காபி மற்றும் தேநீர்
முன்னுரை
காலை எழுந்ததும் மற்றும் மாலை நேரத்திலும் நம்மில் பலருக்கு காபி அல்லது டீ குடித்தால் தான் அடுத்த வேலையை செய்ய முடியும். அதை குடிக்க சற்று தாமதம் ஆனாலும் அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது.
காரணம்
காபி அல்லது டீ மனிதனின் நரம்பு மண்டலத்தை உற்சாகப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதன் காரணமாகவே காபி அல்லது டீ குடித்தால் நாம் உற்சாகமாக உணர்கிறோம். காபி நம் மூளையில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டி புத்துணர்வு அடையச் செய்கிறது. அதனால் நாம் சோர்வாக உணரும் போது காபி அல்லது டீயை குடிக்கிறோம். காபியில் காபிஃன் என்கிற வேதிப்பொருள் இருக்கிறது. இது ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால் தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
காபி அல்லது டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
தினமும் இரண்டு கப் காபி குடித்தால் 14% பக்கவாதம் வராமல் தடுக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பார்கின்சன் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய் வராமல் தடுக்கிறது.
காபியில் உள்ள ஆன்டிஆக்சிடன்டுகள் பாதிப்படைந்த செல்களை புதிப்பித்து கொலாஜன் அளவை அதிகரிப்பதால் சருமம் பொலிவாகவும், மென்மையாகவும் இருக்கும்.
மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தைக் காபிஃன் குறைப்பதால் மன அழுத்தம் குறையும். காபியில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ அதே அளவு டீ குடிப்பதிலும் இருக்கிறது.
தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குச் சரியான அளவில் டீ குடித்து வந்தால் அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மேலும் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளையும் குறைக்குமாம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
காபி அல்லது டீயை அளவாக குடித்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு நாளைக்கு இரண்டு முறை டீ குடித்தாலோ அல்லது காபி குடித்தாலோ எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதிகமாக காபி அல்லது டீயை குடித்தால் அமிர்தமே நஞ்சாவது போல் இதனாலும் பல பாதிப்புகள் ஏற்படும்.
காபி அதிகமாக குடித்தால் இரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து இரத்தசோகை ஏற்படலாம்.
காபியில் இருக்கும் வேதிப்பொருட்கள் இதய வால்வுகளை விறைப்படையச் செய்து பெரும் பாதிப்பை உண்டாக்கலாம்.
சிலர் தலைவலியாக இருந்தால் காபி அல்லது டீயை குடிப்பர். தலைவலிக்கு அதிகமாக காபி அல்லது டீயை குடித்தால் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.
சிலருக்கு தூக்கமின்மை ஏற்படும். குறித்த நேரத்தில் காபி அல்லது டீ குடிக்கத் தவறினால் பதற்றம் உண்டாகும். மேலும் எலும்பின் உறுதியை பாதிக்கும். பற்களின் சிதைவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. ஏனெனில் காபி அல்லது டீயை அதிக சூடாக குடிப்பதால் பற்கள் பலம் இழக்கிறது.
காபி அல்லது டீயுடன் நாம் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து குடிக்கிறோம். நாம் சாப்பிடுகிற உணவிலேயே நமக்கு போதுமான அளவு சர்க்கரை கிடைத்து விடும். நாம் காபியில் அல்லது டீயில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது.
காபி அல்லது டீயை அதிகமாக குடிப்பவர்கள் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர். அதை குடிக்கத் தவறினால் அவர்களுக்கு பைத்தியமே பிடித்து விடுவது போல் இருக்கும்.
முடிவுரை
எதையும் அளவாக சாப்பிட்டால் நமக்கு நன்மை தரும். நன்மைதானே என்று அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அதுவே நமக்கு விசமாக மாறிவிடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.