மனித இனத்திற்கு மிகச் சிறந்த தொண்டாற்றியவர்
லூயிஸ் பிரெய்லி ஆவார். குறிப்பாக கண்பார்வை அற்றோர் தம் கைகளால் தடவிப் பார்த்துப்
படிப்பதற்கான பிரெய்லி எழுத்து முறையைக் கண்டறிந்ததன் மூலம், கண்பார்வை அற்றோர்க்காக
சிறந்த தொண்டாற்றினார்.
லூயிஸ் பிறந்த போது இயல்பான கண்பார்வையைத் தான்
பெற்றிருந்தார். அவருக்கு மூன்று வயதாக இருந்தபோது அவர் தன் தந்தையாரின் குதிரைக்குச்
சேணம் பூட்டும் தொழிற்சாலையில் இருந்தார். அப்போது அங்கே ஏற்பட்ட விபத்தினால் தன் கண்பார்வையை
இழந்தார்.
லூயிஸ் பிரெய்லி 1809 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்
4ஆம் நாள் பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகருக்கு அருகிலுள்ள கோப்ரே என்ற சிறிய கிராமத்தில்
பிறந்தார்.
திடீரென்று தன் கண் பார்வை பறிப்போனதை எண்ணி,
குழந்தை லூயிஸ் பிரெய்லி கலங்கினார். அவர் உள்ளூரில் இருந்த பள்ளியில் இரண்டாண்டுகள்
படித்தார். எதையும் அடையாளம் கண்டுகொண்டு அவரால் படிக்க முடியவில்லை. அவருக்குப் பத்து
வயதானபோது உதவித்தொகை பெற்று, பாரிஸில் உள்ள கண்பார்வை அற்றவர்களுக்கான கல்வி நிலையத்தில்
சேர்ந்து கற்றார். ஆனால் அது அவருக்கு கடினமானதாக இருந்தது.
இங்கே அவர் பார்வையற்றோர்க்குக் கற்றுத் தரப்படும்
தொழில்களான துணி நெய்தல், செருப்பு தயாரித்தல் ஆகியவற்றைக் கற்றார்.அந்த பள்ளியில்
அழகான நூலகமும் அதில் எண்ணற்ற புத்தகங்களும் இருந்தன. லூயிஸ் பிரெய்லிக்குப் புத்தகங்கள்
படிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் அவரால் அந்த எழுத்துக்களை கண்டறிந்து படிக்க
முடியவில்லை. இது அவருக்கு அதிக வருத்தத்தைத் தந்தது.
இந்நிலையில் அந்தப் பள்ளிக்கு 1821 ஆம் ஆண்டு
சார்லஸ் பார்பியர் என்ற இராணுவ வீரர் வந்தார். அவர் அந்தப் பள்ளியைச் சுற்றிப் பார்க்கவும்,
அங்கு தங்கியிருக்கும் கண்பார்வையற்ற மாணவர்களுக்காகத் தன்னுடைய கண்டுபிடிப்பான, இராணுவத்தில்
பயன்படும் இரவு நேர எழுத்து முறை பற்றியும் விளக்குவதற்க்காக வந்திருந்தார். அந்த எழுத்து
முறை 12 புள்ளிகளைக் கொண்டது. ஒரு வீரன் மற்றொரு வீரனுடன் பேசாமலேயே தொடர்புகொள்ளும்
முறையாகும். ஆனால் இராணுவ வீரர்கள் இதனை கற்றுக்கொள்ள மிகவும் சிரமப்பட்டனர்.
ஆனால் 12 வயதுடைய லூயிஸ், அதிலிருந்து 6 எழுத்துக்களைப்
பிரித்தெடுத்து எளிதில் படிப்பதற்கான எழுத்து முறையைக் கண்டுபிடித்தார்.1829 ஆம் ஆண்டு
முதல் பிரெய்லி புத்தகத்தை வெளியிட்டார்.
அப்போது
அவருக்கு வயது 20.அவர் தொடர்ந்து அதில் பயிற்சி செய்து கணிதக் குறியீடுகளையும், இசையையும்
சேர்த்தார். அவர் தனது பட்டபடிப்பை முடித்தவுடன் தான் பயின்ற அதே பள்ளியில் ஆசிரியராகச்
சேர்ந்து அதனைக் கற்றுக்கொடுத்தார். அவருடைய கோடு மொழியை
(code language) அங்குள்ள கண்பார்வையற்றோர்
ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் பிரெய்லியின் இம்முறையைக் குழந்தைகளுக்கு
கற்றுத்தரக் கூடாது என தடை விதித்தனர். ஆனால் குழந்தைகள் சற்று முயற்சி செய்து கற்றுக்கொள்ள
ஆர்வமாக இருந்தனர். இம்முறை படிப்பதற்கு மட்டும் அன்றி கண் பார்வை அற்றோர் தொட்டு,
எழுத்துக்களை அடையாளம் கண்டு கொள்ளவும் வசதியானதாகவும் இருந்தது.
எனவே இம்முறையைக் கண்பார்வையற்றோர் பிறகு விரும்பி
பயன்படுத்தினார். ஆனால் இம்முறையை அவர்கள் பிரெய்லி உயிரோடு வாழ்ந்த காலத்தில் பயன்படுத்தவில்லை.
அவருடைய மறைவிற்குப் பின், மிகவும் மெதுவாகவே பரவியது.
1868 ஆம் ஆண்டு இந்தப் பிரெய்லி முறை உலகம் முழுவதும்
பரவியது. பிரிட்டிசார் இம்முறை உலகெங்கும் பரவக் காரணமாக இருந்தனர். இதற்க்கான
அமைப்பு இப்பொழுது ‘கண்பார்வையற்றோர்க்கான தேசிய நிருவனம்’ என்ற பெயர் பெற்று சிறப்புடன்
இயங்கி வருகிறது. பிரெய்லி எழுத்து முறையை கண்டுபிடித்த லூயிஸ் பிரெய்லி 1862 ஆம் ஆண்டு
எழும்புருக்கி நோயினால் மறைந்தார்.