இங்கு தான் எங்காவது
அவரைப் பார்த்திருப்பீர்கள்...
வாட்டர் பாட்டிலை எடுத்தபடி..
குப்பையைக் கிளறியபடி..
அதில் ஒரு பேப்பரைப்
படித்துச் சிரித்தபடி
இயலாமையில் அதைக் கிழித்தபடி..
வெறிச்சோடி தாடியைக் கோதியபடி
இறுகிப் போன முடியை நீவியபடி..
இங்கு தான் எங்காவது பார்த்திருப்பீர்கள்...
கடந்த மாதமோ
சென்ற வாரமோ
மூன்று நாட்களுக்கு முன்போ
அல்லது இன்று காலையிலோ பார்த்திருப்பீர்கள்...
ஒருவேளை உங்களில்
யாரேனும் பார்க்கவில்லை என்றால்
உடனே போய்ப் பார்த்துவிடுங்கள்
அவர் இன்னும் சாகவில்லை
நிச்சயமாக அவர் இன்னும் சாகவில்லை...
மற்றுமொன்று
போகும் போது
தனியாகச் செல்லுங்கள்
குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள்..
குழந்தைகளைக் கண்டதும்
அவர் மனிதனாக மாறிவிடுவார்...
தயவுசெய்து
அவரை அப்படியே
விட்டுவிட்டு வாருங்கள்..
அது அவருக்கான உலகம்..
ம.லோகேஸ்வரன்
தமிழ் உதவிப் பேராசிரியர்