வாழ்க்கை பயணம் எங்கே தொடங்கும்.? எங்கே முடியும் என்று யாராலும் சொல்ல முடியாது.. கடைசி வரை எதை தேடுகிறோம்.? எதற்காக இந்த பயணம்.? என்று கூட தெரியாமல் இருக்கிறோம்..
வாழ்க்கையில் நாம் கற்றுக் கொண்டதை விட நமக்கு கற்பிக்கப்பட்டவை தான் அதிகம். ஒவ்வொரு நபர்களும் ஒவ்வொரு அனுபவம். அனுபவங்களே நம்மை செதுக்குகிறது.
நான் எதை பற்றி எழுதுவது என்று தெரியாமல் தான் எழுத துவங்கினேன்.. இப்பதிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பல நினைவுகளையும் வெளிப்படுத்தும் என்று நம்பிக்கையுடன் எனது தமிழ் உறவுகளோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
கல்லூரி சேர்ந்த முதல் நாள். பல பல கற்பனை கனவுகளோடு உள்நுழையும் சாதரண மாணவி. கல்லூரியில் கிடைத்த ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் உதவியோடு நடைப் பழகும் மாணவி. முதலாமாண்டு படித்து கொண்டிருக்க தமிழ் மீது ஏற்பட்ட ஆர்வம் அதற்கு சரியான உந்துதலாக அவளது ஆசிரியர் துணை நிற்க. தமிழ் தட்டச்சு பயில துவங்குகிறாள். அவளின் ஆர்வம் தமிழ் தட்டச்சு மூலம் வலையுலகிற்கு அறிமுக செய்யப்படுகிறார். அவரின் ஆசிரியரின் உறுதுணையாக இருக்க பல சமூகத் தளங்களில் தனது நிழற்படங்கள் மூலமும் உண்மை முகவரியுடனும் வலம்வர துவங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் புதுப்புது நண்பர்கள். அனைவரும் அறிவு மற்றும் அனுபவத்தில் சிறந்தவர்கள். தவறுகளை சுட்டிக் காட்டி திருத்தவும் ஒரு பெரும் நட்பு வட்டம் கிடைக்கிறது. பெண்கள் சமூகத் தளங்களில் இருக்க இயலாது என்பதை மாற்றி அமைக்கப்பட்டது அவரின் ஆசிரியர் மூலம் தான்.
இதுவரை 2500 - க்கும் மேற்பட்ட நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் என வலம்வரும் மாணவி. மூன்று முறை வலைப்பதிவர் என்ற ஆர்வத்தை பாராட்டி விருதுகளும் மூன்று கல்லூரிக்கு வலைப்பதிவர் என்ற முறையில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றும் தமுஎகச - வில் ஒரு முறை சிறப்பு பேச்சாளராகவும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் மாநில மாணவிகள் ஒருங்கிணைப்பாளராகவும் ஈரோடு வாசகசாலை சிறப்பு வாசகராகவும் என பல இடங்களில் தனித்துவமாக திகழும் அந்த சாதாரண மாணவி இப்போது சாதனை மாணவியாக உங்கள் முன்பு நான் வைசாலி செல்வம்.
கே. எஸ். ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவியான நான் வைசாலி செல்வம் என்ற பெயருடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் இணையத்தில் வலம்வருகிறேன்.இதற்கு காரணமாக இருந்த எமது கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் என்னை ஊக்குவித்த எமது கல்லூரி பேராசிரியர்கள் அனைவருக்கும் அன்பு கலந்த நன்றிகளும் என்னை சகோதரியாகவும் தோழியாகவும் உற்சாகப்படுத்திய எமது சகோதரிகளுக்கும் எனது தமிழ் எழுத்துகளை வாசித்து பிழைகளை சுட்டியும் என்னை வளர்த்து கொண்டிருக்கும் எனது தமிழ் உறவுகளாகிய வலைப்பதிவர் அனைவருக்கும் கனிவான நன்றிகள்.
என்னை பெற்றெடுத்த தாய் தந்தைக்கும் உடன்பிறப்புகளும் நன்றிகள். எல்லாருக்கும் நன்றிகள் சொல்லி விட்டேன். ஆனால் ஒருவருக்கு சொல்லவில்லை. ஆம் என்னை பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக பல முறை அறிமுகப்படுத்தியவர் ஒருவர் இருக்கிறார்.என்னை பெற்றவர்களை விட என்னை பற்றி தெரிந்தவர் அவரே. எனக்கு தெரியாது எனக்குள் என்ன திறமை இருக்கிறது என்று. ஆனால் எனக்குள் இருந்த திறமையை வெளிப்படுத்த அவரால் மட்டுமே முடிந்தது.
எனது வாழ்நாளில் நான் அடைந்த மிகப்பெரிய பொக்கிஷம் தான் அவர். எனது குரு என்பதை விட எனது வெற்றிகளின் தந்தை என்று சொல்வதில் மகிழ்கிறேன். ஆம் அவர் வேறு யாருமில்லை தங்கள் அனைவருக்கும் அறிமுகமானவர். முனைவர் இரா. குணசீலன் வலைப்பதிவராக உங்கள் அனைவருக்கும் அறிமுகமானவர். என்னுடைய செயல்களின் வெற்றிக்கு தந்தை இவரே.
மூன்றாண்டு எனக்கு கிடைத்த அங்கீகாரம் இவரையே சாரும். இப்பதிவு என்னை பற்றிய தற்பெருமை அல்ல. எமது கல்லூரியின் முன்னாள் மாணவியாக எமது கல்லூரியில் நான் அடைந்த மாற்றங்கள். எமது கல்லூரி என்னை மட்டுமல்ல என்னை போல பல மாணவிகளின் தனித்திறமைகளை கண்டுபிடித்து ஊக்குவிக்கும் இடமாக பார்க்கிறேன் அதனை வெளிப்படுத்தவே இப்பதிவு.
குருவிற்கு நிகரில்லை குருவின்றி நிறைவில்லை.எமது கல்லூரியே எனது வாழ்க்கையின் முதல் திருப்புமுனை..