எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமாக குழந்தைகள் கற்கும்போது நமது இந்து சமயத்தில் இதனை சடங்காக பின்பற்றுவது வழக்கம். அதன் முக்கியத்துவத்தை பார்க்கலாம்.
குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கும் ஞானத்தின் தேடல் என்ற நிகழ்வானது இந்தியாவில் ஒரு பாரம்பரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது. பல மாநிலங்களில் இந்த நிகழ்வானது மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
ஞானத்தின் தேடலில், பள்ளியில் சேரும் முதல் நாள் நெல் அல்லது அரிசியில் குழந்தையை எழுத்துக்களை எழுதச் சொல்லி பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்து வைப்பார்கள்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் கல்வி ஆகும். இந்த கல்வி கற்பதன் மூலம் ஒருவர், பரந்த உலகில் அறிவு மற்றும் ஞானத்தை தேடத்தொடங்குகின்றார்.
அன்னை சரஸ்வதிக்கு பூஜை செய்து, நாம் நம்முடைய ஞானத்தேடலுக்கான முதற்படியில் தவழ ஆரம்பிக்கிறோம். கல்வியறிவின்மை மற்றும் அறிவின்மை என்னும் இருளை நாம் வெற்றி கொள்ளப்போவதை மறைமுகமாக உணர்த்தும், இந்த நிகழ்வை இந்தியாவில் பல மாநிலங்களில் வெற்றியின் அடையாளமான விஜய தசமி அன்று நிகழ்த்தப்படுகிறது.
இச்சா, கிரியா மற்றும் ஞானம் என்ற மூன்று சக்திகளும் இந்நாளில் ஒன்று சேர்ந்து இருளை எதிர்த்துப் போராட நாம் அனைவருக்கும் உதவுகின்றன. குழந்தைகள் இந்த நாளில் தான் முதன் முதலில் எழுதத் தொடங்குகின்றனர். அவர்கள் தங்களுடைய பெயர் மற்றும் எழுத்துக்களை எவ்வாறு எழுதுவது என்பதை கற்றுக்கொள்கின்றனர்.
அவர்கள் மெதுவாக ஒரு வாக்கியத்தை எவ்வாறு உருவாக்குவது எனக் கற்று இறுதியாக தங்களுடைய எண்ணங்களை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதையும் கண்டுபிடிக்கின்றனர். எனவே இந்த நாள் உங்கள் குழந்தைகளின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
ஓங்காரம் ஒரு செயல் மற்றும் எண்ணத்தின் தொடக்கம் மற்றும் இறுதியாக விளங்குகின்றது. மேலும் இது நித்தியத்தை குறிக்கின்றது.
எனவே, ஒரு குழந்தை ஓம் என்கிற வார்த்தையை எழுதி தன்னுடைய ஞான வேட்கையை தொடங்குகின்றது. இது சமஸ்கிருதத்தில் பீசாட்ஞ்சரமாக கருதப்படுகின்றது. இதை முதன் முதலில் எழுதுவது ஒரு சிறந்த தொடக்கமாக கருதப்படுகின்றது.
ஆரம்பத்தில், குழந்தைகள் தங்களுடைய குருக்குலத்தில் ஓம் என்கிற சொல்லை மணலில் எழுதி தங்களுடைய எழுத்தறிவித்தலை தொடங்கினார்கள். ஆனால் தற்போது குழந்தைகள் அரிசியை ஒரு தட்டில் பரப்பி ஓம் என்கிற சொல்லை எழுதுகின்றார்கள். இதுவே அனைத்தினுடைய தொடக்கம் என்றும் சொல்லப்படுகிறது.
வேதகாலத்தில் உபநயனத்தின் போதே அரிசியில் எழுத்தை ஆரம்பித்து விடுவார்கள். அப்பொழுது குழந்தைகளின் வயது சுமார் ஐந்தாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நவீன காலத்தில் சுமார் மூன்று வயதிலேயே குழந்தைக்கு ஆரம்பித்து விடுகின்றார்கள்.
கல்வி தீட்சை, வெற்றியின் அடையாளம், எழுதக் கற்றுக் கொள்வது, ஓங்காரம் போன்றவைகளின் முக்கியத்துவத்தை குழந்தைகள் தெரிந்து கொள்ளவே நாம் ஓம் என்ற முதல் வார்த்தையை மணல், நெல் அல்லது அரிசியில் எழுத சொல்கிறோம். இந்த இந்திய பாரம்பரியமானது குருகுல வாசல் முதல் இன்றைய நவீன பள்ளிகள் வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.