ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

தாலி கட்டுவது ஏன்..?


தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சு நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதையும், இரண்டாவது முடிச்சு குலப்பெருமையை நீ பாதுகாப்பாய் என்பதையும், மூன்றாவது முடிச்சு குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.


மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை கொண்டதாகும். ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களை குறிக்கிறது. தெய்வீககுணம், தூய்மையானகுணம், மேன்மை, தொண்டுள்ளம், தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுதல் போன்ற ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிற்கு இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு அணியப்படுகிறது.

 தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு. உதாரணமாக அம்மி மிதிப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும், அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கௌரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்.

திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம். உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்.

கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்றால் வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே தவிர தன்னோடு பலனை முடித்து கொள்ளாது. எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமுதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதன் ரகசியமாகும்.

 தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது. உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது. அதாவது திருமணங்கள் அனைத்துமே ஏதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது.


8 கருத்துகள்:

  1. தாலியின் அணிவதற்கான காரணம் அறிந்தேன். ஆனால் தாலியே கட்டாமல் ஒரு கையெழுத்துமட்டும் இட்டு நீங்கள் சொன்ன காரணப்படியே இன்றுவரை வாழ்ந்து வருகிறேன்

    பதிலளிநீக்கு
  2. பெண் என்பவள் ஆணின் பாதுகாப்பில் மட்டுமே வாழத் தகுதியானவள் என்ற ஆணாதிக்க மனோவத்தின் அத்தாட்சிதான் தாலி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா. பலமாற்றங்கள் காணப்பட்டாலும் ஒரு சில விஷயங்களில் மாற்றம் ஏதும் இல்லை. நன்றி ஐயா.

      நீக்கு
  3. அருமையான பதிவு. பல செய்திகள் அறிந்தேன். மிக இரசித்தேன். நற்பணி தொடர வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி ஐயா. தங்களது வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா.

      நீக்கு