வியாழன், 23 ஆகஸ்ட், 2018

நட்பு அன்றும் இன்றும்


                                  உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே 
                                  இடுக்கண் களைவதாம் நட்பு. 788      
என்கிறார் வான்மறை தந்த வள்ளுவர்.

உண்மையான நட்பு என்பது தனது நன்பனுக்கு ஆபத்து வருகின்ற தக்க காலத்தில் உதவுவதாக இருக்க வேண்டும்.
புறநானூறிலே "தன் தோழற்கு வருமே" எனும் ஒரு பாடலில் ஒரூஉத்தனார் நட்பை அழகாய் ஆழமாய் கூறியிருக்கிறார்.
அந்த பாடல் வரிகள்.

கோட்டம் கண்ணியும் கொடுந்திரை அடையும்-
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்-
ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய-
திணிநிலை அலறக் கூவை போழ்ந்து தன்-
வடிமான் எகம் கடிமுகத்து ஏந்தி-
ஓம்புமின் ஓம்புமின் இவண்! என ஓம்பாது-
தொடர்கோள் யானையின் குடர்கால் தட்பக்-
கன்றுஅமர் கறவை மான;
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே.  
புறநானூறு -275

இந்த பாடலின் பொருள் எனது பார்வையில்.

அழகான கண்ணியும்
 மென்மையான ஆடையும் 
மன்னனின் பெருமையைப் பாடிப்பாடி அவனை கவருதலும்
அவனுக்கு ஏற்புடையது அல்ல.
போரிலே தன்னுடைய நண்பன் பகைவர்களால் சூழப்பட்டிருக்கும் சமயத்திலே
போர்வாளினை ஏந்திக் கொண்டு முன்னே நண்பனை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிற பகைவர்களையெல்லும் அழித்துக் கொண்டே இவன் முன்னோக்கி செல்கின்றான்.
சுற்றி நிற்கும் கூட்டமெல்லாம் இவனுக்கு எதாவது ஆகிவிடுமோ என்று
நிறுத்துக!!நிறுத்துக!! என்று கத்துகின்றன.
அதனையெல்லாம் பொருட்படுத்தாமல்
"கன்றை நோக்கி செல்லுகின்ற தாய்ப்பசுவைப் போல தன்னுடைய தோழனைக் காக்க செல்லுகின்ற இவனுடைய வீரத்தை 
என்னவென்று சொல்லது.

இந்த பாடல் வரிகளைப் பார்க்கும் போது தற்போது நடந்த சம்பவம் ஒன்று கண்முன்னே வந்து போகிறது.
கும்பகோணத்தில் நடந்த தீ விபத்து நாம் அனைவரும் அறிந்ததே.
அதில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி க் கொண்டிருந்த ஒரு சின்னப் பாப்பாவை தூக்க அந்த பாப்பாவின் சித்தப்பா வருகிறார்.
அப்போது அந்தப்பெண் சொல்லுகிறாள்.
"சித்தப்பா என்ன மட்டும் தூக்காதீங்க.என் தோழியும் அங்க அடிபட்டு கிடக்குறா அவளையும் தூக்குங்க"
என்று..
உண்மையிலே அந்த சின்னப்பிள்ளையினுடைய நட்பு போற்றுதற்குரியது தான்.
இன்னும் ஒரு சில இடங்களில் இதுபோன்ற நட்புகள் வாழ்ந்து கொண்டிருப்பதில் மனம் மகிழ்வடைகிறது.
"நல்ல நண்பர்களைத் தேடுவதை விட்டுவிட்டு முதலில் நாம் நல்ல நண்பராய் இருப்போம்".

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

விளம்பரங்கள் வெறுப்பல்ல


         நாம் தொலைக்காட்சிகளில் படம் பார்க்கும் போது விளம்பரங்கள் வரும் எனில், அதை டக்கென்று மாற்றி விடுகிறோம். ஏனெனில் அனைத்து விளம்பரங்களுமே வெறுப்பைத் தான் தருகின்றன என்பது நம் பொதுவான எண்ணம்.

சில விளம்பரங்கள் நமது முன்னேற்றத்தை பறைசாற்றுவதாக அமைகிறது.  பாத்திரம் கழுவும் ஜெல் விளம்பரம்.  இதில் கணவர் டீ வைக்கும் போது பாத்திரம் கருகி விடும். அதை அவர் ஒருவிதமான அன்பு கலந்த பயத்தில் வெளிப்படுத்துவார்.  முன்பெல்லாம் பெண்கள் சமைக்கும் போது மிகவும் கவனத்துடன் சமைப்பார்கள். இல்லையெனில், கணவர் திட்டுவார் என்ற பயமே மேலோங்கி இருக்கும். ஆனால், இன்றைய தலைமுறை எவ்வளவு வளர்ந்திருக்கிறது. சமையல்கட்டு,சமையல் என்பது பெண்களுக்கான ஒன்றே என்று இருந்த சமுதாயம் எவ்வளவு முன்னேறி இருக்கிறது. "வீட்டு வேலைகளை ஆண்,பெண் இருவருமே பகிர்ந்து  கொள்ளலாம். என்றளவுக்கு இந்த சமுதாயம் வளர்ந்துள்ளது.

பெண்களுக்கான அதைத்து அங்கீகாரங்களும் இந்த தாய்திருநாட்டில் வழங்கப்படுகிறது.  சமீப காலத்தில், சவுதி அரேபியாவில் கூட பெண்களுக்கு மகிழுந்து ஓட்ட  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த மாதிரியான விளம்பரங்கள் நமது சமுதாய முன்னேற்றத்தை பறைசாற்றுவதாக அமைகிறது. இன்றைய அவசர காலத்தில் இந்த மாதிரியான விளம்பரங்களை சில நிமிடம் ரசித்துப் பார்த்து நமது முன்னேற்றத்தை கண்டு பெருமையடையுங்கள்.

இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களில் தான் வாழ்க்கை அழகாகும்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

 



 கடந்த சில  மாதங்களாகவே நாம் இந்த வார்த்தையை அதிகம் கேட்கிறோம்  இது என்னை மிகவும் காயப்படுத்தியது.  என்னதான் வாட்ஸ் அப்பில்  நாளை கல்லூரி விடுமுறை என்று ஸ்டேடஸ் வைத்தாலும் மனம் ஒரு விதத்தில் வலிக்கிறது.
        முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களாக இருந்தாலும் சரி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் மறைவாக இருந்தாலும்
 இன்றைய தலைமுறை "தலைவர்கள் இறந்தால் பள்ளி,கல்லூரிக்கு ஒருநாள் விடுமுறை கிடைக்கும் என்று மகிழ்ச்சி அடைவது மிகவும் மன வேதனையை அளிக்கிறது. எதற்காக பள்ளிக்கு செல்கிறோம் என்று தெரியாமலே பள்ளிக்கு செல்கின்றனர் குழந்தைகள். அவர்கள் வீட்டிலிருந்து விளையாடி உறவுகளை தெரிந்து கொள்ளும் வயதில் பள்ளிக்கு அனுப்பிவிடுகிறோம்.இதனால்,பள்ளிக்குழந்தைகளுக்கு  யார் இறந்தால் என்ன எனக்கு  'ஒருநாள் விடுமுறை 'என்ற மனோ நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். பள்ளிக்கூடங்களில் மட்டுமல்ல கல்லூரியில் எனது தோழியர் கூட்டம் கூட "நாமெல்லாம் யாரு ஒரு நாள் விடுமுறைக்காக முக்கிய தலைவர்களையே இறக்க சொன்னவர்கள் " என கெத்து காட்டுகிறார்கள். இத்தனை வருடங்களாக நமது கல்வி இதனையா போதித்தது இல்லையே..
        தலைவர்களை இழந்து
              தமிழகமே வாடுகிறது
ஆனால்,
       இந்த மாணவ சமுதாயம் மகிழ்ச்சி  அடைகிறது.  காரணம் "பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை 
இனிமேலாவது,
             வேதனையடையுங்கள்
                   நல்ல தலைவர்களை                   இழந்ததற்காகவும்,  இன்று பள்ளி, கல்லூரிகளிலில் கற்க வேண்டியதை தவற விட்டோம் என்று........ 

வெள்ளமாக மாறிய மழை


               





ஊசி மழையாய்  நீ தூறிய போது உன்னை எண்ணிக்கொண்டே ரசித்தேன்......
உன்னோடு சேர்ந்து விளையாடினேன்
பள்ளியை விட்டு வரும்போது கொட்டும் மழையாய்என் தலையில் கொட்டியபோது நானும் உன்னை கொட்ட நினைத்தேன்...
உன்னோடு சேர்ந்தே வீட்டுக்குச்சென்று அம்மாவிடம் திட்டு வாங்கினேன்...
கனமழையாய் என் தெருவில் நுழைந்த போது வெளியே வரமுடியாமல் குடிசையின் ஓட்டையில் நீ விழுந்ததை நான் வேடிக்கைப்பார்த்தேன்...
ஒருநாள்,
      நீ வெள்ளமாய்வந்தாய் என் வீடே தண்ணீரில் தத்தளித்தது. என் உடைமைகளெல்லாம்  தண்ணீரில் மிதந்தது. மகாலட்சுமி வீட்டிற்கு வந்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம்..  நீ என் வீட்டிற்குள் வந்திருக்கிறாய் என் வீடு முற்றிலும் அழிந்து விட்டது...
இனிமேலாவது,
         என் குடிசை வீடு  
             ஓட்டு வீடாகுமா? என்ற கனவுகளோடு மிதக்கிறேன் என் குடிசை வீட்டில்......

     


அம்மாவுக்காக...


       





பாஞ்சி வயசுல ஏ அப்பாவுக்கு வாக்கப்பட்டதுல இருந்து பதினாறு வயசுல புள்ளை பெத்ததுல இருந்து இன்னைக்கு வரைக்கும் குடும்பத்துக்காகவே வாழ்றியே அம்மா உன்னோட கனவுகளை மறந்திட்டையா? இல்ல மறைச்சிட்டையா?

வாழ்க்கையினா என்னென்னு தெரியாத வயசுல மாமியார்கிட்டையும், நாத்தனார்,நாத்திகள்கிட்டயும் என்னென்ன பாடுபட்டையோ?

அண்ணே சோத்துக்கு அழுவ நா பாலுக்கு அழுவ மாமியார்  துணிதுவைக்கனும்ன்னு அழுவ  நாத்தனார் சோறு போடுங்க அண்ணின்னு கத்த நாத்திகளெல்லாம் ஒருடம்ளர் காபி வச்சித்தாம்மான்னு கேட்க அத்தனை வேலையையும் அசால்டா செஞ்சிப்புட்டு இன்னைக்கு ஏ மவனுக்கு துணிதுவைக்கமுடியலேன்னு ஆதங்கப்படுறியே அம்மா....

குழந்தையில இருந்து ஆளானது வரைக்கும் ஒரு வேலை செய்யவிட்டிருப்பியா அம்மா வேலைக்குப்போய் மாடுமாதிரி உழைச்சு தீபாவளிக்கு போனஸ் கொடுத்தாங்கன்னா எங்களுக்காகவே தங்கத்துல கால் பவுன் தோடு எடுத்து தருவியே அம்மா நாம போட்டு இருக்க தோடுக்கு சின்னதா ஒரு மாட்டல் எடுத்துக்களான்னு ஒரு கணம்கூட யோசிக்கலையா  அம்மா.....

பாத்திரம் கழுவுடின்னு கத்துவ ஆனா பத்து நிமிஷத்துல நீயே கழுவிடுவ
வீட்டைக் கூட்டுடின்னு வெளக்கமாற எடுப்ப ஆனா எங்கையில கொடுக்காம நீயே கூட்டிடுவ  துணி துவைச்சி நாலுவாரம் ஆகுதுடின்னு என்ன தொவக்காம மொத்த துணியையும் நீயே தொவச்சிடுவ சுடசுட தட்டுல சோறு போட்டு கையில கொடுப்ப விக்கும்போது விவேகமா தண்ணி கொடுப்ப
ஒரு நாள்,
 நீ ஊருக்குப் போயிட்ட நீயில்லாத வீட்டுல ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல தெரியுமா அம்மா...

உனக்கு  தா ஆயிரம் கஷ்டம் புள்ளைய காலேஜ்ல சுத்தி விடனும் பைய வெளியில போக டிப்டாப்பா நாலு சட்டை வாங்கனும் அப்பாவுக்கு சர்க்கரை மாத்திரை வாங்கனும்
இதுக்கு நடுவுல,
    உன்னோட கழிஞ்ச சேலைய முந்தானையில இருக்கி முடிச்சி மறைச்சிட்டையா  அம்மா....

வாழ்க்கையில உன்னோட சந்தோஷம்னு எதாவது இருக்கா அம்மா நா முதல் மதிப்பெண் வாங்குனா சந்தோஷப்படுவ, பாப்பா பாஸ் ஆனா சந்தோஷப்படுவ, அண்ணே தலையில எண்ணெய் வச்சிகிட்டா சந்தோஷப்படுவ, அப்பா சிரிச்சா மொத்தமா சந்தோஷப்படுவ இதெல்லாம் நீ இல்லையே அம்மா  நாங்க எல்லாருமே சேர்ந்தா அது நீ தானா அம்மா
அம்மான்னா அது ஒருத்தவங்க இல்ல அது ஒரு குடும்பம்!!

உனக்குன்னு நகை நட்டு வாங்கனும் பட்டுசேலை வாங்கனும்னு  என்னைக்குமே புலம்புனதே இல்ல  புள்ளைய நல்லா படிக்க வைக்கனும் நல்ல இடத்துல பாத்து கல்யாணம் பண்ணி வைக்கனும் பையன ஊரே பாத்து பெருமைப்படனும் இப்படித்தான் புலம்பி இருக்க
          உன்னோட புலம்பலெல்லாம் 
             நிச்சயமா ஒருநாள் நனவாகும் 
                  உன்னோட புள்ளைகளாள.....