Skip to main content

உலக தாய்மொழிகள் தினம்உயர்தனிச்செம்மொழி தமிழ்

ஞால முதல் மொழி, திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி, பழமையான சிறந்த இலக்கியச் செல்வங்களைக் கொண்ட மொழி, இன்று வரை வழக்கில் உள்ள மொழி எனப் பல்வேறு சிறப்புக்களையும் கொண்ட மொழி தமிழ். இம்மொழிக்குச் “செம்மொழி” என்னும் தகுதி கிடைத்ததில் வியப்பொன்றுமில்லை. எனினும் எந்த அடிப்படையில் அத்தகுதியைத் தமிழுக்கு வழங்கியுள்ளார்கள் என்பதில் தான் சிக்கல் உள்ளது. தமிழ் 1500 ஆண்டு காலம் பழமையானது என்ற அறிவிப்பு தமிழர்களால் ஏற்றுக்கொள்ள இயலாததாகவே உள்ளது. இந்நிலையில் தமிழ் உயர்தனிச் செம்மொழி என்பதை இரு நிலைகளில் இக்கட்டுரை மெய்ப்பிக்கிறது.
1. இதுவரை நாம் வகுத்துள்ள செம்மொழிக்கான தகுதிகளோடு ஒப்பு நோக்கி தமிழின் தன்னிகரற்ற தன்மையைக் கூறி தமிழ் 

“ உயர்தனிச் செம்மொழி “ என்பதை இயம்புதல்.
2. நம் செயல்பாடுகளால் தமிழ் தனிமைப்படுத்தப்பட்ட 
(உயர்-தனி-செம்மொழி) மொழியாக ஆகும் நிலையை இயம்பி நாம் செய்யவேண்டிய பணிகளைக் கூறுதல். 

I செவ்வியல் – செம்மொழி விளக்கம்.
இவ்விரு சொற்களும் மொழியின் பழமை உள்ளிட்ட பல்வேறு கூறுகளைக் குறிப்பதாகத் தமிழறிஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சொற்களில் எது சிறந்தது என நோக்கினால் 

“ செம்மொழி “ என்ற சொல்லே முன்னிற்கிறது. செம்மையானது என்ற பொருளில் செம்மொழி பயின்று வருகிறது.
“ செம்மொழி எனும்போது ஏற்படும் பொருளாழம் செவ்வியல் எனும்போது ஏற்படுவதில்லை. கிளாசிக்கல் என்னும் ஆங்கிலச் சொல்லுக்குப் பொருளாகச் செவ்வியல் காணப்பட்டது என்று குறிப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இஃது ஆங்கிலத்தை ஒட்டியே சிந்திக்கும் போக்கைக் காட்டுவதாகவுள்ளது. “1 

செவ்வி என்பதற்கு காலம், சமயம், தருணம் போன்ற பொருள்களே உள்ளன. மொழி ஞாயிறு. தேவநேயப் பாவாணர், பரிதிமாற்கலைஞர் உள்ளிட்ட சான்றோர்கள் பலரும் செம்மொழி என்னும் சொல்லையே பயன்படுத்தியுள்ளனர். செம்மொழி என்னும் போது தோன்றும் பொருளாழம் செவ்வியல் எனும்போது தோன்றுவதில்லை. எனவே செம்மொழி என அழைப்பதே சாலச் சிறந்ததாகும். 
செம்மொழியின் தகுதிகள்
இன்றுவரை உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட செம்மொழிகளின் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை. செம்மொழிக்கான தகுதிகள் பலவாறாக வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் மூன்றுவிதமான வகைப்பாடுகள் குறிப்பிடத்தக்கனவாக விளங்குகின்றன. 


1.வல்லுநர் குழு சொல்லும் தகுதிகள்.
செம்மொழி என்னும் தகுதி வழங்கும் வல்லுநர் குழுவினர், செம்மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கிரேக்கம், இலத்தீன், வடமொழி ஆகிய மொழிகளின் தகுதிகளைத் தமிழ் மொழியோடு ஒப்புநோக்கி சில வரையறைகளைச் செய்துள்ளனர். அதனைக் கீழ்க்கண்டவாறு காணலாம்.

அ.மிகப்பழமையான நூல்களை அதாவது 1500 முதல் 2000 ஆண்டுகள் வரை நூல்கள் பதிவுபெற்ற 
ஆ.அம்மொழியைப் பயன்படுத்தும் பல தலைமுறையினரின் அரிய பண்பாட்டுப் பாரம்பரியம் உடையதாகக் கருதும் இலக்கிய 
இ.அம்மொழிக்கே உரியதாகவும் ,மற்ற மொழிக் குடும்பத்தினரிடமிருந்து கடன்பெறாததுமான இலக்கியப் பாரம்பரியம்.

ஆகியன செம்மொழியின் தகுதிகள் என வல்லுநர் குழுவினர் வரையறை செய்துள்ளனர். இவ்வரையறைகளுக்கும் மேலாக சிறப்புகளைப் பெற்றுத் தன்னிகரற்று விளங்கும் தமிழ்மொழியை இவ்வரையறைகளுக்குள் அடக்குவதால் தமிழின் பழமையை முழுமையாக மதிப்பிட இயலாத நிலை ஏற்படுகிறது.

2.செம்மைப் பண்பு- 11 .

செம்மொழி்க்கு இருக்கவேண்டிய அடிப்படைப் பண்புகளாக 11 பண்புகள் வரையறை செய்யப்படுகின்றன.இப்பண்புகளையே மொழிகளுக்குப் புகுத்திப் பார்த்து மொழியின் செம்மைப் பண்புகளை அறிந்து வருகிறோம்.அவை,

1.தொன்மை
2.தனித்தன்மை 
3.பொதுமைப் பண்பு
4.நடுவுநிலைமை
5.தாய்மைப் பண்பு
6.பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவு வெளிப்பாடு
7.பிறமொழித் தாக்கமில்லாப் பண்பு
8.இலக்கிய வளம்
9.உயர் சிந்தனை
10.கலை இலக்கியத் தனித்தன்மை
11.மொழிக் கோட்பாடு.
ஆகியன செம்மொழியின் பண்புகளாகும். இப்பண்புகள், இலத்தீன், ஈப்ரூ, கிரேக்கம், சீனம், ஸ்பானியம், அரபி, வடமொழி ஆகிய செம்மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிகளின் பண்புகளாகும். மேற்காணும் மொழிகளில் பல வழக்கொழிந்து காணப்படுகின்றன.இம்மொழிகளின் தகுதிகளை தமிழோடு பொருத்திப் பார்ப்பது என்பது சரியான மதி்ப்பீடாக இருக்காது. இதனை,

“தொல்காப்பியம் காலத்தில் – மெசபடோமியவில் அரபி பாறை எழுத்துகளாக இருந்தது. சீனமொழியில் அப்பொழுது தான் சிஜிங் கவிதைத் தொகுதி இயற்றப்பட்டது. பிரஞ்சு மொழியான கெல்டிக் மொழி வெறும் பேச்சு மொழியாக இருந்தது. இலத்தீன் மொழியில் ஒடிசி மொழி பெயர்க்கப்படுகிறது. ஸ்பானியம் பேச்சு மொழியாக இருந்தது. ஜெர்மன் மொழி அப்போது இல்லை. இதுவே பன்னாட்டு அளவில் மொழி வழக்கிலிருந்த செயல்பாடுகளாகும்.“2 என்பார் கே.எஸ்.இராதாகிருட்டிணன். இக்கருத்து தமிழின் தன்னிகரற்ற தன்மையை எடுத்துரைப்பதாகவுள்ளது. தொல்காப்பியத்தை நன்கு நோக்கும் போது அதில் நம் தமிழரின் பல்லாண்டு கால அனுபவத்தைக் காணமுடிகிறது. தமிழுக்குப் பின் தோன்றி இன்று வழக்கொழிந்த நிலையிலும் இன்று சில மொழிகள் செம்மொழிகள் பட்டியலில் உள்ளன. அம்மொழிகளோடு தமிழை ஒப்புநோக்கும்போது தமிழின் தனித்தன்மை விளங்குகிறது.இதனை,

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வங்கமொழியில் காவியம் என்ற அங்கமே இல்லை.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலம் அழுக்குத் தீரக் குளிக்கவேயில்லை
பல மொழிகளுக்குச் சில நூற்றாண்டுகள் வரை சொந்தமாக லிபிகள் இல்லை
ஆனால் உலகத்தில் விரல் விட்டுச் சொல்லக்கூடிய மொழிகளில் குரல் விட்டுச் சொல்லக்கூடியது தமிழ்.
 ஊர்ச்சொற்கள் அனைத்திலும் வேர்ச்சொற்கள் வைத்திருப்பது தமிழ்“3 

என உரைக்கிறார் கவிஞர்.வைரமுத்து. இவ்வாறு தனித்தன்மை கொண்ட மொழியாகத் தமிழ் மொழி விளங்குகிறது. 
3.பாவாணர் சுட்டும் 16 செம்மைப் பண்புகள்.

மொழி ஞாயிறு பாவாணர் தம் வாழ்நாளில் பல மொழிகளையும் கற்றறிந்து தமிழ் மொழியின் சிறப்பை வேர்ச்சொல் ஆய்வு வாயிலாக எடுத்தியம்பியவர்.தமிழின் செம்மைப் பண்புகளாக,
“1.தொன்மை.
2.முன்மை.
3.எண்மை(எளிமை).
4.ஒண்மை.(ஒளிமை).
5.இளமை
6.வளமை.
7.தாய்மை.
8.தூய்மை.
9.செம்மை.
10.மும்மை.
11.இனிமை.
12.தனிமை.
13.பெருமை.
14.திருமை.
15.இயன்மை.
16.வியன்மை. “4
ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.மேலும் இச்சிறப்புக்களை ஒருங்கே உடையது தமிழே ஆகும் என உரைக்கிறார். 
உயர்தனிச் செம்மைப் பண்பு

ஞாலத்தில் தோன்றிய மாந்தர்கள் முதலில் பேசிய மொழி தமிழ் . இதனை, 

 வைய மீன்ற தொன்மக்கள் உளத்தினைக் 
கையினா லுரை காலம் இரிந்திடப்
பைய நாவை அசைத்த பசுந்தமிழ்
ஐயை தாள் தலைக் கொண்டு பணிகுவாம்
” 
என உரைக்கிறார் தஞ்சைப் பெரும்புலவர்.நீ. கந்தசாமி அவர்கள்.

பிற மொழிகளைக் காட்டிலும் தமிழ் தனிச் சிறப்புடன் உயர்ந்த பண்புகளைக் கொண்டு விளங்குகிறது. இதனைப் பல சான்றுகள் வாயிலாகக் கூறலாம். தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகியன நம் பழமைக்கும் பெருமைக்கும் மிகப் பெரிய சான்றுகளாகத் திகழ்கின்றன.இதனை,

“இந்தியாவின் இரண்டு செம்மொழிகளில் தமிழ் மட்டுமே செம்மொழித் தரம் சேர் பழமையோடு துண்டிக்கப்படாத தொடர்புடையது.“5 என்பர் ஏ.கே.இராமானுசம் அவர்கள்.(Tamil, one of the two classical Languages a of India , is the only Language Of contemporary India which is recongnizable continous whith Classical past ) 

கமில் சுவலபில் தமிழின் தனிச்சிறப்பினை,“முதலாவதாக சங்க இலக்கியம், தமிழர்களாலும் வரலாற்று ஆசிரியர்களாலும் திறனாய்வாளர்களாலும் மற்றும் அறிவு ஜீவிகளான வாசகர்களாலும் செந்தமிழ் தரம் சேர்ந்ததாக நம் தேசிய இலக்கியங்களுக்கு ஒத்த தகுதி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.“6 (first Of all , the so called cangam poetry is regarded by the professional historigraphers and critics , as well as by intellectual readers , as classical in the sense in which we regard some parts of our national literatures as classical)

இக்கருத்துக்கள் யாவும் தமிழ் தனிச்சிறப்பு வாய்ந்த மொழி, “உயர்தனிச் செம்மொழி” என்பதை இயம்புவனவாகவே உள்ளன. 

உயர் – தனி – செம்மொழி

தமிழ் உயர்ந்த மொழி , செம்மையான மொழி ஆயினும் தனிப்பட்ட மொழியாக தமிழகத்தில், தமிழர்களிடம் கூட வழங்கப்படுவது வெட்கக் கேடாகவுள்ளது. நம் மொழியை நாமே தனிமைப்படுத்துவது ஒரு நிலை, பிற மொழி சார்ந்தோர் தனிமைப்படுத்துவது இன்னொரு நிலை. என இரு நிலைகளில் நம் மொழி தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை, 
“ தமிழை வளரவிடாமல் பார்த்துக்கொள்ள தமிழர்கள் இரண்டு கத்தி வைத்திருக்கிறார்கள். 

தொல்காப்பியத்தோடு தமிழ் முடிந்துவிட்டது, அல்லது திருக்குறளோடு தீர்ந்துவிட்டது என்பவர்களின் கையில் துருப்பிடித்த கத்தி.

தமிழில் என்ன இருக்கிறது ....... விஞ்ஞானம் மனிதனுக்கு இறக்கைகள் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது தமிழென்னும் தள்ளு வண்டியால் யாது பயன் என்று சலித்துக் கொள்கிறவர்களின் கையில் சாணை பிடித்த கத்தி.

இந்த இரண்டு கத்திகளுமே பயங்கரமானவை. பறிமுதல் செய்யப்படவேண்டியவை.7 என்கிறார் கவிஞர்.வைரமுத்து. 
இயல், இசை, நாடகத்தோடு தமிழ் முடிந்துவிட்டது என்போரும், அறிவியல் தமிழ் மட்டும் தான் காலத்தின் தேவை என்போரும் தமிழைத் தனிமைப்படுத்தி வருகின்றனர்.

காலத்தின் தேவையை உணரவேண்டும். வளர்ந்த மொழிகள் யாவும் அறிவியல்த் துறைகளைத் தம் தாய்மொழியிலேயே பயிலும் நிலை உள்ளது. ஆனால் நாம் இப்போது தான் அதன் தேவையையே உணர்ந்துள்ளோம். தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம கலைச் சொற்களைத் தொகுத்துள்ளது. மருத்துவம், பொறியியல், கணினி உள்ளிட்ட அறிவியல்த் துறைகளைத் தமிழில் படிக்கும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம்.எனினும் அறிவியல்த் துறைகளைத் தாய்மொழியில் படிப்பதில் இன்னும் சிக்கல் நிலவுகிறது. இந்நிலையில் நம் பழமை மரபுகளைக் கருத்தில் கொண்டு அறிவியல்த் தமிழின் தேவையையும் உணரவேண்டும். இதனை,

“ ஒரு சமுதாயம் இன்றைய பணிகளை, இன்றைய கருவி கொண்டு செய்யவேண்டும்.இன்றைய பணியை நேற்றைய கருவி கொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலியும்.இது தவிர்க்கமுடியாதது“.8 என்பர் வ.செ.குழந்தைசாமி. எனவே உலக மொழிகள் யாவற்றைவிடவும் பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட நம் தமிழ்மொழி தனிமைப்படவோ, தனிமைப்படுத்தப்படவோ நாம் காரணமாக இருக்கக் கூடாது. 

நிறைவுரை 

செம்மொழி என்பதற்கான தகுதிகளே இன்றுவரை முழுமையாக வரையறை செய்யப்படவில்லை. எனினும், இதுவரை செய்யப்பட்ட தகுதிகள் முழுவதும் பொருந்தி, அதற்கு மேலும் தகுதிகளைக் கொண்ட ஒரே மொழி தமிழ் ஆகும்.அதனால் தமிழை “உயர்தனிச் செம்மொழி“ என அழைப்பதே சாலச் சிறந்ததாகும். 
பிற செம்மொழிகளை விட தமிழ்மொழிக்கு உள்ள சிறப்பான தகுதிகளை ஆதாரங்களுடன் பட்டியலிட்டு செம்மைத் தகுதிகளை வரையறை செய்யவேண்டும். 
தமிழின் செம்மைப் பண்பையே செம்மொழித் தகுதிக்கான அளவீடாகக் கொள்ளவேண்டும். பிற செம்மொழிகளின் தகுதிகளைத் தமிழுக்குப் பொருத்திப் பார்ப்பது சரியாக மதிப்பிட இயலாத சூழலை உருவாக்கும். 
தாய்மொழிக் கல்வியின் தேவையை நாம் உணரவேண்டும். தாய்மொழி வழியே எல்லா அறிவியல்த் துறைகளையும் படிக்கும் நிலை வரவேண்டும். 
பல்வேறு மொழித்தாக்கங்களைக் கடந்து செம்மாந்து நிற்பது நம் தமிழ் மொழி.இம்மொழி பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கவல்லது என்பதையும் நாம் உணரவேண்டும். 
நம் மொழியை நாமே தள்ளிவைத்தால் கால வெள்ளத்தில் வழக்கொழிந்த மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம்பெறும் நிலை ஏற்படும்.அப்போது தமிழ் “உயர்- தனி-செம்மொழி“ என அழைக்கப்படும் நிலை ஏற்படும் என்பதை யாவரும் அறியவேண்டும். 

சான்றெண் விளக்கம்.
1.மலையமான்- செவ்வியல் மொழி தமிழ் – ப -4.

2.தினமணி – தலையங்கம் – ( 15.12.2007)

3.வைரமுத்து – இதனால் சகலமானவர்களுக்கும் – ப- 31

4.ஞா.தேவநேயப் பாவாணர்- தமிழ் வரலாறு – முகவுரை

5.ak.Ramanujan – the interior landscape (1967)p-11

6.k.zuvelebil , the smil of murugan – p -49.

7.வைரமுத்து – இதனால் சகலமானவர்களுக்கும் – ப -29

8.வா.செ.குழந்தைசாமி- அறிவியல்தமிழ்- ப- 72
தாய்மொழியைப் போற்றுவோம்..

Comments

  1. ஆஹா ஐயா.அருமை அருமை நம் தமிழ் மொழியின் சிறப்பை அழகாக பகிர்ந்து உள்ளீர்.தினமும் பல மாற்றங்கள் அதாவது மொழிகளாலும் ஆங்கிலத்தாலும் எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் நம் தமிழ் மொழி உலகளவில் சிறப்பு பெற்று வளர்ச்சி அடைந்து வருகிறது.உலகப் பொதுமறையான திருக்குறள் உலகளவில் தமிழ் பெருமையை இன்று வரை கடல்கள்,மலைகள்,நாடுகள் கடந்து புகழ் மணம் வீசிக்கொண்டு வருகிறது என்பதையும் நாம் தமிழர் நமது தாய்மொழி தமிழ் என்பதையும் குறித்து பெருமை கொள்ளலாம் ஐயா.நம் தமிழ் மொழி செம்மொழிக்கான 11 தகுதிக் கோட்பாடு பெற்று இன்று வரை செம்மொழியாக திகழ்கிறது என்பதை மீண்டும் அனைவரும் அறியும் படி இப்பதிவு அமைந்துள்ளது ஐயா.

    இத்தகைய சிறப்பு மிக்க நம் தாய்மொழி கல்வி மொழியாகவும்,ஆட்சி மொழியாகவும் இல்லாமல் போனது குறித்தும்,கல்வி மொழியாக ஆங்கிலத்தையும்,ஆட்சி மொழியாக ஹிந்தி மொழியும் இருப்பதை குறித்து ஆவேசமடைகிறேன் ஐயா.அது மட்டுமா இன்றைய தலைமுறையினர் சிலர் தமிழில் பேசினால் மதிப்பு இல்லை என்று கூறுக்கின்றனர்.ஆனால் அவர்களின் தாய்மொழியும் தமிழ் என்பது தெரியவில்லை.

    நல்ல பதிவு தமிழ் குறித்து பேசினால் என் கருத்து நீண்டுக் கொண்டே போகுமே தவிர குறையாது.அதனால் சுருக்கமாக முடித்துவிடுகிறேன் .தலையைத் துண்டிக்க நேர்ந்தாலும் தயங்காமல் சொல்லுவேன் நான் தமிழிச்சி என்று ஐயா.

    வாழ்த்துகள் ஐயா.தங்கள் தமிழ் பணித்தொடர்ந்து வெற்றியடையட்டும் என் குருநாதரே..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிக்கனமும் சேமிப்பும்

சிறு துளி பெறுவெள்ளம் போல       சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்!
சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும்!       ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை!
ஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை!       உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை
தாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால்       சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்
நீ வாழ்க்கை என்னும் படியை
வெற்றியுடன் தாண்ட முடியும்!
சேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ

அறுவகைப் பெயர்கள்

                            அறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை                             பொருட்பெயர்                             இடப்பெயர்                             காலப்பெயர்                             சினைப்பெயர்                             குணப்பெயர்                             தொழிற்பெயர் பொருட்பெயர்; பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் ஆகும். 

எடுத்துக்காட்டு - மேசை, கடிகாரம், கதவு, வண்டி, கட்டில் போன்ற பொருள்களைக் குறிப்பதால் இது பொருட்பெயராகும். இடப்பெயர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்யெராகும்.

எடுத்துக்காட்டு – கோயில், பேருந்து நிலையம், சென்னை, தெரு, மருந்தகம். காலப்பெயர் காலத்தை (பொழுதை) குறிப்பது காலப்பெயராகும்.


எடுத்துக்காட்டு – வைகாசி, இரவு, கோடை, காலை சினைப்பெயர் சினை – உறுப்பு. மனிதனின் உறுப்புகள் மற்றும் தாவர, விலங்குகளின் உறுப்புகளைக் குறிப்பது சினைப்பெயராகும்.எடுத்துக்காட்டு – கிளை, கழுத்து, தலை, கை. குணப்பெயர்