சனி, 13 பிப்ரவரி, 2016

விவசாயிகள் உருவான கதை..






ஒரு கத சொல்லுவாங்க ஊர்ல.
எமலோகம் இருக்கே எமலோகம் அங்க பாவ புண்ணியக் கணக்குப் பாப்பாங்களாம்.பாவம் பண்ணுன ஆளுக இடபக்கம் நிப்பாகளாம்; புண்ணியம் பண்ணுன ஆளுக வல பக்கம் நிப்பகளாம்.
புண்ணியம் செஞ்சவக சொர்க்கத்துகுப் போங்கன்னு அனுப்பிச்சிருவாகளாம்; ஊர்வசி ரம்பையெல்லாம் வருவாகளாம் ஒத்தாசைக்கு.
பாவம் செஞ்ச ஆளுகள எமதர்மன் ஆளுக ரெண்டு கையும் புடிச்சி ‘வாங்கய்யா வாங்க’ன்னு கூட்டிட்டுப் போயிக் கொதிக்கற எண்ணெய்க் கொப்பரையில வீசுவாகளாம்;பாம்பு புத்துக்குள்ள படுக்கப் போடுவாகளாம்;எரியற தீயில தலைகீழாக் கட்டித் தொங்கவிடுவாகளாம்.
இப்படி எமதர்மன் ‘நல்லாட்சி’ நடத்தி வந்த காலத்துல ஒரு நாளு பெருங்கூத்தாகிப் போச்சாம் எமலோகத்துல.
அந்த வருசம் ஏடு போட்டுப் பாத்ததுல புண்ணியம் பண்ணுனவக ஏழெட்டுப் பேர்தானாம். பாவம் பண்ணுனவக பட்டியல் எடுத்து பாத்தா அது போகுதாம் லட்சக்கணக்குல.
எமதருமருக்கு தல சுத்துது;கூடவே கிரீடமும் சேந்து சுத்துது.
கொப்பர கட்டுபுடியாகுமா எண்ணெ விக்கிற வெலையில?
அத்தன பாம்புகளுக்கு எங்க போறது? நாகலோகத்துல வேற நாலுமாசமாப் பாலுக்கு வெல கூட்டச் சொல்லிப் பசுமடுக வேல நிறுத்தமாம்.
புத்திக்கு ஒண்ணும் எட்டல; யாரை யோசனை கேக்கறது?
சிவபெருமானைக் கேக்கலாம்ன்னா மார்க்கண்டேயன் விவகாரத்துல ஏற்பட்ட மனதாங்கல் இன்னும் தீரல.
விஷ்ணுவப் போய்க்கேட்டு வரலாம்னா நம்ம எருமைக்குப் பாற்கடல் நீந்திப் பழக்கம் இல்ல. பிரம்மாவப் போய்க் கேக்கலாம்னா அந்தாளு எந்த மூஞ்சிய எங்க வச்சிருப்பாருன்னே தெரியமாட்டேங்குது.
ஒண்ணும் புடிபடல எமதருமருக்கு.
பாசக்கயித்துல அவரா முடிச்சிப் போட்டு அவரா அவுத்துக்கிட்டிருக்காரு ரொம்ப நேரமா.
திடீர்னு தம்புராவோட ஒரு பாட்டுக் கேக்குது. நிமிந்து பாத்தா வைகுண்டத்துல வடை சாப்பிட்டுட்டுக் கைலாசத்துக்குக் காப்பி சாப்பிடப் போய்க்கிட்டுருக்காரு நாரதரு.
‘வாய்யா வாய்யா’ன்னாரு எமதர்மரு,
வந்தாரு நாரதரு.
“எனக்கொரு பிரச்சன” இழுத்தாரு எருமைகாரரு.
“என்ன? கள்ளக் கணக்கு எழுதிக் காசு சம்பாரிச்சு இந்திரலோக வங்கியில போட்டு ஏமாத்துறானா சித்ரகுப்தன்?”
“அட அதில்ல நாரதரே. பாவகணக்குப் பண்ணுனவக எண்ணிக்கை கூடிப்போச்சு; எடமில்ல நரகத்துல; என்ன பண்றதுன்னு யோசிக்கறேன்”.
“அட நீங்க ஒண்ணு… இவுகள நரகத்துல தள்ளணும் அவ்வுளவுதானே? நான் பறந்து பறந்து பாத்த அளவுல பூலோகத்துல இந்தியா இந்தியான்னு ஒரு தேசம் இருக்கு. இவுகளப் பூரா அங்க வெவசாயம் பண்ண அனுப்பி வச்சீங்கன்னு வச்சீக்குங்க வேலை முடுஞ்சது.”
“ஆகா ஒம்மக் கட்டித் தழுவணும் போல இருக்கு”ன்னு எந்திருச்சாரு எமதருமரு.
தம்புராவத் தவற விட்டுட்டு ஓடி ஒளிஞ்சு போனாரு நாரதரு.
நாரதர் சொன்ன யோசனப்படி இந்தியாவுல விவசாயம் பண்ண நரகத்துல இருந்து அன்னைக்கு அனுப்பிவைக்க ஆரம்பிச்சது இன்னைக்கு வரைக்கும்
நின்னபாடில்ல.
                            (மூன்றாம் உலகப் போர் - வைரமுத்து)

ஆரம்பத்தில் உதட்டில் புன்னகையை தவழ வைத்த வரிகள் இறுதியில் கண்களை கலங்க வைத்தது.




1 கருத்து: