சனி, 4 ஜூன், 2016

முகம்மது அலி

                                                           
    Image result for முகம்மது அலி


உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்று உலகப் புகழ்பெற்ற பத்திரிக்கைகளால் பாராட்டப்பட்டவர்.
     குத்துச் சண்டையில் அவர் காட்டும் தீவிரம், வேகம், நளினம் எல்லாம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த அம்சங்கள்.
     இவரது இயர்ப்பெயர் காஷியஸ் மார்ஸ்ல்லஸ் க்ளே ஜூனியர் என்பதுதான். இவரது இளமைக் காலத்தில் அமெரிக்காவில் நிறவெறி தலைவிரித்தாடியது. அதனால் இவரது பிரிவைச் சார்ந்தவர்களுக்காக இருந்த தனியான பள்ளியில் சேர்ந்து படித்தார்.
     ஒரு காலக்கட்டத்தில் முஸ்லீம் மதத்தில் சேர்ந்து முகம்மது அலி என்கிற பெயரை வைத்துக்கொண்டார்.
     சிறந்த குத்துச் சண்டை வீரராக அமெரிக்காவில் வசித்து வந்தாலும் பல சந்தர்ப்பங்களில் அமெரிக்காவின் கொள்கைகளைப் பிடிக்காமல் பகிரங்கமாக அரசாங்கத்தை எதிர்த்தார். அதன் விளைவாக அவர் அமெரிக்க நாட்டின் சார்பாக குத்துச் சண்டை போட்டிகளில் பங்கு எடுக்க கூடாது என்று அரசாங்கம் தடை விதித்தது. பலகோடி ரூபாய் வருமானம் நஷ்டம். இருந்தாலும் தன் கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை.
     ஒரு காலக்கட்டத்தில் அவருக்கு பார்க்கின்ஸன் வியாதி வந்து அவர் குத்துச் சண்டையே போட இயலாத நிலை வந்தபோதும் மனம் கலங்காமல் பொதுத் தொண்டுகளில் ஈடுபடத் தொடங்கினார்.
     பார்க்கின்ஸன் வியாதியால் துன்புறுபவர்களுக்கு அதிக நிவாரணம் கிடைக்கவும், அரசாங்கத்தின் நிதி உதவி, அது சம்மந்தமான ஆராய்ச்சிகளுக்கு கிடைக்கவும் முயற்சி செய்தார்.
     லூயிஸ்வில்லி என்னும் இடத்தில் ‘முகம்மது அலி சென்டர் ‘ என்ற பெயரில் மிகவும் வித்தியாசமான கண்காட்சிசாலையும் நிரந்தரமாக செயல்பட்டு வருகிறது. தன்னை வளர்த்த சமுதாயத்தின் வளர்ச்சிக்காக மிகவும் பாடுபட்டு வந்தார். 1942 ஆம் ஆண்டில் லூயிஸ்வில்லி என்னும் இடத்தில் பிறந்த இவர், முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஹெவி வெயிட் சாம்பியன் என்னும் பட்டத்தைப் பெற்றபோது, இவருக்கு வயது 18 தான். ஐம்பத்தொம்பது போட்டிகளில் இவர் மூன்றில் தான் தோல்வி கண்டிருக்கிறார். இவ்வளவு சாதனைகள் படைத்த முகம்மது அலி நேன்று (3.6.2016) காலமானார் என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

                                

வெள்ளி, 3 ஜூன், 2016

எனது ஐயங்களுடன் முத்து நிலவன் ஐயா..!!


அன்புடையீருக்கு வணக்கம்,

இன்றைய பதிவில் இருந்து நான் புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளேன்.ஒவ்வொரு வலைப்பதிவர்களுடனும் அவரவர் துறைச் சார்ந்த எனது ஐயங்களுடன் ஒரு பேட்டிக் கண்டு அதனை பதிவாக வெளியிட உள்ளேன்.இது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நோக்கத்துடன் தொடர உள்ளேன்.

சனிக்கிரகத்தில் நிலவுகள்


                    சனிக்கிரகத்தில் நிலவுகள்

முன்னுரை

     இரவு நேரங்களில்  நிலவின் ஒளியை இரசிக்காதவர் யவரேனும்  உண்டா?? இத்தகைய நிலவு பூமியில் மட்டும் தான் உள்ளதா? என்று கேட்டால் இல்லை. சனிக்கிரகத்திலும் நிலவுகள் உள்ளன. அதைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

ஆறாவதுகோள்

சூரியக் குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் சனி கிரகம் ஆறாவதாக இருக்கிறது. இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு முறை சூரியனை சுற்றி வர 29% ஆண்டுகள் எடுத்து கொள்கிறது. தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 10 மணி 34 நிமிடம் நேரம் ஆகிறது. சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோள் சனியாகும். சனிக் கோளினுள் சரியாக 763 பூமிகளை உள்ளடக்கிவிடலாம். அவ்வளவு பெரியது. இருந்தாலும் சனியின் எடை பூமியை விட 95 மடங்கு தான் அதிகம். இதிலிருந்து சனி ஒரு பெரிய வாயுக்கோளம் என்பதையும், கடினமாக இருக்கும் அதன் உட்பகுதி மிகச் சிறியது என்பதையும் ஓரளவு அறிந்து கொள்ளலாம்.

ஈர்ப்புவிசை

சனியின் சராசரி அடர்த்தி 0.71 என குறைவாக இருக்கிறது. சனியின் ஈர்ப்பு விசை பூமியிலிருந்து வேறுபடவில்லை. சுமார் 1.17 மடங்கு தான் அதிகம். பூமியில் 70 கிலோ எடையுள்ள ஒரு மனிதன், சனியில் 82 கிலோ இருப்பான். சூரியனில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், சனியின் சராசரி வெப்பநிலை மிக மிக குறைவாகவே இருக்கிறது. சனியின் காற்று மண்டலத்தில் அம்மோனியா குறைந்து போவதால் கோளின் மேற்பரப்பு முழுவதும் பனிப்பிரதேசமாக காணப்படுகிறது.

சனிக்கிரகத்தில் நிலவுகள்

நமது பூமிக்கு ஒரு நிலவு என்றால் சனிக்கு 62 நிலவுகள். இந்த நிலவுகளின் மொத்த அளவில் 90% “டைட்டான்” என்ற ஒரு நிலவு மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இது கிட்டத்தட்ட நமது பூமி அளவுக்கு பெரியது. சனியின் இரண்டாவது பெரிய நிலவான “ரியா”வுக்கு சுற்று வளையங்கள் உண்டு. 10 கி.மீ.க்கும் குறைவான  விட்டம் கொண்ட நிலவுகள் 34 இருக்கின்றன. 10கி.மீ இருந்து 50 கி.மீக்குள் விட்டம் கொண்ட நிலவுகள் 44 இருக்கின்றன. இவை தவிர மீதமுள்ள மிகச் சிறிய அளவுகள் கொண்ட நிலவுகள் சனியில் இருக்கின்றன.

சிறப்பம்சம்

பிற கோள்களில் காணப்படாத ஒரு தட்டையான வளையம் கோளின் நடுப்பகுதியைச் சுற்றி இருப்பது சனியின் சிறப்பம்சமாகும். சனியைப் பற்றி பல புதிர்களில் அதன் வளையம் தான் மிக முக்கியமானது. வியாழனுக்கும், யுரேனசுக்கும் இது போன்ற வளையம் உள்ளது. ஆனாலும் சனிக்கு இருப்பதைப் போல குறிப்பிடும் படியாய் அதுக்கு இல்லை. சனி வளையங்களைப் பற்றிய உண்மைகளை 1981 “வாயேஜர்” விண்கலம் மூலம் ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. கோடிக்கணக்கான பனிக்கட்டிகள், சிறியதும் பெரியதுமாய் துணைக்கோள்கள் போலச் சுற்றி வருகின்றன. அவை கூட்டம் கூட்டமாக பிரிந்து பரந்த இடைவெளியுடன் கூடிய பல வளையங்களாக தோன்றுகின்றன என்பதும், இவ்வாறு ஆயிரக்கணக்கான வளையங்கள் அதில் உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது. சனியின் துணைக்கோள் ஒன்று வெடித்துச் சிதறியதால் இந்த வளையங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. சனிக்கு அருகில் உள்ள வளையங்கள் வட்ட வடிவமாகவும், தள்ளி உள்ளவை முட்டை வடிவமாகவும் காணப்படுகின்றன.

முடிவுரை

சனி வளையத்தின் கட்டமைப்பு சீர்குலையமால், கோடிக்கணக்கான துகள்கள் எப்படி சீராக ஒரு குறிப்பிட்ட வளையத்தினுள் இயங்கி வருகின்றன என்பது இன்றும் புரியாத ஒரு விசயமாகவே இருந்து வருகிறது. வருங்கால விஞ்ஞான வளர்ச்சி இதற்கும் விடை கொடுக்கும். மேலும் சனிக்கிரகத்தில் குடியேறும் நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அகஸ்டின் காச்சி


                  
              

     


     அகஸ்டின் காச்சி பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கணிமமேதை ஆவார்.  கணிதத்தல் பல்வேறு கடினமான கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்து உலகிற்குக்கு கூறியவர் இவர்.
     காச்சி 1789 ஆம் ஆண்டு பாரீஸ் நகரத்தில் பிறந்தார்.  இவர் சிறுவயதிலேயே கணிதத்தில் ஆற்றலும் ஆர்வமும் கொண்டு விளங்கினார்.  இவரது கணித ஆற்றலைக் கண்டு வியந்த கணிதமேதை “லாக்ரேஞ்ஜ்” காச்சியின் கல்வியில் பெரிதும் அக்கறை கொண்டார்.
     காச்சி தனது 16 ஆவது வயதில் எகோல் பாலிடெக்னிக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, கட்டடக்கலை பொறியாளா் பட்டம் பெற்றார்.  1819 ஆம் ஆண்டு, தனது 18ஆவது வயதிலேயே உதவிப் பொறியாளராக உயர்ந்தார்.  அதன்பிறகு கப்பல்படைத்தளக் கட்டுமானப் பணிக்காக பாரீஸ் நகரத்திலிருந்து “செர்போர்க்” என்னும் நகருக்குச் சென்றார்.  அங்கு மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த காச்சி, உடல்நிலை பாதிப்படைந்து மீண்டும் பாரீஸ் நகருக்கே திரும்பி வந்தார்.
     பாரீஸ் வந்தபிறகு இவர் பல கணித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.  தனது கணித ஆராய்ச்சியின் விளைவாக 1812ஆம் ஆண்டு “ஒத்த அமைப்புடைய எண்களின் செயல்பாடுகள்” (symmetric function) பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.  இக்கட்டுரையே பின்னாளில் குழுஎண்களின் தோற்றத்திற்கு (Group theory) அடித்தளமாக அமைந்தது.
     காச்சிக்கு நாளடைவில் பொறியாளர் பணியில் சலிப்பு தோன்றியது.  அவர் தனக்கு ஆர்வமான கணிதத் துறையிலேயே பணி தேட ஆரம்பித்தார்.   அல்ஜீப்ரா சமன்பாடுகளின் எண்களைத் தீர்மானிக்கும் வழி முறைகள் பற்றி கற்றறிந்தார்.
     காச்சியின் ஆர்வத்திற்கு ஏற்ப, எதோல் பாலிடெக்னிக்கிலேயே அவருக்கு உதவிப் பேராசிரியா் பணி கிடைத்தது.  விரைவிலேயே அவர் இயந்திரவியல் துறையின் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.
    அல்ஜீப்ராவில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் புரிந்து வந்த காச்சி, புதிய கருத்தொன்றை தனது ஊகத்தின் அடிப்படையில் கூறினார்.  அக்கருத்து, ”முழு எண்கள் தானாகவே கூட்டு எண்களாக தாறுவது போல, ஒடுங்கும் எண்களின் தொடரானது விரிவடையும் எண்களின் தொடராகவும் மாறும்” என்பதாகும்.
    காச்சியின் இக்கண்டுபிடிப்புகள் பின்னாளில் கூட்டு எண்களைப் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்ட பல கணித மேதைகளுக்கு உதவியாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    இவர் 1825 ஆம் ஆண்டு “எக்ஸர்ஸைஸஸ் ஆன் மேத்தமேடிக்ஸ்” (Exercise on Mathematics) என்னும் மாத இதழ் ஒன்றை ஆரம்பித்து பயிற்சிகளை வெளியிட்டார்.  அப்பயிற்சிகள் ஐந்து பாகங்கள் வெளியாகின.  காச்சி தனது கணித ஆராய்ச்சியின் மூலமாக 17-ன் வர்க்க மூலத்தை பத்தின் பின்ன இலக்கங்களாகக் கண்டறியும் வழி முறையைக் கூறினார்.
     இவர் தனது வாழ்நாளில் மொத்தம் 789 கணித ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார்.  கூட்டு எண்களின் திறனறியும் நவீன கணிதத்தைப் பற்றிய பல உண்மைகளை அவர் கண்டறிந்து கூறினார்.  அவரது கணித ஆராய்ச்சியில் “பலகோணம்” என்னும் வடிவம் முக்கியத்துவம் பெற்றது.
     காச்சி கணிதத்தில் மட்டுமின்றி ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கி, ஏழைகள், ஆண்களால் ஏமாற்றப்பட்ட பெண்கள் பலருக்கும் பல உதவிகள் செய்தார்.
    “திரவங்களில் அலைகளை ஊடுருவச் செய்தல்” பற்றிய ஆராய்ச்சிக்காக பிரெஞ்சு அகாடமி விருதைப் பெற்றார்.
குறிப்பு – படித்ததில் பிடித்தது

வியாழன், 2 ஜூன், 2016

ஜான் எஃப் கென்னடி

                                              Image result for ஜான் எஃப் கென்னடி

அமெரிக்க நாட்டின் முப்பத்தைந்தாவது குடியரசுத் தலைவர். கென்னடியும் அவரது மனைவி ஜாக்குலின் கென்னடியும் உலக மக்களை அப்படியே கவர்ந்து இழுத்தார்கள்.
     கென்னடி குடியரசுத் தலைராக ஆவதற்கு அவருடைய தந்தையால் உருவாக்கப்பட்டவர். அவருடைய தந்தை முதலில் கென்னடியின் மூத்த சகோதரரைத்தான் அந்தப் பதவிக்கு உருவாக்கி வந்தார். அவரின் எதிர் பாராத மரணம், கென்னடியை அந்த பதவிக்கு ஏற்றவராக அவரது தந்தையை தீர்மானிக்க வைத்தது.
     கென்னடி அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றப்போது அவர் ஆற்றிய உரை உலகப் புகழ் வாய்ந்தது.
     ‘     உன்னுடைய நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே; உன்னுடைய நாட்டிற்கு நீ என்ன செய்யப் போகிறாய் என்று சொல் ’ என்ற அவருடைய உரை புகழ் பெற்றது.
     ’ அமெரிக்காவின் குடிமகனாக இருந்தாலும், உலகத்தின் குடிமகனாக இருந்தாலும் சக்தியும், தியாகமும் அவசியம் என்று ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும்’ என்று விரும்பினார்.
     அவரது காலக்கட்டத்தில் கியூபா பிரச்சனை, வியட்நாம் யுத்தம் எல்லாம் அவருக்கு ஏராளமான தலைவலியைக் கொடுத்த பிரச்சனைகள். உள்நாட்டில் அப்பிரிக்க – அமெரிக்கர்களுக்கு மேலும் பல சலுகைகள் கிடைக்க ஆதரவு தெரிவித்தார்.
     விண்வெளி ஆராய்ச்சியில் இன்று அமெரிக்கா முன்னணியில் நிற்பதற்கும், சந்திர மண்டலத்திற்கு விண்வெளி வீரர் அனுப்பப்பட்டு அவர் பூமிக்குத் திரும்பி வந்ததும், கென்னடி விண்வெளி ஆராய்ச்சிக்கு அளித்த உற்சாகாமான ஆதரவினால் தான்.
     அவரது உற்சாகமான பேச்சைக் கேட்ட பிறகுதான், பத்து வருடத்திற்குள் சந்திர மண்டலத்துக்கு மனிதனை அனுப்பி திருப்பிக் கொண்டு வரவேண்டும் என்று ஆராய்ச்சிகள் அதிவேகத்தில் நடைபெறத் தொடங்கின.
     மக்களின் மனதைக் கவர்ந்த ஜான் எஃப் கென்னடி 1963 ஆம் வருடம் நவம்பர் 22 ஆம் நாள், ஆஸ்வால்ட் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
     1961 ஆம் வருடத்தில் கென்னடி அமெரிக்க குடியரசுத் தலைவராக பதவியேற்ற போது அவருக்கு வயது 43 தான். அமெரிக்காவின் சரித்திரத்திலேயே மிகவும் இளமையான குடியரசுத் தலைவர் என்று பாராட்டப்பட்டவர்.


                                (படித்ததில் பிடித்தது)