செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

ஒன்றா, பலவா பிறப்புக்கள்?


Image result for karuppaiyil ulla kuzhanthai

 பொதுவாக இயற்கையின் நிகழ்வுகளில் ஒரே ஒரு முறை மட்டும் நடக்கக்கூடிய நிகழ்வு என்று எதுவும் இல்லை. எல்லா நிகழ்வுகளும், அனைத்திலும் திரும்பத் திரும்ப நடக்கக் கூடியவைகள் ஆகும். ஒரு முறை மழையாக பூமியில் விழுந்த நீரானது மீண்டும் பல முறை மழையாக பூமியை வந்தடையக் கூடிய ஒன்றாகும். பிறப்பு மட்டும் ஏன் ஒரு தடவையோடு நின்று விடவேண்டும்!

 ஒரு ஆத்மா என்பது ஒரு ஜீவன் ஆகும். அந்த ஆத்மாவிற்கு உடல்கள் மாறி மாறி அமைவது, அதற்கு புதுப்புது அனுபவங்களை கற்று தருவற்கு தான். ஒருவன் பள்ளிக்கு ஒரு நாள் சென்றால் அனைத்தும் கற்றுவிட முடியாது, திரும்பத் திரும்ப சென்றால் தான் கற்றுக்கொள்ள முடியும்.

 ஆத்மாவானது பரிபூரணத் தன்மை அடையும் வரையில் பிறந்துகொண்டே இருக்கும் என்பது இயற்கையின் பேரமைப்பாகிறது.

 ஒரு பிறப்புதான் உண்டு என்பது ஆத்மாவுக்குத் துவக்கமும் முடிவும் உண்டு. மனிதனுக்கு ஒரே ஜென்மத்தைக் கொடுத்து விட்டுப் பிறகு அவனுடைய பாவபுண்ணியத்துக்கு ஏற்பக் கடவுள் அவனை நரகத்திலோ, சொர்க்கத்திலோ நிரந்தரமாக வைத்து விடுகிறார் என்பதும் பொருந்தாது.

 ஒரு ஜென்மம் என்கிற குறுகிய காலத்தில் செய்த குற்றத்துக்கு முடிவில்லாத நரகவேதனை என்ற தண்டனையைக் கருணையுடையவன் விதிக்கமாட்டான். மானுட ஆட்சியிலேயே அத்தகைய கொடுமையில்லை. குற்றத்துக்கேற்ற தண்டனையும் நல்ல மானுட ஆட்சி முறையானது அளிக்கிறது.

 மறுபிறப்பு என்ற புதிய சந்தர்ப்பத்தைக் கடவுள் கொடுக்காவிட்டால் அவன் கொடியவன் என்ற குற்றத்துக்கு ஆளாவான். பேரறிவும், பேரளுமுடைய கடவுள் அப்படி ஒரு ஜென்மத்தை மட்டும் கொடுத்து மனிதனுடைய முன்னேற்றத்தைத் தடைப்படுத்த மாட்டார். பூரணமாய் ஆராய்ந்து பார்த்தால் ஜீவர்களுக்குப் பல பிறவிகள் உண்டு என்னும் கேட்பாடுதான் யுக்திக்கும் அனுபவத்துக்கும் பொருந்தும்.

பொறுமை


           


நான் படித்ததில் என் மனம் கவர்ந்த ஒரு குட்டி கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அந்த கதை;
      அது ஒரு இனிய காலைப்பொழுது. மனைவி தன் கணவருக்கும் மகனுக்கும் உணவு பரிமாறுகிறார். மகன் வேலைக்குச் செல்ல தாமதமாகிவிட்டதால் வேகமாக உணவு எடுத்துக் கொண்டு இருக்கிறார். அப்பொழுது வெளியில் ஒரு சிட்டுக் குருவி இறை தேடிக் கொண்டு இருக்கிறது. அப்பா அந்தக் குருவியை சுட்டிக் காட்டி ’இதன் பெயர் என்ன என்று?’ கேட்கிறார். அதற்கு மகன் சிட்டுக் குருவி’ என்று பதில் அளிக்கிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு தந்தை மீண்டும் மகனிடம் அந்தப் பறவையை சுட்டிக் காட்டி ‘இதற்கு பெயர் என்னவென்று?’ கேட்கிறார். சற்று பொறுமையை இழந்த மகன் ‘சிட்டுக் குருவி’ என்று கோபமாக கூறினார். மீண்டும் தந்தை அவ்வாறு கேட்க கோபமடைந்த மகன் ‘அம்மா! அப்பாவுக்கு வேலையே இல்லையா? கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்கிறார்.’ அம்மா நீங்களாவது அப்பாவிற்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு வேலைக்குச் சென்றான்.
          அவன் சென்ற பின்பு கணவன் தன் மனைவியிடம் கூறினார் ‘இது போலத் தான் அவன் சிறு வயதில் கேட்டபொழுது நான் பொறுமையை இழக்காமல் பதிலளித்தேன்.’ ஆனால் இந்த காலத்து இளைஞர்களிடம் பொறுமை என்பதே இல்லை என்று கூறினார்.
            இந்தக் கதை என் மனம் கவரக் காரணம் இதில் சொல்லப்பட்ட கருத்தே. எனவே பொறுமையுடன் செயல் பட்டால் எதையும் வெல்ல முடியும்.
















திங்கள், 27 பிப்ரவரி, 2017

குழந்தைகளை முதலில் அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது ஏன்? 


Image result for vijayadhasami
 எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமாக குழந்தைகள் கற்கும்போது நமது இந்து சமயத்தில் இதனை சடங்காக பின்பற்றுவது வழக்கம். அதன் முக்கியத்துவத்தை பார்க்கலாம்.

 குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கும் ஞானத்தின் தேடல் என்ற நிகழ்வானது இந்தியாவில் ஒரு பாரம்பரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது. பல மாநிலங்களில் இந்த நிகழ்வானது மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

 ஞானத்தின் தேடலில், பள்ளியில் சேரும் முதல் நாள் நெல் அல்லது அரிசியில் குழந்தையை எழுத்துக்களை எழுதச் சொல்லி பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்து வைப்பார்கள்.

 மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் கல்வி ஆகும். இந்த கல்வி கற்பதன் மூலம் ஒருவர், பரந்த உலகில் அறிவு மற்றும் ஞானத்தை தேடத்தொடங்குகின்றார்.

 அன்னை சரஸ்வதிக்கு பூஜை செய்து, நாம் நம்முடைய ஞானத்தேடலுக்கான முதற்படியில் தவழ ஆரம்பிக்கிறோம். கல்வியறிவின்மை மற்றும் அறிவின்மை என்னும் இருளை நாம் வெற்றி கொள்ளப்போவதை மறைமுகமாக உணர்த்தும், இந்த நிகழ்வை இந்தியாவில் பல மாநிலங்களில் வெற்றியின் அடையாளமான விஜய தசமி அன்று நிகழ்த்தப்படுகிறது.

 இச்சா, கிரியா மற்றும் ஞானம் என்ற மூன்று சக்திகளும் இந்நாளில் ஒன்று சேர்ந்து இருளை எதிர்த்துப் போராட நாம் அனைவருக்கும் உதவுகின்றன. குழந்தைகள் இந்த நாளில் தான் முதன் முதலில் எழுதத் தொடங்குகின்றனர். அவர்கள் தங்களுடைய பெயர் மற்றும் எழுத்துக்களை எவ்வாறு எழுதுவது என்பதை கற்றுக்கொள்கின்றனர்.

 அவர்கள் மெதுவாக ஒரு வாக்கியத்தை எவ்வாறு உருவாக்குவது எனக் கற்று இறுதியாக தங்களுடைய எண்ணங்களை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதையும் கண்டுபிடிக்கின்றனர். எனவே இந்த நாள் உங்கள் குழந்தைகளின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.

 ஓங்காரம் ஒரு செயல் மற்றும் எண்ணத்தின் தொடக்கம் மற்றும் இறுதியாக விளங்குகின்றது. மேலும் இது நித்தியத்தை குறிக்கின்றது.

 எனவே, ஒரு குழந்தை ஓம் என்கிற வார்த்தையை எழுதி தன்னுடைய ஞான வேட்கையை தொடங்குகின்றது. இது சமஸ்கிருதத்தில் பீசாட்ஞ்சரமாக கருதப்படுகின்றது. இதை முதன் முதலில் எழுதுவது ஒரு சிறந்த தொடக்கமாக கருதப்படுகின்றது.

 ஆரம்பத்தில், குழந்தைகள் தங்களுடைய குருக்குலத்தில் ஓம் என்கிற சொல்லை மணலில் எழுதி தங்களுடைய எழுத்தறிவித்தலை தொடங்கினார்கள். ஆனால் தற்போது குழந்தைகள் அரிசியை ஒரு தட்டில் பரப்பி ஓம் என்கிற சொல்லை எழுதுகின்றார்கள். இதுவே அனைத்தினுடைய தொடக்கம் என்றும் சொல்லப்படுகிறது.

 வேதகாலத்தில் உபநயனத்தின் போதே அரிசியில் எழுத்தை ஆரம்பித்து விடுவார்கள். அப்பொழுது குழந்தைகளின் வயது சுமார் ஐந்தாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நவீன காலத்தில் சுமார் மூன்று வயதிலேயே குழந்தைக்கு ஆரம்பித்து விடுகின்றார்கள்.

 கல்வி தீட்சை, வெற்றியின் அடையாளம், எழுதக் கற்றுக் கொள்வது, ஓங்காரம் போன்றவைகளின் முக்கியத்துவத்தை குழந்தைகள் தெரிந்து கொள்ளவே நாம் ஓம் என்ற முதல் வார்த்தையை மணல், நெல் அல்லது அரிசியில் எழுத சொல்கிறோம். இந்த இந்திய பாரம்பரியமானது குருகுல வாசல் முதல் இன்றைய நவீன பள்ளிகள் வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஹைட்ரோகார்பன் திட்டம்...



மனிதன் இயங்கத் தேவையானது கார்போஹைட்ரேட் அதேபோல இயந்திரங்களை இயங்கத் தேவையானது ஹைட்ரோகார்பன். ஹைட்ரோகார்பன்கள் என்பவை கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் மூன்றும் கலந்த ஒரு வேதியல் கலவை.

இவை ஆக்சிஜனின் உதவியோடு எரிந்து ஏராளமான சக்தியை வெளியிடும் எரிபொருட்களாகும். இதை எரிக்கும்போது வெளிவரும் வெப்பத்தைப் பயன்படுத்தி தான் நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் எந்திரங்கள், மோட்டார்கள் இயங்குகிறது. பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, ஷேல் எரிவாயு போன்றவற்றை மொத்தமாக ஹைட்ரோகார்பன்கள் என்றழைக்கிறோம்.

மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டம்

சிறு சிறு அளவுகளில் ஹைட்ரோகார்பன்கள் புதைந்திருக்கும் நிலப்பரப்புக்களை அரசு கண்டுபிடித்திருக்கிறது. சிறிய அளவில் இருப்பதால் அதை எடுக்க செலவு அதிகம், எனவே அரசு அதை தனியார் நிறுவனத்திடம் ஏலத்திற்கு விடுகிறது.

மொத்தம் 31 நிலப்பகுதிகள் (discovered small field ) இந்தியாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் பகுதியும், மற்றும் காரைக்கால் பகுதியும் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அதே போல அசாம் மாநிலத்தில் 11 இடங்களும், ஆந்திர மாநிலத்தில் 4 இடங்களும், ராஜஸ்தானில் 2 இடங்களிலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 இடங்களிலும் மற்றும் குஜராத் மாநிலத்தில் 5 இடங்கள் என இதற்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஹைட்ரோகார்பன் திட்டம் தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் மீண்டும் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஏன் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது?

இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க.

எரிவாயு உற்பத்திக்கான முதலீட்டை அதிகப்படுத்த மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்க.

எரிபொருட்கள் இறக்குமதியை குறைக்க.

இந்த திட்டத்தை இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியுமா?



விளைநிலங்கள் பாதிக்கப்படும்.

நிலத்தடி நீரும், நீர் நிலைகளும் அழிந்து போகும்.

உணவுப் பாதுகாப்பு கேள்விக் குறியாகும்.

செடி கொடிகள், மரம் மட்டைகள் மறைந்து போகும்.

கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகும்.

ஹைட்ரோகார்பன் நச்சுப் பொருட்களான பென்சீன், பெட்ரோலியம் போன்றவற்றை சுவாசிப்பதனால் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். சிறுநீரகங்கள், மூளை, நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.

ஹைட்ரோகார்பன்கள் எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் தன்மை உடையவை. மூடிய அறைகளுக்குள் இவை எரிந்தால், மிகவும் ஆபத்தான கார்பன்-மோனாக்சைடு உருவாகும். இம்மாதிரியான காரணங்களால்தான் எண்ணெய்க் கிணறுகளில் வேலை செய்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைவாக காணப்படுகிறது.

ஆக்கப்பூர்வமான திட்டம் என்றாலும் அதன் ஆபத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், விஞ்ஞானத் திட்டங்களை நிறைவேற்றும்போது இயற்கைக்கும் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே சுற்றுசூழல் ஆர்வலர்கள் அரசின் முன் வைக்கின்ற கோரிக்கையாக உள்ளது.


ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

தேர்வுக்கு தயாராகுங்கள்...



பொதுத் தேர்வுகள் நெருங்கிவிட்டன. இவ்வேளையில் மாணவர்களுக்கு இனம்புரியாத ஒருவித அச்சம், தடுமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை எப்படி தவிர்க்கலாம்?

பொதுத் தேர்வை ஏதோ மிகப் பெரிய தேர்வாக கருதி அஞ்சாமல், வழக்கமான மாதாந்திர தேர்வாக நினைத்தால், இயல்பாக இருக்க முடியும். பதற்றமும் கணிசமாக குறையும். அதற்காக அசட்டையாக இருந்துவிடக் கூடாது.

படிப்பதற்கு அட்டவணை தயார் செய்து கொண்டு படிப்பது நலம். எளிதான பாடங்களை இறுதி கட்டத்தில் படித்துக் கொள்ளலாம் என முடிவு செய்து, கடினமான பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

தேர்வு முடியும் வரை சினிமா, டிவி, கைபேசி, இணையதளம் உள்ளிட்ட, பொழுதுபோக்கு சமாச்சாரங்களுக்கு ஓய்வு கொடுத்துவிடுவது நல்லது.

படிக்கும்போது இடையிடையே நன்றாக மூச்சை உள்ளிழுத்து, கண்களை மூடி, சில நிமிடங்கள் தியானம் செய்வது மனதை ஒருமுகப்படுத்தும்.

அதேபோல், பாடங்களில் சந்தேகம் ஏதேனும் புதிதாக எழுமேயானால், உடனடியாக ஆசிரியரிடம் கேட்டு தீர்த்துக் கொள்வது சிறந்தது.

கணிதம், இயற்பியல், வேதியியல் பாட சூத்திரங்களை மனப்பாடம் செய்வதை விட எழுதிப் பார்த்து பயிற்சி மேற்கொள்வது நல்லது.

முடிந்தவரை புத்தகங்களைப் பார்த்து மனனம் செய்துகொண்டே இருக்காமல், படித்ததை மனதிற்குள் அசை போட்டு பார்ப்பது நல்ல பலன் தரும்.

இரவு நெடுநேரம் கண் விழித்து படிக்காமல், பத்து மணியோடு படிப்பை நிறுத்திவிட்டு, ஆழ்ந்த உறக்கத்திற்குப் பின், அதிகாலையில் படிப்பை தொடர்வது நலம்.

அதிகமாக காபி, டீ போன்ற பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டாம். அவை உடலையும், மனதையும் மந்தமாக்க வாய்ப்புண்டு.

தேர்வுக்கு தயாராகும் நேரங்களில் எண்ணெய் மற்றும் கொழுப்பு சார்ந்த பதார்த்தங்களை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உட்கொள்ளுதல் நல்லது. அதேபோல் பட்டினி இருப்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

தேர்வுக்கு தயார் செய்யும்போது குழுவாக இணைந்து தயாரானாலும், தேர்வுக்கு ஒரு வாரம் முன்பிருந்து தனியாக படித்தலே சிறந்தது. இதனால், தேவையற்ற விவாதங்கள் தவிர்க்கப்பட்டு, மனம் ஒருநிலைப்படும்.

தேர்வு அறையில், வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதிக்கும் விடையளிக்க தேவைப்படும் கால அவகாசத்தை முன்பே திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, 'எல்லாம் தெரியும்" என்கிற மனப்பான்மை அறவே வேண்டாம்! அதேபோல், 'எதுவுமே தெரியாது" என்கிற பய உணர்வும் வேண்டாம்!