செவ்வாய், 26 ஜூலை, 2022

வாடிய மலரே நீ

வாடிய மலரைக் காண சென்றேன்...!

அழகாய் மலர்ந்த மலர்கள் 

ஏனோ 

வினவியது....

உன் கண்களை கவர்வது போல

பல வண்ணங்களாய் பூத்துள்ளேன் !

என் மணம் உன்னை 

ஈர்க்க  வில்லையா? 

என் வண்ணங்கள்

உன் கண்களை

ஈர்க்க வில்லையா ? 

ஏன் என்னை விலக்கி

வாடிய மலரை வர்ணிக்கின்றாய்?

என் கண்கள் 

உன்னைக் காண நினைப்பது 

ஏனோ 

நான் மறைத்த உண்மை மலரே..! 

ஆனால்..

வாடிய மலர் தனிமையில் 

இன்னும் வாடுகின்றன 

வர்ணிக்க யாருமில்லாமல்

அதனை உணர்ந்த என் மனம் .

உன்னைக் காண நான் வருகின்றேன்..

வர்ணிக்க வருகின்றேன்  

வருந்ததே மலரே.... !

நான் கூறியதைக் கேட்ட

வண்ண மலர்கள் புரிந்து கொண்டு

அழைத்துச் செல் என்னையும் 

காண வருகிறேன் அழகிய

வாடிய மலரை...!

அழகின் ரகசியமே 

வாடிய மலரே நீ.... !!

திங்கள், 25 ஜூலை, 2022

மீனின் மகிழ்ச்சி

நீருக்கு பஞ்சமில்லை..... !!!

மான்போல் துள்ளி ஓடும் நதியில்....!!

ஜொளிக்கும் நட்சத்திரமாய் வாழும்

மீன்கள் ஏனோ 

துள்ளி குதித்து தாவும் 

மீனை வர்ணிக்க வந்தேன்....!!!

நீல நதியில் வசிக்கும்

வண்ண மீன்களே.....!!

என்னிடம் உரையாட வா!!! 

உன்னிடம் விளையாட வருகிறேன்..!!!

என் மனதில் ஏக்கம் 

ஏனோ 

முத்துகளைப் போல்

குவிந்து கிடக்கின்றது...!!

பல வண்ணங்களைக் கொண்ட

உன் மேனியை நேசித்தேன்.....!!!

வசிப்பாயா என்னுடன் ? 

வினவ வந்தேன்

சட்டென்று தடுமாற்றம் படைதேன்....!!!

உன்னை அழைத்துச் செல்ல

மறுக்கிறது என் மனம்...!!

நீ வசிக்கும் உம் இடமே

உன் மகிழ்ச்சிக்கு காரணம்.....!!

நீல நதியில் - நீ !!

துள்ளி விளையாடும்

மகிழ்ச்சியை உன்னிடம் இருந்து

பறிக்கமாட்டேன்......!!!

உன் மகிழ்ச்சியை உன்னிடம் தந்து

உன் மகிழ்ச்சியை கண்டு

நான் மகிழ்ச்சி அடைகிறேன்

கண்ணே !!!

சனி, 23 ஜூலை, 2022

நிலவின் நிழல்

நிலவில்லை ...!!!

என்னுடன் வசிக்கும் 

நிழலில்லை ...!!!

நிழலில்லா   உயிரே 

நிலவைத் தேடிய 

நிலையில்  துடிக்கும் 

என்னவளின் உயிர்

நிலவின் நிழலிற்காக... !!!

வியாழன், 21 ஜூலை, 2022

தொலைந்த அகம்

யாக்கையின்றி 

நான் இல்லை !!!

இன்று 

புறத்தே அலைகிறேன்  

அகம் ஒன்றை 

தொலைத்துவிட்டு!!!

புதன், 20 ஜூலை, 2022

இன்றைய கல்வி

               தனி மனிதனுடைய வாழ்வையும் நாட்டின் வாழ்வையும் உயா்த்துவது கல்வியாம். சங்க இலக்கிய காலங்களில் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கினா். தமிழ்நூல்கள் பலவற்றில் கல்வியின் சிறப்புகளையும், சிந்தனைகளையும் வளா்த்து வந்துள்ளனா். தனிமனிதன் ஒழுக்கமுடன் வாழ்வதற்கு கல்வி இன்றியமையாதது என மக்கள் நம்பினா். மேலும் தனிமனிதனின்  ஒழுக்கமே சமுதாய ஒழுக்கத்திற்கு வழிவகுக்கும் என கருதினா். சங்க காலங்களில் அரசு பள்ளிகளை நடத்தியதாக அறிய முடியவில்லை. எல்லாம் தனியார் நடத்திய திண்ணைப் பள்ளிகளே எனலாம். மரத்தடியும், ஆசிரியா் வீடும், ஊா் அம்பலமும் பள்ளிகளாக விளங்கின எனலாம். திண்ணைப்பள்ளி ஆசிரியா்கள் எண்ணும் எழுத்தும் கற்பித்தனா். 
        
                எண் என்பது கணக்கையும் எழுத்தென்பது மற்றவற்றையும் குறித்தது. வாயினால் வகு்த பக்கம், கையினால் வகுத்த பக்கம் என்று தொல்காப்பியா் ஏட்டுக்  கல்வியையும் தொழிற்கல்வியையும் தனித்தனியே பிரித்துக் காட்டுகிறார். எண்ணும் எழுத்தும் தவிர வானியல், மருத்துவம், இசை, ஓவியம், சிற்பம், நாட்டியம் முதலியவை பற்றிய கல்வியும் சிறப்புற்றிருந்தது. கல்வியும் சிறந்திருந்தது. ஓவியச்செந்நூல் பற்றி மணிமேகலை கூறுகிறது. கட்டிட நூல் பற்றி நெடுநல்வாடை நூலறிபுலவா் என்று பேசியுள்ளது. இசை நூல் பற்றித் தொல்காப்பியம் யாழின்மறை என்று குறிப்பிட்டுள்ளது. அன்றைய காலகட்டத்தில் கற்றறிந்தவா் கூடிச் சிந்திக்க வாய்ப்பிருந்தது. சங்கம் அதற்காக அமைந்ததேயாகும். பட்டி மண்டபங்கள் வைத்து அறிஞா்கள் பல பொருள்களைப்பற்றி வாதிட்டதற்குச் சான்றுகள் உண்டு.
“பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியா்
உறழ்குறித் தெடுத்த உருகெழு கொடியும்”(பட்டினப்பாலை)
என்பது சான்று. 
அன்றைய காலகட்டங்களில் கல்வியானது ஒழுக்கத்தையும்,அறிவையும் வளா்ப்பதற்காக மட்டும் செயல்பட்டது இன்றைய கல்வி நிலையானது முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. இன்றைய சூழலில் கல்வி வணிகமயமாக மாறி வருகிறது இத்தகைய நிலை மாறுமா?
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
மு.செல்வி