பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13,
1926 - நவம்பர் 25, 2016)கூபாவைச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில்1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து 93 மைல் தொலைவில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.
குழந்தைப் பருவமும் கல்வியும்
1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ பிறந்தார். காஸ்ட்ரோவின் தந்தை ஏன்ஜல் காஸ்ட்ரோ ஆவார். காஸ்ட்ரோ குடும்பம் மிகவும் நடுத்தர குடும்பம் ஆகும். ஏன்ஜல் காஸ்ட்ரோ ஒரு பண்ணையார் ஆவார். ஏன்ஜல் ரஸ் காஸ்ட்ரோ ஸ்பெய்னில் இருந்து கியூபாவுக்கு பிழைக்க வந்தார். அவர் கியூபாவின் ஓரியன்ட் மாகாணத்தில் குடியேறினார். ஏன்ஜல் காஸ்ட்ரோ கடுமையாக உழைத்து ஒரு பண்ணையார் ஆனார். அவரின் கீழ் ஆயிரக்கணக்கான கியூபர்கள் வேலை பார்த்தார்கள். 1940 ஏக்கர் நிலத்திற்கு உரிமையாளர் ஆனார் ஏன்ஜல். பிடலின் தாய் லினா, இவர் ஒரு க்யூப பெண்மணி. ஏழை விவசாயின் மகள். இத்தம்பதிக்கு முதல் குழந்தையாக காஸ்ட்ரோ பிறந்தார். மேலும் காஸ்ட்ரோ பிறந்த பின்னரே இத்தம்பதியினர் திருமணம் செய்து கொண்டிருந்தனர்.
அதனால் சிறுவன் காஸ்ட்ரோவிற்கு அவனது பெற்றோரின் திருமணத்தை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. பிடல் இயற்கையாகவே ஏழைகளின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.
கல்வி
1930 ல் கியூபாவில் பொருளாதார நெருக்கடி காரணமாக காஸ்ட்ரோ தமது ஐந்து வயதில், சான்டியாகோ டி-க்யூபா சென்றார். ஏஞ்சலின் குடும்ப நண்பர் வீட்டிற்கு காஸ்ட்ரோவும் அவரது உடன்பிறந்தவர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஏஞ்சலின் குடும்ப நண்பர் ஒரு ஆசிரியர். ஆனால் மிகவும் ஏழை. அதனால் ஏஞ்சல் குழந்தைகளுக்கு அனுப்பும் பணத்தை அந்த முழுக் குடும்பமும் பகிர்ந்துக்கொண்டது. இதனால் காஸ்ட்ரோவின் தங்கைகள் அனைவரும் வீடு திரும்பிவிட்டனர். ஆனால் காஸ்ட்ரோ மட்டும் அங்கேயே தங்கி பள்ளிப் படிப்பை தொடங்கினார்.
சான்டியாகோ டி-கியூபாவில் லா சேல் எனும் பள்ளியில் காஸ்ரோ படித்தார். பின் காஸ்ட்ரோ டோலோரஸ் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
1941 ல் காஸ்ட்ரோ பெலன் கல்லூரியில் சேர்ந்தார். இங்கு படிக்கும்போதே காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசம் எனும் பெயர் தெரியவந்தது. 1945 -ல் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது காஸ்ட்ரோ உயர்கல்வியை முடித்திருந்தார்.
ஸ்பானிய உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது. காஸ்ட்ரோவிற்கு அப்போது கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவர்களை எல்லோரும் ஒதுக்கிவைத்தார்கள் என்பது மட்டும் அவருக்கு தெரியும். நாட்கள் செல்ல செல்ல காஸ்ட்ரோவும் கம்யூனிசத்தை மறந்து போனார். பின் காஸ்ட்ரோ 1945 ல் ஹவானா பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றார். இங்குதான் காஸ்ட்ரோ கம்யூனிசவாதியாக வளர்ச்சி பெற்றார்.
முதல் அரசியல்
காஸ்ட்ரோ, ஹவானா பல்கலைகழகத்தில் சேர்ந்த பிறகு சிறிது சிறிதாக அரசியலால் ஈர்க்கப்பட்டார். கல்லூரி அரசியலில் பங்கு கொண்டார். அப்போது இரண்டு தலைமைக் கட்சிகள் மாணவர்கள் நடுவில் இயங்கி கொண்டிருந்தன. ஒன்று 1925-இல் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று ஜோஸ் மார்த்தியை மானசீக ஆசிரியராக ஏற்றுக்கொண்ட ஆர்த்தோடாச்சோ கட்சி. காஸ்ட்ரோ கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். முதல் ஆண்டே பிரச்சாரத்திலெல்லாம் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.
காஸ்ட்ரோவும் புரட்சியும்
கல்லூரியில் பயிலும்போதே கம்யூனிச கட்சிகளில் சேர்ந்தார். போராட்டங்களும் செய்தார். பேச்சுத் திறமையால் பிடல் மக்களைக் கவர்ந்தார். 1952 ல் அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா, கியூபாவின் ஆட்சியை கைப்பற்றினார்.
அப்போது 'குற்றம் சாட்டுகிறேன்' என்னும் இதழை துவங்கிய காஸ்ட்ரோ, பாடிஸ்டா அரசின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தவும், புரட்சிக்கு மக்களை அணிதிரட்டவும் செய்து கொண்டிருந்தார்.
காஸ்ட்ரோவின் பிரச்சாரம்
காஸ்ட்ரோ முதன்முதலில் பிரச்சாரம் செய்தது ஓரியண்ட் மாகாணத்தில் ஆதன்டிக் கட்சி சார்பில் போட்டியிட்ட அவரின் ஒன்று விட்ட உடன்பிறந்தவர் எமிலியோவிற்காக. அப்போது காஸ்ட்ரோவின் வயது 14. பைரனில் உள்ள அனைவரின் வீட்டிற்கும் சென்று யார், எந்த கட்சிகளின் சார்பாக நிற்கிறார்கள்,
எப்படி வாக்களிக்க வேண்டும் என்று விளக்குவது பிடலின் பொறுப்பு. வெற்றி பெற்றால் குதிரை வாங்கி தருவதாக எமிலியோ கூறியிருந்ததால்,
அதற்காக முனைப்பாகப் பிரச்சாரம் செய்து அரபிய குதிரையையும் பெற்றார். கல்லூரியில் இறுதியாண்டு நடக்கும் தேர்தலுக்கு பிடல் முதல் ஆண்டிலிருந்தே கடுமையாக பிரச்சாரம் செய்தார். அத்தேர்தலில் வெற்றியும் கண்டார்.
முதல் தாக்குதல்
ஜுலை 26, 1953 ல் மொன்காடாத் இராணுவமுகாமின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார் காஸ்ட்ரோ. நன்றாக திட்டமிடப்பட்டிருந்தும் பிடெலின் வண்டி கோளாறு காரணமாகவும்,
இருட்டில் மற்ற வீரர்கள் வழி தவறியதாலும் அந்த தாக்குதல் தோல்வியை தழுவியது. காஸ்ட்ரோவும் மாட்டிக்கொண்டார்.
1953 ல் காஸ்ட்ரோவின் வழக்கு நீதி விசாரணைக்கு வந்தது. காஸ்ட்ரோ புரட்சிக்கு திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டார்.
மேலும் பாடிஸ்டாவின் அரசையும் தோலுரித்துக்காட்டினார்; அமெரிக்காவைக் கடுமையாக சாடினார். நீதி மன்றத்தில் பிடெல் நிகழ்த்திய இந்த உரையே,
நீதிபதி அவர்களே, தனக்குச் சாதகமான பாதையை நோக்கிப் பயணிப்பவன் ஒரு உண்மையான மனிதனல்ல. கடமை எத்திசையில் இருந்து அழைக்கிறதோ, அத்திசையில் பயணிப்பவனே உண்மையான மனிதன். அவனது இன்றைய கனவு, நாளைய சட்டமாகும்.
ஏனென்றால் அவன்தான் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தவன். பல நூற்றாண்டுகளாக வரலாற்றின் பழைய பக்கங்களில் உள்ள, இரத்தம் தோய்ந்த போராட்ட நாட்களையும், பெரு நெருப்பில் அழிந்த சமூகங்களையும்,
அறிந்தவனால் மட்டுமே, மனித குலத்தின் எதிர்கால வாழ்வை சிந்திக்க முடியும்.
என் நாட்டு மக்கள், பலரும் பசியோடுதான் படுக்கப் போகிறார்கள்.
மருத்துவ வசதிகள் ஏதுமின்றிக் குழந்தைகள் கல்லறைகளை நாடுகிறார்கள். முப்பது சதவீத மக்களுக்குத், தங்கள் பெயரைக் கூட எழுதத் தெரியவில்லை.
அதைவிடக் கொடுமை, தொண்ணூற்று ஒன்பது சதவீத மக்களுக்கு நாட்டின் வரலாறே தெரியவில்லை.
நீதிபதி அவர்களே, நீங்கள் எனக்குக் கொடுக்க இருக்கின்ற தண்டனை கடுமையானதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். சிறையைக் கண்டோ அல்லது எனது எழுபது உடன்பிறந்தவனின் உயிரைக் குடித்த, இந்த கொடுக்கோல் ஆட்சியைக் கண்டோ, அஞ்சுபவனல்ல நான்.
நீங்கள் என்னை சிறையில் அடைக்கலாம்.
ஆனால்
வரலாறு என்னை விடுவிக்கும்.
ஆனால்
வரலாறு என்னை விடுவிக்கும்.
பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' (THE HISTORY WILL
ABSOLVE ME) என்று வெளிவந்த நூலாகும். பின் மே 15 1955 ல் காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார். பின்னர் மெக்சிகோ சென்ற காஸ்ட்ரோ கொரில்லா முறை தாக்குதல்களைக் கற்றுத் தேர்ந்தார்.
காஸ்ட்ரோவும் சேவும்
மெக்சிகோவில் காஸ்ட்ரோ இருக்கும் போதுதான் அவருக்கு நாட்டு எல்லைகடந்த மனிதநேயப் போராளியான சேகுவேரா அறிமுகம் ஆனார். அவர் கியூப விடுதலைப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். காஸ்ட்ரோவும் சேகுவெராவும் க்ரான்மா எனும் கள்ளத்தோணி மூலம் கியூபா வந்தடைந்தனர். அடர்த்தியான மரங்கள் நிறைந்த சியார்ரா மேஸ்தாரவில் தங்கியிருந்தபடியே கியூப விவசாயிகளையும், இளைஞர்களையும் புரட்சிக்கு தயார்ப்படுத்தினார். பின் படிப்படியாக முன்னேறி கியூபாவில் காஸ்ட்ரோ தலைமையிலான சோசியலிச குடியரசை நிறுவினர்.
காஸ்ட்ரோவும் அமெரிக்காவும்
காஸ்ட்ரோவின் ஆட்சியின்கீழ் கியூபா வந்ததும் அமெரிக்கா அவரைத் தன்வசம் இழுக்க முயற்சித்தது. ஆனால் அதற்கு காஸ்ட்ரோ மறுத்து, 'கியூப வளங்கள் கியூப மக்களுக்கே சொந்தம்' என்று கூறிவிட்டார். அதனால் அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடையை விதித்தாலும் காஸ்ட்ரோ அதனைச் சமாளித்தார். அமெரிக்கா தனது சி.ஐ.ஏ அமைப்பின் மூலம் காஸ்ட்ரோவை 638 முறை கொல்லத் திட்டம் திட்டியும் அதன் முயற்சிகள் பலிக்கவில்லை.
காஸ்ட்ரோவின் ஆட்சியில் கியூபா
கியூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வியை காஸ்ட்ரோ அறிமுகப்படுத்தினார். 1995 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவிகிதம் 96 ஆகும். மேலும் கியூபாவின் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிபவர்களில்
60 சதவிகிதத்தினர் பெண்கள் ஆவர். மருத்துவ துறையிலும் கியூபர்கள் சிறந்து விளங்கினர். மகப்பேறின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவாக இருந்த நாடாகும்.
எழுத்தறிவு இயக்கம்
தன் நாட்டின் வளங்களை எல்லாம் கொள்ளை அடித்துக் கொண்டிருந்த,
அரசை அகற்றியவுடன்,
முதல் பணியாய், ஓர் எழுத்தறிவு இயக்கத்தைத் தோற்றுவித்து, அதன் தாரகமந்திரமாக பின்வரும் வாக்கியங்களைக் கூறினான்.
தெரியாதவர்கள் கற்றுக் கொள்ளுங்கள்
தெரிந்தவர்கள் கற்றுக் கொடுங்கள்
சுரங்கத் தொழிலாளர்கள் பணி முடிந்ததும்,
மாலையில் நேராக வகுப்பறைகளுக்குப் படையெடுத்தனர்.
கடப்பாறையை வாசலுக்கு வெளியே வைத்துவிட்டு, எழுதுகோல் ஏந்தி எழுதக் கற்றுக் கொண்டார்கள். மரம் அறுப்பவர்கள் கத்தியை மூலையில் வைத்துவிட்டு,
நூலை மடியில் வைத்துக் கொண்டார்கள். பிள்ளைகள் பெற்றோர்களுக்குப் பாடம் நடத்தினார்கள். பற்களைத் தொலைத்த மூதாட்டிகளும் படிக்கத் தொடங்கினார்கள்.
ஒரே ஆண்டில், எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் சதவீதம், ~30என்பதிலிருந்து, 98.2 ஆக உயர்ந்தது. மாணவர்களிடமாகட்டும், படிக்கச் சென்ற முதியவர்களிடமாகட்டும், கட்டணமாக ஒரு பைசாவைக் கூட, அவரின் அரசாங்கம் வசூலிக்கமால்,
அனைவருக்கும் இலவசக் கல்வியை அளித்தது.
காஸ்ட்ரோவிற்குப் பின் கியூபா
உணவு செரிமானமின்மையால் பிடெல் 2008 ஆம் ஆண்டில் பதவிவிலகினார்.
அவருக்கு பின் அவரின் தமையன் ராவுல் காஸ்ட்ரோ அதிபராக பதவியேற்றார்.
விருதுகள்
·
கன்பூசியஸ் அமைதி விருது, 2014