புதன், 26 டிசம்பர், 2018

நிலையில்லாத வாழ்க்கை 🌏🌏



     

இன்று இரவு நாம் தூங்கிய தூக்கதில் இருந்து காலை எழுந்தால் அது ஒரு புதிய நாளின் தொடக்கம் இல்லையெனில் மரணம் என்னும் புதிய வழியின் தொடக்கம். இந்த பதிவை எழுத தூண்டியது என் தோழி தந்தையின் மரணம். காலை சென்றவர் வீடு திரும்பவில்லை இரவு 11மணிக்கு அவர் இறந்து போனார் என்ற செய்தி தான் வந்தது. இப்படி நிலையில்லாத வாழ்கை தான் நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கை. இறைவன் கொடுத்த இந்த வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக, பிறர் பொருள் மீது ஆசை கொள்ளாமல் , பிறரின் மனதை புண் படுத்தாமல், குறை கூறாமல், பெற்றோரை மகிழ்வித்து வாழ வேண்டும். 

செவ்வாய், 25 டிசம்பர், 2018

மகளிர் முன்னேற்றம்

இதிகாசங்கள் புராணங்கள் என அனைத்தும் பெண்களை அடிமைப் படுத்தியிருக்கிறது.
அதற்கான சான்று.

சூதில் பணயமாக தன்னை வைத்த தருமனைப் பாஞ்சாலி மன்னித்தாள்.

நடுக்காட்டில் நள்ளிரவில் விட்டு விட்டு ஓடிய நளனைத் தமயந்தி மன்னித்தாள்.

நெருப்பு குளியல் நடத்த சொன்ன ராமனின் சிறுமையை சீதை மன்னித்தாள்.

மாதவியிடம் மையலுற்று கைப் பொருளை இழந்து வந்த கோவலனைக் கண்ணகி மன்னித்தாள்.

ஆனால்.

இந்திரனிடம் தன்னை இழந்த அகலிகையை மன்னிக்க மனமில்லாமல் கௌதம முனிவன் கல்லாக்கினான்.

ரேணுகையை மன்னிக்காத ஜமதக்னி மகன் பரசுராமனை அழைத்து தாயின் தலையைத் துண்டிக்க செய்தார்.

ஏங்கிய பெண்களின் கைகள் எல்லாம் இன்று ஓங்கி இருக்கிறது.

அறிவியல் முதல் ஆன்மீகம் வரை

பொறியல் முதல் பொறியியல் வரை அனைத்திலும் பெண்கள் சாதிக்கிறார்கள்...

பேச்சுரிமை எழுத்துரிமை என அனைத்தும் ஒரு காலத்தில் மறுக்கப்பட்டது.

ஆனால் இன்று பெண்கள்

பாரதி கண்ட புதுமைப்பெண்களாகவும்.

பெரியார் கண்ட புரட்சிப் பெண்களாகவும் எல்லோரும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இது எம்முடைய கல்லூரியின் 1000 வது வலைப்பதிவு.

பெண்களுக்கு இன்று எல்லா உரிமைகளும் கிடைத்து விட்டது.

அவர்கள் எங்கும் எல்லாவற்றிலும் சாதிக்கிறார்கள் என்பதற்கு நாங்களும் ஒரு சான்று தான்.

வானமும் எங்களுக்கு தொட்டு விடும் தூரம் தான்.
இனி அதையும் நாங்கள் எங்கள் உழைப்பைக் கொண்டு எட்டிப் பிடிப்போம்.

ஊழலின் தொடக்கம்

நாம் எல்லோரும் கோடி கோடியாய் பணம் பரிமாறுவதைத் தான் ஊழல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் உண்மையான ஊழல் என்பது எதிலிருந்து தொடங்குகிறது தெரியுமா.

மளிகை கடைக்காரரிடம் ஒரு ரூபாய் சில்லரைக்கு பதிலாய் மிட்டாயை வாங்குகிறோம் அல்லவா அங்கு தான் ஊழலுக்கு தொடக்கப் புள்ளி வைக்கப்படுகிறது.

இனிமேல் சில்லரைக்கு பதிலாய் மிட்டாய்களை வாங்காமல் அந்த சில்லரைகளை சேர்த்து வைத்து பேனா வாங்கி நாளைய பாரதத்தின் தலையெழுத்தை மாற்றுவோம்.

கண்ணியம்

கல்லூரிச் சுற்றுலாவிற்காக ஊட்டி சென்றிருந்தோம்.
எல்லா இடங்களையும் பார்வையிட்டு விட்டு இல்லூரியை நோக்கி புறப்பட்டோம்.
எனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் உனக்கு அக்கா யாரும் இருக்கிறார்களா மா என எங்களை வழிநடத்திச் சென்ற வழிகாட்டி கேட்டார்.
அதற்கு அவள் இல்லை என பதில் கூறினாள்.
அவர் அவருடைய அலைபேசியில் இருந்து ஒரு புகைப்படத்தை காட்டி இந்த பெண் போலவே அந்த பெண்ணும் இருந்ததால் தான் கேட்டேன் என்று புகைப்படத்தைக் காட்டினார்.
இந்த பெண்ணைப் போல இங்கு யாரையோ பார்த்தேன் அதனால் தான் கேட்டேன் என்று சொல்லி திரும்பி பார்த்தார்.

உடனே எங்கள் வகுப்புப் பொறுப்பாசிரியர் இவுங்க எல்லாரும் என் புள்ளைங்க. என் அணுமதி இல்லாமல் யாரையும் நீங்க திரும்பி  கூட பார்க்க கூடாது அவர்கள் அனைவரையும் அவர்கள் பெற்றோர்கள் என்னை நம்பி அணுப்பி வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் நான் தான் பொறுப்பு என்று சொல்லி அவரிடம் பேசினார்.

அவர் இவுங்க எல்லாரும் என் பிள்ளைங்க என்று சொல்லும் போதே எங்கள் மாணவிகளின் மனதில் மகிழ்ச்சி உச்சத்திற்கு சென்றது.

இது ஒரு சிறிய சம்பவமாக இருந்தாலும் அவர் மேல் இருந்த மரியாதை மேலும் ஒரு படி உயர்ந்தது.

உண்மையிலெ இது போன்ற ஆசிரியர்களை எல்லாம் பார்க்கும் போது மிகுந்த மனமகிழ்வாய் இருக்கிறது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர் எங்கள் பொறுப்பாசிரியர் சங்கர் சார்.

பழைய பஞ்சாங்கம்

செவ்வாய் கோளுக்கும் சென்று வாழ முடியுமா என்பதை பார்த்து விட்டு வந்து விட்டோம்.
ஆனால் இன்னும் செவ்வாய் தோஷம் எனும் பெயரில் பழைய பஞ்சாங்கத்துக்கு அடிமையாயிருக்கிறோம்.