மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் தூக்கம். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் மனதைக் கட்டுப்படுத்த, கெட்ட எண்ணங்களை சீர்படுத்த, கோபத்தை குறைக்க இயற்கையாக படைக்கப்பட்ட ஒரு செயல் தூக்கம். தூக்கத்துக்கு அந்த அளவுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு.
நமது உடலில் இரண்டு வகையான தசைகள் இருக்கின்றன. நமது கட்டுப்பாட்டில் உள்ள தசைகள், கை கால்கள், தோள்பட்டை, மார்பு, முதுகு முதலியவற்றிலுள்ள கடினமான தசைகள். இந்த தசைகளெல்லாம் நாம் நடப்பதற்கும், நகர்வதற்கும், உருண்டு புரள்வதற்கும் உபயோகப்படும் தசைகளாகும்.
நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் இரைப்பை, இருதயம், உணவுக்குழாய், காற்றுக்குழாய், வயிற்றின் உள்ளே உள்ள உறுப்புகள், சிறுநீர்ப்பை, ரத்தக்குழாய்கள் மற்றும் உடலின் உறுப்புகளுக்கு உள்ளே உள்ள மெல்லிய தசைகள். இவை எல்லாமே நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகளாகும்.
தூங்கும் போது கட்டுப்பாட்டிலுள்ள தசைகள் மட்டுமே செயலிழக்கப்படுகிறது. கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் நாம் தூங்கினாலும், தூங்காவிட்டாலும் நம்மை கண்டு கொள்ளாது.
தூக்கம் பற்றிய சில சுவாரஸ்சியமான தகவல்கள் :
தூக்கத்தை ஒத்திப்போடும் ஒரே பாலூட்டி மனித இனம் மட்டுமே.
தூக்கத்துக்கு இடையில் சராசரியாக 6 முறை விழிக்கிறோம்.
ஒரு நாளைக்கு 7 மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்கினால், ஆயுள் குறையும்.
ஒரு வாரத்துக்கு சரியாகத் தூங்கவில்லை என்றால், 1 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கும். தூக்கமின்மை பசியைத் தூண்டும்.
பொதுவாக மனிதர்கள் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பங்கு தூங்குகிறார்கள். அதாவது 25 ஆண்டுகள்.
ஜப்பானில் வேலை நேரத்தில் தூங்குவது, கடுமையான உழைப்புக்கு ஓய்வு எடுப்பது என்று கருதப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.
தூங்கினால் நினைவாற்றல் அதிகரிக்கும். தூங்கும் போது தும்ம முடியாது.
விளையாடிவிட்டுத் தூங்கச் சென்றவர்கள் அது பற்றி கனவு கண்டு தூங்கி எழுந்து, அடுத்த நாள் விளையாடியபோது சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள்.
கனவில் ஏற்கெனவே பார்த்த முகங்களே வரும்.
நம்மை பயமுறுத்தும் விஷயங்களைப் பற்றியே பெரும்பாலும் கனவு காண்கிறோம். மனிதர்களைப் பற்றியும், குழந்தைகள், விலங்குகளைப் பற்றியும் அதிக கனவுகளைக் காண்கிறார்கள்.
11 நாளுக்கு மேல் தூங்காமல் இருந்தால் உயிர் வாழ முடியாது. சாதாரணமாக 2 நாட்களுக்கு ஒருவரால் தூங்காமல் இருக்க முடியும்.
விலங்கினங்கள் :
சில நத்தைகள் 3 ஆண்டுகள் வரை தூங்கும்.
பூனைகள் தங்கள் வாழ்க்கையில் 70 சதவீத நேரம் தூங்குகின்றன.
கடல் நீர் நாய்கள் தூங்கும்போது ஒன்றின் கைகளை மற்றொன்று பிணைத்துக் கொண்டு தூங்கும். அதன் மூலம் அலையில் அடித்துச் செல்லப்படாமல் இருக்கின்றன.
சில உயிரினங்கள் தூங்கும் போது பாதி மூளையை மட்டுமே ஓய்வுக்கு அனுப்புகின்றன. திமிங்கலம் இப்படிச் செய்வதால் தண்ணீரின் மேற்பரப்பில் இருந்து காற்றை சுவாசிக்கவும், எதிரிகள் வருவதை உணரவும் பயன்படுகிறது.
வாத்துகள் ஒரு கண்ணை மூடிக்கொண்டு, பாதி மூளையை ஓய்வுக்கு அனுப்புகின்றன.
ஒரு சில பறவைக் குழுக்களில் சில பறவைகள் பாதுகாப்புக்காக விழித்திருக்கும் போது, மற்ற பறவைகள் தூங்கும்.