சனி, 20 பிப்ரவரி, 2016

ஏன் தேவை பங்குச் சந்தையில் முதலீடு ??



 


சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. சேமிப்பு என்பது பணத்தை செலவு செய்யாமல் வங்கியில் வைத்திருப்பது. முதலீடு என்பது நமக்கு வருமானத்தை கொடுக்க கூடியது. சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் பலர் இருக்கிறார்கள். இந்த வித்தியாசம் தெரிந்தவர்கள் கூட சரியான விகிதத்தில் பிரித்துக் கொள்வதில்லை.
மொத்த தொகையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான பரிந்துரை அல்ல இந்த கட்டுரை. ஆனால் அதேசமயம் பங்குச் சந்தையின் மூலம் கிடைக்கும் பலனை விட்டு விடக்கூடாது என்பதை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஏன் முதலீடு?
இன்ஃபோசிஸ் அல்லது விப்ரோ பங்கு வெளியான போது சில ஆயிரம் ரூபாய்களுக்கு அந்த பங்குகளை வாங்கி இருந்தீர்கள் என்றால், போனஸ் பங்கு பிரிப்பு உள்ளிட்டவற்றை சேர்க்கும் போது இப்போது அதன் மதிப்பு பல கோடிக்கு மேல் இருக்கும் என்று பங்குச் சந்தையில் பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். இவை கதை அல்ல முற்றிலும் உண்மை. அதேபோல மொத்த முதலீடும் காணாமல் போன கதையும் கேள்விபட்டிருப்பீர்கள்.
அதிக லாபம் சம்பாதித்தவர்களும் இருக்கிறார்கள். மொத்த முதலீட்டையும் தொலைத்தவர்களும் இருக்கிறார்கள். இப்போது முதலீடு செய்யலாமா வேண்டாமா என்று கேட்டால், முதலீடு செய்யலாம் ஆனால் சில விதிமுறைகளுடன் சந்தையில் பயணிக்க வேண்டும். தவிர நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது பணவீக்கத்தை தாண்டிய வருமானம் பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளில் கிடைக்கிறது.

Image result for share market photo

பிரித்து முதலீடு செய்க!
பங்குச் சந்தை முதலீடு தேவைதான். ஆனால் அதற்காக முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கும் அத்தனை தொகையையும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யக்கூடாது. உங்கள் வயது மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக உங்களுக்கு 30 வயதாகிறது. 100 ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் (100-30) 70 ரூபாயை பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். இது பொதுவான விதி. ஒவ்வொருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப இதனை மாற்றிக் கொள்ளலாம். அதேபோல 70 ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துவிட்டாலும் ஒரே சமயத்தில் அனைத்து முதலீடுகளையும் செய்ய வேண்டாம். 70 ரூபாயை நான்காக பிரித்து நேரம் வரும் போது முதலீடு செய்ய வேண்டும்.

முதலீடா, வர்த்தகமா?
அடுத்த கட்டத்துக்கு செல்லும் முன்பு, முதலீட்டுக்கும் வர்த்தகத்துக்கும் இடையே வித்தியாசத்தை தெரிந்துகொள்வது. சில முதலீட்டாளர்கள் நல்ல பங்குகளாக தேர்ந்தெடுத்து முதலீடு செய்துவிடுவார்கள். சில காலத்துக்கு / வருடத்துக்கு பிறகு அவர்கள் விற்றுவிடுவார்கள். இது முதலீடு. ஆனால் சிலர் காலையில் வாங்கி மதியம் விற்பது, மாலை விற்பது போன்றவற்றில் ஈடுபடுவார்கள் இதற்கு பெயர் வர்த்தகம். இது ரிஸ்க் மிகுந்தது. நீங்கள் காலையில் வாங்கிவிடுவீர்கள். ஆனால் அந்த பங்கு தொடர்ந்து சரிய ஆரம்பிக்கும். இன்னும் சில நாளைக்கு பிறகு லாபத்துடன் விற்கலாம் என்று முடிவெடுப்பீர்கள். ஆனால் அந்த பங்கு நீங்கள் வாங்கிய விலைக்கு மீண்டும் வரவே வராது. புதிதாக சந்தையில் நுழைபவர்கள் இதில் இருந்து கொஞ்சம் விலகியே இருக்கலாம்.

Image result for share market photo

போர்ட்போலியோ!
பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது, மொத்த முதலீட்டையும் ஒரே சமயத்தில் முதலீடு செய்யக்கூடாதோ அதேபோல, மொத்த முதலீட்டையும், ஒரே பங்கு அல்லது ஒரு துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யக்கூடாது. ஒரு துறையில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் போது, அந்த துறை சார்ந்த பங்குகள் அனைத்திலும் சரிவு ஏற்படும். அப்போது உங்களது முதலீடு அதிகளவு சரிய வாய்ப்பு இருக்கிறது. அதனால் வங்கி, பார்மா, ஐடி, என்று துறை வாரியாக பிரித்து முதலீடு செய்து ஒரு போர்ட்போலியோவை உருவாக்க வேண்டும். அதேபோல ஒவ்வொரு துறையிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.

தள்ளி நின்று கவனிக்க
பங்குச்சந்தை களேபரங்களில் இருந்து தள்ளி நின்று உங்கள் முதலீடுகளை செய்யுங்கள். எப்போது பங்குச் சந்தையில் உற்சாகம் மிகுதியாக இருக்கிறதோ அப்போது விற்றுவிடவேண்டும். எப்போது பங்குச்சந்தையில் பயம் அதிகமாக இருக்கிறதோ அப்போது முதலீடு செய்ய வேண்டும். இது முதலீட்டு ஆலோசகர் வாரன் பபெட் கூறிய முதலீட்டு தத்துவம். சந்தையின் இரைச்சலில் இருந்து விலகி இருந்தால்தான் என்ன நடக்கிறது என்பதை கண்டுக்கொள்ள முடியும். இல்லையெனில் கூட்டத்துடன் சேர்ந்து தவறான முடிவெடுப்போம்.

Image result for share market photo

கடன் வாங்கி முதலீடு வேண்டாம்
பங்குச்சந்தையில் முதலீடு நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்திருக்கிறது என்றாலும், கடன் வாங்கி முதலீடு செய்வது ஆபத்தானது. உங்களிடம் இருக்கும் உபரி பணமாக இருந்தால் யாருக்கும் பதில் சொல்லத்தேவை இல்லை. ஆனால் கடன் வாங்கும் போது விட்டதை பிடிக்க மேலும் மேலும் கடன் அதிகமாக அந்த சுழலில் இருந்து வெளியே வரமுடியாமல் போய்விடலாம்.

Image result for share market photo


மறு ஆய்வு
தங்கம் இன்று எவ்வளவு வர்த்தகம் ஆகிறது. வீட்டின் சதுரடி மதிப்பு இன்று எவ்வளவு என்பதை யாரும் பார்ப்பதில்லை. ஆனால் முதலீடு செய்த பங்குகள் மட்டும் இன்று எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதை பார்க்கத் தவறுவதில்லை. முதலீடு செய்த பங்குகளின் மதிப்பை தினமும் பார்ப்பது எப்படி தவறோ அதேபோல பார்க்காமல் விட்டுவிடுவதும் தவறு. பங்குகளின் விலையை பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு முதலீடு செய்திருந்த பங்குகளை பற்றி என்ன செய்திகள் வருகின்றன என்பதில் கவனம் செலுத்தலாம். செய்திகள் சரியாக இல்லை என்றால் அவற்றை விற்பதை பற்றி பரிசீலனை செய்யலாம்.

எதில் முதலீடு?
பங்குச் சந்தையில் முதலீடு ஏன் தேவை என்பதற்கு காரணங்கள் கூறலாமே தவிர, எந்த பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பது தனிநபர் விருப்பத்துக்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன்பு பங்குகளை பற்றி ஆராய்ச்சி செய்த பிறகு முதலீடு செய்யுங்கள். பங்குச்சந்தை வல்லுநர்களுடன் விவாதியுங்கள்.
நீங்கள் முதலீடு செய்யப்போவது பங்குகளில் அல்ல, தொழிலில் முதலீடு செய்கிறீர்கள் என்பதை உணருங்கள், அதேபோல உங்களுக்கு தெரியாத தொழிலில் முதலீடு செய்யாதீர்கள் என்ற வாரன் பபெட்டின் ஆலோசனையை நினைவில் கொள்வதும் நல்லது.

Image result for share market photo

சிறு துளி பெருவெள்ளம் போல சிறு சேமிப்பு என்பதை முதலீடு செய்து இலாபம் ஈட்டலாம்.இதை குறித்து இன்னும் எளிமையாக அடுத்த பதிவில் பார்க்கலாம் நண்பர்களே..!!

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

பெண்ணின் மதிப்பு..!!




குழந்தை உள்ளம் கொண்டவள்தான் பெண் அவளை குமுறும் கடலாக
மாற்றுபவன் ஆண்தான்.


ஆணும் பெண்ணும் இணையானவர்கள் இதில் வித்தியாசம் பார்ப்பவர்கள்
மனிதர்களே இல்லை.


ஆண்படித்தால் ஒருவன் தான் படித்தவனாவான் பெண் படித்தால் ஒரு குடும்பத்தையே படிக்க வைக்க முடியும்


ஆண்களின் ஆராய்ச்சி அறிவுகள் எல்லாம் பெண்களின் உணர்ச்சிமயாமான அன்புக்கு ஈடாகாது


சட்டங்களை விட பெண்களின் கண்கள் சக்தி வாய்ந்தவை கொடும் தண்டனையை விட அவர்களின் கண்ணசைவுகள் திருத்தும் ஆற்றல்
கொண்டவை


பெண் இல்லாத வீடும் வீடில்லாத பெண்ணும் மதிப்பில்லாதவை.........



தோழி


நட்பை உணர வைத்த நண்பன் என்பேனா?

தோல்விகளில் தோள்கொடுத்த தோழி என்பேனா?

சந்தோசத்தை பகிர்ந்து கொண்ட சகோதரி என்பேனா?

கண்ணீரை துடைத்த காதலி என்பேனா?

என்னுடைய ஒவ்வொரு படியிலும் துணை

நின்ற துனைவி என்பேனா?

ஆலோசனை கூறிய அன்னை என்பேனா?

தளர்ச்சிகளில் தட்டிக் கொடுத்த தந்தை என்பேனா?

என்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் முன் நின்றவளே!

என்னை எனக்கு உணர வைத்த என்னவளே!

உன்னை நான் என்னவென்று சொல்வேன்?

நீ என்னில் கலந்தவள்! என் உயிரானவளாவாய்!





வியாழன், 18 பிப்ரவரி, 2016

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்


                        எண்ணும் எழுத்தும் கண்ணெனதகும்

முன்னுரை;

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு- வள்ளுவர்.

அதாவது இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்களைப் போல் என்கிறார் வள்ளுவர். எண்கள் என்றால் கணிதம். எழுத்து என்றால் தமிழ். ஆனால் எழுத்தை விரும்பும் அளவிற்கு யாரும் எண்ணை விரும்பவில்லை. நம் தாய்மொழியான தமிழில் கூட கணித எண்களை தமிழெண்கள் என அழகான தமிழில் கூறியுள்ளனர். பல வருடம் தொன்மையான தமிழ் மொழியில் கணிதம் பற்றி குறிப்பு உள்ளது என்றால் அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாருங்கள்.

கணிதம் கடினமல்ல;

(சூத்திரம் + எண்கள்) = கணிதம்  என்பதுதான் கணித்தின் வறையரை.  கணிதம் கடினமானதோ, கனமானதோ அல்ல. சுலபமானது, எளிமையானது. இதை உணராதோரே கணிதம் கடினமானது என்பர்.  இன்று கணிதம் இல்லாத துறையே இல்லை. சொல்லப்போனால் கணிதம் இல்லாததது துறையே இல்லை.

கணித்தை வெறுக்கக் காரணமும் நாம் புரிந்து கொள்ள வேண்டியதும்;

கணிதத்தை வெறுக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் கூறுவர்.அவற்றில் சில,

முதல் காரணம் கணித ஆசிரியர் பிடிக்கவில்லை அதனால் கணிதம் பிடிக்கவில்லை என்பார்கள். இது வாழைப் பழத்தின் தோல் பிடிக்கவில்லை அதனால் வாழைப்பழம் பிடிக்கவில்லை என்பது போல் இருக்கிறது. கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் போதும். யாரையும் பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

அடுத்தது, அதிகமாக சிந்திக்க வைக்கிறது அதனால் பிடிக்கவில்லை என்பார்கள். நம் அறிவுக்கு அதிகம் வேலைக் கொடுப்பது கணிதம் மட்டுமே. எந்த வேலையும் செய்யாமல் புதுமையாக இருக்கும் மூளைக்கு அதிகம் வேலைக் கொடுப்பதாக கணிதம் இருப்பதால் தான் பிடிக்கவில்லை. பயன்படுத்தாத எந்த ஒரு பொருளும் எதற்கும் பயன்படாது. அவ்வாறு நம் மூளை எதற்கும் பயன்படாமல் போய்விடக்கூடாது என்பதே கணிதத்தின் நோக்கம்.

சூத்திரங்கள் அதிகமாக இருப்பது பிடிக்கவில்லை என்பார்கள். தமிழில் எவ்வாறு இலக்கண, இலக்கியமோ அதேபோல் தான் கணிதத்தில் சூத்திரமும், எண்களும். கஷ்டப்பட்டு படிப்பதை விடுத்து இஷ்டப்பட்டு படிக்க வேண்டும்.

கணித நோட்டை எடுத்தாலே தூக்கம் வருகிறது என்பார்கள்.

சிலர் கணிதம் படித்தால் தூக்கம் வரும் என்பார்கள்
நீங்கள் கணிதம் படித்தால்தான் தூக்கம் என்று சொல்லுங்கள்

இதில் ஏன் நீங்கள் இரண்டாவது நபராக இருக்கக் கூடாது.

கணிதத்தில் அதிகம் பிரச்சனையாக (problem) இருக்கிறது என்பார்கள்.  நாம் ஒரு பிரச்சனைக்கு (problem) தீர்வு காணும் போது இது சரியானதா என பலமுறை சிந்திப்போம்.  எவ்வாறு சங்க இலக்கியம் படித்தால் அறங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியுமோ? அதுபோலத் தான் கணிதம் படித்தால் எதிர்காலத்தில் நாம் சந்திக்க இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

இவ்வாறு நம்மிடம் இருக்கும் எதிர்மறையான (-)எண்ணங்களை விடுத்து நேர்மறையான (+) எண்ணங்களை வளரத்து கொள்வோம்.
இன்று நாம் உண்ணும் உணவிலிருந்து  உலகம் வரை எல்லாம் கணிதம் தான்.

ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை;

மாணவர்களில் மூன்று வகை உண்டு

1.உன்னால் முடியும் என்றால் நம்பிக்கை காரணமாக அதை செய்து முடிப்பது. இப்படிபட்டவர்களை ஊக்குவித்தால் மட்டும் போதும்.

2.உன்னால் முடியாது என்றால் என்னால் முடியும் என்று போட்டிப் போட்டுக் கொண்டு அந்த செயலை முடிப்பது. இவர்களை சற்று தூண்டிவிட்டால் 
போதும்.

3.நாம் என்ன சொன்னாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு அதில் ஆர்வம் இல்லை என்று அர்த்தம். அவர்களை நம்மால் எதுவும் செய்ய முடியாது.

முடிவுரை;

மற்ற பாடங்களுக்கும் கணிதத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மற்ற பாடங்களை கதைகளாகவும், படங்களாகவும் கொண்டு வர முடியும். ஆனால் கணிதத்தை புரிந்து கொண்டால் மட்டுமே வாழ்க்கையில் பயன்படுத்த முடியும். எனவே கணிதத்தை புரிந்து கொள்வோம் வாழ்க்கையில் பயன்படுத்துவோம்.

அறிவியலின் அதிசயிக்கத்தக்க அடுத்தகட்டம்..!!




ஈர்ப்பு கவர்ச்சி அலைகள் கண்டுபிடிப்பு..!!

வாஷிங்டன்;

இரண்டு கருந்துளைகள் ஒன்றொன்று சுற்றி பிணைந்தபோது அண்டவெளியில் ஏற்பட்ட ஈர்ப்பு கவர்ச்சி அலைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்.இது வானியல் அறிவியலில் அதிசயிக்கத்தக்க அடுத்த கட்டமாக வர்ணிக்கப்படுகிறது.

விண்வெளியில் சூரியனைப் போன்ற மிகப் பெரிய நட்சத்திரங்கள் உள்ளன.அவை தங்களது வாழ்நாளின் இறுதியில் கருந்துளைகளாக மாறும்.அவை ஒன்றையொன்று  சுற்றும்போது அண்டவெளியில் அதிர்வுகள் ஏற்பட்டு அவை ஈர்ப்பு கவர்ச்சி அலைகளாக வெளியாகும் என்று 100  ஆண்டுகளுக்கு முன்பே இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கணித்திருந்தார்.

அந்த கணிப்பு சரியானது என்பதை விஞ்ஞானிகள் இப்போது உறுதி செய்துள்ளனர்.இது குறித்து லிகோ(LIGO-ADVANCED LASER INTERFEROMETER GRAVITATIONAL-WAVE OBSERVATORY)  திட்ட செயல் இயக்குநர் டேவிட் ரிட்ஸ் கூறியது,விண்வெளியில் ஏதோ ஒரு இடத்தில் சூரியனை போன்று 29 மற்றுபம் 36 மடங்குகள் பெரிய இரண்டு ராட்சத கருந்துளைகள் அல்லது விண்மீன்கள் ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டே மோதிப் பிணைந்துள்ளன.அந்த நிகழ்வால் ஏற்பட்ட ஈர்ப்பு கவர்ச்சி அலைகளை இப்போது கண்டுபிடித்துள்ளோம்.


அந்த இரண்டும் பிணைந்து சூரியனைவிட 62 மடங்குகள் பெரியதாக மாறிவிட்டது.இந்த நிகழ்வால்  உருவான ஈர்ப்பு கவர்ச்சி அலைகள் பிரபஞ்சத்தின் கீச்சுக்குரல் போல வெளிப்பட்டிருக்கின்றன,


இவ்வாறு அவர் தெரிவித்தார். 

வெற்றி..!!!

                           



அழகு      தோற்றத்தில்     இல்லை,  கண்ணில்      இருக்கிறது!

வெண்மை   பாலில்     இல்லை,  மனதில்      இருக்கிறது!

இயக்கம்      செயலில்      இல்லை,  சிந்தனையில்      இருக்கிறது!

ஆக்கம்   உழைப்பில்  இல்லை,  நம்பிக்கையில்      இருக்கிறது!

ஒளி உலகத்தில் இல்லை,      உள்ளத்தில்      இருக்கிறது!


தோல்வி இழப்பதில்   இல்லை,  நினைப்பதில்      இருக்கிறது!

புதன், 17 பிப்ரவரி, 2016

மனிதனை முன்னேற்றிய தானியங்கள்

              மனிதனை முன்னேற்றிய தானியங்கள்
முன்னுரை;
 மனிதனின் அடிப்படை தேவை என்றால்  உணவு, உடை, இருப்பிடம் என்பர். நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது உணவுக்குத்தான். இத்தகைய உணவு நமக்கு பெரும்பாலும் தானியங்களில் இருந்து தான் கிடைக்கின்றன.
தானியம் என்பது;

தானியம் புல் வகையைச் சேர்ந்த ஒரு பயிர். இந்த புல்லின் விதைகளைத் தான் தானியம் என்கிறோம். இதன் விதை உண்மையில் ஒரு கனி. ஒரேயொரு விதையும் அதைச் சுற்றி இருக்கும் கனிச்சுவரும், அந்த கனிச்சுவரை மூடியபடி இருக்கும் உமியுமே தானியமாகும். கிராங்களில் இந்த வகையான தானியங்களை தவசம் என்று அழைக்கிறார்கள். நெல், கோதுமை, ராகி, சோளம், கம்பு, பாசிபயிர் என பல பயிர் வகைகள் இருந்தன. அந்த பயிர்களை அவற்றின் தன்மைக்கேற்ப நன்செய், புன்செய் என இருவகையாக பிரித்திருந்தன. ஆனால் இன்றோ அது எல்லாம் இல்லாமல் போய்விட்டது.
ஆரம்ப கால மனிதன்;

மனிதன் ஆரம்ப காலங்களில் விலங்குகளை வேட்டையாடி உண்டான்.  அதன் பின் காய் கனிகளை உணவாக உட்கொண்டான். அப்புறம் காட்டு புல் வகைகளை சமைத்து சாப்பிட்டான். இப்படியே வளர்ந்த மனிதன் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் தானியங்களை கல் கருவிகளைக் கொண்டு அரைத்து உண்ணும் முறையை கண்டுபிடித்தான். அப்போதும் அவன் விவசாயம் செய்ய கற்கவில்லை. காடுகளில் இயற்கையாக வளர்ந்திருந்த தானியங்களை மட்டுமே உணவாக்கிக் கொண்டான். அதன் பின் சில ஆண்டுகள் கழித்தே தானியங்களை விளைவிக்க கற்றுக்கொண்டான். அக்காலத்தில் மூங்கில் நெல் என்ற ஒன்று இருந்தது. அதை உணவாக பயன்படுத்தினர். இன்றோ மூங்கில் நெல் என்றால் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
மனித சரித்தரித்தின் மாபெரும் மாற்றம்;
காட்டுமிராண்டியாக, நாடோடியாக திரிந்து கொண்டிருந்த மனிதன் ஓரிடத்தில் நிலையாக வாழத் தொடங்கியதற்கு காரணமாக அமைந்தது விவசாயம் தான். மனிதன் முதன் முதலாக பயிரிட்டது தானியம் தான். தனக்கு உணவாக பயன்படக்கூடிய புல் விதைகளைக் கண்டுபிடித்து பயிரிடத்தொடங்கினான். இதன் மூலம் தனக்கும் தன் விலங்குகளுக்குமான உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டான். உணவுக்காக காடு, மேடு பள்ளங்களில் அழைவதை நிறுத்திக் கொண்டான். இதன் மூலம் அவனுக்கு ஓய்வு கிடைத்தது. அந்த ஓய்வு நேரத்தை பல ஆக்கங்களுக்கு பயன்படுத்தத் தொடங்கினான். நாகரிகம், கலாச்சாரம், அறிவியல் போன்றவை வளர்வதற்கு அடிப்படையாக அமைந்ததே தானிய உற்பத்திதான். தானியங்களே மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் பிரதான உணவு.
நெல்லும் தானியமே;
உலகில் பாதி பேர் அரிசி சோற்றைச் சாப்பிடுகிறார்கள். மீதி பாதிப் பேர் கோதுமையில் உணவு வகைகளைச் செய்து சாப்பிடுகிறார்கள். இரண்டுமே தானியங்கள் தான். மனிதன் தனக்கு தேவையான கலோரில் 75 சதவிதத்தை தானியங்கள் மூலமே பெறுகிறான். உலகில் 70 சதவீத விளைநிலங்களில் தானியங்களே பயிரிடப்படுகின்றன என்றால் அவற்றின் முக்கியத்துவத்தை நாம் உணர முடியும். நமது பிரதான உணவாக இருக்கக்கூடிய நெல், புல் இனத்தை சேர்ந்தது. இதை ஏன் இங்கு சொல்லவேண்டும் என்றால், நகரத்தில் இருப்பவர்களில் பலர் நெல் மரத்திலிருந்து கிடைக்கக்கூடியது என்றும், அரிசி மற்றொரு தாவரத்தில் இருந்து வருகிறது என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முடிவுரை;
விவசாயத்தை இன்றைய தலைமுறைகளிடமிருந்து நாம் வெகு தூரத்துக்கு விலக்கி வைத்துவிட்டோம் என்பதன் அடையாளம் இது. எது எப்படியோ இன்றைய மனித வாழ்வின் முன்னேற்றுத்துக்கு அடிப்படையாக அமைந்தது தானியம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.