற்றும்  இந்தியாவின் ஏற்றுமதி அதிகமாகவும் இறக்குமதி குறைவாக இருப்பதும்  மேலும்  சிலவற்றை பகிர்ந்தார்.கல்வி முறையை மாற்றியமைப்பதும்  அதாவது இன்றை கல்வி பழமையானது எனவே  மாணவர்கள் அதை மட்டுமே படித்துப் பட்டம் பெறுகின்றன.தனது பாடப் புத்தகத்தை தாண்டி நிறைய விவஷசங்களை கற்க வேண்டும் என்றும் .உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதை அருமையாக எடுத்துரைத்தார்.


குறிக்கோள்;

          பழிப்பேச்சு  பேசும் உதடுகறள் பேசிக்கொண்டு தான் இருக்கும்.நமது  கடமையை முழு முயற்சியுடன்  செய்து  முடிக்க வேண்டும் என்று அற்புதமாக கூறினார்.மேலும்  ஒரு  தகவலை பரிமாற்றம் செய்வது  பேச்சு மூலமாக இல்லாமல் எப்படி செய்து முடிப்பது என்பதையும் ஒரு வேளையை எப்படி உள்வாங்கி மற்றும்  விருப்பத்தோடு செய்வது பற்றியும் விளக்கினார்.நாம் இது வரை ஒருவர் கட்டாயமாக ஒரு குறிகோள் இருந்தால் தான் அதை அடைய முடியும் என்று கேட்டு இருப்போம் ஆனால் இன்று இந்த வகுப்பு மூலம் 4 குறிக்கோள் இருந்தார் கட்டாயம் ஏதோ ஒன்றை அடைய முடியும் என்றும் இதனால் இந்தியப் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் என்று கூறினார்.

விளையாட்டு மூலம் வகுப்பு;

         எங்கள் மாணவுகளுக்கு இதனை விளையாட்டு மூலம் அவர்களை ஈடுப்படுத்தி அருமையாக புரிய வைத்தார்.





முடிவுரை;

         இன்றை சூழலில் மாணவர்களால் இயன்றால் மட்டும் தான் இந்தியாவை மாற்ற இயலும் என்ற வகையில் அமைந்தது.மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மையே.எண்ணங்களை உயர்வாக வையுங்கள் அது மலையை விட உயர்வாக இருந்தாலும் தவறில்லை.தோல்விகளை கண்டு மனம் தளராமல் அந்த தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம்.ஏனென்றால் தோல்வுகளே வெற்றிக்கு ஏணிப் படி.முதலில்  நாம்  நம்முடைய வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் அதாவது  சுயமரியாதை.நாம் பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்பதை விட  சாதித்தோம் நாட்டுக்கு  உண்மையான குடிமகனாய் இருந்தோம் என்பதே சிறப்பு.இந்த  வகுப்பு முழுமையாக பயனாக அமைந்தது.எங்கள்  கல்லூரி முதல்வர்  கார்த்திகேயன் ஐயா,துறைத் தலைவர் வே.ராதிகா அம்மா மற்றும் வகுப்பு பொறுப்பாளர்  செல்வி அம்மா அனைவருக்கும் நன்றிகள் பல.இந்த வகுப்பை ஏற்படுத்திக் கொடுத்தற்கு..  


ஞாயிறு, 17 ஜனவரி, 2016

உழவு தொழில்நுட்பம் வரமா? சாபமா?



முன்னுரை;

பழங்காலத்தோடு ஒப்பிடுகையில் இன்றைய உழவு முறையானது முற்றிலும் வேறுபட்டது. எளிமையானது, சுலபமானது மற்றும் ஆபத்தானது. தொழில்நுட்ப வளர்ச்சியால் நெல் உற்பத்தியில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் பார்ப்போம்.

அவசர உலகம்;

நம் கையில் கடிகாரமா?

கடிகாரத்தின் கையில் நாமா?   

என்று குழம்பும் வகையில் காலத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். எல்லாவற்றையும் விரைவாக பார்த்துவிட்டு விரைவாகவே சென்றுவிடுகிறோம். அக்கால மக்கள் எல்லாம் நூறு வயது வரை வாழ்ந்தனர். நாமோ சில காலங்களில் நோய்வாய்பட்டு இறந்து விடுகிறோம். இதற்கு காரணம் நம் உணவு முறைகளே என்பது நமக்கு புரிவதில்லை. அக்காலத்தில் ஒரு வருடம் விளைந்த பயிர் இன்று மூன்று மாதத்தில் விளைகிறது. இது சாதகமான நிலை என நிலைக்கலாம். ஆனால் இது பத்துமாதத்தில் பிறக்க வேண்டிய குழந்தை மூன்று மாதத்தில் பிறப்பதற்கு சமம். இதனால் உடலுக்கு தீங்கே  விளைகிறது.

வரமா? சாபமா?

ஏர்க்கலப்பையை வைத்து உழுது, உழவர் சேற்றில் இறங்கி மிதித்து நிலத்தை சமன்செய்து, தகுதி வாய்ந்த விதையை தேர்ந்தெடுத்து தூவினர். ஆனால் இன்றோ அவர்கள் பார்த்து பார்த்து செய்த வேலைகள் கருவிகள் மூலம் எளிதில் செய்யப்பட்டது. அன்றோ நாற்றுநடும் போது அவர்கள் பாடிய நாற்றுபுறப் பாடல்கள், இன்று யாரும் அறிந்திடாத பொக்கிஷம் ஆகிவிட்டது. அவர்கள் உழவை நேசித்த விதமும், உழவில் அவர்களுக்கு இருந்த அர்ப்பணிக்கு உணர்வும், அவர்கள் பாடிய நாட்டுப்புற பாடல்களும் நமக்கு தெரியாமல் போய்விட்டது. நம் நாட்டின் முதுகெலும்பான உழவுத் தொழிலை நம் முன்னோர்கள் செய்த விதத்தை மறக்க வைத்த தொழில்நுட்பம் வரமா? சாபமா? என்று தெரியவில்லை. நம் வேலையை எளிதாக்கினாலும் நம் பண்பாட்டை மறக்கச் செய்தது.

நீரின்றி அமையாது உழவு;

விளைச்சல் பெருக முக்கிய ஆதாரமாக அமைவது நீர்தான். அத்தகைய நீர் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும், சுத்தமானதாக இருக்க வேண்டும். ஆனால் இன்று வயலுக்கு பாய்ச்சப்படும் நீர் எவ்வாறு இருக்கிறது? மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பயன்படுத்தப்பட்ட அசுத்தமான நீராக உள்ளது. ஆறுகள் எல்லாம் மனிதனின் செயல்பாட்டால் அசுத்தமாக உள்ளது. அசுத்தமான நீரை வயலுக்கு பாய்ச்சுவதால் மண் வளம் பாதிக்கப்படுகிறது, நெற்கதிர் பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நெற்கதிரை உட்கொள்ளும் போது நமக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

உயிர்கொள்ளும் உரம்;

பழந்தமிழர்கள் உரமாக இலை, தழை, மற்றும் விலங்குகளின் கழிவுகளைப் பயன்படுத்தினர். இதனால் விளைச்சல் பெருகியதோடு மட்டுமல்லாமல் சத்தானதாகவும் இருந்தது. ஆனால் இன்று செயற்கை உரங்களை பயன்படுத்துகின்றனர். இவைகளால் உடலுக்கு பெருந்தீங்கு விளைகிறது. மேலும் பயிர் பாதுகாப்பு என்னும் பெயரில் பயிர்களில் பூச்சிக் கொல்லிகளை அடிக்கின்றனர். இவை பூச்சிகளுக்கு உடனடி விஷமாகவும், மனிதர்களுக்கு நீண்ட நாள் விஷமாகவும் அமைகிறது. பூச்சிகளால் உண்ண முடியாத விஷத்தைத் தான் நாம் உணவு என உட்கொள்கிறோம். இவ்வாறு தொடர்ந்து பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி வந்தால் மண் வளம் பாதிக்கப்பட்டு விலை நிலம் பாலைவனமாக மாறிவிடும். அதன்பின் பசியை மறக்க மாத்திரையை பயன்படுத்த வேண்டி வரும்.

தொழில்நுட்ப வளர்ச்சி;

தொழில்நுட்ப வளர்ச்சியால் நன்மைகள் பல இருந்தாலும் தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. அவசர உணவு என்னும் பெயரில் எமனை நாமே அழைக்கிறோம். அனைத்து வகையான உணவு பொருளிலிலும் கலப்படம். அரிசியிலும் பிளாஸ்டிக் அரிசியைக் கண்டுபிடித்துவிட்டனர். வளர்ச்சி என்னும் பெயரில் அதிக அளவு செயற்கையைப் பயன்படுத்துவதால் இயற்கை எல்லாம் அழிந்து கொண்டே வருகிறது.

உணவே மருந்து என்பது மாறி மருந்தில் தான் உணவு என்றாகிவிட்டது.

இந்த நிலை மாறினால் மட்டுமே நோயற்ற வாழ்வை நம்மால் வாழ முடியும். அயல்நாடுகளில் எல்லாம் ஒவ்வொரு வீட்டின் மாடியிலும் விவசாயம் செய்கின்றனர். கட்டாயம் செய்ய வேண்டும் என்பது அவர்கள் கடமை. ஏனென்றால் அவர்களுக்கு விளை நிலங்கள் இல்லை. அதனால் மாடியில் விவசாயம் செய்கின்றனர். ஆனால் விளை நிலங்களை விலை நிலங்களாக மாற்றும் கொடுமை  நம் நாட்டில் மட்டுமே நடக்கிறது.

முடிவுரை;

மேற்கூறியவற்றையெல்லாம் சிந்திக்க வேண்டும். நம் நாட்டை வளமுடையதாக மாற்ற போராட வேண்டும்.
மாற்றங்களில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பர். உழவுக்கு மீண்டும் உயிரூட்ட வேண்டியது இளைஞர்களாகிய நமது கடமையாகும்.

வெள்ளி, 15 ஜனவரி, 2016

சங்க கால விவசாயம்


தமிழர் திருநாள் என்றால் நமக்கு நினைவு வருவது உழவும் உழவர்களும் தான். பழந்தமிழர் எவ்வாறு உழவு செய்தனர் என்பதை இலக்கியங்கள் வழி  பார்ப்போம்.

பொருள்;

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலைதிருவள்ளுவர்.
உலகத்தார் எத்தகைய தொழில் செய்தாலும் உணவிற்காக உழவரையே
சார்ந்திருப்பர். அதனால் உழவே முதன்மையான தொழில் என வள்ளுவர் கூறுகிறார்.

1.     உழுதல்;

உழுதல் என்றால் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள கடினத் தன்மைக் கொண்ட மண்ணை மென்மைத் தன்மைக் கொண்டதாக மாற்ற மேலும் கீழுமாகப் புரட்டுவது. இவ்வாறு செய்யும் போது மண்ணுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். விளைச்சல் பெருகும்.
"........... உறுபெயல்
தண்துளிக்கு ஏற்ற பல உழு செஞ்செய்
மண்போல் நெகிழ்ந்து"- அகநானூறு
குறிப்பிடுகிறது.

2.கலப்பை;

நிலத்தைப் பண்படுத்த உபயோகிக்கும் கருவி கலப்பை ஆகும். உறுதியாகிய மண்ணிணை மேல் கீழாக கலப்பது. இக்கலப்பையால் மிகக் கடினமாக உள்ள நிலப்பகுதியை உழுவதில் இடையூறு ஏற்ப்பட்டது. அதனால் ஏர்க்கலப்பையைப் பயன்படுத்தினர்.
"எங்க ஏரோட்டம் நின்னு போனா உங்கக்
காரோட்டம் என்னவாகும்"

3.சமன்செய்தல்;

நிலத்தை நன்கு உழுத பிறகு மேடு, பள்ளம் இல்லாதவாறு இயன்றவரை சரிசெய்வர். மேடான பள்ளங்களை மண்வெட்டியால் வெட்டித் தாழ்வான பள்ளங்களில் இட்டு உயர்த்துவர். இதனால் நிலம் சமனடையும். இவ்வாறு செய்வதால் நிலத்தின் நீர்ப்பாசனம் ஒரே சீராக இருக்கும். நன்றாக உழவு செய்த பிறகு சேற்றினை உழவர்கள் கால்களால் மிதித்து சமப்படுத்தினர்.
"............... செறுவின்
உழாஅ நுண்தொளி நிரவிய வினைஞர்" (210-211)
என்று பெரும்பாணாற்றுப்படைக் குறிப்பிடுகிறது.

4.விதைத்தல்;

நிலத்தை நன்கு பண்படுத்திய பிறகு விதை விதைப்பர். இச்செய்தி சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வந்துள்ளன. நெல் விதைத்தல், வரகு விதைத்தல், சாமை விதைத்தல் முதலியவை முல்லை மற்றும் மருத நில மக்களின் தொழில்கள் என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கதாகும்.
"பல்விதை உழவின் சில்ஏராளர்" (76:11) என்று பதிற்றுப்பத்தும், உழவர்கள் காலையில் விதைப்பதற்காகச் சிறிய கூடைகளில் விதைகளை எடுத்துச் சென்ற செய்தியை,
".............உழவர்
விதைக்குறு வட்டி போதொடு பொதுளப்" (155: 1-2)
என்று குறுந்தொகையும் குறிப்பிடுகிறது.
விதைப்பதற்கு உரிய வித்துகளைப் பழந்தமிழர்கள் நன்கு உலர (காய) வைத்ததற்கான சான்றும் கிடைக்கிறது. "வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்" (211:6) என்று அகநானூறு குறிப்பிடுகிறது. அதாவது, உழவர்களின் விதை நெல்லைப் போன்று கடம்ப மலர்கள் பாறையின் மீது நன்கு காய்ந்து கிடக்கிறதாம்.

5.நடுதல்;  

சேற்று நிலத்தில் நாற்றுகளைப் பரவலாக ஊன்றும் செயல் நடுதல்.
நடுவு செய்வோர் நடுவர் என்று நற்றிணைக் குறிப்பிடுகிறது.
நாற்றினைச் சேற்றில் அழுத்தி நடுவதை,
"நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த
 நடுநரொடு சேறி ஆயின்" ( 60: 7-8) - நற்றிணை

நடவு செய்தல் குறித்த செய்தி,
"முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில்" (212)- பெரும்பாணாற்றுப்படை  என்று சுட்டப்படுகிறது.

6.நீர்ப்பாய்ச்சுதல்;

வேளாண்மையின் வெற்றி, நீர்ப்பாசனத்தைப் பொறுத்து அமைகிறது. நீரின்றி அமையா உலகு என்பதை
நீரின்றி அமையா உழவு என்று கூறின் அது மிகையாகாது.
பாசனத்துக்குத் தேவையான ஆற்று நீர் வாய்க்கால் வழியாக ஓடி வயல்களில் பாய்ச்சப்படுகின்ற அறிவுத் திறத்தை,
"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி" - ஔவையார்
என்று கூறுகிறார்.

7. எருவிடுதல்:

உழவுத் தொழிலின் அடிப்படைச் செயல்களுள் ஒன்று எருவிடுதல் ஆகும்.
"ஏரினும் நன்றால் எருவிடுதல்" (1038 )- வள்ளுவர்
 எரு இடுதலின் இன்றியமையாமையைப் புலப்படுத்துகிறார். விளைச்சலைப் பெருக்கும் வகையிலும் மண் வளத்தைக் காக்கும் வகையிலும் இச்செயல் பழங்காலந்தொட்டே நடைபெற்று வருகிறது. பழந்தமிழர்கள் இயற்கை உரங்களையேப் பயன்படுத்தினர்.
குப்பைக் கூளங்கள் உரமாகப் பயன்படுத்தப் பட்டமையைச் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காண முடிகிறது.
தாது எரு மறுகின்ஒ- நற்றிணை
தாது எரு மறுகின் மூதூர்- அகநானூறு

உழுந்தின் வேர் முடிச்சுகள் நைட்ரஜன் சத்தைச் சேமித்து வைப்பதாக அறிவியலார் கூறுவர். இதைச் சங்க காலத்தில் பயிரிட்டுள்ளனர். உழுந்து பயிரிடப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளன.
சான்றாக,
".............உழுந்தின்
அகல இலை அகல வீசி"- நற்றிணை
"பூழ்க்கால் அன்ன செங்கால் உழுந்தினி"- குறுந்தொகை
"நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன"- ஐங்குறுநூறு

8. களையெடுத்தல்:

வேளாண் தொழிலில் பயிர் செய்யும் விளைபொருள்களுக்குத் தீங்குச் செய்யும் தாவரங்களும் அப்பயிர்களினூடே வளர்வதுண்டு. அவை விளை பயிர்களுக்குக் கிடைக்கும் நீர், உரம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வளர்கின்றன. இவற்றைக் களைகள் என்பர்.
"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்"- ஔவையார்
என்று குறிப்பிடுகிறார். இக்களைகளை நீக்குவது மிகவும் அவசியமானதாகும். இல்லையெனில் விளைச்சல் குறையும். பழந்தமிழர்கள் களைகளை நீக்கியமைக்குச் சான்றுகள் கிடைக்கின்றன.
"களைகால் கழீஇய பெரும்புன வரகின்" – அகநானூறு
 தினைப்புனத்தில் வளர்ந்த களைகளைக் களைக் கொட்டினால் பறித்து தினைப் புனத்தைத் தூய்மை செய்த செய்தியைக் குறிப்பிடுகிறது.

 

9. பயிர்ப்பாதுகாப்பு:

களைகளிலிருந்து பயிர்களைப் பாதுகாத்தது போல பூச்சிகள், விலங்குகள், பறவைகள் போன்றவைகளிடமிருந்தும் பயிர்களைக் காப்பது பயிர்ப் பாதுகாப்பு எனப்படும். பழந்தமிழர்கள் இப்பயிர்ப் பாதுகாப்பிலும் இயற்கையோடு இயைந்த முறைகளையே பின்பற்றி உள்ளனர். தினைப் புனம் காத்தல் போன்ற செயல்களைப் பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளாகக் கொள்ளலாம்.
"காவல் கண்ணினம் தினையே" -  அகநானூறு
குறிப்பிடுகிறது. தினைப் புனம் காத்த செய்திகளைச் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காணமுடிகிறது.

10. அறுவடை:

நெல் அறுவடை செய்த செயல் பெரும்பாணாற்றுப்படையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
"பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின்
தூம்புடைத் திரள்தாள் துமித்த வினைஞர்" -பெரும்பானுற்றுப்படை
என்ற வரிகளில் துமித்த வினைஞர் என்பது அறுவடை செய்யும் உழவரைக் குறிக்கிறது.
பழங்கால உழவர்கள் நெல்லை அறுத்து வந்து போராகக் களத்தில் குவித்து வைத்தனர். அதன் பிறகு கடாக்களை விட்டு நெல்லைப் பிரித்து எடுத்தனர். உழவர்கள் அறுவடை செய்த நெற்கதிர்களைக் கட்டாகக் கட்டிக் களத்திற்குக் கொண்டு செல்வர். இவ்வாறு கட்டாகக் கட்டும்பொழுது அரிந்த தண்டுப் பகுதிகளைத் தலைப்பு மாற்றி வைத்துக் கட்டுவதை இன்றும் காணமுடிகிறது.

11. தூய்மை செய்தல்:

நெல்லரிந்து, கடா விட்டு நெல்லை வைக்கோலினின்றும் உழவர்கள் பிரித்தெடுத்தனர். அங்ஙனம் பிரித்தெடுத்த நெல்லைக் காற்றில் தூற்றித் தூசு துரும்புகளை அகற்றித் தூய்மை செய்தனர். அவ்வாறு தூற்றும் பொழுது எழும்பிய தூசு துரும்புகள் இருண்ட மேகம் போல தோன்றியது என்பது அகநானூற்றுக் காட்சி.
"பொங்கழி முகந்த தாஇல் நுண்துகள்
மங்குல்வானின் மாதிரம் மறைப்ப" - அகநானூறு
விரைந்து வீசும் காற்றில் உழவர்கள், நெல்லைத் தூற்றினர். அதிலிருந்து பிரிந்து சென்ற தூசு துரும்புகள் உப்பளப் பாத்திகளில் வீழ்ந்ததை,
"கடுங்காற்று எறிய, போகிய துரும்பு உடன்
காயல் சிறுதடிக் கண்கெடப் பாய்தலின்" - அகநானூறு
காட்டுகிறது.எனவே, உழவர்கள் நெல்லை அரிந்து, கடாவிட்டுத் தூற்றித் தூய்மை செய்தனர் என்பது புலனாகிறது.

முடிவுரை:

இதுகாறும் கண்ட செய்திகளைத் தொகுத்து நோக்குமிடத்து தமிழர்களின் மரபுசார் உழவுத் தொழிலை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது. பழந்தமிழரின் உழவியல் சிந்தனைகள் இன்றைய அறிவியல் சிந்தனைக்குப் படிக்கற்களாக இருந்துள்ளமை விளங்குகிறது. மேலும், பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்த உழவுத் தொழிலையே செய்து வந்தனர் என்பது புலனாகிறது.